இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0943



அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

(அதிகாரம்:மருந்து குறள் எண்:943)

பொழிப்பு (மு வரதராசன்): முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

மணக்குடவர் உரை: முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க. அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.

பரிமேலழகர் உரை: அற்றால் அளவறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அறும் அளவு அறிந்து அவ்வளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது - இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான்.
(இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: முன் உண்ட உணவு நன்றாகச் செரிக்கப்பட்ட பின், மேல் உண்பதனை வயிறு செரிக்கும் அளவு தெரிந்து அவ்வளவே உண்ணவேண்டும்; அப்படிச் செய்தல் உடம்பைப் பெற்றவன் அதனை நெடுங்காலங் கொண்டு செலுத்தும் வழியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அற்றால் அளவறிந்து உண்க; உடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு அஃது.

பதவுரை: அற்றால்-செரித்தால்; அளவு-அளவு, வரை; அறிந்து-தெரிந்து; உண்க-உண்ணுக; அஃது-அது; உடம்பு-(நல்ல)உடல்; பெற்றான்-அடைந்தவன்; நெடிது-நெடுகாலமாக; உய்க்கும்-கொண்டு செலுத்தும்; ஆறு-நெறி, வகை.


அற்றால் அளவறிந்து உண்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க; [அறும் - செரிக்கும்]
பரிப்பெருமாள்: முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறும் என்பதூஉம் தான் அறிந்து உண்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் அற்றது போற்றி உண்க என்றார்; இது போற்றுதலாவது அளவு அறிந்து உண்டல் என்று கூறப்பட்டது.
பரிதி: முன்னாட்கொண்ட அசனம் செரித்தது பார்த்துத் தன் பசியறிந்து உண்க;
காலிங்கர்: ஒருவன் தான் முன்னம் உண்டது வெந்து அற்றால், அவ்வறவுதான் பொய்ப்பசியோ மெய்ப்பசியோ என்று சிறிது தாழ்க்க நின்று, ஓர்ந்து தெளிந்த பின்னர் உண்க;
பரிமேலழகர்: முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அறும் அளவு அறிந்து அவ்வளவிற்றாக உண்க; [அற்றால் - செரித்தால்; அறும் அளவு - செரிக்கும் அளவு; அவ்வளவிற்றாக - செரிக்கும் அளவினை உடையதாக]

'முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அளவறிந்து' என்பதற்கு 'அறவறிந்து' எனப் பாடம் கொண்டிருப்பார் போலும்.

இன்றைய ஆசிரியர்கள் 'செரித்தால் செரிமானம் பார்த்து உண்', 'முன் உண்டது செரிமானமானால் பின் உண்பதனைச் செரிமான அளவு அறிந்து உண்க', 'ஆகையினால் (ஒரு முறை உண்டதற்கும் மறுமுறை உண்பதற்கும் இடையிலிருக்கவேண்டிய) கால அளவை அறிந்து கொண்டு உண்ண வேண்டும்', 'முன் உண்டது செரித்தால் உண்ணும் அளவினை அறிந்து உண்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முன் உண்டது செரித்தால் பின் செரிமானஅளவு அறிந்து உண்க என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.
பரிப்பெருமாள்: அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.
பரிதி: நோயற்றுச் சிறுது நாள் உடம்பு சுகமாயிருக்க வேண்டில் என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் உண்ணவே அது கொண்டு தன் உடம்பு நிலை தளராமல் உறுதிக்கண் நெடிது கொண்டு செலுத்துவது ஓர் நெறியினைப் பெறலாம் என்றவாறு.
பரிமேலழகர்: இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். [இறப்பவும் - மிகவும்; அதனை - மானுடயாக்கையை. (உடம்பை); அதுவாகலான் - அளவறிந்து உண்ணுதல் ஆகலின்]
பரிமேலழகர் குறிப்புரை: இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

'அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'பெற்றான்' என்பதற்குப் 'பெற்றால்' எனப் பாடங்கொண்டிருக்கலாம்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுவே உடல்பெற்றவன் நெடுநாள் வாழும்நெறி', 'அது பெறற்கரிய இவ்வுடம்பைப் பெற்றவன் நெடுங்காலம் அதனை வாழவைக்கும் வழியாகும்', 'அப்படிச் செய்வது (நல்வினைப் பயனாக) கிடைத்த மானிட உடம்பை நெடுங்காலம் பயன்படுத்திக் கொள்ளும் மார்க்கம்', 'அவ்வாறு உண்பது உடம்பினை அடைந்தவன் நீண்ட காலம் கொண்டு செலுத்தும் வழியாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதுவே நல்லுடம்பு பெற்றவன் நீண்ட காலம் செலுத்தும் வழியாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

