நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஒருவரது உடல் நலமாக இருக்கும் வரையில்தான் அவரது அறிவும் ஆற்றலும் சிறந்து விளங்கும். உடம்பிற்கு வரும் நோய், உள்ளத்தின் உறுதியையும் அறிவின் தெளிவையும் ஆற்றலையும் குன்றச் செய்யும் வல்லமை கொண்டது. அது நம்மைச் சமுதாயக் கடமைகளையும் ஒழுக்கங்களையும் மேற்கொள்ள விடாது. பகைபோல் நின்று வருத்தும். நோய்களைத் தடுப்பனவும் தீர்ப்பனவுமான நலப்பொருள் தொகுதியாக இவ்வதிகாரம் அமைந்துள்ளது.
மருந்து அதிகாரத்தின் முதல் ஏழு குறட்பாக்கள் நோயின்றி வாழ ஒருவனது உண்ணும் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குடலியல் வல்லுநர் (gastroenterologist) போல் சொல்கிறார் வள்ளுவர், நோயில்லாமல் வாழ இயற்கை வழிமுறைகள் கூறப்படுகின்றன. மருந்து வேண்டாத வாழ்வு அறிவுறுத்தப்படுகின்றது. உணவே மருந்தாவதைப் போற்றியுரைக்கிறார் வள்ளுவர். உணவுக் கட்டுப்பாட்டையே ஒரு மருத்துவ முறையாகக் காட்டுகிறார் அவர். உண்ணும் உணவு முறையாலேயே பிணியைப் போக்கலாம் என்கிறார். நோய் வந்த பிறகு மருந்துண்பதை விரும்பாது நோய் வராமல் காத்துக் கொள்வதையே வலியுறுத்தப்படுகிறது. பின்னுள்ள மூன்று குறளில் நோய் வந்தபின் அதைத் தீர்த்துக்கொள்ளும் மருத்துவம் அறிவியல் முறையாகச் சொல்லப்படுகிறது.
மருந்து என்னும் சொல் மருந்துப் பொருளையும், நோய் தணிக்கும் முறையையும், நோய் வராமற் காக்கும் வழிவகையையும் குறிக்கும்.
மருந்து என்பது நோய் தீர்த்தலுக்குப் பயன்படுவது. நோய் தீர்த்தல் முறை மருத்துவம் எனப்படுகிறது.
மருத்துவ வகைகளில் சித்த வைத்தியம், ஆயுள்வேதம், யூனானி, ஹோமியோபதி, அறிவியல் முறை-அல்லோபதி (allopathy) எனப் பல முறைகள் உள்ளன.
ஊசி மருத்துவம் (Acupuncture) அழுத்தப்புள்ளி (Acupressure) முறைகளால் மருந்துகளின்றியே சிலவகைப் பிணிகளை குணப்படுத்த முடியும். இவற்றுள் இன்று அல்லோபதியே மக்கள் பெரிதும் விரும்பத்தக்க நிலையில் உள்ளது.
மருந்துகளில் சூரணம், பஸ்மம், லேகியம், மெழுகு, தைலம், கசாயம், பற்று, வேது, புகை, மாத்திரை, ஊசிமருந்து போன்று பல வகைகள் உள.
இனி வகைவகையாய் நோய்கள் மனிதனைப் பீடிக்கின்றன.
உடல் சம்பந்தமாக வரும் நோய் பெரும்பாலும் தவறான உணவுப் பழக்க வழக்கம், தூய்மையின்மை, தீய பழக்க வழக்கம், தொற்று நோய்க் கிருமி (Bateria, Virus) முதலாயவற்றால் உண்டாகிறது. உடல் நோய்கள் மூப்பெய்தல், உடல்நலம் குறைதல், உறுப்புக்கள் செயலிழத்தல், விபத்துக்களால் நினைவிழத்தல், மாரடைப்பு போன்ற அதிரவரும் நோய்கள்; வலித்துன்பம் (உடம்பு இடும்பை), பருவரல், சீழ்படிதல் (கைகொல்லும்) தீப்புண்; பாலியல் நோய் (புன்னலம்); வயிற்றுப்போக்கு, அம்மை, கண்நோய், குளிர்காய்ச்சல், கொள்ளைநோய் போன்ற தொற்றுநோய்கள், செரிக்காமை, நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற நீங்காத (தண்டா) நோய்கள்; புற்றுநோய், ஏப்பு (AIDS) நோய் போன்ற குணப்படுத்த இயலாதவை (உய்வில் நோய்-Chronic diseases), துன்புறுத்தும் (எவ்வ) நோய் போன்றவை. அண்மைக் காலத்தில் மனித உயிர்களைப் பலிகொண்ட பெரியம்மை, கழிச்சல் நோய் (cholera), காசநோய் (tuberculosis), மலேரியா போன்ற உயிர்கொல்லும் தொற்றுநோய்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. இன்று கொரானா (Coronavirus disease (COVID-19) என்னும் நுண்தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டு மனித உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தாலாக உள்ளது.
