இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0931



வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

(அதிகாரம்:சூது குறள் எண்:931)

பொழிப்பு (மு வரதராசன்): வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.

மணக்குடவர் உரை: வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும்.
இது பின் கேடுபயக்குமென்றது.

பரிமேலழகர் உரை: வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும்.
(வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.)

சி இலக்குவனார் உரை: வென்றாலும் சூதாடலை விரும்பாது ஒழிக; வெற்றி பெற்றதும் தூண்டிலில் உள்ள இரும்பு முள்ளை மீன் விழுங்கியதை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வென்றிடினும் சூதினை வேண்டற்க; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

பதவுரை: வேண்டற்க-விரும்பாதொழிக; வென்றிடினும்-வென்றாலும்; சூதினை-சூதாடலை; வென்றதூஉம்-வெல்லப்பட்டதும்; தூண்டில்-மீன் விழுங்கு முள்; பொன்-இரும்பு; மீன்-மீன்; விழுங்கி-விழுங்கினால்; அற்று-அத்தன்மைத்து.


வேண்டற்க வென்றிடினும் சூதினை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக;
பரிப்பெருமாள்: வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக;
பரிதி: சூதிலே மிகுதியாக வென்றாலும் அந்தப் பொருள் கெடும்;
காலிங்கர்: சூது ஆடலைத் தாம் வென்றிடினும் விரும்பற்க;
பரிமேலழகர்: தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக;
பரிமேலழகர் குறிப்புரை: வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். [வேறல் ஒருதலையன்மையின் - வெல்லுதல் உறுதியில்லாததால்; கருமங்கள்- செயல்கள், கடமைகள்]

'வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெற்றிதரினும் சூதினை விரும்பாதே', 'திறமையினால் வெற்றி பெற்றாலும் சூதாட்டத்தை விரும்பாதொழிக', 'கெலிப்பு வந்தாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது', 'சூதாட்டத்தில் வெல்லுந் திறமையுடையனாய் இருந்தாலும் சூதினை விரும்பக்கூடாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலும் சூதினை விரும்ப வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பின் கேடுபயக்குமென்றது.
பரிப்பெருமாள்: வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொன்னை மீன் விழுங்கினாற்போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பொன் என்பது இரும்பாம். பின்பு கேடுபயக்கும் என்றவாறாயிற்று. உம்மையான் வெல்லான் என்பது துணிபு. இது சூதாடலைத் தவிர்க என்றது.
பரிதி: பொன்னினால் பண்ணின தூண்டிலைப் பிரியம்பண்னிப் பெரிய மீன் விழுங்கினாற் போல என்றவாறு.
காலிங்கர்: என் எனின் அங்ஙனம் வென்று உளதாய அப்பொருள் தானும் ஒருவன் கொலை கருதித் தூண்டிலிற் செறித்த பொன்னினைக் கண்ட மீனானது நமக்கு இனிதென்று கருதி விழுங்கிய அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம். [எய்திய பொருள்-சூதாடி வென்ற பொருள்; தளை- விலங்கு]

'வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்வெற்றி தூண்டிற்கொக்கி மீனை விழுங்கினது போலும்', 'பெற்ற வெற்றியும் இரையில் மறைக்கப்பட்ட தூண்டில் இரும்பினை இரையென எண்ணி மீன் விழுங்கியது போலும்', 'அந்தக் கெலிப்பு, மீன் (இரையென்று நம்பி) விழுங்கிய இரும்புத் தூண்டில் முள்ளை ஒத்தது', 'அதில் வெற்றி அடைவதும், இரை வைத்து மறைத்த தூண்டிலிரும்பினை மீன் இரையெனக் கருதி விழுங்கினால் போலும்!' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வெற்றி அடைந்ததும் தூண்டிலிரும்பிலுள்ள பொருளை மீன் இரையென எண்ணி விழுங்கினால் போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலும் சூதினை விரும்ப வேண்டாம்; வெற்றி அடைவதும் தூண்டிற்பொன்னிலுள்ள பொருளை மீன் இரையென எண்ணி விழுங்கினால் போலும் என்பது பாடலின் பொருள்.
'தூண்டிற்பொன்' என்றால் என்ன?

இரைபோடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடு.

