இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0947



தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயளவு இன்றிப் படும்

(அதிகாரம்:மருந்து குறள் எண்:947)

பொழிப்பு (மு வரதராசன்): பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.

மணக்குடவர் உரை: பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம்.
இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும்.
(தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: தான் உண்ணும் உணவைச் செரிக்கவைக்கும் வயிற்றுத்தீயினது அளவுக்குள் அல்லாமல், தன் உடம்புக்கு ஏற்றன யாவை என்பதும் தெரியாமல், மிகக் கூடுதலாக ஒருவன் உண்ணுமாயின், அவனுக்கு நோய்கள் எல்லையின்றிப் பலவாய் விளையும். தீ- உணவைச் செரிக்க வைக்கும் உடற்கூறு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெரியான் தீயளவு அன்றித் பெரிதுண்ணின் நோய் அளவு இன்றிப் படும்.

பதவுரை: தீ-(பசி)நெருப்பு; அளவு-வரையறை; அன்றி-அல்லாமல்; தெரியான்-ஆராயாதவனாக; பெரிது-பெரிதாக, மிகவும்; உண்ணின்-உண்டால்; நோய்-உடற்பிணி; அளவு-வரையறை; இன்றி-இல்லாமல்; படும்-உண்டாகும்.


தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின்;
பரிப்பெருமாள்: வயிற்றில் தீயினதளவன்றி ஆராயாதே மிகவுண்பானாயின்;
பரிதி: உதராக்கினி அளவை யறியாமல் கறிபதார்த்தம் உருசி யறிந்து புசித்தான்; [உதராக்கினி-வயிற்றுத் தீ]
காலிங்கர்: இவ்வாறு தனது அங்கிக்குத் தக்க அளவு என்பது ஒன்றின்றிப் பின்னும் அவ்வுண்பதனை மற்று இது உண்டிக்குத் தகும் தகாது என்று தெரிந்துணரானுமாய் முன் கூறியாங்குக் கழிபேரிரையாகப் பெரிதுண்ணுமாயின்;
பரிமேலழகர்: தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்;

'தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பசியளவு தெரியாமல் மிக உண்டால்', 'வயிற்றுத் தீயளவு (செரிமான அளவு) அல்லாமல், ஆராயாது மிகுதியாக ஒருவன் உண்டால்', 'சீரண சக்தியின் அளவாக உண்ணாமல், தெரியாத்தனமாக அளவு கடந்து உண்டால்', 'தன் உடம்பின் நிலையையும் அதற்கேற்ற உணவையும் காலத்தையும் ஆராயாது, தன் வயிறு செரிக்குஞ் சூட்டின் அளவையும் அறியாது அதற்கதிகமாக எதனையும் ஒருவன் உண்பானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உணவைச் செரிக்கவைக்கும் வயிற்றுத்தீயினது அளவுக்குள் அல்லாமல், உடம்புக்கு ஏற்றன யாவை என்பதும் தெரியாமல், மிகுதியாக உண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நோயளவு இன்றிப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகநோய் உண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: மிகநோய் உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, நோய் தீர்ந்தாலும் தீ அளவறியாது உண்பானாயின் மீண்டும் நோய் வருமாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது. பொரிக்கஞ்சிக் கூழ்......
பரிதி: மூன்று வகை நோயால் மிடைப்படுவன் என்றவாறு.
காலிங்கர்: அவன்கண் வரும் நோய் ஓரளவு இன்றி உளதாம் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும்.
பரிமேலழகர் குறிப்புரை: தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

'அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோய் அளவில்லாமல் வரும்', 'அவனுக்கு நோய் அளவின்றி உண்டாகும்', 'அளவில்லாத நோய்கள் உண்டாகும்', 'அவனிடத்தே நோயானது அளவு கடந்து வளரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நோய் அளவு கடந்து உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உணவைச் செரிக்கவைக்கும் 'தீயளவு' அல்லாமல், உடம்புக்கு ஏற்றன யாவை என்பதும் அறியாமல், மிகுதியாக உண்டால் நோய் அளவு கடந்து உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'தீயளவு' என்பது என்ன?

எவ்வளவு பசிக்கிறது என்பதையும் அறிந்துகொள்க.

