இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(அதிகாரம்:மருந்து குறள் எண்:948)

பொழிப்பு (மு வரதராசன்): நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.

மணக்குடவர் உரை: நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க.
இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: நோய் நாடி - மருததுவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி - பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க.
(காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் - நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. 'அது தணிக்கும் வாய்' என்றார். 'கழுவாயும் உள' (புறநா.34) என்றார் பிறரும். பிழையாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.)

இரா சாரங்கபாணி உரை: நோயை ஆராய்ந்து பின் அது வருவதற்குரிய காரணத்தை ஆராய்ந்து பின் அதனை நீக்கும் வழியை ஆராய்ந்து பின் செய்யும் நெறிமுறை தவறாமல் செய்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பதவுரை: நோய்-உடற்பிணி; நாடி-(இன்னது என்று) துணிந்து, தெளிவாகி; நோய்முதல்-பிணிக்காரணம்; நாடி-ஆராய்ந்து; அது-அது; தணிக்கும்-தீர்க்கும்; வாய்-வழி; நாடி-அறிந்து; வாய்ப்ப-பிழையாமல்; செயல்-செய்க.


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து உறும்நோய் தீர்க்கும் நெறியும் ஆராய்ந்து;
பரிதி: மூன்று வகை நோயை நாடி, நோய்வந்த காரணத்தையும் நாடி, அது பொறுக்கிற வகையையும் நாடி;
காலிங்கர்: இவன் உற்ற நோய் இது என்று மருத்துவ நூல் முறையினால் ஆராய்ந்தும், இவற்கு இந்நோய் வருதற்குக் காரணம் யாது என்று இங்ஙனம் தெரிந்து நோக்கிப் பின்னும் அந்நோயினை இனிதாகத் தணிக்கும் திறம் அறிந்தும்; [தணிக்கும் திறம் - நீக்குந் திறம்]
பரிமேலழகர்: மருத்துவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; [ஆதுரன் - நோயால் பீடிக்கப்பட்டவன்]
பரிமேலழகர் குறிப்புரை: காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் - நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. 'அது தணிக்கும் வாய்' என்றார். 'கழுவாயும் உள' (புறநா.34) என்றார் பிறரும்.

'நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோயையும் காரணத்தையும் தீர்க்கும் வழியையும் மருத்துவன் அறிந்து', 'நோயை இன்னதென்று கண்டறிந்து, அந்நோய் வந்த காரணத்தையும் அறிந்து அந்நோயைத் தீர்க்கத் தெரிந்த', 'மருந்து செய்யும் இடத்து, நோய் இன்னதென்று அறிந்து, அந்நோய்க்குக் காரணம் இன்னதென்று ஆராய்ந்து, அதனைத் தீர்க்கும் வழியையுந் தெரிந்து', 'நோயை இன்னது என்று ஆராய்ந்து, நோய்க்குக் காரணம் இன்னதென்று தெரிந்து, அந்நோயைப் போக்கும் வழி இன்னது என்று கண்டு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நோய் இன்னது என்று அறிந்து, நோய்க்குக் காரணம் இன்னதென்று ஆராய்ந்து, அந்நோயைப் போக்கும் வழி இன்னது என்று தெரிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

வாய்ப்பச் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க.
மணக்குடவர் குறிப்புரை: இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: தப்பாமற் செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.
பரிதி: போகிற வகையையும் பார்ப்பான் பரிகாரி என்றவாறு. [பரிகாரி-நீக்குபவன்]
காலிங்கர்: அவர் இடங்களில் செயல் விழையாமல் வாய்ப்பச் செய்க என்றவாறு. [செயல் விழையாமல் - மாறுபாடான செயல்கள் ஏற்படாமல்]
பரிமேலழகர்: அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: பிழையாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.)

'அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெற்றியாகச் செய்க', 'வைத்தியனிடத்தில் தக்க பரிகாரம் செய்ய வேண்டும்', 'அதனைப் பிழையறச் செய்யவேண்டும்', 'பொருந்துனாறு செய்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிழையறச் செய்யவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நோய் இன்னது என்று அறிந்து, நோய்க்குக் காரணம் இன்னதென்று ஆராய்ந்து, அந்நோயைப் போக்கும் வழி இன்னது என்று தெரிந்து வாய்ப்பச் செயல் என்பது பாடலின் பொருள்.
'வாய்ப்பச் செயல்' என்றால் என்ன?

மருத்துவரின் செயல் திறங்கள் விளக்கப்படுகின்றன.