வெல்லும்நற்பேறு உடையவனாக இருந்தாலும் ஒருவன் சூதை விரும்புதல் கூடாது; சூதாட்டத்தில் வென்ற பொருளும் இரை வைத்து மறைந்த தூண்டில்இரும்பிலுள்ள பொருளை மீன் விழுங்கினாற் போன்றதே ஆகும்.
தூண்டில் என்பது மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படும் ஒரு கருவி. நீண்ட கோலில் முள் என்று சொல்லப்படும் வளைந்த இரும்பு(பொன்)க் கொக்கியை முனையில் கொண்ட கயிற்றைப் பிணித்து அவ்விரும்பை மண்புழு போன்ற மீனுக்குப் பிடித்தமான உணவால் மறைத்து நீர்நிலைகளில் இடுவான் மீன்பிடிப்பவன். இரையோடு சேர்த்து கொக்கியையும் மீன் விழுங்கி அதில் மாட்டிக்கொள்ள அம்மீனை நீருக்கு வெளியே இழுத்தெடுப்பதற்குப் பயன்படுவதே தூண்டில் என்பது. பிடிபட்ட அந்த மீனின் வாழ்வு அத்துடன் முடிந்துவிட்டதாய்விடும். அதுபோல சூதில் வென்ற பொருளைப் பணயம் வைத்து மீண்டும் மீண்டும் சூதாடி, தன்னிடமுள்ள எல்லாப் பொருளையும் இழந்து விடுவான் சூதன்.
உவமை கூறுவது: தூண்டிற்பொன்னில் மறைந்துள்ள இரையை விழுங்கிய மீனுக்கு அம்முள்ளே தளையாகி அதை நீங்கிப் போகாமாலிருக்கச் செய்கிறது; அத்தளையால் அம்மீன் துன்பமடைகிறது. அது போன்று சூதாடுதலால் கிடைக்கும் பொருள் சூதாடுவானை நீங்கிப் போகாமலிருக்கச் செய்யும் விலங்காக இருக்கும், வெற்றி பெற்று பொருள் பெறும் போது, சூதாடி, அந்த வெற்றியையே காரணமாகக் காட்டி, இன்னும் பொருள் பெறும் ஆசையில் மேலும் மேலும் விளையாடுவான். முடிவில், அவன் கைப்பொருள் அனைத்தும் இழந்து துன்பமடைவான். சூதாடி, முதலில் வெற்றி பெற்று சிறிது அளவு பொருள் பெறலாம். ஆனால் பிறகு பல மடங்கு இழக்க வேண்டி இருக்கும் என்பது கருத்து.
சூதுக்கு உவமை கூறவந்த வள்ளுவர், மீன் பிடிப்போன், தூண்டிலில் கோர்க்கப்பட்டுள்ள உணவைக் காட்டும் சூதான -வஞ்சகமான- செயலையே உவமையாகக் கூறினார். சூதென்னும் மாயவலையில் சிக்கும் சூதனும் தான் அழிவுப்பாதை என்ற முள்ளில் சிக்க வைக்கப்பட்டு, முடிவில் ஒன்றுமில்லாமல் போய்விடுவிடுவோம் என்பதை உணர்வதேயில்லை.

சூது ஆசை காட்டி அழிவு தரும் இயல்பினது. சூதாட்டக்களத்தில் வெற்றி பெறுவோர் அதில் நிறைவடைந்து கிடைத்தது போதும் என அங்கிருந்து கிளம்புவதில்லை. பேராசை கொண்டு இன்னும் கொஞ்சம் முயற்சிப்போம் எனத் தொடர்ந்து ஆடிக் கையிலுள்ளதையெல்லாம் இழந்தபின்தான் வெளியேறுவர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் விட்டதை 'மீட்க' அங்கு செல்வர்; மேலும் பொருளிழப்பர். இவ்வாறாக வறுமையுறும் அளவு விளையாட்டைத் தொடர்வர். எனவேதான் வெற்றி தருவதானாலும் சூது ஆடுதலை விரும்பக் கூடாது எனச் சொல்லப்பட்டது.
சூதாட்டத்தில் வெல்லுதல் உறுதியில்லாதலாலும். அது குருட்டு வாய்ப்பைப் பொறுத்ததாதலாலும் 'வென்றிடினும்' எனச் சொல்லப்பட்டது. வெற்றிமேல் வெற்றி கிட்டினாலும், அதிக் கிடைத்த பொருள் உழைப்பின்றியும், நல்வழியில் வந்ததல்லாதது என்பதாலும் 'வேண்டற்க' எனக் கூறப்பட்டது,
வெல்லும் பொருள் ஆட்டக்களத்தை விட்டுச் சூதனை நீங்காதவாறு பிணிக்கும் பொறியென்பதும், பின்பு தோற்குந்தொறும் ஆசையுண்டாக்கி பொருளெல்லாம் இழக்கச் செய்யுமென்பதும் இக்குறள் கூறும் செய்தி.

