இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0949உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

(அதிகாரம்:மருந்து குறள் எண்:949)

பொழிப்பு (மு வரதராசன்): மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.

மணக்குடவர் உரை: நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.

பரிமேலழகர் உரை: கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க.
(ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நோயாளியின் நிலையையும், நோயின் நிலையையும், மருந்து கொடுக்குங் காலத்தையும் நன்கு அறிந்து அவற்றிற்குத் தக்கபடி மருத்துவங் கற்றவன் மருத்துவம் செய்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.

பதவுரை: உற்றான்-நோய் உற்றவன், நோயாளி; அளவும்-அளவும்; பிணி-நோய்; அளவும்-அளவும்; காலமும்-பருவமும்; கற்றான்-ஓதிய மருத்துவன்; கருதி-எண்ணிப்பார்த்து; செயல்-(மருத்துவம்)செய்க.


உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து;
பரிப்பெருமாள்: நோயுற்றவன் அளவும் நோயின் அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து;
பரிதி: வியாதி கொண்டவன் குணமும், வியாதியின் பேரும், காலத்தையும் விசாரித்து;
காலிங்கர்: நோயுற்றவனது வன்மையும் மென்மையும், அவனுக்குச் சென்ற வயது அளவு ஆம் பிறவும், அவ்னுற்ற நோயாவது அவன் அனுபவத்திற்கு வந்து அடிக்கொண்ட முகமோ என்றும், இடம் கொண்ட நோய் தலை சாய்ந்த முகமோ என்றும், இந்நோய் நிலை அளவறிந்தும், காலம் கார், கூதிர், முன்பனி, பின்பனி, சீரிளவேனில், வேனில் என்னும் அறுவகைப் பருவத்துள்ளும் இப்பருவத்து இந்நோய்க்கு இம்மருந்து செய்தால் தீரும், விகற்பிக்கும் என அறிதலும் யாரோ எனில்; [விகற்பிக்கும்- ஒன்று கிடக்க ஒன்று செய்தல்]
பரிமேலழகர்: அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. [சாத்தியம்- தீர்வது.; அசாத்தியம்- தீராதது; யாப்பியம் -பெரும்பான்மை, சிறுபான்மை, தீர்க்கத்தக்கதென்ற வேறுபாடுகள்; அதன் பருவ வேறுபாடும் - நோய் தோன்றிய காலவேறுபாடு.]

'நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலம் அறிவதை விளக்குவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோயாளியின் நிலையையும் நோயின் நிலையையும் காலத்தையும்', 'நோயாளியின் அளவு, நோயின் அளவு, நோயுற்ற காலம் ஆகியவற்றை', 'நோயாளியின் (வயது, தேகபலம் முதலிய) அளவுகளையும், நோயின் வலிமையையும், அப்போதுள்ள கால நிலைமையையும் தீர எண்ணிப் பார்த்து', 'நோயாளன் நிலையினையும் பிணியின் நிலையினையும் காலத்தினையும் எண்ணி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நோயாளியின் நிலையையும் நோயின் அளவையும் மருந்து கொடுக்குங் காலத்தையும் என்பது இப்பகுதியின் பொருள்.

கற்றான் கருதிச் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன். [ஆயுள் வேதம் வல்லவன் - மருத்துவ நூற் புலவன்]
பரிப்பெருமாள்: அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுரு வேதம் வல்லார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வாய்ப்பச் செய் என்றார். இது வாய்ப்புச் செய்யுமாறு கூறிற்று.
பரிதி: செய்வான் என்றவாறு. காலிங்கர்: வாகடம் முதலிய மருந்து நூல்களை மாசறக் கற்றவரே; இத்துணையும் குறிக்கொண்டு மற்று இதன் பின்னரே மருந்தினைச் செய்வானாக என்றவாறு. [வாகடம் - வைத்திய நூல்]
பரிமேலழகர்: ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது. [அவ்விழுக்குப்பட்டுழி- அளவறியாது உண்டு நோயால் வருந்தும்பொழுது]

