இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0950உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

(அதிகாரம்:மருந்து குறள் எண்:950)

பொழிப்பு (மு வரதராசன்): நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

மணக்குடவர் உரை: நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.

பரிமேலழகர் உரை: மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.
(நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.)

இரா இளங்குமரன் உரை: மருத்துவம் என்பது நோயுற்றவன்; நோயைத் தீர்க்கும் மருத்துவன்; நோய் தீர்க்கும் மருந்து; பக்கத்திருந்து உதவுவான் என்னும் அப் பகுதிக்குட்பட்ட நான்கு பிரிவுகளையுடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நாற் கூற்றே மருந்து..

பதவுரை: உற்றவன்- (நோய்)உற்றவன், நோயாளி; தீர்ப்பான்- (நோயை) ஆற்றுபவன், மருத்துவன்; மருந்து-மருந்து; உழைச்செல்வான்- உடனிருந்து உதவுபவன், அருகிடம் செல்பவன்; என்று-என; அப்பால்-அந்தப் பகுதி; நாற்- நால், நான்கு; கூற்றே-கூறுபாடுடையதே, பாகுபாடுடையதே; மருந்து-மருத்துவம், (பிணி தீர்க்கும்) மருந்து.


உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்று;
பரிப்பெருமாள்: நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், அதற்குத்தக்க மருந்தும், அதனைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்று;
பரிதி: வியாதி கொண்டவர்க்கும் பண்டிதர்க்கும் மருந்திற்கும் பரிகாரம் பண்ணுவார்க்கும் நந்நான்கு குணமுண்டு. அது ஏதென்றால் வியாதியாளர் குணம் -திடவான் பதார்த்தவான், கிரமத்திலே வருபவன், கிளையுள்ளவன் ஆக நான்கு. வைத்தியன் குணம் கற்றவன், தெய்வசகாயம் உள்ளவன், கண் ஆனி உள்ளவன், கோவண சுத்தமுள்ளவன் ஆக நான்கு. மருந்தின் குணம்-எளிதாய், ஒரு மருந்தாய், சுத்தமுள்ளதாய் தப்பாமல் பொறுப்பதாய் உள்ள நான்கு. பரிகாரம் பண்ணுவிப்பான் குணம்-வியாதியாள்பவன்மேல் பத்தி, வைத்தியன் சொன்ன கிரமத்திலே வருபவன், சோம்பின்மை உள்ளவன், கொடையுள்ளவன் ஆக நான்கு; [திடவான் - வலியுள்ளவன்; பதார்த்தவான் - உன்பொருளுடையான்; கிரமத்திலே வருபவன் - முறையாக உண்பவன்; கிளையுள்ளவன் - சுற்றமுள்ளவன்; வைத்தியன் குணம் கற்றவன்- வைத்திய நூல் படித்தவன்; தெய்வசகாயம் உள்ளவன் - தெய்வ நம்பிக்கை உள்ளவன்; கண் ஆனி உள்ளவன் - கருவிழி யுள்ளவன்; கோவண சுத்தமுள்ளவன் - ஒழுக்கமுள்ளவன்; உழைச்செல்வான் - நோயாளியின் பக்கத்திலிருந்து கவனிப்பவன்]
காலிங்கர்: நோயினை உற்றோன் தானும், இந்நோயான் இடருறக்கடவோம் அல்லேம் என்று மற்று இது தீருமளவு முயற்சியும் உணவும் குறியும் முதலிய இவ்வாறு மொழிவேம் என்னும் அறிவுடையோன் தானேயும், ஒரு மருந்தாகும்: இது அல்லது மருந்தாவது ஒரு நோய்க்குப் பல மருந்து உளவாயினும் உற்றான் அளவும் பின் அளவும் காலமும் நோக்கினால் இவற்றுடன் பொருந்தினது யாது மற்று அதுவும் தனி மருந்தாகும்; இது அல்லது உழைச்செல்வான் அவனது தாயினும் இனிய தன்மையன் ஆகிய உற்ற இடத்து உதவும் பெற்றியோன் யாவன், மற்று அவன் தானும் ஒரு மருந்தாகும்;
பரிமேலழகர்: பிணி -அதனையுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்குக் கருவியாகிய மருந்து, அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று;
பரிமேலழகர் குறிப்புரை: அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை.

'நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோயாளி மருத்துவன் மருந்து துணையாளி என்ற', 'நோயுற்றவன், நோய் தீர்ப்பவன், மருந்து, பக்கத்திலிருந்து மருந்தினைத் தக்கவாறு கொடுக்கும் துணை என', 'நோயாளியை வைத்தியனிடம் ஒப்படைத்த பிறகு நோயாளி, வைத்தியன், மருந்து, நோயாளியின் அருகிலிருக்க வேண்டிய துணை என்ற', 'நோயாளன், நோயைத் தீர்க்கும் மருத்துவன், நோய்க்குக் கொடுக்கும் மருந்து, நோயாளிக்கு அருகில் இருந்து பணி செய்வான் என்று சொல்லப்பட்ட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நோயுற்றவன், பிணி தீர்ப்பவன், மருந்து, நோயாளியின் அருகிலிருக்க வேண்டிய துணை என்ற என்பது இப்பகுதியின் பொருள்.

அப்பால்நாற் கூற்றே மருந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.
பரிப்பெருமாள்: இவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே இந்நான்கினும் ஒன்று தப்புமாயின் 'நோய் தீராது என்றவாறாயிற்று. இது மருந்தின் பகுதி கூறிற்று.
பரிதி: இந்த நான்கு பேருக்கும் பதினாறு குணம் வேணும் மருந்து என்னும் அதிகாரம் என்றவாறு.
காலிங்கர்: எனவே இந்நான்கு பகுதியும் உடையது யாது, மற்று அதுவே மருந்து என்று இயம்பப்படுவது; ஆதலால் இந்நான்கினுள் ஒன்று உதவானாயின் மற்று அதுவே கூற்றம் என்றவாறு.
பரிமேலழகர்: சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது, பிணிக்கு மருந்தாவது; இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன. [கால்களாக - மருந்திற்குக் கால்களாக; அதனை - அவ்வழுக்கினை (நோயை)]

'இவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் பரிமேலழகரும் இந்நான்கனுக்கும் உட்பகுதிகளாக ஒவ்வொன்றுக்கும் நான்கு கூறுகளைச் சொல்லி மொத்தம் பதினாறு குணங்களாகக் குறிப்பிடுகின்றனர்,

இன்றைய ஆசிரியர்கள் 'நான்கும் மருத்துவத்தின் கூறுகள்', 'இந்நான்கு வகைப்பட்டது மருந்து', 'நான்கு பகுதிகளும் சேர்ந்ததே வைத்தியம்', 'நான்கு பகுதிகளையுடையது நோய்க்கு மருந்தாவது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அந்த நான்கு பாகுபாடுகளையும் உடையது மருத்துவ முறையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நோயுற்றவன், பிணி தீர்ப்பவன், மருந்து, உழைச்செல்வான் என்ற அந்த நான்கு பாகுபாடுகளையும் உடையது மருத்துவ முறையாம் என்பது பாடலின் பொருள்.
'உழைச்செல்வான்' யார்?

நோய்க்கான தீர்வு, தொடர்பான பலரது கூட்டுறவு முயற்சியால் உண்டாகின்றது.

நோய்உற்றவன், நோயைத் தீர்ப்பவன், உதவும் மருந்து, மருந்தை அருகேயிருந்து தருபவன் என்ற இந்நான்கு மருத்துவம் செய்பகுதிகளின் தொகுப்பே மருந்து.
இக்குறள் மருந்து என்பது ஒன்றல்ல, நான்கு என்கிறது. மருந்து ஒன்றும் மருந்தாக மதிக்கப்படுவாரான நோயுற்றவன், மருத்துவன், மருந்துண்ணச் செய்யும் செவிலியர் ஆகிய மூவரும் சேர்ந்து மருந்து நான்காகிறது எனச் சொல்லப்படுகிறது. நோய் நீக்கலுக்கு இந்நான்கும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இக்குறளில் முதலிலுள்ள மருந்து என்பதற்கு நோய் தீர்க்கும் மருந்து என்பதும் இரண்டாவதாக உள்ள மருந்து என்பதற்கு மருத்துவம் என்பதும் பொருள்.
உற்றவன்: உற்றவன் என்பது நோய் உற்றவனை அதாவது நோயாளியைக் குறிக்கும் சொல். நோயாளி தனது நோயை மறைக்காமல் மருத்துவனிடம் சொல்ல வேண்டும்; மருத்துவர்க்கு இணங்கி அவர் கூறுகின்றபடி நடந்து அவர் தரும் மருந்துண்ண வேண்டும்.
தீர்ப்பான்: இச்சொல் நோய் நீக்குபவனை அதாவது மருத்துவனைக் குறிப்பது. நோயுற்றவனைக் குணப்படுத்த மருத்துவனை நோய் தீர்ப்பான் என அழைக்கிறார் வள்ளுவர். இவன் மருத்துவக் கல்வி பெற்றவனாகவும் பட்டறிவு உள்ளவனாகவும் இருப்பான். இவன் நோய்க்கேற்ற தீர்வுகளைக் கருத்தூன்றிச் செய்வான்.
மருந்து: இது நோய் தீர்ப்பதற்காகக் கொடுக்கப்படும் மருந்தைச் சொல்கிறது. நோயின் தன்மையறிந்து மருந்து தரப்படவேண்டும். மருந்து நோய்க்கேற்றதாகவும், நோயாளி ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். அது மீண்டும் வயிற்றில் சுமையேற்றாது, நோய்க்குக் காரணமான அழுக்கை நீக்கி நோயுற்றவனைக் குணப்படுத்தும்.