நிறையுரை:
முன் உண்டது செரித்தால் பின் செரிமானஅளவு அறிந்து உண்க; அதுவே நல்லுடம்பு பெற்றவன் நீண்ட காலம் செலுத்தும் வழியாகும் என்பது பாடலின் பொருள்.
'அளவறிந்து உண்க' குறிப்பது என்ன?

மீதூண் விரும்ப வேண்டாம்.

முன்பு உண்டது செரித்துவிட்டால், அடுத்தவேளை உணவை செரித்துக் கொள்ளும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அதுவே நல்லுடல் பெற்றவன் அதனை நெடுங்காலம் நிலைத்து நிற்கும்படி செலுத்தும் வழி ஆகும்.
மாந்தர் உடல் பெற்றது சாதற்கு அன்று; நலமுடன் வாழ்ந்து பிறவிக் கடனாற்ற அதைப்பயன்படுத்த வேண்டும். நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ்வதையே அனைவரும் விரும்புவார்கள். நலமான உடல் பெற்று நீண்டநாள் வாழ்வதற்கான இரண்டு எளிய உணவுவழக்கங்கள் இங்கு சொல்லப்படுகின்றன. முதலில் முன் உண்டது செரித்துவிட்டதா என்று கவனிப்பது; செரித்துவிட்டதை அறிந்தபின் செரிக்கும் அளவு தெரிந்துவிடும். பிறகு இரண்டாவதாக, அடுத்த உணவு உண்ணும்போது அந்த அளவு உட்கொள்வது. அவ்விதம் அளவான உணவு உட்கொண்டால் நோய் இன்றியும் இருக்கலாம். நீண்ட ஆயுளோடும் வாழலாம்.
பெருந்தீனி உண்டு உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது கருத்து.

'சுவர் இருந்தால் தானே ஓவியம் வரைய முடியும்?' என்ற பழமொழி சொல்வதுபோல் வாழ்வெனும் ஓவியம் சிறக்க நலமான உடல் தேவை. நலமான உடல் என்பது பிணியற்ற உடம்பு. அதைப் பெறுவதற்கு அளவறிந்து உண்ண வேண்டும். நாம் இன்று ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்ண வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துக் கொண்டுள்ளோம். மூன்று வேளை உணவு என்பது காலவளர்ச்சியில் உருவாக்கம் பெற்ற ஒன்று. அந்த உணவையும் நம் உடம்பால் எவ்வளவு செரிக்க முடியும் என்ற அவ்வளவிற்றாக உட்கொள்ள வேண்டும். செரிமானம் பல காரணக்கூறுகளை உள்ளடக்கியது. அது ஒருவரது வயது, உணவின் தன்மை, தட்ப வெப்ப நிலை, உடல் உழைப்பு என்றிவற்றைப் பொறுத்தது. வயது கூடக்கூட செரிக்கும் ஆற்றல் குறையும். அப்போது உணவை குறைக்க வேண்டும். சில உணவு விரைவில் செரித்து விடும். சில உணவு செரிப்பதற்கு நீண்டநேரம் எடுக்கும். கடின உழைப்பு கொண்டோர்க்கு உணவு மிகையாகத் தேவைப்படும், இருந்த இடத்திலேயே இருந்து வேலை செய்வார்கள். அவர்களுக்கு உணவு கொஞ்சம் போதும். இவ்விதம் எல்லாவற்றையும் ஆராய்ந்து செரிக்கும் அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு மிகையாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். பசியெடுத்தாலும் இந்த அளவை நினைவிற்கொண்டு உண்ணவேண்டும். நீண்ட நாள் வாழ இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தை, இக்குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது.