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து (நாடு 738 பொருள்: நோயில்லாமை, செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பம் உடைமை, காவலுடைமை இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்பர்) என்று நாடு அதிகாரத்துக் குறளில் கூறப்பட்டது. ஒரு நாடு சிறப்பாய்த் திகழ வேண்டுவதற்கு வள்ளுவர் உணர்த்திய முதல் தேவை பிணியில்லாச் சமுதாயம் ஆகும்.
முன்னேற்ற மடையாத நாடுகளில் பட்டினியும் பிணியும் ஒருங்கே இருக்கக் காண்கிறோம். முன்னேற்ற மடையாத நாடுகளில் ஊட்டச் சத்தின்மையினாலும், வறுமையினாலும் மக்கள் நோயினால் நலிவுற்று வாடுகிறார்கள்.
இணைவிழைச்சு எவ்விதம் உடற்பசித் தீர்வாக உள்ளதோ அதுபோல் உண்ணுதல் இயற்கையான உயிர்ப்பசியைத் தீர்க்கிறது. உயிரினங்கள் அனைத்தின் இயக்கத்திற்கும் மிகமிகத் தேவையானது உணவு. உண்பதில் ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டும் என்பது அழுந்தச் சொல்லப்படுகிறது இங்கு.
மருந்தில்லா மருத்துவத்தின் நோய்த் தடுப்பு முறையில் உணவு ஒழுக்கமே இவ்வதிகாரத்தில் மிகையாகப் பேசப்படுகிறது.
பசிக்காக மட்டுமன்றி சுவைக்காகவும் உணவு உட்கொள்கிறோம். எண்ணெய், கொழுப்புப்பொருள் ஆகியன உணவின் சுவையைக் கூட்டுவதோடு பெரும்பான்மை நோய்கள் அவற்றின் காரணமாகவே உண்டாகின்றன. மாறல்லாத உணவு உட்கொள்ள வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. அதையும் முன் உண்டது செரித்த தன்மையை அறிந்து, துவரப் பசித்து உண்ண வேண்டும்; உணவின் அளவு, உண்ணும் காலம், மாறுபட்ட உண்டி ஒழித்தல் ஆகியன தெளிவாய், அழுத்தமாய்க் கூறப்படுகின்றன;
சில கருத்துக்கள், மனதில் பதிவதற்காக மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதுண்டு. கட்டுப்பாடாக உணவருந்துவதன் இன்றியமையாமையை விளக்க வந்த வள்ளுவரும், வெவ்வேறு முறையில் அளவாக உண்ணுதலையும், செரிமான அளவு அறிந்து, இழிவு உணர்ந்து உண்பதையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார். பசித்தீ அளவு மட்டுமல்லாமல் உண்பதையும் அளவு அறிந்து உட்கொள்ளவேண்டும்.
எதிலும் மிதமாக இருப்பதே சிறந்தது. உணவு, தொழில், உறக்கம் ஆகிய அனைத்தும் அளவோடிருப்பதே உடல் நலத்துகேற்றதாகும். அளவோடு உண்பவனை, இழிவறிந்து 'உண்பான்' எனக் குறிப்பவர், கழிமிகுதியாக உண்பவனை நேரிடையாக, விலங்கினத்தான் என்று கூறாமல் 'இரையான்' என்று இழிவுதோன்றக் கூறுகிறார்.
நோய் வராமல் காத்தற்குரிய தடுப்பு முறையைக் கூறியபின், பொதுவான மருத்துவமுறை பற்றிச் சொல்லப்படுகின்றது. மருத்துவன் நோயின் தன்மையையும் அது பீடித்தற்கான அடிப்படைக் காரணத்தை அறுதியிட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்; அதன்பின் அந்நோயை எந்த வகையில் தீர்ப்பது என்பதை உய்த்துணர்ந்து அதற்கு மருத்துவம் செய்து நோயை நீக்க வேண்டும். இதை நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என அழகுற உரைக்கிறார் வள்ளுவர்.
மருத்துவன் நோயாளியின் உடல்நிலை வயது முதலியவற்றையும், பிணியின் அளவையும், பருவத்தையுமறிந்து மருந்து கொடுக்க வேண்டும் என அடுத்து சொல்லப்படுகிறது.
படிப்பறிவும் பட்டறிவும் இணையச் செய்யும் மருத்துவமே ஏற்றமுடைத்து என்பது உணர்த்தப்படுகிறது.
மருந்து ஒன்றல்ல; மருந்துடன் நோயாளி, மருத்துவன், உழைச்செல்வான் என நான்கு மருந்தாகும் என இவைகளின் கூட்டுறவாலே நோய் குணமடையும் எனவும் சொல்லப்பட்டது.
இவ்வாறு மருந்து வழிமுறைகள், படிப்படியாக மேற்கொள்ளவேண்டிய நோய் தீர்க்கும் மருத்துவச் செயற்பாடுகள் ஆகியன முறையாக வகுத்துத் தொகுத்துக் கூறப்படுகின்றன.
வள்ளுவர் பெயரால் சில மருத்துவ நூல்கள் இன்று உலவுகின்றன. அவர் அந்நூல்களை இயற்றி இருக்க மாட்டார் என்பதே ஆய்வாளவர்கள் முடிவு.