இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

(அதிகாரம்:மருந்து குறள் எண்:941)

பொழிப்பு (மு வரதராசன்): மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.

மணக்குடவர் உரை: உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.

பரிமேலழகர் உரை: மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் - ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும்.
('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப.)

தமிழண்ணல் உரை: உணவும், உறக்கம், இணைவிழைச்சு முதலாய பழக்கங்களும் ஒருவனது உடல் இயல்புக்கு ஒத்தனவாகாது. அதன் அளவைவிட மிகினும் குறையினும், மருத்துவ நூலுடையார் வாதம் பித்தம் சிலேட்டுமம் என எண்ணிக் கூறியுள்ள மூன்றினாலும் நோயை உண்டாக்கும். வாதம்-காற்று, வளி. பித்தம்-சூடு, பித்தநீர். சிலேட்டுமம்- கபம், குளிர்ச்சி. இவை மூன்று நாடிகள். உணவு, பழக்கம் இரண்டும் அளவாகவும் உடல்நிலைக்கு ஏற்பவும் அமைவது நல்லது; இவை கூடுதல் குறைவானால் நாடிகளும் கூடுதல் குறைவாகும். நோய்க்கு அறிகுறி இவை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மிகினும் குறையினும் நோய்செய்யும்.

பதவுரை: மிகினும்-கூடினாலும், மீறினாலும்; குறையினும்-குறைந்தாலும்; நோய்-உடற்பிணி; செய்யும்-செய்யும்; நூலோர்-(மருத்துவ) நூல் இயற்றியவர்கள்; வளி-வாதநீர்; முதலா-தொடக்கமாக; எண்ணிய-எண்ணப்பட்டவை; மூன்று-மூன்று.


மிகினும் குறையினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும்;
பரிப்பெருமாள்: உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும்;
பரிதி: ஆகாரம் மிகுந்தாலும் குறைந்தாலும்;
காலிங்கர்: இவ்வாறு மாறுபாடு வகுத்து உண்பது; அது தானும் அளவின்கண் மிகினும் குறையினும்; [மாறுபாடு வகுத்து உண்பது - வாத, பித்த, சிலேத்துமங்களுக்கு உள்ள மாறுபாட்டிற்கு ஏற்ப வகுத்து உண்ணுதல்]
பரிமேலழகர்: உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்;

'உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களான மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் காலிங்கரும் 'ஆகாரம் மிகுந்தாலும் குறைந்தாலும்' என்றனர். 'உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்' என்பது பரிமேலழகரின் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடினாலும் குறைந்தாலும்', 'ஒருவனுடைய உடம்பிற்கு ஏற்ற அளவில் இல்லாமல் மிகுந்தாலும் குறைந்தாலும்', 'அதிகப்பட்டாலும் குறைந்தாலும்', 'ஒருவனது உடம்பிற்கு ஏற்ற அளவில் நில்லாமல் மிகுந்தாலும் குறைந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கூடினாலும் குறைந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.
பரிப்பெருமாள்: நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சிலேஷ்மமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் உணவு மிகின் நோய் செய்யும் என்றார்; அதுவே அன்றி மற்றுள்ளவை மிகினும், இவை மூன்றும் குறையினும் நோய் ஆகும் என்றது. பரிதி: வாதபித்த சிலேட்டுமம் மிடைப்படுத்தும் என்றவாறு. [மிடைப்படுத்தும் -மிகுவிக்கும்]
காலிங்கர்: மருந்து நூல் வல்லோர் ஆகிய மருத்துவர் அனைத்து நோய்க்கு அடியுரம் ஆக, நூல் நெறியின் சூழ்ந்த வாதம் முதலிய மூன்று நோயினையும் செய்யும் என்றவாறு. [அடியுரம் -பயிருக்கு இடப்படும் கீழுரத்தைப்போல உணவு நோய்க்கு ஆதாரமான எருவாகும்]
காலிங்கர் குறிப்புரை: நூலோர் என்பது மருத்துவர்; வளி என்பது வாதம்.
பரிமேலழகர்: ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும். [ஆயுள்வேதம்-மருத்துவ நூலுக்குள்ள வடவர் பெயர்; வாதம் முதலாக - வாயு முதலியனவாக]
பரிமேலழகர் குறிப்புரை: 'நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப. [ஐப்பகுதி- சிலேட்டுமம்; சுவை, வீரியங்களானும் அளவானும்- உணவின் சுவை, வன்மை அளவொத்தல்; மூவகைத்து - வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று வகை; இருவகைத்து -உணவு, செயல் என்ற இரண்டு வகை]

'நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மருத்துவர் கூறும் வாத பித்த கபங்கள் நோய் தரும்', 'மருத்துவ நூலாரால் எண்ணப்பட்ட வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் நோயை உண்டாக்கும்', 'கற்றறிந்த அறிவாளிகள் ஆராய்ந்து அனுபவித்துச் சொல்லியிருக்கிறபடி காற்று, நீர், சோறு, ஆகிய மூன்று உணவுகளும் வியாதியை உண்டாக்கும்', 'மருத்துவ நூலோர் வாத முதலாக வகுத்துச் சொல்லும் (வாத பித்த கபமாகிய) மூன்றும் நோயை உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள வளி முதலிய மூன்று(ம்) நோயை உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மருத்துவ நூல்கள் எண்ணிய வளிமுதலா மூன்றும் கூடினாலும் குறைந்தாலும் நோயை உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'மூன்று' குறிப்பன யாவை?

நுகர்பொருள்களை அளவோடு கொள்க.

மருத்துவ நூலோர் வகுத்துச் சொல்லும் மூன்றும் உடம்புக்கு ஏற்ற அளவில் இல்லாமல் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
உடம்பிற்கு நோய் ஏன் உண்டாகிறது என்பதற்கான, மருத்துவ நூலோர் கூறும், காரணத்தை வள்ளுவர் இங்கு எடுத்துரைக்கிறார். நுலோர் என்பவர் மருத்துவ நூலாசிரியர்கள். அவர்கள் மருத்துவ நூலறிவோடு பயிற்சியும் கொண்டவர்கள். தங்கள் அனுபவங்களை பின்வரும் தலைமுறையினர்க்குப் பயன்படும் வகையில் நூல் வடிவில் தந்துவிட்டுச் சென்றவர்கள். வள்ளுவர் அவருக்கு முன்பிருந்த பல மருத்துவ நூல்களையும் ஆராய்ந்தறிந்து அவற்றின் சாரமாகச் சொல்லப்பட்டதாக இக்குறள் அமைந்துள்ளது.
வளி(வாதம்) முதலா மூன்று என்ற தொடரின் அடியொட்டி, வாதம் பித்தம் கோழை (சிலேட்டுமம்) என்றிவை கூடுதலும் குறைதலும் நோயை உண்டாக்கும் காரணங்களாக மருத்துவ நூலோர் எண்ணியவாகக் கூறுகிறது இக்குறள். வளி என்றது வாயு, காற்று, வாதம் எனவும் அறியப்படும். இது மூச்சு விடுவதற்கும், இரத்த ஓட்டத்திற்கும், மலம், சிறுநீர், வியர்வை, விந்து என்பன கழிவதற்கும் உதவுவது; பித்தம் உண்ட உணவு செரிக்கவும், பசி, தாகம் ஏற்படவும் பார்வைக்கும் உதவுவது; கோழை அதாவது ஐ அல்லது ஐயம் என்பது நரம்புகளின் செயல்பாட்டிற்குப் பயன்படுவது. இவற்றின் நிலைகளை நாடி பார்த்து மருத்துவர் அளப்பர். நாடி பார்த்தல் என்பது கை மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே சுட்டு விரல், நடுவிரல் மோதிரவிரல் நுனி மூன்றையும் மெல்ல வைத்து அழுத்தியும் தளர்த்தியும் சுட்டு விரலால் வாதத்தின் தன்மையையும், நடு விரலால் பித்தத்தின் தன்மையையும், மோதிர விரலால் கோழையின் தன்மையையும் ஆராய்ந்து என்ன நோய் என்பதைக் கண்டறிவர். இவை தத்தம் இயற்கையான அளவில் நில்லாது ஒன்று கூடினாலும் குறைந்தாலும் நோய் வருவதற்குக் காரணமாக அமையும். இம்மூன்றின் அளவில் ஏன் மாறுதல் ஏற்படுகிறது? உணவு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் அவை கூடிக் குறையும். ஆதலால், நோய் தீர்வதற்கு, இம்மூன்றும் தத்தம் நிலையிலிருந்து மாறுபடாத வகையில் உணவை உட்கொள்வதும் பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படும்.
வளி, பித்தம், கோழை என இம்மூன்றும் சரியான கூட்டணியாகச் செயல்பட்டு உடலுறுப்புகள் நன்கு இயங்கச் செய்வன. நோயைத் தடுப்பதற்கு ஒருவர் உடம்பில் இருக்கும் இம்மூன்று மூலக்கூறுகளும் ஒரு நுண்ணிய சம நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
'ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் ஒருவருக்குத் துன்பஞ் செய்யும்' என்று அம்மூன்றையும் நோய்கள் எனச் சிலர் உரைத்தனர். ஆனால் அவை நோய்கள் அல்ல; உடம்பு வளரவும் வாழவும் துணை செய்யும் நற்பொருள்களே.