மருத்துவ முறையாவது நோயாளி, மருத்துவன், மருந்து, பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்ளுகின்றவன் என்ற நான்கு பகுதியை உடையது. இந்நான்கும் கூடிய வழியல்லது பிணி தீராமையின், இத்தொகுதியையே ‘மருந்து’ என்கிறார் வள்ளுவர். காலிங்கர் குறளில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் மருந்தாகுமாற்றைத் தம்முரையில் விளக்கியுள்ளார்.
இந்நான்கும் மாறுபட்டவழி நோய்தீர்த்தலில் வெற்றி காண முடியாது. இந்த அமைப்பு சிறந்த மருத்துவ முறையாக பல நூற்றாண்டு காலமாக இயங்கி வருகிறது. மருத்துவம் பற்றி வள்ளுவர் சொல்லியிருக்கும் உண்மைகள் எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றனவாயிருக்கின்றன. இந்நான்கு கூறுபாடுகளும் இன்றும் பொருந்துவன; இன்றைக்குள்ள மருத்துவ மனைகளின் கட்டுத்திட்டங்களிலும் இவற்றைக் காணலாம்.
நோயைத் தீர்ப்பது மருந்து மட்டுமன்று. உற்றவன், தீர்ப்பான், உழைச்செல்வான் ஆகிய முத்திறத்தார்க்கும் இருக்கவேண்டிய நல்லியல்புகள், அவர்களிடையே உள்ள நல்லுறவு, ஒத்துழைப்பு அனைத்தும் சேர்ந்தே நோயைத் தீர்க்கின்றன என்பது கருத்து.

இக்குறளுக்கான பரிதியின் விளக்கத்தைப் பரிமேலழகர் மேற்கொண்டு, அங்குமிங்கும் சில மாற்றங்களைச் செய்து, தம் உரையில் அமைத்துள்ளார். இவர்கள் உரையின்படி மருந்து நால்வகை; அவற்றுள் ஒவ்வொன்றும் நன்னான்கு குணம் என்னும் பொருட்பகுதியை அடக்கி நிற்கிறது; ஆக மொத்தம் பதினாறுவகையாம். இவர்கள் தங்கள் காலத்துக்கு முந்தைய நூலிலிருந்து அவற்றை எடுத்தாண்டிருக்கலாம். அந்நூலின் பெயரோ அதன் ஆசிரியரின் பெயரோ அறியக் கூடவில்லை.
குறளில் எண்ணப்பட்டவை நான்குதான்; அந்தப் பதினாறு வகைகளை வள்ளுவர் கூறவில்லை. எனினும் அவை இப்பாடலின் கருத்துக்குக் கூடுதல் விளக்கமாக அமைந்திருத்தலின் அவற்றையும் பின்வந்த உரையார்களின் கருத்துக்களையும் இணைத்து ஒருசேர இங்கு நோக்கலாம்:

