உழைத்துக் களைத்த மக்களுக்கு மனம்மகிழ ஓர்விளையாட்டு வேண்டப்பெறும். ஊர்மன்றங்களிலும் பொதுவெளிகளிலும் மரத்தடியிலுள்ள கல்பலகையிலும் கட்டங்கள் வரைந்து ஆடு புலி ஆட்டம், சொக்கட்டான் ஆடுவார்கள். அது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகவும் போட்டியாகவும் இருக்கும், அங்கு பொருள் வைத்து ஆடமாட்டார்கள். அவ்விளையாட்டுக்களையே பணம் வைத்து சூதாடுநிலையங்களில் ஆடும்போது சூதாகிறது.
சூதைக் கவறு அல்லது கவறாட்டு என்றும் சூதாடக் கூடும் இடத்தைக் 'கழகம்' என்றும் குறள் குறிப்பிடுகிறது. சூதாடும் கருவி உருட்டிவிட்டு ஆடும் வகையில் அமைந்ததால் அது 'உருளாயம்' எனக் கூறப்பட்டுள்ளது. கவடி என்பது சூதாடு கருவியாகிய சோழியைக் குறிப்பது. 'கவடி பிடித்தல்' என்பது கவடியைப் பிடித்து வீசி எறிந்து உருளச் செய்யும் திறத்திலேயே விரும்பிய எண் விழும்படியாகச் செய்வதாகிய பிடித்தல்வகையைக் குறிப்பது. நெத்தம் என்பது கவறாடுங்காய் ஆகும். சோழிக்குப்பதிலாக இதையும் பயன்படுத்துவர். கவறாடும் பலகை நெத்தப் பலகை எனப்படும். 'சூது என்பது ஒருவகைக்காய். அதன் பெயர் இங்கு அதைக் கருவியாகக் கொண்டு ஆடும் கவறாட்டைக் குறித்தது ஆகுபெயர்' என்பார் தேவநேயப்பாவாணர்.
சூதாடுபவர் 'சூதர்' எனப்படுகிறார்.
கவறும் கழகமும் கவறு வீசி எறியும் திறனும் என இம்மூன்றும் கூடியதே சூதாம்.
அடிக்கடி கவறு பிடித்தலும் விரும்பும் கவறு விழுவது கண்டு மகிழ்தலும், பின் கழகத்துப் பலகாற் செல்லப்பழகுதலும், அதன் பின்னர் பிடித்தெறிதலின் நுட்பமும் தெரிந்தபின் கழகத்திற்குச் செல்லுதலில் ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவ்வீர்ப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வது சூதர்க்குக் கடினமாகிறது.
சூது என்பது வஞ்சகம் என்ற பண்பின் பெயரைக் குறிப்பதாகவும் உள்ளது. எல்லாச் சூதாட்டங்களிலும் வஞ்சகம் உள்ளது எனக் கூறமுடியாது. ஆனால் சூதோடு கூடிய ஆட்டத்திற்கும், அதற்குரிய கருவிக்கும், கருவிகளைக் கொண்டு வஞ்சனையாக ஆடும் ஆட்டத்திற்கும் சூது என இலக்கியங்களில் வழங்குகின்றது. ஆகவே இது கருவியாகுபெயராம். சூது என்னும் தொழிலின் பெயர் அதன் விளைவாகிய தீமையையுணர்த்திற்று என்றலே இயைபுடையது (தண்டபாணி தேசிகர்).
முன்பு தாயக்கட்டைகள், சோழி ஆகியவற்றை உருட்டிச் சொக்கட்டான் போன்ற ஆட்டங்கள் சூதாடுவோர் கூடும் பொது இடங்களில் நடத்தப் பெற்றன. தாயக் கட்டைகளை உருட்டி ஆடுவது மட்டுமே சூதாட்டமல்ல. பணயப் பொருளை வைத்து ஆடப்படும் எதுவும் சூதாட்டம் தான்.
குதிரைப்பந்தயங்கள், சேவல் சண்டை முதலியனவும் சூதாட்டப் பொருள்களாக உள்ளன. கால்பந்து போன்ற ஆட்டங்களின் முடிவு எப்படி அமையும் என்பதைக் கணிப்பது கொண்டும் பந்தயப்பணம் செலுத்தப்படுகிறது. கிரிக்கெட் போன்ற ஆட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான சூதாட்டம் நடைபெறுகிறது. இச்சூதாட்டம் நடத்துபவர்களே, முன்னரே ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் ஆற்றல் படைத்தவர்களாகவும் உள்ளனர்.
சீட்டாட்டம், பரிசுச்சீட்டு ஆகியனவும் சூதாட்டமே. (ரம்மி ஆட்டத்தில் ஆட்டம் தொடங்குமுன் பணம் கட்டியவர் ஆட்டத்திலிருந்து விலகுவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படுவதால் அது சட்டப்படி சூதாட்டம் ஆகாது),
பங்குசந்தையில் (Share market) குறுகிய கால முதலீடு செய்து, பங்குகளை வாங்கி விற்று ஆடுவதும் சூதாட்டமே. அந்நியச்செலவாணிச் (Forex) சந்தையும் சூதுக்கு வழிவகுக்கிறது. பெரிய வங்கிகள் மிகப்பெரும் பணக்கார (High-Net-Worth) வாடிக்கையாளர்களுக்காக தனிப்பிரிவின் மூலம் (Private Banking) அவர்களுக்காக இச்சந்தைகளில் முதலீடு செய்து ஆதாயம் தேடித்தருவதாகப் பணம் பெறுகின்றனர். அவற்றைச் சூது நோக்கிலே அவர்கள் முதலீடு செய்வதால், கணினி கணிப்பும் தோல்வியாகி, பலர் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர். இங்ஙனம் வங்கிகளும் ஒருவகை சூதாட்டக்களங்களாக இயங்குகின்றன.
