இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1018பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1018)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் உரை: உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம்.
இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.

பரிமேலழகர் உரை: பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து.
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)

தமிழண்ணல் உரை: பிறர் கண்டு வெட்கப்படத்தக்க செயலைச் செய்துவிட்டு அதற்குத் தான் வெட்கப்படானாயின், அது அறமே கண்டு வெட்கப்பட்டு நீங்கும் தன்மையினையுடையதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின், அறம்நாணத் தக்கது உடைத்து.

பதவுரை: பிறர் நாணத்தக்கது-நாணத்தக்க பழியை; தான்-தான்; நாணான்-நாணமாட்டன்; ஆயின்-ஆனால்; அறம்-அறப் பேராற்றல், அறக்கடவுள், நற்செயல்; நாணத்தக்கது-விட்டு நீங்கத்தக்க குற்றத்தை; உடைத்து-உடைத்து.


பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின்;
பரிப்பெருமாள்: உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின்;
பரிதி: பிறர் கண்டு நாணத்தக்க ஒழுக்கத்திலே நடவாதபோது;
காலிங்கர்: தான் செய்த குற்றங்களைச் சான்றோர் கண்டு நாணி அஞ்சுமாப்போலத் தான் நாணான் ஆயின்;
பரிமேலழகர்: கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின், 'பிறர்' என்றார்.

'உயர்ந்தார் பலரும்/பிறர்/சான்றோர்/கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் வெட்கப்படுதற்குத் தான் வெட்கப் படாவிடின்', 'பிறர் நாணத்தக்க பழியைக் கண்டு ஒருவன் நாணமடையாவிட்டால்', 'மற்றவர்கள் பழியென்று மதிக்கிற காரியத்தைத் தான் கூசாமற் செய்வானாயின்', 'மற்றவர்கள் கண்டாலும் கேட்டாலும் நாணம் அடையத்தக்க செய்கைகளை ஒருவன் தான் நாணாது செய்வான் ஆயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறர் நாணம் அடையத்தக்க செயலைச் செய்யத் தான் வெட்கப் படாவிடின் என்பது இப்பகுதியின் பொருள்.

அறம்நாணத் தக்கது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். [ஒழியும்- நீக்கும்]
மணக்குடவர் குறிப்புரை: இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.
பரிப்பெருமாள்: அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.
பரிதி: அவன்பால் அறம் என்னும் தர்மம் நாணி வராது என்றவாறு.
காலிங்கர்: தன்னை அறம் நாணத்தக்க துடைத்து; எனவே அறம் முதலாகிய நாற்பெரும் பொருளுள் அறம் என்னும் பெரும் பொருளும் தன்னை அணுகா என்றவாறு.
பரிமேலழகர்: அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.

'அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன் செயலுக்கு அறம் வெட்கப்படும்', 'அவனது நாணமில்லாமை அறக்கடவுள் விட்டு நீங்கத்தக்க குற்றத்தினை உடையது', 'அவன் நடத்தும் வாழ்க்கை இல்லறமாயினும் சரி துறவறமாயினும் சரி, பழிப்புக்கு உரித்தானது', 'அறமானது அவனிடம் இருக்க நாணுந் தன்மையை உடையதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறம் கண்டு வெட்கப்பட்டு நீங்கும் தன்மையினையுடையதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர் நாணம் அடையத்தக்க செயலைச் செய்யத் தான் வெட்கப் படாவிடின், அது அறம் நாணத்தக்கது உடையதாகும் என்பது பாடலின் பொருள்.
'அறம் நாணத்தக்கது' குறிப்பது என்ன?

உலகம் பழித்தது ஒழிக்காவிடின் அறம் நாணி உன்னைவிட்டு நீங்கும்.