அற்றால் என்ற சொல்லுக்கு நேர்பொருள் குறைந்தால் என்பது. அது உண்ட உணவு செரித்து வயிற்றின் கனம் குறைவதை இங்கு குறிக்கிறது.
உடம்பு பெற்றான் என்ற தொடரின் பொருள் என்ன? எல்லோருமே உடம்பு என்று ஒன்று உள்ளவர்கள் தாம். அதை நல்ல முறையில் பேணவேண்டும் என்பதை இப்படிக் கூறுகிறார் வள்ளுவர்.
‘நெடிதுய்க்குமாறு’ என்பது நெடிது உய்க்குமாறு எனப் பிரியும். உய்த்தல்-செலுத்துதல். ஆதலின் பழம் ஆசிரியர்கள் நெடிது செலுத்துவது என இதற்குப் பொருள் கூறுவர். நாமக்கல் இராமலிங்கம் இத்தொடரைத் துய்க்கும் ஆறு எனப் பிரித்துக்கொண்டு அனுபவிக்கும் வழி எனப் பொருள் உரைத்தார். அது பொருந்தவில்லை.

'அளவறிந்து உண்க' குறிப்பது என்ன?

'அளவறிந்து உண்க' என்றதற்கு இத்துணை அறும் என்று தான் அறிந்து உண்க, தன் பசியறிந்து உண்க, அவ்வறவுதான் பொய்ப்பசியோ மெய்ப்பசியோ என்று சிறிது தாழ்க்க நின்று ஓர்ந்து தெளிந்த பின்னர் உண்க, பின்னுண்பதனை அறும் அளவு அறிந்து அவ்வளவிற்றாக உண்க, மட்டாகச் சாப்பிட்டால், செரிக்கும் அளவு அறிந்து உண்க, வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், பசியினதளவும் செரிமானமாகும் தனது உடல் நிலையும் அறிந்து அவ்வளவினதாக உண்ணவேண்டும், தேவைக்கேற்ப அளவறிந்து உண்க, செரிமானம் பார்த்து உண், செரிமான அளவு அறிந்து உண்க, (ஒரு முறை உண்டதற்கும் மறுமுறை உண்பதற்கும் இடையிலிருக்கவேண்டிய) கால அளவை அறிந்து கொண்டு உண்ண வேண்டும், தன் செரிமான அளவறிந்து உண்ணுதல் வேண்டும், வயிறு செரிக்கும் அளவு தெரிந்து அவ்வளவே உண்ணவேண்டும், உண்ணும் அளவினை அறிந்து உண்க, வயிறு செரித்துக் கொள்ளும் அளவு அறிந்து உண்ண வேண்டும், செரிமானம் அறிந்து அதற்கேற்ப அளவாக உண்க, செரிமான ஆற்றல் பசி பருவம் உழைப்பு உணவுவலிமை முதலியவற்றின் அளவறிந்து உடல்நிலைக்கும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப அளவாக உண்ணுக, உடல் உறுப்புகளுக்குப் பயன்பட்ட முறையை அறிந்து அதற்குப் பிறகு கொடுக்க வேண்டிய அளவினையும் அறிந்து உண்ணுவாயாக என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அளவறிந்து என்பதற்குச் செரிக்கும் அளவு அறிந்து, பசியறிந்து, கால இடைவெளி அறிந்து எனக் கூறப்பட்ட இவற்றில் செரிக்கும் அளவு அறிந்து என்பதே பொருத்தம்.
இவை தவிர்த்து இன்றைய மருத்துவம் வழிகாட்டும் வகையில் உணவுப் பொருட்களின் சத்தளவை அறிந்து உண்க, கலோரியின் அளவு அறிந்து உண்க என்றும் உரை வரைந்தனர்.
முதல் உணவிற்குப்பின் அடுத்த உணவு உட்கொள்வதற்கிடையே முன்னது செரிமானமாக வேண்டும்; செரிமானமாகுமளவு இடைவெளி விட வேண்டும்; அச்செரிமான அளவறிந்து உண்ணவேண்டும்.

'அளவறிந்து உண்க' என்பது செரிக்கும் அளவு அறிந்து உண்ணவேண்டும் என்ற பொருள் தரும்.

முன் உண்டது செரித்தால் பின் உண்பதனைச் செரிமான அறிந்து உண்க; அதுவே நல்லுடம்பு பெற்றவன் நீண்ட காலம் செலுத்தும் வழியாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அளவறிந்து உண்பது நீண்டநாள் வாழவைக்கும் மருந்து.

பொழிப்பு

முன் உண்டது செரித்தால் அடுத்து உண்பதனைச் செரிமான அளவு அறிந்து உண்க; அது நல்லுடம்பு பெற்றவன் நீண்ட காலம் செலுத்தும் வழியாகும்.