'ஆயுள் வேதம் வல்லவன்/மருந்து நூல்களை மாசறக் கற்றவர் நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மருத்துவன் அறிந்து செய்க', 'மருத்துவன் நூல் முறைப்படி எண்ணிச் செய்க', 'தக்கது செய்ய வேண்டியது வைத்தியத் தொழில் கற்றவனுடைய வேலை', 'மருத்துவ நூலைக் கற்றவன், நோய் தீர்க்கும் செயலைச் செய்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மருத்துவம் கற்றவன், எண்ணி நோய் தீர்க்கும் செயலைச் செய்தல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மருத்துவம் கற்றவன், நோயாளியின் நிலையையும் நோயின் அளவையும் மருந்து கொடுக்குங் காலத்தையும் எண்ணி நோய் தீர்க்கும் செயலைச் செய்தல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'கற்றான் கருதிச் செயல்' குறிப்பது என்ன?

நலமுண்டாக்கும் மருந்து செய்முறை கூறுவது.

மருத்துவத்தைக் கற்றறிந்தவன் நோயுற்றவன் நிலை, நோயின் தன்மை, அதன் கால இயல்பு ஆகியனவற்றை எண்ணி மருத்துவம் புரிதல் வேண்டும்.
முந்தைய குறளில் வாய்ப்பச் செய்க எனச் சொல்லப்பட்டது. இது வாய்ப்பச் செய்யும்வழி கூறுகிறது. மருத்துவ உதவி செய்வதற்குமுன் அறிந்து கொள்ளப்படவேண்டிய தன்மைகளாக நோயுற்றவனின் உடல்நிலை, நோயின் வன்மை அதைத் தீர்க்க வேண்டிய காலம் ஆகிய மூன்றை இக்குறள் தொகுத்துச் சொல்கிறது. பிணி ஒன்றே ஆயினும் ஒருவரின் உடலின் தற்போதைய நிலைமை, அவருக்கு எந்தவிதமான மருத்துவம் ஏற்கும் என்பனவற்றை உணர்ந்தே பிழையறச் செய்யும் மருத்துவர் மருந்தளிப்பார்.
உற்றான் அளவு: உற்றான் என்ற சொல் நோயுற்றவனைக் குறிப்பது. உற்றான் அளவு என்பது நோயாளியின் வயது, உயரம், எடை, பருவம் இவற்றைச் சொல்வது. குழந்தை, விடலையர், இளைஞர், கருவுற்ற தாய், முதியவர் என்றிவர்கள் பாகுபாடு அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது. நோயாளியின் உடல் வலிவு, மெலிவு. நோய் தாங்கும் ஆற்றல், மருந்தை ஏற்றுக் கொள்ளும் நிலை போன்றன உற்றான் அளவாகும்.
பிணிஅளவு: இது நோயின் வீரியத்தைச் சொல்வது. நோயைத் தொடக்கநிலை, நடுவுநிலை, முடிவு (stage) எனப் பகுத்துக் கணிப்பதை பிணியளவு என்று சொல்வர். இது நோயின் மிகுதி அல்லது குறைவு என்னும் தன்மை (severity) அறிதல், நோய் எங்கெங்கு பரவியிருக்கிறது என்பதை ஆராய்ந்து தெரிதல் போன்றவற்றைக் குறிக்கும். தீரும் நோய், தீராத நோய், ஐயத்திற்குரிய நோய் என்று நோயின் தன்மையை அறிதலும் இதில் அடங்கும். வகைவகையான நோய்கள் மாந்தரைப் பீடிக்கின்றன. இன்றைக்கு தீநுண்மிகள் (virus) மனிதனைத் தாக்குகின்றன. அவை தாக்கும் அளவும் பலவகைப்பட்டது - சிறிய அளவிலும் தாக்கலாம். பெரிய அளவிலும் தாக்கலாம். எந்த அளவில் தாக்குகிறதோ அந்த அளவிற்கு மருத்துவம் தேவைப்படும். பிணிஅளவு என்பது நோயின் தன்மையும், வலியுமறிந்து மருத்துவம் செய்தல் வேண்டும் என்பதைச் சொல்வது.
காலம்: நோய் நீடிக்கும் காலமும் உணரப்பட வேண்டும். நோய் தணிக்க தமக்கு இருக்கும் நேரம், தகுந்த நேரம் மற்றும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் இவற்றையும் எண்ணுவார் மருத்துவர். கால அளவு என்பது, மருத்துவம் செய்ய ஏற்ற நேரத்தையும், இருக்கின்ற கால அளவையும் குறிப்பதாகும். காலம் தாழ்த்திச் செய்வதோ, அல்லது காலத்திற்கு முன்பாகவே செய்வதோ, இரண்டுமே மருத்துவத்தில் தவிர்க்கப்பட வேண்டியன.
இங்கு சொல்லப்பட்ட காலம் என்பது காலத்தின் இயல்பைக் குறிப்பதாகவும் கூறுவர். காலிங்கர் கார், கூதிர், முன்பனி, பின்பனி, சீரிளவேனில், வேனில் என்னும் அறுவகைப் பருவத்துள்ளும் இப்பருவத்து இந்நோய்க்கு இம்மருந்து செய்தால் தீருமா அல்லது ஒன்று கிடக்க ஒன்று செய்யுமா என மருத்துவர் அறிதல் வேண்டும் என உரைப்பார்.

