இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0935



கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்

(அதிகாரம்:சூது குறள் எண்:935)

பொழிப்பு (மு வரதராசன்): சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவார்.

மணக்குடவர் உரை: கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார்.
கவறு - நெத்தம், கழகம் - உண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.

பரிமேலழகர் உரை: இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர்.
(கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: சூதாடு காயும் ஆடுமிடமும் ஆடும் திறமும் விரும்பி விடாது சூழ்ந்து கிடப்பவர் வறியராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.

பதவுரை: கவறும்-சூதாட்டமும்; கழகமும்-சூதாடு களத்தையும்; கையும்-கைத்திறமும்; தருக்கி-விரும்பி, செருக்குற்று, மேற்கொண்டு; இவறியார்-கைவிடாதவர்; இல்-இல்லாமை; ஆகியார்-ஆகியொழுகினவர்.


கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர்;
மணக்குடவர் குறிப்புரை: கவறு - நெத்தம், கழகம் - உண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.
பரிப்பெருமாள்: கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: கவறு - நெத்தம், கழகம் - உருண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.
பரிதி: கவறும் கழகமும் கொண்டு விளையாடுகிற தறுவாயிலே ஐவர் கையே என்று சூதுமேற்கொண்டார்;
காலிங்கர்: கவறாடலும், அக்கவறாடு களத்தில் சென்று புகுதலும், பிறிதொன்றினும் கைவைக்கும் கருமமின்றி அக்கவறாடும் ஒழுக்கமே ஒழுக்கம் ஆதலும், இவையே நெருங்கிப் பயின்று மற்றிது அல்லது பிறர்க்கு ஒன்று ஈயாது இறுதி நிற்கும் உலோபம் உடையார் யாவர்; [உலோபம்-பொருளீயாமை]
காலிங்கர் குறிப்புரை: கழகம் என்பது சூதாடு களம்; கை என்பது இதற்கு ஏற்ற ஒழுக்கம்; தருக்குதல் என்பது நெருக்குதல்; இவறல் என்பது உலோபம்.
பரிமேலழகர்: கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர்.
பரிமேலழகர் குறிப்புரை: கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. [வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல்- வெல்லும் ஆதாயம் உண்டாமாறு பாய்ச்சி கையைப் பிடித்து எறிதல்; அவ்விவறுதலால் - கைவிடாதிருத்தலால்]

'கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாதவர்/ வேந்தர் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சூதாடுகாயும் கழகமும் கையும் விடாது அழுந்தியவர்', 'சூதாடும் சகவாசத்திலும் சூதாட்டப் பழக்கத்திலும் மிகுந்த ஆசை வைக்கிறவர்கள்', 'சூதாடு கவற்றினையும், அஃதாடும் இடத்தையும், ஆடுங் கைத்திறத்தையும் மேற்கொண்டு சூதினை விடாது பற்றினவர்கள்', 'சூதாடும் கருவியினையும், கூட்டத்தினையும், தொழிலினையும் மேற்கொண்டு களித்துக் கைவிடாத மக்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சூதாடுகாயும், சூதாடு களத்தையும், ஆடுங் கைத்திறத்தையும் விரும்பி விடாது பற்றினவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

இல்லாகி யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்காலத்தினும் வறுவியரானார். [வறுவியர்-வறியர்]
பரிப்பெருமாள்: முற்காலத்தினும் வறியரானார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சூதாவது இம்மூன்று வகைத்து என்பதூஉம், இதனானே வறுமை உறுமென்றார். அஃது யாங்ஙனம் அறிதும் என்பார்க்கு முன்பு சூது ஆடிக்கெட்ட அரசராலே அறியலாம் என்பதூஉம் கூறப்பட்டது.
பரிதி: இம்மைக்கும் மறுமைக்கும் வெறுமையாவர். [வெறுமையாவர்-வறியராவர்]
காலிங்கர்: மற்று அவரே இருமை ஆக்கமும் இலர் ஆகியோர் என்றவாறு.
பரிமேலழகர்: முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார். [முற்காலத்தில் (துவாபரயுகத்தில்) தாம் உயிருடையவராயிருந்தே பொருளில்லாதவராகிக் காட்டில் திரிந்த வேந்தர் பாண்டவர் என்பது]
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.