பிறர் கண்டு நாணத்தக்க பழியைத் தான் நாணாவிட்டால் அச்செயல் அறம் நாணி அவனைவிட்டு விலகிவிடும்.
பிறர்நாணத் தக்கது என்ற தொடர் உலகோர் நாணத்தக்க செயல் எனப்பொருள்படும். உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும், உலகம் பழித்தது ஒழிக்க வேண்டும், எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு என உலகம் தழீஇய வாழ்வு நடத்துவதைப் பெரிதும் வேண்டுவர் வள்ளுவர். இங்கும் அவர் உலகத்தார் நாணுவதைச் செய்யாதே என்கிறார். அவ்விதமின்றித் தான் நாணாமல் செய்பவனைக் கண்டு அறம் நாணும்; அவனுடைய வாழ்க்கை அறமற்ற, குற்றமுடைய வாழ்க்கையாகிவிடும். நாணமில்லாதவனிடம் அறமே நாணி விலகிவிடும். அதாவது அவனை விட்டு அறம் வெட்கப்பட்டு விலகிப் போய்விட்டது எனக்கொள்ள வேண்டும்..

'அறம் நாணத்தக்கது' குறிப்பது என்ன?

'அறம் நாணத்தக்கது' என்றதற்கு அறம் நாணியடையாது ஒழியும் தகுதியுடைத்தாம், அறம் என்னும் தர்மம் நாணி வராது, தன்னை அறம் நாணத்தக்க துடைத்து; எனவே அறம் முதலாகிய நாற்பெரும் பொருளுள் அறம் என்னும் பெரும் பொருளும் தன்னை அணுகா, அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடைத்து, தருமம் விட்டு நீங்கத்தக்க குற்றத்தினை உடையது., தன்மதேவதை நாணி நீக்கத்தக்க குற்றமுடைத்து, அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும், அறமே கண்டு வெட்கப்பட்டு நீங்கும் தன்மையினையுடையதாகும், அறம் கண்டு நாணத்தக்கதாகும், அறம் வெட்கப்படும், அறமே நாணுகின்ற இழிவு உடையது. (அவனை அறம் நீங்கும்), அறமானது அவனிடம் இருக்க நாணுந் தன்மையை உடையதாகும், அறம் வெட்கப்படும். (அவனை விட்டு நீங்கும்.), அறம் நாணி அவனைவிட்டு விலகக்கூடிய குற்றத்தினை உடையதாகும், அவனை அறமானது சாராது அஞ்சி விலகிவிடும் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அறம் என்பதற்கு அறக்கடவுள் என்றும் பொருள் கொள்வர். பிறர் வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்து விட்டு ஒருவன் தான் மட்டும் நாணாதிருந்தால் அவனைக் கண்டு அறங்கூட வெட்கி நீங்குபடியான குற்றத்தை அவன் புரிந்தது போன்றதாம் என்கிறது பாடல். உலகம் சீ, சீ என்று பழிக்கும் செயல்களைச் செய்துகொண்டு அதற்காகச் சிறிதும் வெட்கப்படாமல் இருப்பவனிடம் அறச்சிந்தனை இருக்காது. எனவே அறமானது தான் வெட்கப்பட்டு இத்தகையவனிடம் இருக்கவே முடியாது என்று விலகிவிடுமாம்.

அறத்திற்கு மாறுபட்ட வழியில் நடந்தால் அறம் நம்மைத் தண்டிக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் வள்ளுவர். எனவே என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் (அன்புடைமை 77 பொருள்: எலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாததை அறம் (வருத்தும்) ), மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (தீவினையச்சம் 204 பொருள்: பிறனுக்குத் தீமை பயக்குஞ் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும்வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்), அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா (அவாவறுத்தல் 366 பொருள்: அறத்திற்கு அஞ்ச வேண்டும். ஏனென்றால் ஆசை வஞ்சித்து அறத்தைக் கெடுத்துவிடும் என்பதால்) போன்ற பாடல்களில் அறம் ஒறுத்தல் பற்றிப் பேசியுள்ளார். இங்கு அறம் சீ என்று நாணி வெறுப்பதால் அதையும் அறம் ஒறுத்தலாகவே கொள்ளலாம்.

பிறர் நாணம் அடையத்தக்க செயலைச் செய்யத் தான் வெட்கப் படாவிடின், அது அறம் கண்டு வெட்கப்பட்டு நீங்கும் தன்மையினையுடையதாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அறம் தன்னைச் சார்ந்திருக்க வேண்டுமானால் நாணுடைமை வேண்டும்.

பொழிப்பு

பிறர் வெட்கப்படுதற்குத் தான் நாணமடையாவிட்டால் அவனது நாணமில்லாமை அறம் வெட்கப்பட்டு அவனை நீங்கும் தன்மையினையுடையதாகும்.