இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1012ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு

(அதிகாரம்:நாணுடைமை குறள் எண்:1012)

பொழிப்பு (மு வரதராசன்): உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை ; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

மணக்குடவர் உரை: உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை.
இது நாணம் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல.
(ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உணவு, ஆடை, பிள்ளைப்பேறு என்பன மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவாய் வேண்டப்படுவனவே; மக்களுக்குச் சிறப்புத் தருவது நாண் உடைமையே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல; மாந்தர் சிறப்பு நாணுடைமை.

பதவுரை: ஊண்-உணவு; உடை-உடுக்கப்படுவது; எச்சம்-மக்கட்பேறு, ஒழிந்தவை; உயிர்க்கு-உயிருக்கு; எல்லாம்-அனைத்தும்; வேறு-தனிச்சிறப்பு; அல்ல-ஆகாமாட்டா; நாணுடைமை-பழிக்கு வெட்கப்படுந்தன்மை; மாந்தர்-நன்மக்கள்; சிறப்பு-வேறுபாடு.


ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்;
பரிப்பெருமாள்: ஊணும் உடையும் ஒழிந்தனவும் பன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்;
பரிதி: தேவர்கதி மக்கள்கதி விலங்கின்கதி பட்சிகதி இவையெல்லாம் நவதாதுவினால் எடுத்த சரீரம்; [கதி -பிறப்பு; நவதாது - தோல், எலும்பு, குருதி, சுவேதநீர், மச்சை, கொழுப்பு, நரம்பு ஆகியன]
காலிங்கர் ('அச்சம்' பாடம்): உணவின் உடையது அச்சம் உலகத்து உயிர்கட்கு எல்லாம் வேறுபாடு உடைய அல்ல; எனவே உணவின் குறைபாட்டுக்கு அஞ்சுவது ஓர் அச்சம் எவ்வுயிர்க்கும் ஒக்கும்;
பரிமேலழகர்: ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது;
பரிமேலழகர் குறிப்புரை: ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர். [எச்சம் என்பதனை அச்சம் எனப் பாடங் கொண்டவர் காலிங்கர்]

'உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்' என்று மணக்குடவரும் 'ஊணும் உடையும் ஒழிந்தனவும் பன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்' என்று பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தேவர்கதி மக்கள்கதி விலங்கின்கதி பட்சிகதி இவையெல்லாம் நவதாதுவினால் எடுத்த சரீரம்' என்றார். காலிங்கர் எச்சம் என்பதற்குப் பதிலாக அச்சம் எனப் பாடங்கொண்டு 'உணவின் உடையது அச்சம் உலகத்து உயிர்கட்கு எல்லாம் வேறுபாடு உடைய அல்ல; எனவே உணவின் குறைபாட்டுக்கு அஞ்சுவது ஓர் அச்சம் எவ்வுயிர்க்கும் ஒக்கும்' என உரை தந்தார். பரிமேலழகர் 'ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது' என உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உணவு உடை பின்வழி எல்லார்க்கும் பொது', 'உணவு, உடை, அவையொழிந்த அச்சம், உறக்கம், காமம், மக்கட்பேறு முதலியவை எல்லாம் மக்கள் உயிர்க்குப் பொதுவானவை', 'எல்லா மனிதர்க்கும் உணவு, உடை முதலான மற்றவைகளும் வெவ்வேறு அல்ல', 'ஊணும் உடையும் மக்கட்பேறும் மக்கள் உயிர்க் கெல்லாம் பொது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உணவு, உடை, மக்கட்பேறு இவை அனைவர்க்கும் பொது என்பது இப்பகுதியின் பொருள்.