'முற்காலத்தினும் வறுவியரானார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமையாகி விடுவர்', 'தரித்திரமே அடைவார்கள்', 'வறியரே யானவர்கள். (வறியராதல் திண்ணம் என்றவாறு.)', 'பொருள் இல்லாதவர் ஆகுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வறியராகி விட்டவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சூதாடுகாயும், சூதாடு களத்தையும், ஆடுங் கைத்திறத்தையும் விரும்பி விடாது பற்றினவர்கள் வறியராகி விட்டவர்கள் என்பது பாடலின் பொருள்.
'கையும்' குறிப்பதென்ன?

கவறும் கையுமான வாழ்க்கை வெறுமையானது.

சூதாடு கருவியையும், சூதாடுமிடத்தையும், தனது ஆடும் கைத்திறனையும் பெருமை கொண்டுபேசி சூதை விடாது பற்றிக் கொண்டிருப்பவர் தனது செல்வமெல்லாம் இல்லாமல் போய்விட்டது என்று எண்ணிக்கொள்ளலாம்.
கவறு என்பது சூதாடும் கருவியைக் குறிக்கும். கழகம் என்னுஞ் சொல் அம்பலம், மன்றம் என்னுஞ் சொற்கள்போல் பலர் கூடுங் கூட்டத்தைக் குறிக்கும், கழகம் என்பது இங்குச் சூதாடக் கூடும் இடமாகும். கை என்ற சொல் இங்கு பகடைக்காயை வீசும் திறமை பற்றியது. இம்மூன்றையும் பற்றி எப்போதும் சிந்தித்து அவை பற்றியே எந்த நேரமும் செருக்குடன் பேசி அவற்றினின்றும் நீங்க மனமில்லாதவர் அவரது உடைமைகளை ஏற்கனவே இழந்து விட்டார் எனவே கொள்ளவேண்டும்.

அவனுக்கு நாள் முழுக்கக் கவறு பிடித்துச் சூதாடல் பழக்கமாகிவிட்டது. தான் கேட்ட எண் விழும்போது மிக்க மகிழ்ச்சி கொள்கிறான். இதனால் அடிக்கடி அங்கு செல்கிறான். சூதாடுமிடத்திலேயே மிகையான நேரம் இருப்பது அவனுக்குப் பிடிக்கிறது. பழக்க மிகுதியால் பகடைக்காயை வீசும் நுணுக்கம் தெரிந்தாகிவிட்டது எனச் செருக்குக் கொள்கிறான். சூது, சூது, சூது இதுவே அவனது ஒழுகலாறாகிவிட்டது. அவன் சூதிற்கு அடிமையாகிப்போய்விட்டான்.
ஆனால் அவன் செல்வது பணம் வைத்து ஆடும் சூதாடுமன்றம். எல்லாக் காலமும் ஒன்றுபோல் இருக்காது. எங்ஙனம் வெற்றி பெற்றானோ அங்ஙனமே அங்கு தோல்வியும் உண்டு என்பதை அவன் அறிந்தாலும் வெறிகொண்டு ஆடிக்கொண்டே இருக்கிறான். அவனே உணரமாட்டாமல் தோல்விமேல் தோல்விகண்டு தனது உடைமைகள் எல்லாம் காணாமற் போய் ஒன்றுமற்றவராக விரைவில் மாறிவிடுவான். அவனுக்கு வறுமை வந்தேவிட்டது.

'கவறு', 'கழகம்' என்பன முறையே சூதாடும் கருவி, சூதாடுமிடம் என்று இக்குறளில் ஆளப்பட்ட பொருள்களில் ....தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக் கவறு உற்ற வடு ஏய்க்கும்... (கலித்தொகை 136 பொருள்: ...சூதாடும் அரங்கத்தில் கவறுக் காய்களை வைத்துத் தேய்ந்துபோன கோடுகள் போலக் காணப்படும்...).என்ற சங்கப் பாடல் ஒன்றிலும் இடம் பெற்றுள்ளன.
நாமக்கல் இராமலிங்கம் 'கவறுங்கழகம்' எனக் கூட்டிச் சூதாடும் சேர்க்கை அதாவது சூதாடும் கூட்டம் எனப் பொருள் கூறினார். ஆனால் தண்டபாணி தேசிகர் கவறும் என்பதைப் பெயரெச்சமாகக் கொண்டுரைத்ததை ஏற்காமல் 'இங்ஙனம் கவறு என்பதைப் பெயரடியாகப் பெயரெச்ச முதலான வினை வேறுபாடுகள் பிறந்து இலக்கிய ஆட்சியில் இருப்பனவாக அறியக் கூடவில்லை. அன்றியும் ஆசிரியர் எண்ணும்மை கொடுத்தமையும் எண்ணுக' எனவும் கூறினார். 'கவறும் கழகமும் கையும் என வரும் எண்ணும்மை மூன்றனுள் ‘கவறும்’ என்பதைப் பெயரெச்சமாகக் கொண்டு சூதாடும் கூட்டம் என நாமக்கல் இராமலிங்கம் கூறுவது குறள் நடைக்கு ஏலாது என இரா சாரங்கபணியும் கூறுவார்.

