கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
(அதிகாரம்:நாணுடைமை
குறள் எண்:1011)
பொழிப்பு (மு வரதராசன்): தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
|
மணக்குடவர் உரை:
தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம். அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும்.
மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழிந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல, அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள்.
('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக் குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்' என்று உரைப்பாரும் உளர், அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
நாண் என்பது ஒவ்வாத காரியத்தைச் செய்யக் கூசுதல்; பெண்டிரது அடக்கங் காரணமாக வரும் நாணம் வேறுபட்டதாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கருமத்தால் நாணுதல் நாணு; திருநுதல் நல்லவர் நாணுப் பிற.
பதவுரை: கருமத்தால்-செயலால்; நாணுதல்-தீய செயலுக்கு அஞ்சுதல்; நாணு-நாண், இழி தொழில்களில் மனஞ்செல்லாமை; திரு-அழகையுடைய; நுதல்-நெற்றி, முகம்; நல்லவர்-குடும்பப்பெண்கள்; நாணு-நாணம், வெட்கம்; பிற-மற்றவை.
|
கருமத்தால் நாணுதல் நாணு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம்;
பரிப்பெருமாள்: தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணமாம்;
பரிதி: மனத்து ஒன்றும் நினையாமல் கருமப்படியே நாணுதல்;
காலிங்கர்: என்றும் தான் தீயகருமம் காரணமாக நாணுதலே நாணாவது;
பரிமேலழகர்: நன்மக்கள் நாணாவது இழிந்த கருமங் காரணமாக நாணுதல்;
'நாணாவது இழிந்த கருமங் காரணமாக நாணுதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கம் என்பது தீயசெயலுக்கு நாணுதல்', 'நன்மக்களின் நாணமாவது இழிசெயல் புரிதல் காரணமாக நாணுதல்', '(பாவமான காரியம்) என்பதனால் (ஒரு காரியத்தைச் செய்யக்) கூசுவதுதான் நாணுடைமை', 'பெரியோர்கட்குரிய நாணமாவது தாழ்ந்த செயல் காரணமாக நாணுதல் (வெட்கப்படுதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நாணம் என்பது தகாதசெயலுக்கு வெட்கப்படுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
திருநுதல் நல்லவர் நாணுப் பிற:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது. ['நாண்வேலி' என்ற குறளிற்(1016) கூறிய 'நாணம்']
பரிப்பெருமாள்: அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: அல்லாது நாணுதல் குலமகளைக் கண்டு பொதுமகள் நாணுதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று ஏனைய எல்லாம் மகளிர் நாணும் நாணாம்; எங்ஙனம் எனில், ஆண்மகன் ஆகியும் தகுவதற்கு ஒதுங்கின் அவனோடு பெண்ணோடு வாசி இல்லை என்பர் பலரும்; அதனால் அதற்கு நாணுதல் ஆண்மைப்பாடு என்பது பொருள் என்றவாறு. [தகுவதற்கு- பொருந்துவதற்கு; வாசி - வேறுபாடு]
பரிமேலழகர்: அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல, அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள். [அவர் அளவல்ல-நன்மக்கள் அளவில் இருப்பன அல்ல]
பரிமேலழகர் குறிப்புரை: 'பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக் குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்' என்று உரைப்பாரும் உளர், அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது. [ஏனையது - கருமத்தால் எண்ணுவது; கருமத்தது இழிவு - செயலினது இழிவு; புகழ்ச்சிக் குறிப்பு- புகழ்ச்சிப் பொருளில் வந்த குறிப்புச் சொல்; மனமொழிமெய்களின் ஒடுக்கம் மூன்றாதலின் ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார் என்பர்]
'அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோடொக்கும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'அல்லாது நாணுதல் குலமகளைக் கண்டு பொதுமகள் நாணுதற்கு ஒக்கும்' என்றார். 'மற்று ஏனைய எல்லாம் மகளிர் நாணும் நாணாம்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'அஃதன்றி வருவன அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள்' எனப் பொருளுரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பெண்களின் வெட்கம் வேறுவகை', 'நல்ல நெற்றியினையுடைய மகளிர்க்குரிய நாணம் என்பது அதனினும் வேறுபட்டது', 'அழகான நெற்றியுள்ள பெண்களின் நாணம் என்பது வேறு', 'அழகிய நெற்றியினையுடைய குல மகளிர்க்குரிய நாணமோ மனம் மொழி மெய்களது ஒடுக்கத்தான் வருவன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அழகிய முகம் கொண்ட பெண்களது வெட்கம் என்பது வேறுவகை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நாணம் என்பது தகாதசெயலுக்கு வெட்கப்படுதல்; திருநுதல் நல்லவர் வெட்கம் என்பது வேறுவகை என்பது பாடலின் பொருள்.
'திருநுதல் நல்லவர்' யார்?
|
பெண்களுக்கே உரித்தான நாணம் வேறு; தகாதசெயலுக்குக் கூசுவது வேறு.
இழிசெயல் காரணமாக நாணுவது ஆண்-பெண் இருபாலார்க்கும் பொதுவானது. அழகிய முகம்கொண்ட பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள நாணம் என்பது வேறு.
நாண் என்பதற்கான வரையறை கூறும் செய்யுள் இது.