நாணுடைமை மாந்தர் சிறப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை.
மணக்குடவர் குறிப்புரை: இது நாணம் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தலைமை மக்களுக்கு விசேடமாக வேண்டுமது நாணுடைமை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாணம் வேண்டுமென்றது.
பரிதி: அதில் மானிடர் விசேஷம்; அது எப்படி என்றால் நாணம் என்னும் மனப்பயன் உண்டாகில் என்றவாறு.
காலிங்கர் ('அச்சம்' பாடம்): மற்றுயாதோ மக்கள் வேற்றுமை எனின் தமது முறைமைக் குறைபாட்டிற்கு உள் அஞ்சி நாணுவது ஓர் நாணம் உடைமையே மக்கட் பிறந்தார்க்குச் சிறந்தது என்றவாறு.
பரிமேலழகர்: நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. [அவை - ஊண், உடை முதலியன
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. [அவ்வுயிர்களின் வேறுபாடு - மக்களினும் நன்மக்கள் வேறுபட்டவர் என்பது அறிவதற்குச் சிறந்தகுறி, அவரிடத்து நிகழும் கருமத்தால் நாணுதலாகிய நாணாம்]

'தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை' என மணக்குடவரும் 'தலைமை மக்களுக்கு விசேடமாக வேண்டுமது நாணுடைமை' என்று பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'அதில் மானிடர் விசேஷம்; அது எப்படி என்றால் நாணம் என்னும் மனப்பயன் உண்டாகில்' என்றார். காலிங்கர் 'தமது முறைமைக் குறைபாட்டிற்கு உள் அஞ்சி நாணுவது ஓர் நாணம் உடைமையே மக்கட் பிறந்தார்க்குச் சிறந்தது' எனக் கூறினார். பரிமேலழகர் உரை 'நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல' என்கிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கமே நன்மக்களின் சிறப்பு', 'ஆனால், நன்மக்கட்குச் சிறப்புத்தருவது நாணுடைமையே', 'ஆனால் சிறப்புகளில் வேறுபடுத்துவது நாணுடைமைதான்', 'நன்மக்கட்குச் சிறப்பாவது நாண் உடைமையே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாணுடைமை நன்மக்களை வேறுபடுத்துகிறது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உணவு, உடை, எச்சம் இவை அனைவர்க்கும் பொது; நாணுடைமை நன்மக்களை வேறுபடுத்துகிறது என்பது பாடலின் பொருள்.
'எச்சம்' குறிப்பது என்ன?

நன்மக்கள் என அறியப்படுவதற்குச் சிறப்பாக வேண்டுவது நாண்.

உணவும் உடையும் அவைபோல்வன பிறவும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. நன்மக்களை வேறுபடுத்திக் காட்டுவது அவர்களிடமுள்ள நாண் குணமே ஆகும்.
எல்லோரும் உயிர்வாழ உண்கின்றோம்; மானத்தைக் காக்க ஆடை அணிகின்றோம்; எஞ்சி நிற்பதாகக் கூறத்தகும் மக்கட்பேற்றை விட்டுச்செல்கின்றோம். இவை மக்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ளவை. ஆனால் நன்மக்கள் என்பவர்கள் வேறுபட்டவர்கள். எவ்விதம்? அவர்களிடம் உள்ள நாணுடைமை என்னும் மாண்புமிக்க உடைமையே அவர்களைச் சிறந்தவராகக் காட்டும். தகாத செயல் புரிந்து பிறரால் பழிக்கப் படாமலிருக்க நாணுடமையை நன்மக்கள் மேற்கொள்வர். மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணத்துடன் இருத்தலே ஆகும்.

சிறப்பு என்னும் சொல் மற்றொன்றுக்கு இல்லாததைக் குறிப்பது அல்லது ஏனையவற்றிலிருந்து உயர்த்திக் காட்டக் கூடிய பண்பு என்று பொருள்படும். குறளில் சிறப்பு என்பது பொது அல்லாதது, உயர்வு அல்லது பெருமை என்னும் பொருள்களில் வழங்கக் காணலாம். மாந்தர் பற்றி வரும்போது, இச்சொல், மற்றவரிடமிருந்து ஒருவரை வேறுபடுத்திக் காட்டுவதாம். எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பற்றிச் சிறப்பு எனப்படுகிறது. நாணுடைமை என்பது அத்தகைய சிறப்புகளில் ஒன்று.

'எச்சம்' குறிப்பது என்ன?