நோய் இன்னதென்பதைக் கண்டறிந்து, அந்நோய்க்கு முதற்காரணம் இன்னது என்பதை ஆராய்ந்தறிந்து அந்நோயினை ஆற்றும் வழியையும் உணர்ந்து, பிழையற மருத்துவம் செய்தல் வேண்டும்.
பிணியானது இன்னதென்று உடற் குறிகளாலும், உடலிலிருந்து வரும் வெளிப்பாடுகளாலும் (வியர்வை, மலம், மூத்திரம், சளி, தோல் நிறம் போன்றன) துணிந்து, அந்நோயின் மூலகாரணம் எது என்பதை ஆராய்ந்து அறிந்து, பின்னர் அப்பிணி தீர்க்கும் வழியினையும் இன்னதென்று உணர்ந்து மிகுந்த பொறுப்புடன் தக்க மருத்துவம் செய்து பிணியை நீக்குவது மருத்துவர் திறன்.

மருத்துவம் செய்வகைகளாவன:
நோய்நாடி: ஒரு மருத்துவர் தன்னிடம் மருத்துவ உதவிக்காக வரும் ஒருவனை ஆயும்போது முதலில் அவன் உற்ற நோய் இன்னது என்பதை அறிகுறிகளால் தெரிந்துகொள்ள முயற்சிப்பார். இவ்விதம் நோயாளியைப் பீடித்துள்ள நோயின் தன்மைகளைக் கொண்டு அது எந்த வகை நோய் என்பதைக் கண்டறிதலை நோயறிதல்(Diagnosis) என்று கூறுவர்.
நோய்முதல் நாடி: இது அந்நோய் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்தலைக் குறிக்கும். நோயாளிக்கு இந்த நோய் பீடித்ததற்கான காரணம் என்ன என்பதை உய்த்துணர்ந்து அறுதியிட்டுக் கொள்வதே நோய்முதல் நாடலாம். எந்த ஒரு பிணிக்கும் உடல் குறைபாடுகளுக்கும் உற்ற காரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டியது தேவை. காரணம் என்ன என்று அறிந்தால், பிணி நீக்குதல் எளிதாகும். அக்காரணத்தைத் தடுத்தால் பிணிவராமலும் தடுக்க முடியும். இதை நோயின் காரணம் அல்லது தோற்ற மூலம் பற்றிய ஆய்வு (Etiology) என்பர். நோயின் மூல காரணத்தை அறிந்து அதை குணப்படுத்தாத எந்த மருத்துவமும் நோயின் அறிகுறிக்கான மருத்துவம் ஆகுமேயன்றி, அது உண்மையான நோயை உருவாக்கிய காரணிகளை குணப்படுத்துவதற்கான மருத்துவமுறை ஆகாது. ஒரு மருந்தைக் கொடுத்து, அந்த மருந்தினால் நோய் குணமாகிவிட்டது என்ற நிலை வருமானால், அது நோயைக் குணமாக்கும் மருந்து; நோயை குணமாக்காத மருந்தால் பயன் இல்லை.
பழம் மருத்துவ நூல்கள் நோய் தோன்றுதற்குக் காரணம் ஒருவனது உணவுப் பழக்கங்களும் செயற்பாடுகளுமே என்று கூறுகின்றன,
அதுதணிக்கும் வாய்நாடி: இது நோய் தீர்க்கும் முறைகளை உணர்தலைக் குறிக்கும். இவ்வாறு நோய்க்கான முதற்காரணத்தைக் கண்டறிந்த பின் அந்நோயை எந்த வகையில் தீர்ப்பது என்பது அடுத்துள்ள படிநிலையாகும். அவ்வழிகள் மூலம் மருத்துவம் பார்ப்பது நோய் தீர்த்தல் (Cure) ஆகும். நோயுற்றவனின் பருவம் (குழந்தை, சிறுவன், இளைஞன், நடுத்தர வயதினன், முதியோன் என்பன), நோய்த்துன்பத்தின் அளவு, நோயின் நிலை -தொடக்க நடுவீறு என்னும் நிலை, நோயின் வீரிய அளவு- மிகுதி குறைவு என்னும் தன்மை, அதன் காலம் ஆகிய அனைத்தையும் கருதியே மருத்துவம் செய்வர். சில நோய்களை வெறும் மருந்து மாத்திரைகளைக் கொண்டே தீர்க்கமுடியும். சிலவகை நோய்களை அறுவை மருத்துவம் செய்வதன் மூலமே சரிப்படுத்த முடியும். இவ்வகையான நோய்களை அறுவை மருத்துவத்தோடு மருந்துவழி மருத்துவமும் இணைந்து செயல்படுத்துவதன் மூலம் நோய்தீர்க்க முடியும்.

இக்குறளில் மருத்துவ வழிமுறைகள் - படிப்படியாக மேற்கொள்ளவேண்டிய நோய் தீர்க்கும் மருத்துவச் செயற்பாடுகள் வகுத்துத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இதைப்படிப்பவர் இன்றைய அறிவியல் மருத்துவத்தில் கையாளப்படும் முறைகளையே குறளும் கூறுகின்றது என்பதை உணர்வர். மருத்துவத் தொழில், அதிலுள்ள பொறுப்புகள் ஆகியன குறித்த உயர்கருத்துக்கள் அக்காலத்தும் இருந்தன என்பதும் இக்குறளினின்று தெளிவாகிறது.