நாண் பெண்களுக்கியல்பாவது ஆதலால் நாண் என்றதும் பெரு நாணினரான பெண்கள்தாம் நினைவிற்கு வருவர். ஆனால் இவ்வதிகாரத்தில் சொல்லப்படுவது - இருபாலார்க்கான - இழி செயலுக்கு வெட்கப்படும் குணம் ஆகும். இதைத் தெளிவுபடுத்த இப்பாடலில் பெண்களின் நாணம் வேறு; கருமத்தால் நாணுதல் நாணு வேறு என்கிறார் வள்ளுவர். கருமத்தால் அதாவது தகாதசெயல் செய்ய முடியாதவாறு தடுக்கும் நாணே ஆண்-பெண் இருவருக்கும் உண்டாகும் நாண் ஆகும். நாணுடைமை என்பது சமூக வாழ்வில் குற்றமுள்ள செயல்களை நினைக்கும்போதோ அல்லது செய்ய முற்படும்பொழுதோ உண்டாக வேண்டிய கூச்சம் பற்றியது. செய்யத்தகாத காரியத்தால் நாணுவது நன்மக்களுக்கு இயல்பாக அமையும். இது உடலில் வெளிப்படுவதன்று; உள்ளத்திலிருந்து வெளிப்படுவது.
குடும்பப் பெண்களுக்கு இயல்பாக உண்டாகும் நாண்குணமானது இதனின்றும் வேறானது.
நற்குணங்கள் கொண்டோர்க்குச் செய்யத் தகாத செயல்களைப் பற்றி எண்ணும் போதே மனதில் வெட்கம் உண்டாகும். 'சீ! இதைச் செய்வதா!' என மனத்தில் நாண உணர்ச்சி மேலிடும். இவ்விதம் நாண வேண்டிய செயல்களுக்கு நாணுதலே நாணமாகும். பிறவெல்லாம் குடும்பப் பெண்கள் கொள்ளும் நாணமாம்.
இவ்வாறாக நாணம் என்பது இரண்டு வகைப்படும் என்கிறார் வள்ளுவர். ஒன்று இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவது; இது அனைவருக்கும் பொதுவான நாணமாகும். மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் என்பது. முதல்வகையானது உள்ளம் தொடர்பானது; அறச்சிந்தனையுடன் கூடியது. மற்றொன்று மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வரும் நாணம்.
|
'திருநுதல் நல்லவர்' யார்?
'திருநுதல் நல்லவர்' என்றதற்கு அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர், பொதுமகள், மகளிர், அழகிய நுதலினையுடைய குலமகளிர், நல்ல நெற்றியையுடைய குலஸ்திரீகள், கற்புடைய திரு நுதலினையுடைய நல்ல குலமகளிர், பெண்கள், அழகிய நெற்றியுடைய பெண்கள், குலமகள், நல்ல நெற்றியினையுடைய மகளிர், அழகான நெற்றியுள்ள பெண்கள், அழகிய நெற்றியுடைய மகளிர், பெண்டிர், அழகிய நெற்றியினையுடைய குல மகளிர், அழகிய நெற்றியையுடைய பெண்கள், ஒளிவாய்ந்த நெற்றியை உடைய நங்கையர், அழகிய நெற்றியையுடைய குலமகளிர், அழகிய நெற்றியையுடைய குலப் பெண்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
திரு என்ற சொல் குறளில் அழகு, செல்வம், விரும்பப்படும் தன்மை, மேன்மை, சிறப்பு, பொலிவு, தெய்வத்தன்மை போன்ற பலபொருள்களில் பயிலப்பட்டுள்ளது.
நுதல் என்ற சொல்லுக்கு நேர்பொருள் நெற்றி என்பது. ஆனால் இச்சொல் குறளில் பெண்களின் முகத்தைக் குறிக்க ஆளப்படுவதாகவே தோன்றுகிறது. எனவே திருநுதல் என்பது அழகிய முகம் என்ற பொருள் தருவதாகிறது,
மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகிய பழம் ஆசிரியர்கள் திருநுதல் நல்லவர் என்பதற்குக் கணிகையர் எனப் பொருள் காண்கின்றனர்.
கணிகையர் என்றது ஏனென்றால் அவர்களது நாணம் உண்மை நாணன்று; மனத்துள் நாணின்றிக் காரியத்திற்காக நாணங் கொள்ளுதல்; அது பொய் நாணத்தை ஒக்கும் அதாவது போலித்தனமானது என்பதைச் சொல்வதற்காக.
காலிங்கரும், பரிமேலழகரும் அவர் பின்வந்தோரும் திருநுதல் நல்லவர் என்றதற்குக் குலமகளிர் என்று பொருளுரைத்தனர். இவர்கள் செயற்கை நாண்-ஆண் நாண்; இயற்கை நாண்-பெண் நாண் என்னும் கருத்தில் இக்குறளுக்கு விளக்கம் தந்தனர்.
மனம், மொழி, மெய்யால் நினைத்தால் கூட நாணம் வரும் குடும்பப் பெண்களுக்கு. அதுபோலவே செய்யத் தகாத காரியங்களை நினைத்த மாத்திரத்தில் பெரியோருக்கு நாணம் வரும். இவையிரண்டும் வெவ்வேறானவை.
'திருநுதல் நல்லவர்' என்றது குடும்பப் பெண் என்ற பொருளில் வந்தது.
|
நாணம் என்பது தகாதசெயலுக்கு வெட்கப்படுதல்; அழகிய முகம் கொண்ட பெண்களது வெட்கம் என்பது வேறுவகை என்பது இக்குறட்கருத்து.
நாணுடைமை உள்ளவர் தகாத செயல் ஆற்றமாட்டாதவர்.
நாணம் என்பது இழிசெயலுக்கு வெட்கப்படுதல்; அழகிய முகம் கொண்ட பெண்களது வெட்கம் என்பது வேறு.
|