'எச்சம்' என்ற சொல்லுக்கு (உணவும் உடையும்) ஒழிந்தன, அச்சம், (ஊணும் உடையும் அவை) யொழிந்தன, மற்று முண்டானதெல்லாம், மற்றும் ஒழிந்தன, எஞ்சி நிற்கும் மற்றவை, அவையல்லாத பிற, இன்னபிற, பின்வழி, அவையொழிந்த அச்சம் உறக்கம் காமம் மக்கட்பேறு முதலியவை, (முதலான) மற்றவை, பிற, பிள்ளைப்பேறு, இணைவிழைச்சு முதலிய, மக்கட்பேறு, அவைபோல்வன பிற, அவைபோன்ற பிற, அவை யொழிந்த பிற, செல்வம் கல்வி அறிவு போன்ற பிற பொருள்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எச்சம் என்ற சொல்லுக்கு நேர் பொருள் எஞ்சி நிற்பது அதாவது 'மிச்சம் விட்டிருப்பது' என்பது. ஒருவரது வாழ்வில் அவருக்கு எஞ்சி நிற்பவையாகக் கருதப்படுபவை அவர் இறந்த பிறகு மிச்சமாகும் பொன், பொருள், புகழ், பிள்ளைகள் போன்றவையாம். குறளில் பலவிடங்களில் இச்சொல் பயின்று வந்திருக்கிறது. இச்சொல்லுக்கு விட்டுச் செல்பவை, மிகும் பொருள், முடிவுறாத-அரைகுறையான, மிஞ்சுவது, புகழ், மக்கள் என்ற பொருள்களும் காணப்படுகின்றன. எச்சம் என்றதற்கு மக்கள், புகழ், என்னும் பொருள்களே பொருந்துவனவாம் என்பார் இரா சாரங்கபாணி. இக்குறளுக்கான விளக்க உரைகளில் எச்சம் என்பதற்குப் பின்வழி, இணைவிழைச்சு, உறக்கம், அச்சம், ஆசை, காமம், பிள்ளைப்பேறு, அணி, மனை, பேச்சு, கல்வி முதலியன எனவும் பொருள் கூறினர். எச்சம் என்பதற்கு 'பின்பு நிற்கும் மக்கள்' என்று பல உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காலிங்கர் 'ஊண்உடை எச்சம்' என்பதற்குப் பதிலாக ‘ஊணுடை அச்சம்’ என்று பாடமோதி உணவின் உடையது அச்சம் என்றார் அதாவது ஊண் காரணமாக உயிர்களெல்லாம் அச்சமுடையன என உரை வரைந்தார். இவர் உணவின் குறைபாட்டிற்கு அஞ்சுவது எல்லா உயிர்கட்கும் பொது; முறைமைக் குறைபாட்டிற்கு அஞ்சி நாணுபவர் நன்மக்கள் என்ற கருத்தைத் தருகிறார். இவர் இப்பாடலிலுள்ள ‘உயிர்களெல்லாம்’ என்ற தொடர் அஃறிணையையும் உளப்படுத்தி நிற்றலின் உடை என்பதற்கு ஆடை எனப் பொருள் கொள்ளவில்லை போலும்.

'ஊணுடையோடு சேர்த்து உயிர்க்கெல்லாம் பொதுவாக எண்ணற்குரியது மக்கள் எனும் பொருள்படும் 'எச்சம்' என்பதாகலின் அங்ஙனம் கொண்ட பரிமேலழகர் பாடமே இயைவதாகும்' என்பார் இரா சாரங்கபாணி. உணவும் உடையும் பிள்ளைப்பேறு ஆகியன மக்கள் எல்லார்க்கும் பொது; நாணமே நன்மக்கட்குச் சிறப்பு.

'எச்சம்' என்ற சொல் இங்கு பிள்ளைகள் குறித்தது.

உணவு, உடை, மக்கட்பேறு இவை மக்கள் அனைவர்க்கும் பொது; நாணுடைமை நன்மக்களை வேறுபடுத்துகிறது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நாணுடைமை மக்களுள் சிறந்தாரை அடையாளம் காட்டும்.

பொழிப்பு

உணவு, உடை, மக்கட்பேறு முதலியவை எல்லாம் மக்கள் உயிர்க்குப் பொது; நாணுடைமையே நன்மக்களை வேறுபடுத்துவது.