இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0942



மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

(அதிகாரம்:மருந்து குறள் எண்:942)

பொழிப்பு (மு வரதராசன்): முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.



மணக்குடவர் உரை: யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின்.
இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம்.
(குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, கரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது.)

தமிழண்ணல் உரை: ஒருவன் முன் உண்ட உணவு செரித்ததை அறிகுறிகளால் நன்கு அறிந்து, பின்பு அடுத்து உண்பானானால் அவனுடம்புக்கு மருந்தென்று வேறு எதுவும் வேண்டாம்.
அறுதல்-உணவு செரித்தல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருந்தியது அற்றது போற்றி உணின், யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்.

பதவுரை: மருந்துஎன-மருந்து என்ற ஒன்று; வேண்டாவாம்-வேண்டுவதில்லையாம்; யாக்கைக்கு-உடம்பிற்கு; அருந்தியது-உண்டது; அற்றது-செரித்தது, விட்டு நீங்கியது; போற்றி-கவனித்து, தெளியஅறிந்து, காத்துப்பேணி, பார்த்து; உணின்-உண்டால்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா;
பரிப்பெருமாள்: மருந்தொன்றும் வேண்டாவாம் உடம்பிற்கு;
காலிங்கர்: உறுவதோர் நோயின்மை தமது யாக்கைக்கு;
காலிங்கர் குறிப்புரை: இனி, வேறு மருந்தொன்று நாவினால் சொல்லும் வேண்டாதாய் விடும் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார்.

'யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம்', 'உடம்புக்கு மருந்தென வேறு வேண்டாவாம்', 'மருந்துகளே வேண்டியதில்லை', 'அவன் உடம்பிற்கு மருந்து என்று வேறொன்று வேண்டாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

அருந்தியது அற்றது போற்றி உணின் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது.
பரிப்பெருமாள்: முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து நுகர்வது பாதுகாத்து நுகர்வானாயின் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவ்வாறு செய்வானாயின் மருந்து தேடவேண்டா என்றது.
பரிதி: செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டு கூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயுசஞ்சரிக்க ஒரு கூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியை விட்டு அசனம் பண்ணக் கடவன் என்றவாறு.
காலிங்கர்: தாம் அங்ஙனம் உண்பது இங்ஙனம் அற்றமை குறிக்கொண்டு ஒழுகப் பெறின்;
பரிமேலழகர்: ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, கரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. 'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது. [யாக்கை நொய்ம்மை - உடல் மெலிவு; கரணங்கள் தொழிற்குரியவாதல் - உறுப்புக்கள் தத்தம் தொழிற்குரிய வன்மையைப் பெறுதல்; யாக்கையவாகலின் - உடம்பின்கண் இருப்பன ஆதலால்]

'முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன் உண்டது செரித்தது பார்த்து உண்டால்', 'முன் உண்ட உணவு செரிமானம் ஆயினமை அறிந்து உண்டால்', 'சரீர வளர்ச்சிக்காக அறுசுவைகளாக உண்ணப்படுகிறவைகளை, ஒரு முறை உண்டது முழுவதும் சீரணமாகிவிட்டதா என்பதைக் கவனித்துக் கொண்டு மறுமுறை உண்டால்', 'ஒருவன் உண்ட உணவு நன்றாகச் செரித்துக்கழிந்தது என்று தெளிய அறிந்து பின் உண்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முன் உண்டது செரித்ததைத் தெளியஅறிந்து பின் உண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருந்தியது அற்றது தெளியஅறிந்து பின் உண்டால் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை என்பது பாடலின் பொருள்.
'அருந்தியது அற்றது' குறிப்பது என்ன?

சீரான உணவுப் பழக்கம் மேற்கொண்டுவிட்டால் மருந்து எதற்கு?

முன் உண்டது செரித்ததைத் தெளிவாகஅறிந்து, அடுத்த உணவு கொண்டால், அவனுடைய உடலுக்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
மருந்தில்லா மருத்துவம் இங்கு பேசப்படுகிறது. அதாவது மருந்தே வேண்டாமைக்கு உரிய வழி ஒன்றைச் சொல்வது இக்குறள். முன் உண்டது செரித்துப்போய்விட்டது என்று தெரிந்தபின் அடுத்த உணவு கொண்டால், நோய் நம்மை அண்டாது என்கிறது இது. நோயில்லையெனில் மருந்து எதற்கு? ஒருவன் நல்ல உணவொழுக்கத்தைக் கடைப்பிடித்தால் அவனுக்கு வேறு மருந்து ஏதும் எடுத்துக் கொள்ளும் நிலை வராது என்பது கருத்து.
அறுசுவை உணவுகளை வகைவகையாக ஆக்கிச் சுவையாய் உண்பது இன்பம்தான். அச்சுவையினும் மேலானது உண்ட உணவு செரிக்கும் இன்பம். உள்ளே சென்றது இடரில்லாமல் வெளியேறும் உடல்கொண்டவர்க்கு ஊண் சுவை மிகுந்து தோன்றும். உண்டது அறல் எவ்வளவு இனிய நிலை என்பதை நினைவு கொண்டு காமத்துப் பாலிலும் அதை உவமையாகப் பயன்படுத்தினார் வள்ளுவர்: உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது (ஊடல் உவகை 1326 பொருள்: உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது; அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.).