உணவு செரித்தற்குத் தன்னுள் உள்ள சூட்டின் அளவன்றி. தன் உடம்புக்கு ஏற்ற உணவு எது என்று தெரியாதவன், மிகுதியாக உண்பானாயின் அவனுக்கு நோய்கள் அளவில்லாமல் உண்டாகும்.
ஒருவனது தீயளவு அதாவது செரிக்கும் ஆற்றல் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இக்குறள். முற்குறள்களில் செரிக்கும் அளவு அறிந்து உண்ணவேண்டும் என்று சொல்லப்பட்டது. இங்கு செரிக்கும் ஆற்றல் அல்லது முறை தெரிந்து உண் எனச் சொல்லப்படுகிறது. இங்கு சொல்லப்படும் தீயளவு என்பது ஒருவர்க்குள்ள செரிக்கும் தீயின் அளவு ஆகும். அதாவது உடலின் செரிக்கும் ஆற்றலைச் சொல்வது. அதை ஒருவர் அறிந்துகொண்டிருக்க வேண்டும் எனப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் காலமும் அறிந்து உண்ண வேண்டும். செரிமான ஆற்றலும் காலமும் தெரியாமல், மிகையாக உண்பவனுக்கு நோயும் அதற்குத் தகுந்தபடி மிகையாக உண்டாகும். பசித்தீ அல்லாமல் கால அளவும் தெரியாமல் பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே அளவிறந்த நோய்களும் ஏற்படும்.
வறிதே 'தெரியான்' என்று சொல்லப்பட்டுள்ளது. எது தெரியான் என்பது கூறப்பட்டவில்லை. உரையாசிரியர்கள் தெரியான் என்ற சொல்லுக்கு 'இது உண்டிக்குத் தகும் தகாது என்று தெரிந்துணரானுமாய்', காலம் ஆராயாது உண்ணுமவன் எனப் பொருள் கூறினர். தெரியான் என்பது தன் உடம்புக்கு ஏற்ற உணவு எது என்பதை அறியமாட்டாதவன் எனக் கொள்ளலாம்.
பெரிதுண்ணலாவது, மீதூண் விரும்புதல். இது அளவு அறியாச் சூழலில் தொடர்ந்து உணவு அருந்துவதைக் குறிப்பது. சுவைக்கு அடிமையாகி, அளவுக்கு மீறி உண்பதைச் சொல்வது. சிலருக்கு எப்பொழுதும் தீயாப் பசிக்கும். தீயானது தன் முன்னிட்ட எல்லாவற்றையும் விழுங்கிவிடுவதுபோல இவர்கள் கண்டதையும் கண்ட நேரத்தில் தின்பர். விருந்து கொண்டாட்ட இடங்களில் அடிக்கடி கலந்துகொண்டு, ஒரே வேளையில் மிகையாகவும், கலோரிகள் நிறைந்த உணவுகளையும் உட்கொள்வர்; பசியில்லாவிடினும், உடற்பயிற்சி ஏதும் இல்லாமல், தொலைக்காட்சியில் தீவிரமாக மூழ்கியபடியும், கணினியின் முன்பும், அமர்ந்தநிலையிலேயே எப்பொழுதும் எதையாவது மென்றுகொண்டு இருப்பர். இது பெரிதுண்ணல் எனப்படுகிறது.
பெரிதுண்ணல் உடலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு நோய்கள் உண்டாகக் காரணமாகிறது. மிகையான உணவு உண்பதால் உண்டாகும் விளைவுகள்: உடல் பருமன், இடுப்பைச் சுற்றித் தேவையற்ற சதை வளர்ச்சி, வயிறு உப்புசம், உணவு எதுக்களித்தல், மந்தம், சர்க்கரைநோய், மனஅழுத்தம், உடல்/மனச்சோர்வு, மிகையாக உண்ணும் தீவழக்கம் (Binge eating disorder), செரிமான உறுப்புக்கள் அனைத்தும் கடும் உழைப்புக்கு உள்ளாதல் போன்றன. பெருந்தீனிக்காரர்களுக்குத் தேவையான கலோரிகள் கரைவதற்கும் வாய்ப்பில்லாமல் போய் நோய் நீங்காமல் அவர்களிடம் நிலைபெற்றுவிடுகிறது. வாய்க்கு இடங் கொடுத்தல் நோய்க்கு இடம் கொடுப்பதாகும் என்பதை நினைவிற்கொண்டு மிகை உண்ணுதலைத் தவிர்க்க வேண்டும்.

'தீயளவு' என்பது என்ன?

