இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்

(அதிகாரம்:சூது குறள் எண்:937)

பொழிப்பு (மு வரதராசன்): சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

மணக்குடவர் உரை: சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.

பரிமேலழகர் உரை: காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும்.
('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: சூதாடு கழகத்துக்கு நாளும் சென்றால் பழைய செல்வமும் பண்பும் தொலையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கழகத்துக் காலை புகின் பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்.

பதவுரை: பழகிய-பழையதாய் வந்த, வழிவழியாய் வந்த; செல்வமும்-பொருளும்; பண்பும்-குணமும்; கெடுக்கும்-அழிக்கும், போக்கும்; கழகத்து-(சூதாடக்)கூடுமிடத்து; காலை-காலையில், காலம்; புகின்-நுழைந்தால்.


பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்;
பரிப்பெருமாள்: தோன்றின நாள்தொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமதியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்;
பரிதி: பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்;
காலிங்கர்: தம் குலத்தோடு பழகி வருகின்ற செல்வத்தையும் கெடுத்துத் தாம் ஒழுகி வருகின்ற மரபினையும் கெடுத்துவிடும்;
பரிமேலழகர்: தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.

'தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தொன்றுதொட்டு வந்த அவன் செல்வமும் பண்பும் கெட்டுவிடும்', 'அது பல தலைமுறையாக உள்ள குடும்பச் சொத்துக்களையும் நல்ல குணங்களையும் அழித்துவிடும்', 'அது தொன்று தொட்டு வந்த செல்வத்தையும் நற்குணத்தையும் கெடுக்கும்', 'தொன்றுதொட்டு வந்த செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பழைய செல்வமும் நற்குணங்களும் கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

கழகத்துக் காலை புகின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின்.
பரிப்பெருமாள்: சூதுகழகத்தின் கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அப்புகல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய இன்புறுதல் வாயிலர் ஆயினும், தோன்றின நாள்தொட்டு வருகின்ற செல்வமுடையார்க்கும் பண்புடையார்க்கும் உளதாகுமே என்றார்க்கு அவை இரண்டும்போம் என்று கூறப்பட்டது. [வாயலர் ஆயினும்- பொறுந்தாராயினும்]
பரிதி: சூதாடுமிடத்திற் செல்லின் என்றவாறு.
காலிங்கர்: தாம் என்செயின், காலையே தாம் செய்யும் கருமக் கடன் ஒழிந்து சூதாடு களரிக்கண் சென்று புகூஉம் செய்தி ஆயின் என்றவாறு. [களரி - களம்]
பரிமேலழகர்: அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; [அடைத்த காலம் - ஒதுக்கிய காலம்]

'சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் காலை என்றதற்கு அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் என வேறுபாடான பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சூதாடும் இடத்திற்கு நாள்தோறும் காலையில் எழுந்ததும் ஒருவன் செல்வானாயின்', 'இளம்பிராயத்தில் சூதாட ஆரம்பித்துவிட்டால்', 'சூதாடுகளத்தில் இளமையிலே புகுவாராயின் அல்லது சூதாடுகளத்திலே ஒருவனுக்குக் காலம் போமாயின்', 'சூதாடு களத்தில் நுழையுமாயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சூதாடும் இடத்துக்கு நாளும் காலையிலேயே செல்வானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சூதாடும் இடத்துக்கு காலை புகின் பழைய செல்வமும் நற்குணங்களும் கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.
'காலை புகின்' என்ற தொடர் குறிப்பதென்ன?

விடிஞ்சாப் போதும். சூதாடக் கிளம்பிவிடுவான்.

காலையிலேயே சூதாடுமன்றத்துள் நுழைவானானால் அது அவனது தொன்றுதொட்டு வந்த செல்வத்தையும் தனக்கியல்பான நற்குணங்களையும் அழிக்கும்.
அவன் சூதுப் பழக்கத்து அடிமையாகிவிட்டவன். நாளும் சூது ஆடியே ஆகவேண்டும் என்ற கட்டாய மனநிலையில் இருப்பவன். எப்போதடா விடியும் என்று காத்திருந்து விடிந்தும் விடியாததுமாய் சூதாடுகளத்திற்குச் சென்றுவிடுவான். அங்கே நாள் முழுவதும் தங்கியிருந்து பணயம் வைத்து ஆடிப் பொழுதைக் கழிப்பான். கழகத்தின் மேல் உண்டான ஈர்ப்பு அவனை நாள்தோறும் அங்கு இழுத்துச் சென்றுவிடும். சூதாடாமல் அவனால் இருக்கவே முடியாது என்ற அளவிலான வெறிகொண்ட சூதாடி!
அச்சூதன் எவ்வளவு கைத்திறமை காட்டினாலும், சூதாட்டக்களத்தில் வெற்றி தோல்வி என வந்து, சூதின் தன்மையால், இறுதியில் பொருள் இழப்பைத்தான் காண்பான். இப்படிப்பட்ட நிலையில் நாளும் அங்கு செல்பவனிடம் என்ன செல்வம் மிஞ்சும்? அவனது எல்லா உடைமைகளும் மறைந்துபோய்விடும். அவனது மூதாதையர் விட்டுச் சென்ற வழிவழியாக அழிவின்றி வந்த செல்வங்களும் விலைபோய் கழகத்திலேயே தொலைந்துபோகும். அவன் ஏதாவது நல்ல பதவி பெற்றிருந்தால் அதுவும் கெடும்.
மேலும் அவனிடம் முன்பிருந்த நல்ல குணங்களும் போய்விடும் என்கிறது பாடல். தோல்வியும் பண இழப்பும் அவனுக்கு மனஉளைச்சலை உண்டாக்கிவிடுவதால், அடிக்கடி சினம் கொள்கிறான். பழகியவர், பழகாதவர் அனைவரிடமும் பகை கொள்வான். பொய்யனாக மாறிவிடுகிறான். அன்பு அவனிடமிருந்து விடைபெறுகிறது. அருள் நீங்கி மனம் கடினமானவனாகிறான்.

