இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0944



அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

(அதிகாரம்:மருந்து குறள் எண்:944)

பொழிப்பு (மு வரதராசன்): முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ணவேண்டும்.

மணக்குடவர் உரை: முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க.
மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க.
(அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.)

தமிழண்ணல் உரை: முன்பு உண்டது நன்கு செரித்துவிட்டதா என்பதை அறிந்து, பின்பும் முழுவதுமாக நன்கு பசி எடுத்த பிற்பாடு, தன் உடம்புக்கு மாறுபாடுள்ளன அல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுத்து, உண்பதற்குரிய நெறிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடித்து உண்ணும் பழக்கத்தைக் கைக்கொள்க. உணவும் உண்ணும் நெறிகளும் இயற்கை மருத்துவம், செரித்த பின்பும் நன்கு பசித்த பின்பும் அளவறிந்து, நெறிமுறைப்படி உண்ணப் பழகவேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அற்றது அறிந்து, மாறல்ல கடைப்பிடித்து, துவரப் பசித்து, துய்க்க.

பதவுரை: அற்றது-செரித்தது; அறிந்து-தெரிந்து; கடைப்பிடித்து-உறுதியாக இருந்து, குறிக்கொண்டு; மாறல்ல-மாறுபாடு இல்லாதவை, உடம்புக்குத் தீங்கு புரியாதவை, வேறாதல் அல்லாதவை; துய்க்க-உண்க; துவர-மிக, நன்றாக; பசித்து-பசிகொண்டு.


அற்றது அறிந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து;
பரிப்பெருமாள்: முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து;
பரிதி: அசனம் செரித்தும்;
காலிங்கர்: தான் முன் காலத்து உண்டது அற்றது அறிந்து;
பரிமேலழகர்: முன்னுண்டது அற்றபடியை யறிந்து;
பரிமேலழகர் குறிப்புரை: அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. [பெயர்த்துரை- கூறியது கூறல்; யாப்பறுத்தற் பொருட்டு - வலியுறுத்துவதற்காக]

'முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செரித்தது பார்த்து', 'செரிமானம் ஆயினமை அறிந்து', 'ஒரு முறை உண்டது முற்றிலும் சீரணமாகிவிட்டதை அறிந்து கொண்டுதான் மறு முறை உண்ண வேண்டும் (என்பதுடன்)', 'உண்டது செரிவானதை அறிந்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உண்டது செரித்தது அறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க.
மணக்குடவர் குறிப்புரை: மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வன. இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறற்ற உணவை உண்ணவேண்டு மென்றது.
பரிதி: அசனம் பண்ணினவன் நோய் அறுப்பாம்; நித்தியம் ஒரு பொழுது அசனம் பண்ணி வருவானாகில் அவனுக்கு வியாதியில்லை என்றவாறு.
காலிங்கர்: பின்னும் தான் உண்ணும் முறைமைக்கு மாறு அல்லவற்றை முதிரப் பசித்தும் அறதி அறவே உண்க என்றவாறு. [அரதி- வெறுப்பு]
பரிமேலழகர்: பின் மிகப்பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க.
பரிமேலழகர் குறிப்புரை: உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார். [இரத- சுவை; உண்பான் பகுதியோடு மாறுகொள்ளுதல்- உண்பவன் வாதபித்த சிலேத்துமங்களோடு உடம்புக்கும் பொருந்தாத உணவை உண்ணுதல்; சுவை வீரியங்களான் தம்முள்மாறுகொள்ளுதல்- சுவையாலும் உண்ணும்பொருள்களின் வன்மையாலும், மாறுகொள்ளாதிருத்தல்; அடாதவற்றை - பொருந்தாதவற்றை; பெரும்பொழுது - இளவேனில் முதுவேனில் கார் கதிர் முன்பனி பின்பனி; சிறுபொழுது - காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை; மனம் பட்டவற்றால் துய்ப்பின் - மனம் போனபோக்கில் நிறைய உண்டால்]

'பின் மிகப்பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அம்முறை பற்றி ஒத்துக்கொள்வதை நன்கு பசித்தபின் உண்க', 'தள்ள வேண்டியவற்றைத் தள்ளிக் கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளும் உணவு முறையைக் கடைப்பிடித்து மாறுபாடு இல்லாத உணவுகளை நன்கு பசித்து உண்க', 'உன் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதன அல்லாத உணவுகளை ஆராய்ந்து நிச்சயித்துக் கொண்டு, அவைகளைச் சாப்பிடுவதிலும் நன்றாகப் பசியெடுத்த பிறகே சாப்பிட வேண்டும்', 'முழுப் பசியோடு உண்ணும் போது உடம்பிற்கு மாறுபாடு இல்லாதவைகளையே குறிக்கொண்டு உண்ண வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடம்பிற்கு மாறுபாடு இல்லாதவைகளை முழுப் பசிவந்தபிறகு சுவைத்து உண்ண வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உண்டது செரித்தது அறிந்து உடம்பிற்கு மாறுபாடு இல்லாதவைகளை கடைப்பிடித்து முழுப் பசிவந்தபிறகு உண்ண வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'கடைப்பிடித்து' குறிப்பது என்ன?