  • உற்றவன் வகை நான்காவன: பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. பொருளுடைமை நோய்நீக்கலுக்கு வேண்டும் பொருளை அளித்தலையுட்படுத்தும். இன்று மருத்துவக் காப்பீட்டு தொகை (insurance ) வழியாகவும் பொருள் பெறலாம். மருத்துவம் முடிந்தபின் உரிய பணத்தைக் கொடுக்கத் தயங்குதல், மறுத்தல் போன்ற நோயாளிகளின் செயல்கள் இன்றும் மருத்துவர்களுக்கு சிக்கலாகவே உள்ளன. நோய்களின் அறிகுறிகளை தெளிவாகத் தெரிவிக்காமலிருப்பது, மருத்துவர் சொற்படி அதாவது இன்னின்ன மாத்திரையை இன்னின்ன நேரத்தில் சாப்பிட வேண்டும்; சொல்லப்பட்ட சோதனைகளைச் செய்யாமலிருப்பது, மருத்துவர்களிடம் தெரிவிக்காது வேறு மருந்துகளைப் பெற்று உண்பது ஆகியவற்றால் மருத்துவத்தில் இடையூறுகள் ஏற்படுகின்றன. மருத்துவத்தின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். மருத்துவத்தின்போது இனிமை இருக்காது. ஊசி குத்துவது, அறுவை சிகிச்சை செய்வது, கட்டு போட்டு இருப்பது போன்ற வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவம் பொறுக்க முடியாத துன்பமாக இருந்தால் இடையிலேயே மருத்துவசாலையை விட்டு நீங்கிச் செல்லும் நோயாளிகளும் உளர். நோயின் நிலையை உணர்ந்து கொள்ளும் அறிவு இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், தன் உடம்பு, தன் வலி, என்று தன்னுடைய நோயின் தன்மையை நோயாளி அறிந்து கொண்டு மருத்துவத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
  • தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. நோய்கண்டு அஞ்சாமை மருத்துவர்க்கு வேண்டிய இயல்பே. ஒரு மருத்துவர்க்கு நோய் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடும் துணிவு இருக்க வேண்டும். ஆசிரியனை வழிபட்டோதிய கல்வியறிவுடைமை என்பது. திறமையும் அறிவும் அருளும் நிறைந்த சிறந்த மருத்துவர்களிடம் கல்வி பயின்றோர் பிற்காலத்தில் தாமும் சிறந்த மருத்துவர்களாக விளங்குவதைக் குறிப்பது. அடுத்து பட்டறிவு. எவ்வளவுதான் படித்து இருந்தாலும், அனுபவ அறிவும் மிக முக்கியம். நோயாளியின் உடல் நிலையை ஆய்ந்து கருத்துடன் சிகிச்சை செய்யாது ஏதாவது மருந்தைக் கொடுத்துப் பணம் பெற முயல்வது 'தீய வைத்தியமுறை' (malpratice) எனக் கடியப்படும். நோயாளியின் இயலாமையைப் பயன்படுத்தித் தவறான வழியில் பொருள் சேர்க்க முயலக்கூடாது. தேவையில்லாத சோதனைகள் செய்வது, வேண்டாத அறுவை சிகிச்சை செய்ய வைப்பது, தெரியாத நோயாளி என்றால் உடல் உறுப்புகளை கூட திருடி விற்று விடுவது போன்றனவும் கடியக்கத்தக்கன. இவை மன, மொழி, மெய் தூய்மையாக இருக்கச் செய்வதற்கான அறிவுரைகள்.
  • மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இவற்றில் கவனத்துக்குரியது பகுதியொடு பொருந்துதல் அதாவது குறிப்பிட்ட நோயாளியின் உடலுக்கு அம்மருந்து ஏற்றதாதல் என்பதே. அதே நோய்க்கு அதே மருந்தை அளிப்பினும் ஒரு நோயாளிக்கு விரைவில் குணமளிக்கும் மருந்து மற்றொரு நோயாளிக்கு விரைவில் அவ்வாறு பயனளிப்பதில்லை என்பதைத் தற்போதும் மருத்துவர் எடுத்துக் கூறுகின்றனர். துன்பம் தீர்க்க மருந்து உட்கொள்ளும்போது வேறு பக்க விளைவுகள் உண்டாகக்கூடாது.
  • இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன் மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவ்வியல்புகளும் இன்றும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர் அனைவரிடமும் இருக்க வேண்டியவை. மருத்துவர் சொற்படி சிகிச்சையைச் செய்ய வேண்டுமெனவும் சோம்பலும் கவனமின்மையும் இன்றி உண்மையுடன் உழைத்தல் வேண்டுமெனவும் மருத்துவரிடம் எப்பொழுதும் உண்மையே கூறவேண்டுமெனவும் தாம் ஏதாவது தவறு செய்ய நேரிடினும் அதை மறைக்க முயலாது மருத்துவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டுமெனவும் தற்போதும் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியரும் பிறரும் கற்பிக்கப்படுகின்றனர். சிகிச்சை மட்டுமன்றிச் சிகிச்சை செய்வோர் நோயாளிகளிடம் காட்டும் பரிவும் நோயினால் வருந்தும் அவர்களின் உள்ளத்தையும் உடலையும் தேற்றி நலமளிப்பதாகும் என்பதும் எக்காலத்திற்குமேற்ற கருத்தே யாகும். மலம், சிறுநீர் தூய்மைப்படுத்தல் இவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ள பரிவுணர்ச்சி வேண்டும். மேலும் சூழ் நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளும் அறிவுடைமையும் அவனுக்குத் தேவை.