'தீயளவு' என்றதற்குப் பசியின் அளவு, வயிற்றில் தீயினதளவு, உதராக்கினி, தனது அங்கிக்குத் தக்க அளவு, வயிற்றுத் தீ அளவு, தன் சரீரப் பிரகிருதியும் அதற்கேற்ற உணவும், தன் வயிற்றில் நிற்கும் நெருப்பின் அளவும் பசியளவும், பசித்தீயின் அளவு, தான் உண்ணும் உணவைச் செரிக்கவைக்கும் வயிற்றுத்தீயினது அளவு, மிகுதியான உணவின் தீமை, வயிற்றுத் தீயளவு (செரிமான அளவு), சீரண சக்தியின் அளவு, வயிற்றுப் பசித் தீயின் அளவு, தன் உடம்பின் நிலையும் அதற்கேற்ற உணவும், உணவு செரித்தற்குத் தன் வயிற்றில் உள்ள சூட்டின் அளவு, உணவை எரிக்கும் செரிமானத்தின் அளவு, தன் உடற்கூற்றையும் அதற்கேற்ற வுணவையும், ஜாடராக்கினிக்குத் தக்கபடி அளவாக என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தீ அளவு என்பது உணவு செரித்தற்கு ஒருவன் வயிற்றில் தங்கியிருக்கும் சூட்டின் அளவைச் சொல்வது. இது பசித்தீ எனவும் அறியப்படும். செரிக்கும் அளவு குறிக்கப்பயன்படுவது.
நாமக்கல் இராமலிங்கம் 'ஒவ்வொருவனும் தனக்குள்ள சீரணசக்தி எவ்வளவு என்பதை நிதானத்தறிந்து கொண்டு அந்த அளவுக்கு உணவு கொள்ளும் விதியை எவ்வளவுக்கெவ்வளவு கவனித்துக் கொள்ளுகிறானோ அவ்வளவுக்கவ்வளவு நோயில்லை. அந்த விதியை எவ்வளவுக்கெவ்வளவு கவனிக்காமல் அதிகமாக உண்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு நோயுண்டாகும்-என்பது. இந்த விதி எல்லாரானும் எளிதில் கடைப்பிடிக்கக்கூடியது. ஏனெனில் சிறிது கவனம் செலுத்தினால் எல்லாரும் அவரவர்க்குள்ள சீரணசக்தி எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள முடியும்' என்பார். இவர் தீயளவு என்பதற்குச் சீரணசக்தி அதாவது செரிமான ஆற்றல் எனப் பொருள் கொள்கிறார்.
தேவநேயப்பாவாணர் 'பசியெடுத்தல் தீயெரிதல் போன்றும் உண்டது செரித்தல் தீயால் எரிக்கப் படுதல் போன்றும் இருத்தலால், பசிஅல்லது செரிமான ஆற்றல் வயிற்றுத்தீ யெனப்படும். அவ்வழக்கு நோக்கித் 'தீயளவன்றி' என்றார். செரிமான ஆற்றலளவிற்குத் தக்கவாறு உண்ணவேண்டுமென்பது கூறப்பட்டது' என இதை விளக்குவார்.
அறிவியல் மருத்துவ இயலார் 'தீயளவு என்பதற்கு கலோரி (Calorie) சக்தி என்று பொருள் கொள்வது இன்றைய அறிவுலகக் கொள்கைக்கு ஒத்தாகும்' என்பர்.
வளர்ந்துவிட்ட நாடுகளில் இன்னின்ன உணவுக்கு இன்னின்ன கலோரி என்பதைத் தெரிந்து உண்ணப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உடல் இயற்கையாக வெளிப்படுத்தும் பசியுணர்வின் தூண்டுதலுக்கு ஏற்ப உணவின் அளவை அமைத்துக்கொள்கின்றனர். ஒருவரது உழைப்புக்குத் தக்கவாறு கலோரி தேவைப்படும் உணவின் கலோரி மதிப்பை அளவிடாது, அதைப் பொருட்படுத்தாமல், மூன்று வேளை உணவு மட்டுமல்லாது மற்ற நேரங்களில் இடைப்பலகாரங்கள் போன்றவற்றை உட்கொள்ளுவதைப் பழக்கமாக்கியுள்ளவர்களுக்குத் தேவைக்கு அதிகமான கலோரி உடலில் சேர்கிறது.
’பசித்தீ’ என்பது செரிமானச் சுரப்பிகளின் அளவீடு மற்றும் மூளையில் உண்டாகும் பசியுணர்வின் செயல்பாடு எனவும் விளக்குவர். நன்கு செரிமானமாகும் உணவே சிறந்த உணவாகும்.

‘தீயளவு' என்ற தொடர்க்குச் செரிமான ஆற்றலின் அளவு என்பது பொருள்.

உணவைச் செரிக்கவைக்கும் வயிற்றுத்தீயினது அளவுக்குள் அல்லாமல், உடம்புக்கு ஏற்றன யாவை என்பதும் அறியாமல், மிகுதியாக உண்டால் நோய் அளவு கடந்து உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனது செரிமான ஆற்றலை அறிந்து வைத்திருத்தல் நல்ல மருந்து

பொழிப்பு

உணவுச் செரிமான அளவுக்குள் அல்லாமல், உடம்புக்கு ஏற்றன யாவை என்பதும் அறியாமல், மிகுதியாக உண்டால் நோய் அளவில்லாமல் வரும்.