பொழுது விடிந்ததுமே சூதாடுபவன் கழகம் சென்றுவிடுவான் என இவ்வதிகாரத்து ஒரு பாடல் சொல்கிறது. அத்தகைய சூதாட்டக் கூடம் இன்றைய கேசினோ(Casino)வை நினைவுபடுத்துகிறது.
லெஸ்வேகாஸ் (LasVegas), மக்காவ் (Macau) போன்ற உலகப்பெரு நகரங்களில் கேசினோ எனப்படும் மிகப்பெரிய சூதாட்ட நிலையங்கள் உள்ளன. அங்கு பொழுதுபோக்குக்காகச் ஆடச் செல்வோரும் உண்டு என்றாலும் சூதாடலை வழக்கமாகக் கொள்வோரே மிகை. அவ்விடங்களில் புழங்கும் பணம் எவரையும் மிரளவைக்கும். BlackJack, Poker, Roulette, Big and small, Baccarat,Slots என்பன அங்கு நடத்தப்பெறும் விளையாட்டுக்களில் சில.
இன்று சூதாடுமிடங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. கணினித்தொடர்பு (Online betting) மூலமும் சூதாடலாம்.
சூதின் மூலம் எளிதில் பெரும் பொருளைப் பெற்றுவிடலாம் என்ற ஒரு மன நிலைமை தோன்றுவதால் சூதுகளத்திற்குச் செல்கின்றனர்.
சூது சொக்கட்டான் துக்கமற்றார் ஆடுந்தொழில் என்பது முதுமொழி. சூதினால் செல்வம், பெருமை, பதவிகளை இழந்துள்ள அரசர் முதல் எளியவர்வரை பலர் உள்ளனர். இவ்வுலகில் பல குடும்பங்கள் சூதினால் அழிந்துள்ளன. இதற்கு மகாபாரதக் கதையே சிறந்த எடுத்துக்காட்டு. நாடு, பொருள், செல்வம் முதலியவற்றைச் சூதில் இழந்தது போதாதென்று, அறிவிழந்து, மனைவியையும், பணயம் வைத்துத் தோற்கும் அளவுக்குச் சூது ஒருவனைத் தூண்டக் கூடியது என்பதைப் பாரதக்கதை எடுத்துக்காட்டுகின்றது.
சூதாட்டின் தன்மைகளாக, வெற்றி உறுதியின்றி வாய்ப்பு குறுகியிருத்தல், சில வலக்காரங்கள் (தந்திரங்கள்) கையாளப் பெறுதல், உழைப்பின்றி செல்வனாதல், உழைப்பில் விருப்பஞ் செல்லாமை, இழக்குந்தொறும் ஆசையுண்டாகி மேன்மேலும் பொருள் இழத்தல் முதலியவற்றைக் குறிப்பர்.
பல்லாயிரமாண்டு காலமாக, மனிதனுக்கு பேரிழப்பு விளைவிக்கக்கூடியதாக சூது இருந்துவருகிறது.
சூதாட்டத்தில் வெற்றியும் உண்டு எனக் கூறலாம்; ஆனால் உறுதியான வெற்றி என்பதே இல்லை. மேலும், வென்றுபெறும் பொருள்கொண்டு இன்னும் ஆடச்செய்து மிகையான இழப்புக்குள்ளாகுமாறு கெடுக்க வல்லதே அல்லாமல், அது உண்மையான ஆதாயமாக இருக்காது.
சூதின் தன்மையானது வென்ற பொருள் சூதாட்டை விட்டு ஒருபோதும் நீங்காதவாறு பிணிக்கும் பொறியாக இருப்பது.
சூது கருவிகள் மாறியிருக்கின்றனவே தவிர, சூதினால் உண்டாகும் தீமைகள் மாறாமல் இருக்கின்றன.
மனிதன் சூதில் மாட்டிக்கொண்டு, தனது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே, சூது என்ற அதிகாரத்தை வள்ளுவர் வகுத்துள்ளார்.
சூது மிகவும் ஈர்ப்பாற்றல் கொண்டது.
சூது பொருளைக் கெடுக்கிறது; சிறுமை செய்யும்; அது வறுமையையே தரும்; சூதனைப் பொய் சொல்லத் தூண்டும்; அவன் வயிறார உண்ணமுடியாது; முழுநாளும் கழகத்தில் தங்கி ஆடுபவன் வழிவழி வந்த செல்வத்தையும் இழப்பான்; நற்குணங்களும் அவனை விட்டு நீங்கும்; அவனது அருள் சார்ந்த வாழ்க்கை கெடும்; அவனை அல்லலில் உழலச் செய்யும் சூது. இவை இவ்வதிகாரச் செய்திகள்.