உடலுக்கு மருந்து எடுக்கும் நிலை உண்டாகக்கூடாது என்பது வள்ளுவர் கொள்கை. அருந்தியது அற்றது போற்றி உண்டால் இந்த இனிய சூழல் கைகூடும். நோய் வந்தபின் மருந்தை உண்டு அதைத் தீர்த்துக் கொள்வதைவிட நோய் வராமல் இருப்பதற்குரிய வழியை அறிந்து தடுப்பதே சிறந்த மருத்துவக் கொள்கை. நோய் உண்டாகாதவாறு உடலைப் பேணுவதற்குரிய சிறந்த முறை உணவைப் பேணுவதுதான். முன் வயிற்றுள்ளே சென்றது செரிக்காமல் உணவு உண்ணக்கூடாது. மனம் போனவாறு நினைத்தபொழுதெல்லாம் உண்பது தவறு. இதற்கு முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து பசியெடுத்தபின் அடுத்தவேளை உணவை உண்ண வேண்டும். முதல்உணவு செரித்து விட்டதென்பதை வயிற்றின் கனம், ஏப்பம் விடுதல், பசி இவற்றின் வாயிலாக அறியலாம். வயிற்றில் முன்பு உண்டவை செரிக்காமல் அடைபட்டுக் கிடந்தால் குடலும் உடலும் தூய்மையின்றி, மந்தம், புளிச்சேப்பம், வயிற்றுவலி, மலச்சிக்கல், தலைவலி முதலிய பலநோய்கள் உண்டாகக் காரணமாகிவிடும். வயிற்றுக்குள் சென்றது செரிமானம் அடைந்தபிறகே கபகபவென்று பசியெடுக்கும். அப்போது உண்டால், உண்டது உடம்பில் சேரும். இந்தக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு ஒழுகினால் உடல் நல்ல நிலைமையில் இருக்கும்; நோய் அணுகாது; மருந்து உண்ணும் தேவை எழாது.

'போற்றி உண்க' என்பதற்கு 'கவனித்து உண்க' என்பதே நேர் பொருள்.
'போற்றி என்பதற்கு அளவாக உண்பது, சுவையும் சத்தும் உடையதாய் உண்பது, நோய்க்குப் பரிகாரமாய் உண்பது எனக் கூறலாம்' என்பார் மருத்துவநூலார் எஸ். இராமசாமி. இன்னும் சிலர் 'போற்றி உண்க' என்றதற்கு 'விருப்பத்துடன் சுவைத்து உண்பது' என உரைத்து 'விருப்பமின்றி உண்ணும்போது, சரியான உணர்வுத் தூண்டல்கள் கிடைக்காமையால் செரிமான நீர்கள் தேவையான அளவில் சுரப்பதில்லை; அதனால் உண்ணும் உணவு அது எத்தனை எளிமையான உணவாக இருந்தாலும் முழுமையாகச் செரிக்கப்படாமல், அதன் சத்துக்கள் உடலைச் சேராதொழிவது ஒரு புறமும் குறைச் செரிமானத்தால் வயிற்றழற்சி ஒருபுறமும் எனத் தீங்குகளை விளவிக்கிறது; 'விருப்பத்தோடு உண்ணுதல்' உணவருந்துததலில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது; உண்ணுதலில் உணர்வுகள் வகிக்கும் இந்த ஆளுமையை நன்கறிந்தே வள்ளுவர், 'அருந்துவது போற்றி உண்க' என விளக்குவர்' என்பர்.

'இப்படிச் செய்தால் இத்தகைய பயன் பெறுவாய்' எனக் கூறாது, 'இப்பயனெல்லாம் பெறுவாய் இவ்விதம் செய்தால்' எனப் பயனிலையை முன் வைத்துக் கூறுவது குறள் உத்திகளில் ஒன்று. இங்கு 'மருந்தென வேண்டாவாம்' என்ற பயனிலையைச் சொல்லி 'அற்றது போற்றி உணின்' எனப் பின் வைத்து கூறியதைக் கற்கும் போதே நெஞ்சிற்கு உரம் போடுவதாக உள்ளது.