இங்கு சொல்லப்பட்டுள்ள மருத்துவம் புரியும் திறப்பாடுகளை உடல் நோய்க்கு மட்டுமின்றி வாழ்க்கையின் மற்ற கூறுகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். சமுதாய நோய், குற்றங்களைத் தணிக்கும் தீர்வு முறைகளுக்கும் இக்குறட்கருத்தை வழிகாட்டியாகக் கொள்ளலாம். 'சமூகத்தில் எத்தகைய குற்றம் நோயாகத் தோன்றுகிறது? அத்தகைய குற்ற நோய்களுக்குக் காரணம் யாது? அத்தகைய குற்ற நோய்களைத் தீர்க்கும் வழிதான் என்ன என்பனவற்றை முறையாகச் சிந்தித்துச் செயல்பட இங்கு சொல்லப்பட்ட வழிமுறைகள் உதவும்.

செய்யுளின் முதலில்வரும் ஒருசொல், அதே பொருளிலேயே மீண்டும் மீண்டும் வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி எனப்படும். இக்குறளில் நோய் என்னும் சொல் உடற்பிணி என்ற பொருளிலும் நாடி என்னும் சொல் ஆராய்ந்து என்ற பொருளிலும் மீண்டும் மீண்டும் வந்துள்ளதால் இது சொற்பொருட்பின்வருநிலை அணியில் அமைந்த குறள் ஆகும்.
இப்பாடலில் பண்டை மருத்துவத்தில் நாடி பார்க்கும் செயலை நினைப்பூட்டுதல் போல நாடி என்ற சொல் திரும்பத் திரும்ப வருவது இனிமை பயப்பதாய் உள்ளது.

'வாய்ப்பச் செயல்' என்றால் என்ன?

'வாய்ப்பச் செயல்' என்ற தொடர்க்கு தப்பாமற் செய்க, வாய்ப்பச் செய்க, பிழையாமற் செய்க. பிறகு மருந்து கொடுக்கவேணும், பிழையாமல் வாய்ப்பச் செய்க, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும், நன்மை பயக்குமாறு செய்யும் முறைகளின்படி செய்ய வேண்டும், வெற்றியாகச் செய்க, செய்யும் நெறிமுறை தவறாமல் செய்க, செய்ய வேண்டிய முறையில் (மருத்துவம்) செய்ய வேண்டும், தவறாமல் மருத்துவம் செய்தல் வேண்டும், பிழையறச் செய்யவேண்டும், பொருந்துனாறு செய்தல் வேண்டும், உடம்பின் தன்மைக்கும் கால நிலையின் தன்மைக்கும் ஏற்ற வண்ணம் மருத்துவம் செய்தல் வேண்டும், வெற்றியாக நிறைவேறுமாறு கையாள்க. பொருந்தும் முறையால் மருத்துவன் மருந்து கொடுப்பானாக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'வாய்ப்பச் செயல்' என்ற தொடர் தப்பாமற் செய்க என்ற பொருள் தருவது. நோய் தீர்த்தல் என்பது ஒருவர் உயிருடன் தொடர்புடைய செயற்பாடுகளை உடையது. இதில் பிழை ஏற்பட்டால் நோயாளியின் உயிர்க்கே ஊறு விளையும். எனவே மருத்துவச் செய்வகைகளைக் கூறியபின் அவற்றில் தவறு உண்டாகதபடி நோய்தீர்த்தல் முறையை மேற்கொள்ளவேண்டும் எனச் சொல்லப்பட்டது. நோய் நீக்கலின்போது மாறுபாடான செயல்கள் ஏற்படாதவாறு பார்த்து வெற்றியாகச் செய்க என மருத்துவர்க்கு அறிவுரைகூறி பாடல் முடிக்கப் பெறுகிறது.

'வாய்ப்பச் செயல்' என்றது பிழையறச் செய்யவேண்டும் என்ற பொருள் தருவது.

நோய் இன்னது என்று அறிந்து, நோய்க்குக் காரணம் இன்னதென்று ஆராய்ந்து, அந்நோயைப் போக்கும் வழி இன்னது என்று தெரிந்து பிழையறச் செய்யவேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நோய் தீர்திறன் அறிந்து கவனமாக மருந்து தரப்படவேண்டும்.

பொழிப்பு

நோயையும் அது வருவதற்குரிய காரணத்தையும் பின் அதனை நீக்கும் வழியையும் ஆராய்ந்து பின் தவறு வாராதபடி செய்க.