பசித்துப் புசி.

முன்னுண்டது செரித்ததனை அறிந்து, நன்றாகப் பசித்த பிறகு, உடம்புக்கு மாறுபாடு இல்லாத அதாவது உடம்புக்கு ஒத்துக்கொள்கின்ற உணவுகளையே உண்ண வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து அவற்றையே உண்ணவேண்டும்.
'அருந்தியது அற்றது போற்றி உண்'க என முதலில் சொல்லப்பட்டது; பின் 'அற்றது அளவறிந்து உண்க' எனப்பட்டது; இங்கே அற்றது அறிந்து மாறுபாடு இல்லாத உணவை நன்றாகப் பசித்த பின்னால் உண்ண வேண்டும் என எப்பொழுது உணவை உட்கொள்ளவேண்டும் என்பது பற்றிச் சொல்லப்படுகிறது.

அற்றது அறிந்து: இது முன்னுண்டது செரித்து விட்டது என்பதைத் தெரிந்து எனப் பொருள்படும். மனதில் ஆழமாகப் பதிவதற்காக சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதுண்டு. அற்றது அறியாமல் உண்பது நோயுண்டாக்கும் என்ற உண்மையை பெரும்பாலோர் பொருட்படுத்துவதில்லை என்பதை உணர்த்தவே வள்ளுவர் அற்றது அறிந்து என்பதைத் திரும்பத் திரும்ப இவ்வதிகாரத்தில் சொல்கிறார். செரிமானத்தின் இன்றியமையாமையைச் சொல்லி, உண்ட உணவு செரிக்காத பொழுது, அடுத்த உணவை வயிற்றுள்ளே செலுத்தித் துன்புற வேண்டாம் என்பதை வலியுறுத்துவது இது.

மாறல்ல: இதற்கு மாறுபாடு இல்லாத அல்லது ஒவ்வாத என்பது பொருள். மாறுகொள்ளாத அதாவது உடம்புக்கு ஒத்துக்கொள்கின்ற உணவை உண்ண வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. எவ்வகையான மாறுகொள்ளாதன இங்கு சொல்லப்படுகிறது? இதற்கு பரிமேலழகர் உரை 'மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம்' என்கிறது. உண்பான் பகுதியோடு மாறுகொள்ளுதல் என்பது வாத பித்த சிலேத்துமங்களால் ஆகிய உடம்பிற்கு பொருந்தாதனவற்றைச் செய்தல். கால இயல்போடு மாறுகொள்ளாமை என்பது பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையைக் குறிக்கும். ஒரு ஆண்டின் பகுதிகளை பெரும்பொழுது சிறு பொழுது எனப் பிரித்தனர் நம் முன்னோர். பொரும்பொழுதாவது: காா்காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிா்காலம் (ஐப்பசி, காா்த்திகை), முன்பனிகாலம் (மாா்கழி, தை), பின்பனிகாலம் (மாசி, பங்குனி), இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி) என ஆறாக உள்ளது. சிறுபொழுதாவது: காலை (6.00 - 10.00 மணி வரை) நண்பகல் (10.00 - 2.00 மணிவரை), எற்பாடு (பிற்பகல் 2.00 - 6.00 மணிவரை) மாலை (6.00 - இரவு 10.00 மணிவரை), யாமம் (இரவு 10.00 - 2.00 மணிவரை), வைகறை (இரவு 2.00 - காலை 6.00 மணிவரை) என்பன. ஒரு பருவத்திற்குரிய உணவு இன்னொரு பருவத்திற்கு ஆகாமையை அறிதல் வேண்டும். சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளல் என்பதற்குத் தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் காட்டாகும். சுவைமிக்க பல பொருள்களைக் கலந்து உண்பது கூடுதலான இன்பம் தரும் என்பது உண்மை. அதனால் ஒப்பற்ற சுவைக்கு அக்கலவையை உவமையாகக் கூறுவது புலவர் மரபு. பாலோடு தேன்கலந் தற்றே.... (காதல் சிறப்புரைத்தல் 1121) என்று குறளும் பிறிதோரிடத்தில் கூறும். தேனும் நெய்யும் சுவையானவை. ஆனால் எந்த இலக்கியத்திலும் தேனும் நெய்யும் கலந்த தித்திப்பு குறிப்பிடப்படவில்லை -அவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட அளவில் கலந்தால் அது நஞ்சாக மாறி உண்பவர் உயிரைப் பறிக்கும் என்பதால். இதை மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் தமது உரைகளில் குறித்தும் உள்ளனர்.