'மேலையர் ஊதை முதலிய வளி முதலிய முக்கூறுகளையும் அரத்தம்(blood) கோழை(phlegm), பித்தம்(choler), கரும்பித்தம்(melancholy) என நால்வகை நீரங்களாகப் (humours) பகுப்பர்' எனக் குறித்துள்ளார் தேவநேயப்பாவாணர். இது பழம் கிரேக்க மருத்துவமுறையிலுள்ள கலைச்சொற்களைத் தெரிவிப்பதாக உள்ளது.

'மூன்று' குறிப்பன யாவை?

'வளி முதலா எண்ணிய மூன்று' என்பது வாதம், பித்தமம், சிலேத்தும் முதலிய மூன்றும் என்ற பொருள்பட அமைந்தது. மூன்றும் என்னும் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் மூன்று எனத் தொக்கு நின்றது என்பர் இலக்கணவியலார்.

`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் பொருள்களைத்தான் மூன்றும் என இக்குறள் சொல்கிறது. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம் (காற்று / வெப்பம் / (நீர்க்)கோழை) ’ எனும் இவை நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் எனப்படுபவை.
'நாடிகளை நாடி, மருத்துவம் செய்வது தமிழ் மருத்துவத் தனிச் சிறப்பாகும்' எனக் கூறுவார் இரா இளங்குமரன். இந்நாடிகள் மூன்று என்றும், அவற்றை ஊதை, பித்தம், கோழை எனத் தமிழில் கூறுவர் எனவும் வளி அல்லது ஊதை என்பதும், கோழை அல்லது ஐ என்பதும் வழக்கொழிந்து வாதம் சிலேட்டுமம் என்பவை வழக்கூன்றி விட்டனவாம் எனவும் சொல்வார்.
நாமக்கல் இராமலிங்கம் வேறுபாடாக மூன்று என்பதற்கு காற்று முதலாகிய மூன்று உணவுகள் என்கிறார். அவை, காற்று, நீர், சோறு. மூச்சுக்காக காற்றையும், இரத்த ஓட்டத்துக்காக நீரையும், உடலுறுதுக்காகச் சோறு, காய்கறி முதலியவற்றையும் உட்கொள்ளுகின்றோம். இந்த மூன்று உணவுகளும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோயுண்டாகும் என்பது எச்சரிக்கை என விளக்கினார். இவ்வுரை சிறக்கவில்லை.

'மூன்று' என்பது மருத்துவ நூல்களிற் கூறப்பட்டுள்ள வாத பித்த கோழைகளைக் குறிக்கும்.

கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள வாத பித்த கபங்கள் நோயை உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நோயைத் தடுப்பதே முதல் மருந்து.

பொழிப்பு

மருத்துவ நூல்கள் கூறும் வளி முதலிய மூன்றும் (வாத பித்த கபங்கள்) கூடினாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.