'கற்றான் கருதிச் செயல்' குறிப்பது என்ன?

'கற்றான்' என்றதற்கு ஆயுள் வேதம் வல்லவன். ஆயுரு வேதம் வல்லார், வாகடம் முதலிய மருந்து நூல்களை மாசறக் கற்றவர், ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன், வைத்தியசாத்திரம் படித்தவன், ஆயுள் வேதத்தினை வாகட சாத்திரத்தினைக் கற்ற மருத்துவன், மருத்துவ நூலைக் கற்றவன், மருத்துவத்தைக் கற்றவன், மருத்துவன், வைத்தியத் தொழில் கற்றவன், மருத்துவ நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன், மருத்துவங் கற்றவன், கற்றறிந்த மருத்துவன், சித்த மருத்துவத்தைக் கற்றவன், மருத்துவ நூலறிந்த வைத்தியன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கற்றான் என்ற சொல் நூலறிவும் பட்டறிவும் கொண்ட மருத்துவரைக் குறிக்கும். 'கற்றான்' எனச் சொல்லப்பட்டதே யன்றி, கற்க வேண்டிய மருத்துவ முறையின் பெயரோ, நூலின் பெயரையோ எந்த நூலாசிரியர் பெயரோ குறிப்பிடப்படவில்லை. உரையாசிரியர்களே அவற்றை உய்த்துணர்ந்து எழுதியுள்ளனர்.
எல்லா நோய்களுக்கும் மருத்துவரிடம் செல்லமாட்டார்கள். சில நோய்களை நன்கு கற்றவரால் மட்டுமே கையாளமுடியும். இவரே நூல் நெறியும் உணர்வு மிகுதியும் கொண்டு மருத்துவம் செய்வார். கற்றார் கல்வியறிவும், ஆற்றலும், பட்டறிவும் பெற்றிருப்பாராதலால் அவருக்கு மருத்துவம் எளிதில் கைவரப்பெறும். இவர் உற்றான் அளவு முதலியவற்றைக் கருதிச் செய்வார் ஆவார்.
மருத்துவத்தில் அளவு காண்பது மிகத்தேவையானது. மருந்து கொடுக்கும்போதும் அளவறிந்து தரவேண்டும். மருந்தின் அளவு மிகையானாலும் குறைந்தாலும் நோயாளியின் உயிருக்கு ஊறு உண்டாகும்.
ஒரு குறிப்பிட்ட நோயினை நீக்குவதற்கான நுண்ணறிவு ஒரு மருத்துவரிடத்தில் இல்லையேல் அவ்வறிவு பெற்ற உரிய மருத்துவரிடம் நோயுற்றவர் அனுப்பப்படுவார்.

நோயாளியின் நிலையையும் நோயின் அளவையும் மருந்து கொடுக்குங் காலத்தையும் மருத்துவம் கற்றவன், எண்ணி நோய் தீர்க்கும் செயலைச் செய்தல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தொழில்வல்லுநரான மருத்துவர் சிறந்த மருந்து தருவார்.

பொழிப்பு

நோயாளியின் நிலை, நோயின் அளவு, நோயுற்ற காலம், இவற்றை அறிந்து மருத்துவர் நோய் தீர்க்கும் செயலைச் செய்வார்.