துய்க்க துவரப் பசித்து: இத்தொடர் நன்றாகப் பசித்தபின் உண்ண வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால் நேரத்திற்கு உண்ணவேண்டும் என்பதை இன்றைய மருத்துவம் வற்புறுத்துகிறது. எது பார்த்து உண்பது- நேரமா? பசியா? நேரத்திற்கு பசியெடுக்குமாறு உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் எனக் கொள்ளலாம். உண்ணும் நேரம், கால இடைவெளி இவற்றைக் கருத்தில் கொண்டதாக உணவுப்பழக்கம் இருக்க வேண்டும். உண்டது செரித்தாலும் அதன் பயனாகிய சாரம் நீங்காதலால், அதுவும் அறல் வேண்டும் என்பதைச் சொல்ல 'மிகப்பசித்து' எனப்பட்டது. நினைத்த நேரத்திற்கு, பசிக்காதபோதே, கிடைப்பதை உண்ணக்கூடாது என்பது இதன் கருத்து.

'கடைப்பிடித்து' குறிப்பது என்ன?

கடைப்பிடித்து:
'கடைப்பிடித்து' என்றதற்கு அறுமளவும் கடைப்பிடித்து, உண்பதற்குரிய நெறிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடித்து, உண்பதற்குரிய நெறிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடித்து உண்ணும் பழக்கத்தைக் கைக்கொள்க, அம்முறை பற்றி, உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டு ஒழுகின், நிச்சயம் செய்து கொண்டு, உறுதியாகக் கொண்டு, குறிக்கொண்டு, பின்பற்றி, உறுதியாக என்றவாறு விளக்கம் தந்தனர்.

'பின்பு அறுமளவும் கடைப்பிடித்து' என்பது மணக்குடவர் விளக்கமாகும். காலிங்கர் 'பின்னும் தான் உண்ணு முறைமைக்கு மாறு அல்லவற்றை' என்பதைக் 'கடைப்பிடித்து' என்பதன் பொருளாக்குகிறார். பரிமேலழகர் உணவுப் பழக்கங்களை குறிக்கொள்ளாது அதாவது திட்டமிடாது, மனதுக்குத் தோன்றியவாறு துய்த்தால், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார் என்றபடி உரைத்தார். தேவநேயப்பாவாணர் 'எல்லாவற்றின் இயல்பையும் உரையளவையால் அல்லது பட்டறிவாலறிந்து, எல்லா நிலைமைக்கும் ஏற்ப உடம்பிற்கொத்த வுணவை அளவாகவுண்டு நோயின்றி இன்புறுக என்பார் 'கடைப் பிடித்து மாறல்ல துய்க்க' என்றார்' என விளக்கம் செய்தார்.
உடலுக்கு ஏற்புடைய, அதன் நலத்திற்குரிய உணவுகளை உட்கொள்ள வழிகாட்டும் வள்ளுவர், அதை ஒழுங்கு நெறியாக உறுதியாகக் கொள்ளவேண்டுமென்பதை அறிவுறுத்தக் 'கடைப்பிடித்து' என்ற சொல்லை ஆள்கிறார். 'கடைப்பிடித்து' என்பது செரித்தது அறிந்து, மாறற்றவைகளை ஆய்ந்து உறுதி செய்து, நன்றாகப் பசித்தபின் உண்ணும் பழக்கத்தை மேற்கொள்வதைக் குறிக்கும். விருப்பமான சுவையான உணவைக் கண்டதும் நமது நாக்கு கட்டுக்கடங்காததாகி விடும். அதைக் கட்டுப்படுத்த நமக்கு நாமே விதித்துக்கொள்ளச் சொல்லப்பட்ட ஒழுங்குமுறையைச் சுட்டுவதே 'கடைப்பிடித்து' என்பது.

'கடைப்பிடித்து' என்பது இங்கு உணவு முறைகளை உறுதியாகப் பின்பற்றுவதைக் குறிக்கும்.

உண்டது செரித்தது அறிந்து முழுப் பசிவந்தபிறகு உடம்பிற்கு மாறுபாடு இல்லாதவைகளை கடைப்பிடித்து உண்ண வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உணவு ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தால் மருந்து தேவையே இருக்காது.

பொழிப்பு

செரித்தது அறிந்து ஒத்துக்கொள்ளும் உணவுமுறையைக் கடைப்பிடித்து நன்கு பசித்தபின் உண்க.