பிறர்பழியும் தம்பழிபோல் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு
(அதிகாரம்:நாணுடைமை
குறள் எண்:1015)
பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காவும் நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும்.
|
மணக்குடவர் உரை:
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார்.
இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.
(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
சுத்தானந்த பாரதியார் உரை:
தம்மால் பிறர்க்குப் பழிவராமலும், பிறர் தம்மைப் பழிக்க இடமில்லாமலும் கவனமாக, மட்டு மரியாதையுடன் நடப்பவரை, 'இவரே நாணமென்னும் நற்குணத்திற்கு உறைவிடம்' என்று உலகம் மதிக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார், உலகு நாணுக்கு உறைபதி என்னும்.
பதவுரை: பிறர்-மற்றவர்; பழியும்-பழியும்; தம்-தமது; பழியும்-பழியும்; நாணுவார்-வெட்கப்படுவார்; நாணுக்கு-வெட்கத்திற்கு; உறைபதி-தங்குகின்ற வாழிடம், இருப்பிடம்; என்னும்-என்று சொல்வர்; உலகு-உலகத்தார்.
|
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை;
பரிப்பெருமாள்: பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் நாணுமவர்களை;
பரிதி: தன் குற்றமும் பிறர் குற்றமும் கண்டு நாணுவர் அன்றோ;
காலிங்கர் ('தன்பழிபோல்' பாடம், 'நாணுவான்' பாடம்): பிறர்மாட்டு ஒரு பழிகாணினும் தான் பெரிதும் கூசித் தன்மாட்டு ஒரு பழி உறினும் தான் பெரிதும் நாணிக் கழிவான் யாவன்? [கூசி - நாணி; கழிவான் - நீங்குபவன்]
பரிமேலழகர்: பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை;
பரிமேலழகர் குறிப்புரை: ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். [அதுவும்-பிறர்க்கு வரும் பழியும்]
'பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை' என்றும் 'பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை' என்ற பொருளிலும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்பழிக்கும் தம்பழிக்கும் நாணுபவரை', 'பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் சமனாகக் கருதி நாணுபவரை', 'பிறருக்கும் பழிவரக் கூடாதென்றும் தமக்கும் பழிவரக் கூடாதென்றும் அஞ்சி நடப்பவர்களை', 'பிறர்க்கு வரும் பழிக்கும் தனக்கு வரும் பழிக்கும் அஞ்சுகிறவர்களே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தம்மால் பிறருக்குப் பழிவரக் கூடாதென்றும் பிறர் தம்மைப் பழிக்க இடம்கொடுக்கக் கூடாதென்றும் நாணுபவரை என்பது இப்பகுதியின் பொருள்.
நாணுக்கு உறைபதி என்னும் உலகு.:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார்.
மணக்குடவர் குறிப்புரை: இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.
பரிதி: நாணமிருக்கின்ற மாளிகை என்றவாறு.
காலிங்கர்: மற்று அவனை நாணுக்கெல்லாம் நன்றாக உறையும் ஆசு என்று எடுத்துரைப்பார் உலகத்தோர் என்றவாறு, [ஆசு- குற்றம்]
பரிமேலழகர்: உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது. [அதனை உடையாரது- அந்நாணினை உடையவரது]
'நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கத்தின் வாழ்விடமென உலகுபோற்றும்', 'நாணுக்கு உறைவிடம் என்று உலகோர் கூறுவர்', 'நாணுடைமை என்னும் நல்ல குணத்திற்கு இருப்பிடம் என்று உலகத்தார் பாராட்டுவார்கள்', 'நாண் என்பதற்கு உறைவிடம் என்று உயர்ந்தோர் கூறுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நாணுக்கு உறைவிடம் என உலகம் போற்றும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தம்மால் பிறருக்குப் பழிவரக் கூடாதென்றும் பிறர் தம்மைப் பழிக்க இடம்கொடுக்கக் கூடாதென்றும் நாணுபவரை, நாணுக்கு உறைவிடம் என உலகம் போற்றும் என்பது பாடலின் பொருள்.
'பிறர்பழி' குறிப்பது என்ன?
|
யாருக்கும் எவ்வகையிலும் பழி வாராமல் நடந்துகொள்பவரை உலகம் வியக்கும்.
தம்மால் பிறருக்குப் பழிவரக் கூடாதென்றும் பிறர் தம்மைப் பழிக்க இடம்கொடுக்கக் கூடாதென்றும் அஞ்சி நடப்பவர்களை, நாணுக்கு ஓர் இருப்பிடம் என்று உலகத்தார் சொல்லுவர்.
தன் பழிக்கு அஞ்சி நாணுதலே அன்றிப் பிறர் பழிக்கும் அஞ்சி நாணவேண்டும் என்கிறது பாடல்.