'உழைச்செல்வான்' யார்?

'உழைச்செல்வான்' என்றதற்கு மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவான், பரிகாரம் பண்ணுவார், நோயாளியின் பக்கத்திலிருந்து கவனிப்பவன், மருந்தினைப் பிழையாமல் இயற்றுவான், அண்டையிலே இருக்கிறவன், மருந்துக்குக் கருத்தனாகத் திரிபவன், மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன், பக்கத்திலிருந்து தப்பாமல் மருந்து தருபவன், துணையாளி, பக்கத்திலிருந்து மருந்தினைத் தக்கவாறு கொடுக்கும் துணை, நோயாளியின் அருகிலிருக்க வேண்டிய துணை, பக்கத்திருந்து உதவுவான், மருத்துவனுக்குத் துணை நிற்பவன், நோயாளிக்கு அருகில் இருந்து பணி செய்வான், மருந்தை அளவும் காலமும் அறிந்து அருகேயிருந்து தருபவன், செவிலியர், மருத்துவனுக்குத் துணைவனாயிருந்து நோயாளியிடம் சென்று மருந்து கொடுப்பவன், உதவுநர். உதவி செய்பவர், மருந்து கொடுப்பவர், மருந்து அளிப்பவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உழைச் செல்வான்: வள்ளுவர் 'உழைச் செல்வோரை'த் தனியே ஒரு பிரிவினராகக் கருதி மருந்தின் ஒரு பகுதியாக அமைத்துக் கூறியது அவர்களது முக்கியத்துவத்தை உணர்த்தும்.
உழைச் செல்வான் என்பதற்கு அருகில் செல்பவன் என்பது பொருள். நோயுற்றவனுக்கு அருகில் இருந்து மருந்து கொடுப்பவனை இச்சொல் குறிப்பிடுகிறது. மருத்துவ உதவியரது நெருக்க மாண்பு புலப்பட அவனை 'உழைச் செல்வான்' என்கிறார் வள்ளுவர். இவன் நோயாளியின் பக்கத்திலிருந்து கருத்துடன் பார்த்துக் கொள்கின்றவன். கிட்ட இருந்து, காலம் தவறாமல் மருந்து கொடுத்து நோயாளியைக் கவனிக்கும் உழைச் செல்வான் அன்பும் ஆதரவுமாக இருப்பவனாவான்.

பழம் ஆசிரியர்கள் மருந்து இயற்றுபவன், மருந்து அரைப்பவன், புடம் போடுகிறவன், காய்ச்சுகிறவன் ஆகியோர் 'உழைச் செல்வான்' என்பதாகக் கருத்துத் தெரிவித்தனர். இத்தொழில் செய்வோர் இன்றைய மருத்துவ உலகில் மருந்தாளுனர் (Pharmacist) அல்லது மருந்து கலப்பவர் (compounder) என அறியப்படுவராவர்.
மருத்துவ மனைகளில் மருத்துவர்க்கு உதவியாக இருப்பவர் இன்று செவிலியர் என வழங்கப் பெறுகிறார். வள்ளுவரும் .....பொருளென்னும் செல்வச் செவிலியால், உண்டு (பொருள்செயல்வகை 757) என்னுமிடத்தில் செவிலி என்ற சொல்லை வளர்ப்புத் தாய் என்ற பொருளில் பயின்றுள்ளார். மருத்துவ உலகில் செவிலி என்பதற்கு nurse என்பது இணையான சொல் ஆகலாம். இது ஆண் பெண் இருபாலர்க்கும் பொருந்துவதே.
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; அது அன்புள்ளம் கொண்டு தூய தொண்டு செய்வதை நோக்காகக் கொண்டது. செவிலியர் வேளைதவறாமல் நோயுற்றவனுக்கு மருந்து கொடுத்தல், உடை மாற்றுதல், படுக்கை மாற்றுதல் முதலிய செய்து கொண்டு நோயால் வருத்துங் காலத்துக் கூட இருந்து உதவுவார். மருத்துவர் இல்லாத நிலையில் அவர் சொல்லிச் சென்ற முறையைப் பின்பற்றும் திறனும், மருத்துவர் இல்லாச்சூழலில் தான் எங்ஙனம் பணியாற்ற வேண்டும் என்னும் அறிவுடைமையும் இப்பணியாளருக்குப் பெரிதும் தேவை. எளிய மருத்துவ உதவிகளிலிருந்து காயம்பட்டு வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருப்பவர், உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போர் போன்றோர்க்கு செவிலியர் ஆற்றும் பணி பெரிதும் போற்றற்குரியது. காலிங்கர் 'தாயினும் இனிய தன்மையன் ஆகிய உற்ற இடத்து உதவும் பெற்றியோன்' எனக் குறித்தார்.

