நாண்அகத்து இல்லார் இயக்கம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல்;
பரிப்பெருமாள்: மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல்;
பரிதி: நாணமில்லாதவன் நட்பு எப்படி என்றால்;
காலிங்கர்: தமக்குத் தகுவதனைச் செய்யாமைக்கும், தகாததனைச் செய்கைக்கும் நாணுவது அன்றே ஒருவர்க்கு நாணமாவது. மற்று அது தம் உள்ளத்து இல்லாதார் உளர்போல இயங்கித் திரிகின்ற இயக்கம் எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்;
'மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'நாணமாவது. மற்று அது தம் உள்ளத்து இல்லாதார் உளர்போல இயங்கித் திரிகின்ற இயக்கம்' என்றும் பரிமேலழகர் 'மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்' எனவும் விரித்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நாணம் இல்லாதாரின் நடமாட்டம்', 'மனத்தில் நாணமில்லாதவனது நடமாட்டம்', 'உள்ளத்திலே நாணமில்லாதவர் நடக்கை', 'மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று நடமாடுகின்ற தன்மை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உள்ளத்து நாணமில்லாதவர் நடமாட்டம் என்பது இப்பகுதியின் பொருள்.
மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். [மரப்பாவை - மரத்தாற் செய்யப்பட்ட பொம்மை]
மணக்குடவர் குறிப்புரை: இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.
பரிப்பெருமாள்: மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.
பரிதி: மரப்பாவை கயிற்றினாலே விழிமருட்டி ஆடுதற்கு ஒக்கும் என்றவாறு. [விழிமருட்டி - விழியால் மயக்கி]
காலிங்கர்: மரத்தினான் மக்களைப் போலும் வடிவு பாவித்த பாவையானது ஊடு சென்று இயக்கும் கயிற்று வலியான்4 உயிருடை உருபு என்று தன்னையும் பிறர் மதிக்குமாறு அவர் மதியினை மருட்டிய அத்தன்மைத்து. [ஊடு சென்று - இடையே சென்று; வலியான் - வலிமையினால்]
காலிங்கர் குறிப்புரை: எனவே இவரும் ஊழ்வலியினால் ஒரு மக்கள் உருபுபோல இயங்கித் திரியும் இத்துணையல்லது அகத்து ஓர் உணர்வு இன்று என்பது பொருள் என்றவாறு,
பரிமேலழகர்: மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். [இயந்திரக்கயிறு - இயந்திரங்களை இயக்கும் கயிறு, சூத்திரக்கயிறு; நாணுடைய - கயிற்றையுடைய]
பரிமேலழகர் குறிப்புரை: கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.
'மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மரப்பாவை கயிற்றால் நடமாடியது போலும்', 'மரத்தினால் செய்த பாவையைக் கயிற்றால் இயக்கி உயிருடையதுபோல மயக்கியது போலும்', 'மரத்தினால் செய்த பதுமை, கயிற்றினால் ஆடி உயிருள்ளதாகக் காட்டுவது போலாம்', 'மரத்தினால் செய்த பாவை இயந்திரக் கயிற்றினாலாய தன் ஆட்டத்தால் உயிருடைத்தாக மயங்கினால் போன்றதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மரத்தினால் செய்த பாவையைக் கயிற்றால் இயக்கி உயிருள்ளதாகக் காட்டுவது போலாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|