சில வேளைகளில், நாம் அறிந்தோ அறியாமலோ. நம்முடைய செயலால் பிறர்க்குப் பழி உண்டாகும் நிலைமையும் ஏற்படும். இதை முன்னமே உணர்ந்து நம்மால் பிறர் யார் மீதும் எவ்வகையாலும் பழி உண்டாகாமல் நடந்து கொள்ளவேண்டும். இதுவே இக்குறள் வலியுறுத்தும் 'பிறர்பழி நாணுதல்' என்பதாகலாம்.
தம் பழி நாணுதல் என்பது தகாத செய்யக் கூசுதலாகும். நற்குணம் கொண்ட பெரியோர் தனக்குப் பழி நேராதவாறு தன்னைக் காத்துக் கொள்வர். இவர் எந்த ஒரு இழிவான செயலையும் செய்ய எண்ணத்தளவிலேயே அஞ்சுவர்; தினைத்துணையாம் குற்றம்வரினும் பனைத்துணையாகக் கொள்வர் பழிநாணும் மேலோர்.
பிறர்பழியும் தம்பழியும் அஞ்சி வாழ்பவரை நாண் என்னும் நற்குணம் வாழும் இடமாகும் என்று உலகம் போற்றும்.
|
'பிறர்பழி' குறிப்பது என்ன?
'பிறர்பழி' என்ற தொடர்க்குப் பிறர்க்கு வரும் பழி, பிறர் குற்றம், பிறர்மாட்டு ஒரு பழிகாணினும், பிறருக்கு வருகிற பழி, பிறர்பழி, பிறருக்கும் பழிவரக் கூடாதென்றும், பிறர்க்கு உண்டாகிய பழி, பிறர்க்கு வரும் பழி, பிறர்க்கு ஏற்படும் பழி, தன்னோடு வாழ்ந்த ஒருவர் செய்த பழிச்செயல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பிறர்பழி என்பதற்கு உரையாளர்கள் கூறிய விளக்கங்களிலிருந்து சில:
- தமக்கு வரும் பழிக்கு மட்டும் அல்லாமல் பிறர்பழிக்காவும் நாணுதல் வேண்டும். இவ்வாறு பிறர்பழியும் தம்பழியும் ஒப்ப மதித்து நாணுகின்றவர்களே நாணத்திற்கு உறைவிடம் என்று உலகம் மதிக்கும்.
- பிறர் ஒருவர் செய்த பழிச்செயலையும், தான் செய்த பழிச்செயலாகவே நினைத்து நாணுவர்.
- தம்முடைய பழிக்கும், பிறருக்கு வந்த பழிக்கும் தாமே காரணம் என்று எண்ணி அவற்றைத் தமக்கு வந்ததாகவே எண்ணி நாணுவார்கள்.
- தம்பழி நாணுவர். ஆனால் பிறர்பழி கண்டு மகிழ்வர். நாணுடைமைக்கு உரியதாக உலகம் கருதுவது தம்பழி, பிறர்பழி ஆகிய இரண்டையும் கண்டு நாணுபவரையாம்.
தனக்கு எவ்வகையிலும் பழியை விளைவிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்; பிறராலும் தனக்குப் பழி ஏற்படுமோ என அஞ்சி அதற்கும் நாண வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவது இக்குறள்.
- பிறர் குறையைத் தம் குறையாகக் கருதிச் சமுதாயப் பொறுப்பை யுணர்தல் வேண்டும்; பிறர் தவற்றின் பொருட்டு தாம் நாணுவர் என்பதையே வள்ளுவர் இக்குறள் மூலம் உணர்த்தினார்.
'பிறருக்கும் பழிவரக் கூடாதென்றும் தமக்கும் பழிவரக் கூடாதென்றும் அஞ்சி நடப்பவர்களை நாணுடைமை என்னும் நல்ல குணத்திற்கு இருப்பிடம் என்று உலகத்தார் பாராட்டுவார்கள்' என்னும் நாமக்கல் இராமலிங்கம் கூறும் உரை எளிமையாகவும் தெளிவு தரக்கூடியதாகவும் உள்ளது.
|
தம்மால் பிறருக்குப் பழிவரக் கூடாதென்றும் பிறர் தம்மைப் பழிக்க இடம்கொடுக்கக் கூடாதென்றும் நாணுபவரை, நாணுக்கு உறைவிடம் என உலகம் போற்றும் என்பது இக்குறட்கருத்து.
தாம் சார்ந்து எப்பழியும் எவர்க்கும் வந்துவிடக்கூடாது என்று எண்ணுபவர் நாணுடைமையின் இருப்பிடமாம்.
பிறர் தம்மைப் பழிக்க இடம்கொடுக்கக் கூடாதென்றும் தம்மால் பிறருக்குப் பழிவரக் கூடாதென்றும் நாணுபவரை, நாணுக்கு உறைவிடம் என உலகம் போற்றும்.
|