காமாட்சி சீனிவாசன் 'தற்காலத்தில் மருத்துவரின் சொற்படி பணிபுரியும் பலவகையினர் மருத்துவ மனைகளில் உளர். உடனிருந்து நோயாளிகளைக் கவனிக்கும் செவிலியர், நோயாளிகளின் குருதி முதலியவற்றை ஆய்வோர் (labaratory technician), மருந்துகளைக் கலந்து கொடுப்போர் (compounders), இயன் மருத்துவம் புரிவோர் (physiotherapists). தொழில்முறை மருத்துவம் புரிவோர் (occupational therapists) என இவர் பலவகையினராவர். பண்டைக்காலத்தில் இவர்கள் இல்லை. ஆயினும் மருத்துவர் சொற்படி பணிபுரியும் ஏதோ ஒருவகை உதவியாளர்கள் இருந்திருத்தல் வேண்டும். அவர்களையே வள்ளுவர் 'உழைச்செல்வான்' என்ற தொடரால் குறிப்பிட்டார்' என்றார்.

ஜே ஜீ கண்ணப்பன் 'வள்ளுவர் உழைச்செல்வான் என்ற சொல்லை மருத்துவரிடம் பணி புரியும் துணை ஊழியன் என்ற சாதாரண பொருளில், பயன்படுத்தியிருக்கமாட்டார் என்பது என் எண்ணம். என்னதான் சிறந்த மருத்துவரானாலும், என்னதான் சரியான மருந்து கொடுக்கப்பட்டாலும், உற்றவனுக்கு நோய் நீங்கத் தன்னிடையே 'நோய் தடுக்கும் சொந்த சக்தி'யிருக்க வேண்டும். இச்சக்தியிருந்தால்தான், மருந்து அதனுடன் பங்கு கொண்டு நோய் தீர்க்கும். ஆங்கிலத்திலே கூற வேண்டுமேயானால் 'Immunological self Protecting system and effects' எனக் கூறுவார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் இச்சக்திதான் பெரும் அளவில் தேவைப்படுகிறது. இல்லையென்றால், என்ன நல்ல உயர்ந்த மருந்து கொடுக்கப்பட்டாலும் நோய் குணமடையாது. இச்சக்தியின்மையை ஆங்கிலத்தில் 'Immune System Failure' எனக் கூறுவார்கள். இன்றைய மருத்துவ முறையில், மேற்கூறிய குறைபாட்டினை நிவர்த்தி செய்யக் குருதிக் கொடையளிக்கிறார்கள். அதனிலுள்ள உழைச்செல்வான் ஒருவனுக்கு நோய் நீக்கி நலம் தருவதைக் காண்கிறோம். இன்றைய ஆங்கில மருத்துவ முறையில் முக்கிய 'Immunological System' என்ற சொல்லிற்குத் திருவள்ளுவர் கொடுத்த நேரிடைக் கலைச்சொல் 'உழைச் செல்வான்' ஆகும்' என உழைச்செல்வானுக்கு விளக்கம் தருகிறார்.

நோயுற்றவன், பிணி தீர்ப்பவன், மருந்து, உழைச்செல்வான் என்ற அந்த நான்கு பாகுபாடுகளையும் உடையது மருத்துவ முறையாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நோயாளி மருத்துவர் மருந்து உழைச்செல்வான் ஆகியோர் கொண்ட முற்றிய அமைப்பு மருந்து ஆம்.

பொழிப்பு

நோயுற்றவன், நோய் தீர்ப்பவன், மருந்து, நோயாளிக்குப் பக்கத்திலிருக்கும் துணை என இந்நான்கும் மருந்து.