'கையும்' குறிப்பதென்ன?

'கையும்' என்றதற்குக் கைத்தொழிலினையும், ஐவர் கையே, பிறிதொன்றினும் கைவைக்கும் கருமமின்றி அக்கவறாடும் ஒழுக்கமே ஒழுக்கம் ஆதலும், அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும், அவன் கையிலே சூதுத்தொழில், கவறாடுந் தொழிலினையும், கைத்திறமையும், ஆடுதற்கு வேண்டிய கைத்திறமும், ஆடும் திறமும், சூதாடும் கைத்திறமும், ஆடுங் கைத்திறத்தையும், ஆடும் கைத்திறனையும், கவறுருட்டுங் கைத்திறமும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் கை என்ற சொல்லுக்குக் கைத்தொழில் அதாவது கவடி பிடித்தல் எனப் பொருள் கூறினார். கவடி பிடித்தல் என்று சொன்னது சூதாடும் கருவியாகிய கவற்றைப் பிடித்து வீசி எறிந்து உருளச் செய்யும் திறத்திலேயே சூதன் விரும்பிய எண் விழும்படியாகச் செய்வதாகிய பிடித்தல்வகை என்பதாகும். இதற்குப் பரிதி ஐவர் கையே எனக் கைப்பலத்தைக் குறிக்கிறார். இவரது கருத்து ஆடும்போது ஐந்து பேரைத் தன்கைக்குத் துணையாகக் கொண்டு ஆடினாலும் தோல்வியே என்பதாம். பரிமேலழகரும் மணக்குடவரைத் தழுவியே 'வெல்லும் ஆயம் படப் பிடித்தெறிவல்' அதாவது வெல்லும் ஆதாயம் உண்டாகுமாறு பாய்ச்சி கையைப் பிடித்து எறிதல் என உரை செய்தார்.
கையும் என்றது கைத்திறமும் என்பதைச் சொல்வது. அது வேண்டிய வாறெல்லாம் கவறுருட்டும் தேர்ச்சியாகும், சூதே தொழிலாகக் கொண்டவன் செருக்குடன், 'இங்கே பார் என் கைத்திறனை. நான் கேட்கும் எண்களை இவை தரும்' என்று பகடைக்காய்களைக் கையை சுழற்றி உருட்டிவிடுவான். பல நேரங்களில் அவன் விரும்பிய எண்களே விழும். ஆனாலும் அத்திறமை எல்லாக் காலமும் வேலை செய்யாது. அவன் தோற்கும் தருணங்களும் உண்டு. தருக்குதலும் சூதாடுதலில் பற்றுள்ளம் கொள்வதும் தனது கைத்திறமையின் மீதான நம்பிக்கையின் விளைவாகும், இதையே 'கை' என்ற சொல் குறிக்கிறது.

'கையும்' என்பதற்கு இங்கு தம் கைத்திறனும் என்பது பொருள்.

சூதாடுகாயும், சூதாடு களத்தையும், ஆடுங் கைத்திறத்தையும் விரும்பி விடாது பற்றினவர்கள் வறியராகி விட்டவர்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சூதுஆடலை இறுகப் பிடித்துக்கொண்டால் எல்லாமே கைவிட்டுப்போய்விடும்.

பொழிப்பு

சூதாடுகாயும் களமும் ஆடும்திறமும் விரும்பி விடாது அழுந்திக் கிடப்பவர் வறியரே யானவர்.