தேவநேயப்பாவாணர் உரையில் இயற்கை மருத்துவ முறையில் மருந்தானவையாகக் கூறப்படுவன: 'தமிழகத்து உணவு தொன்றுதொட்டு மருத்துவ முறையிற் சமைக்கப்பட்டு வருகின்றது. பச்சரிசி சூடுண்டாக்குமாதலால் வெப்பநாட்டிற்கேற்காதென்று புழுங்கலரிசி யாக்கப்படுகின்றது.அதைச் சரிதண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். சுவை மிகுத்தற்குத் தீட்டும்போது நீக்குந் தவிட்டைத் தனியாகக் கொழுக்கட்டை பிடித்துத் தின்பது வழக்கம். வாழைக்காய் வளிமிகுப்பதென்று பிஞ்சு நிலையிற் சமைக்கப்படும். சீனியவரையென்னுங் கொத்தவரை பித்தமிகுப்பதென்று காய்கட்குப் புளி சேர்க்கப்படும். காயச்சரக்காகக் கூட்டுவனவற்றுள்; மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும்; கொத்துமல்லி பித்தத்தை யடிக்கும்; சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்; மிளகு தொண்டைக்கட்டைத் தொலைக்கும்; பூண்டு வளியகற்றி வயிற்றளைச்சலை நிறுத்திப் பசி மிகுக்கும்; வெங்காயம் குளிர்ச்சியுண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்; பெருங்காயம் வளியை வெளியேற்றும்; இஞ்சி பித்தத்தை யொடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்; தேங்காய் நீர்க்கோவை யென்னுந் தடுமத்தை(முக்குச் சளியை)நீக்கும்; கறிவேப்பிலை மணமூட்டி உணவு விருப்பையுண்டாக்கும்; கடுகு வயிற்றுவலி வராமற் காக்கும்; நல்லெண்ணெய் கண்குளிர்ச்சியும் மதித்தெளிவும் உண்டாக்கும், இவையெல்லாஞ் சேர்த்த துவரம்பருப்புக் குழம்பும், சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும், சூட்டைத்தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும், கூடிய முப்படையற் சோற்றைக் கொழுமைப்படுத்திக் குடற்புண்ணாற்றும் நெய்யோடும் உடலுக்குரஞ்செய்து கழிமாசுக்கட்டை(மலபந்தத்தை) நீக்கும் கீரையொடும்,குளிர்ச்சிதந்து பித்தம்போக்கும் எலுமிச்சை யூறுகாயொடும், அறுசுவைப்பட வுண்ட தமிழன் 'அற்றது போற்றி யுணின்' நோயண்டாதாகலின், 'மருந்தென வேண்டாவாம், என்றார்',

'அருந்தியது அற்றது' குறிப்பது என்ன?

அருந்தியது என்ற சொல் உண்டது என்னும் பொருளையும் அற்றது என்பது செரிமானம்பெற்றது என்ற பொருளையும் தரும். அறு என்று அடிச்சொல்லிலிருந்து அற்றது பெறப்பட்டது. இதற்குக் குறைதல் என்பது நேர்பொருள். அருந்தியது அற்றது என்பது நாம் முன் உண்ட உணவு பயன்பட்ட பின்னர் உடலைவிட்டு நீங்கும் தன்மையை உணர்த்துவது. உணவு மலமாகக் குறைந்து கழியும் செரிமான முறைமையே அற்றது ஆகும். அற்றதறிந்து அருந்துதல் இயற்கை வழி மருத்துவம் எனலாம்.
உண்ட உணவுப் பொருள்கள் செரியாமல் குடல்பகுதிகளில் அப்படியே தங்கிவிட்டால் அதன் பயன்கள் உடம்பில் ஒட்டா; மலச்சிக்கல், ஏப்பம், வயிற்றுப்புண், பசியில்லாமை போன்ற நோய்கள் கிளைக்கும்.

காலிங்கர் உரை 'தாம் அங்ஙனம் உண்பது இங்ஙனம் அற்றமை குறிக்கொண்டு ஒழுகப் பெறின்' எனச் சொல்கிறது. இதன் பொருள் ஏற்கனவே உண்டது செரித்ததைப் பார்த்து நடந்து கொண்டால் அதாவது அடுத்தவேளை உண்பதற்கு முன்பு முன்னுண்டது செரித்துவிட்டது என்பதைத் தெரிந்து ஒழுகினால் என்பது. அற்றதற்கான அடையாளங்களாகப் பரிமேலழகர் 'யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, கரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின' எனக் கூறினார். யாக்கையின் நொய்ம்மையாவது உடல் தனக்குத்தானே எடையின்றித் தோன்றுதல். தேக்கின் தூய்மையாவது புளிச்ச ஏப்பமும், வாய்நாற்றமும் இன்றி இருத்தலைக் குறிப்பது. கரணங்கள் தொழிற்குரியவாதல் என்றது உறுப்புக்கள் தத்தம் தொழிற்குரிய வன்மையைப் பெறுதல் என்பதைச் சொல்வது. பசி மிகுதல் என்பது நன்கு பசியெடுத்தலைக் குறிப்பதாம்.

'அருந்தியது அற்றது' என்றால் உண்டது செரித்தமை என்ற பொருள் தருவது.

முன் உண்டது செரித்ததைத் தெளியஅறிந்து பின் உண்டால் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உணவே மருந்து.

பொழிப்பு

உண்டது செரித்தது அறிந்து அடுத்து உண்டால் உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம்.