'தூண்டிற்பொன்' என்றால் என்ன?

'தூண்டிற்பொன்' என்றதற்குத் 'தூண்டிற்பொன்' என்றதற்குத் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருள், பொன்னினால் பண்ணின தூண்டில், தூண்டிலிற் செறித்த பொன், தூண்டிலிரும்பு, தூண்டிலே குத்தியிருக்கிற மீன், தூண்டிலில் உள்ள இரும்புக் கொக்கி, தூண்டிலின் இரையால் மறைந்த நுனி இரும்பு, தூண்டிற்கொக்கி, இரும்புத் தூண்டில் முள், தூண்டிலில் கோத்த இரும்பு முள், தூண்டிலில் உள்ள இரும்பு முள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தூண்டில் என்பது மீன் பிடிக்கும் கருவி. முன்பு உலோகங்கள் அனைத்துமே பொன் (செம்பொன், வெண்பொன், கரும்பொன்) எனக் குறிப்பிடப்பட்டன. இங்குப் பொன்னென்றது கரும்பொன்னாகிய இரும்பை. இரும்பாலான கொக்கி போன்ற கருவியே தூண்டிற்பொன் எனச் சொல்லப்படுகிறது. மீனைப் பிடிப்பதற்குத் தூண்டில் போடும்போது. தூண்டிற்பொன்னில் புழு பூச்சிகளைப் பொருத்தி வைத்திருப்பார்கள்; அந்தப் புழு பூச்சிகளை உணவென்று கருதி விழுங்க வரும் மீன் தூண்டிலில் அகப்பட்டுக் கொள்ளும். தூண்டிலிலுள்ள பொருளை மீன்விழுங்குவதால் அது கொக்கியில் மாட்டிக்கொள்ளும். இரை கிடைத்துவிட்டது என்று எண்ணி உண்ண வந்த மீன் எவ்வாறு தூண்டிலில் சிக்கிக் கொள்ளுமோ அவ்வாறே வெற்றியின் சுவையில் சூதாடினால் பிறகு தோல்வியைச் சந்தித்து வறுமை என்னும் மீளாத துன்பத்தில் வீழ வேண்டியது வரும் என்பதைச் சொல்லத் துண்டில்பொன் என்ற உவமை பயன்பட்டது.
தூண்டில் செய்யும் வேலை வஞ்சகம் நிறைந்தது. அது உவமையாக்கப்பட்டது இக்குறளில். தூண்டிற் பொன் என்ற உவமைக்குப் 'பொருள் இழத்தலேயன்றி, உயிருக்கும் இறுதிவரும்' எனப் பழைய உரை கூறும். சூதாடுவோர் வஞ்சகத்திற்குப் பலியாகக் கூடாது என அறிவுரை கூறுகிறார் வள்ளுவர்.
பொன்னை இரும்பாகவே பொருள் கொள்ளாது தானியாகுபெயராய் அதிலுள்ள பொருளை- தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை- என்று உரை கண்டார் மணக்குடவர். இவர் துண்டிற்பொன் என்பதற்குத் தூண்டிலுள்ள பொருள் எனப் பொருள் கொள்கிறார். இது தூண்டிற்பொன் என்பதற்குச் சிறந்த பொருள்.

'தூண்டிற்பொன்' என்ற தொடர்க்குத் தூண்டில் இரும்பிலுள்ள பொருள் என்பது பொருள்.

வெற்றி பெற்றாலும் சூதினை விரும்ப வேண்டாம்; வெற்றி அடைவதும் தூண்டிலிரும்பிலுள்ள பொருளை மீன் இரையென எண்ணி விழுங்கினால் போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாழ்வைச் சூது கவ்வாமல் காத்துக்கொள்ள வேண்டும்.

பொழிப்பு

வெற்றி கிடைத்தாலும் சூதாட்டத்தை விரும்பவேண்டாம்; அவ்வெற்றி தூண்டில் இரும்பினை இரையென எண்ணி மீன் விழுங்கியது போலும்.

.