கழகம் என்ற சொல் மன்றம் என்னும் சொல்போல பலர் கூடுங் கூட்டத்தைக் குறிப்பது. அதிகாரம் நோக்கி அச்சொல் இங்கு சூதாடுகளம் என்ற பொருள் தரும். பழகிய செல்வம் என்பது வழிவழி வந்த உடைமைகளைச் சொல்வது.

'காலை புகின்' என்ற தொடர் குறிப்பதென்ன?

'காலை புகின்' என்றதற்குக் காலைப்பொழுது புகுவானாயின், செல்லின், காலையே தாம் செய்யும் கருமக் கடன் ஒழிந்து சென்று புகூஉம் செய்தி ஆயின், அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் கழியுமாயின், அறம்பொருள் இன்பங்கள் செய்யாமல் பொழுது போக்கினானாகில், அறம் பொருள் இன்பங் கல்வி முதலிய தொழிலிற் காலம் போக்காது (சூதாடுமிடத்திற்) காலம் போக்குமாயின், காலம் கழியுமானால், ஒவ்வொருநாளும் காலை எழுந்ததும் (கழகத்தின்கண்) புகுவதை ஒருவன் வழக்கமாகக் கொள்வானாயின், நாளும் சென்றால், நாள்தோறும் காலையில் எழுந்ததும் ஒருவன் செல்வானாயின், இளம்பருவத்தில் சூதாடத் தொடங்கிவிட்டால், நாளும் புகுந்தால், இளமையிலே புகுவாராயின் அல்லது (சூதாடுகளத்திலே) ஒருவனுக்குக் காலம் போமாயின், நுழையுமாயின், ஒருவனுடைய காலமானது கழியுமானால், நாள்தோறும் கதி என்று கிடந்தால், பல நன்மைகளைத் தேடிக்கொள்ளும் இளம் பருவத்திலே சேர்ந்துவிடுவானானால், காலையே புகுவாராயின் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘காலை’ என்பதற்குக் காலைப் பொழுது, ஒருவனுடைய காலமானது கழியுமானால், இளமை என்ற பொருள்களுள் காலைப் பொழுது என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. புகின் என்ற சொல்லுக்குச் செல்வானாயின் அல்லது நுழையின் என்பது பொருள். காலை புகின் என்ற தொடர் காலையிலேயே செல்வானானால் என்ற பொருள் தரும். இதைக் காலிங்கர் 'காலையே தாம் செய்யும் கருமக் கடன் ஒழிந்து சென்று புகூஉம் செய்தி ஆயின்' அதாவது காலைக்கடன்களை முடித்தவுடன் சூதாடக்களத்தில் புகுந்துவிடுவானானால் என விளக்கினார்.
காலையிலேயே சூதாடச் சென்றுவிடுவான் என்பதைச் சொல்ல வந்த வள்ளுவர் காலை புகின் என்றார். பொழுது விடிந்தவுடன் சூதுகளத்திற்குச் செல்பவன் ஆட்டத்தில் ஈடுபட்டு நாள் முழுதும் அங்கேயே இருப்பான் என்பதையும் சொல்வதாயிற்று. விடியற்காலமே சூதாட நுழைபவன் எனச் சொல்லப்பட்டதால் அக்கெட்டபழக்கத்திலிருந்து விடுபடமுடியாத கவலைதரும் நிலையில் இருப்பவன் என்பதும் உணர்த்தப்பட்டது.

கேசினோ (casino) என்று அழைக்கப்படும் தற்கால சூதாடுமன்றம் போலவே அன்றும் அல்லும் பகலும் (24 X 7) சூதாடும் ஏற்பாடுகள் இருந்தன என்பது தெரியவருகிறது. இன்றுபோலவே சூதாடுபவர்கள் நாள் முழுக்க அங்கேயே இருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

'காலை புகின்' என்றதற்குக் காலையே புகுவானாயின் என்பது பொருள்.

சூதாடும் இடத்துக்கு நாளும் காலையிலேயே செல்வானாயின் பழைய செல்வமும் நற்குணங்களும் கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சூது முன்னோர் தேட்டையும் பாழ்படுத்தும்.

பொழிப்பு

சூதாடு களத்திற்கு நாளும் காலையிலேயே ஒருவன் செல்வானாயின், அவனது பழைய செல்வமும் பண்பும் கெடும்.