அகடாரார் அல்லல் உழப்பர்சூது என்னும்
முகடியால் மூடப்பட் டார்
(அதிகாரம்:சூது
குறள் எண்:936)
பொழிப்பு (மு வரதராசன்): சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.
|
மணக்குடவர் உரை:
தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார்.
மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.
பரிமேலழகர் உரை:
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர்.
(செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.)
சி இலக்குவனார் உரை:
சூது என்று சொல்லப்படும் முகடியால் விழுங்கப்பட்டார் வயிறார உண்ணமாட்டார்; துன்பங்களால் வருந்துவர் (முகடி-மூதேவி).
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
சூதுஎன்னும் முகடியால் மூடப்பட்டார் அகடாரார் அல்லல் உழப்பர்.
பதவுரை: அகடு-வயிறு; ஆரார்--ஆரப் பெறார், நிரம்பார்; அல்லல்-துன்பம்; உழப்பர்-வருந்துவர் (துன்பம்) துய்ப்பர்; சூது-சூதாட்டம்; என்னும்-என்கின்ற; முகடியால்- மூதேவியால்; மூடப்பட்டார்-ஆட்கொள்ளப்பட்டார், விழுங்கப்பட்டவர், மறைக்கப்பட்டார்.
|
அகடாரார் அல்லல் உழப்பர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்;
பரிப்பெருமாள்: தமக்கு உளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்;
பரிதி: பசியிலே அசனம் பண்ணார்; கிலேசமுறுவர்; [அசனம் பண்ணார்- உணவு உண்ணார்; கிலேசமுறுவர் - துன்பமுறுவர்]
காலிங்கர்: பிறிதோர் செல்வம் அடையாமையே அன்றித் தம் வயிறார உண்டு சேறலும் இலர்; இன்னும் மற்று இதுவேயும் அன்றிப் பெருந்துயரும் உறுவர்; [சேறலும்- செல்லுதலும்]
பரிமேலழகர்: இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர்.
'தம் வயிறார உண்டு சேறலும் இலர்; இன்னும் மற்று இதுவேயும் அன்றிப் பெருந்துயரும் உறுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் அகடாரார் என்றதற்குத் தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார் எனப் பொருள் கூறினார்;
இன்றைய ஆசிரியர்கள் 'வயிறு நிறைய உண்ணாது வருந்துவர்', 'வறுமையால் வயிறு நிறைய உண்ணமாட்டார். பல துன்பங்களால் வருந்துவர்', 'வயிறார உண்ணமாட்டார்கள்; எந்நேரமும் (ஏதாவது) துன்பத்தால் கவலையுள்ளவர்களாகவே இருப்பார்கள்', 'வயிறார உண்ண மாட்டார்; துன்பத்தினையே நுகர்ந்து வருந்துவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வயிறார உண்ணமாட்டார்; துன்பங்களால் வருந்துவர் என்பது இப்பகுதியின் பொருள்.
சூது என்னும் முகடியால் மூடப்பட் டார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார்.
மணக்குடவர் குறிப்புரை: மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.
பரிப்பெருமாள்: சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மறைத்தல்- நற்குணங்களைத் தோற்றாமை மறைத்தல். மேல் சூதாடல் ஆகாது என்றார்; அதனால் குற்றம் என்னை என்றார்க்கு இவை இரண்டு குற்றமும் உளவாம் என்று கூறப்பட்டது.
பரிதி: சூது கொண்டு திரிவானாகில்; மூதேவியால் மூடப்பட்டார் என்றவாறு.
காலிங்கர்: யாரெனின் சூது என்று எடுத்துரைக்கப்படுகின்ற இம்மூதேவியால் சூழ்ந்து கொள்ளப்பட்டவர் என்றவாறு,
பரிமேலழகர்: தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்;
பரிமேலழகர் குறிப்புரை: செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல். [ஈண்டு - இம்மையில்; ஆண்டு- மறுமையில்; வயிறாராமை- வயிறு நிறைய உண்ணாமை]
'சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார்/சூழ்ந்து கொள்ளப்பட்டவர்/விழுங்கப்பட்டார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சூதென்னும் மூதேவிக்கு ஆட்பட்டவர்', 'சூதென்னும் மூதேவியால் விழுங்கப்பட்டார்', 'சூதாட்டம் என்ற மூதேவிக்குள் சிக்கிக் கொண்டவர்கள்', 'சூது என்று வழங்கப்படுகிற மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சூதென்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சூதென்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர் வயிறார உண்ணமாட்டார்; துன்பங்களால் வருந்துவர் என்பது பாடலின் பொருள்.
'அகடாரார்' என்பதன் பொருள் என்ன?
|
நாள் முழுவதும் சூதாடுபவன் உண்ணமாட்டாமலும் உறங்க முடியாமலும் தவிப்பான்.
சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர் வயிறு நிறைய உண்ணமாட்டார்; மிகத்துன்பப்பட்டு வருந்துவர்.
சூதுக்கு அடிமைப்படுவதால் உண்டாகும் குற்றம் என்ன? என்று கேட்பாருக்கு. சூதால் ஆட்கொள்ளப்பட்டவனுக்கு உணவு செல்லாது; துன்பத்தின் மேல் துன்பமாக வந்து வருந்துவான் என இரண்டு குற்றம் உளவாம் என்று கூறப்பட்டது.
சூது முகடியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முகடு என்ற சொல் முன் எனப்பொருள்படும். முகடி என்பது மூதேவி குறித்த சொல். வீட்டு முகட்டு வளையில் தங்குவதாகக் கருதப் படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இவளை மூத்தாள் எனவும் சொல்வர். இளையவளான திருமகளைச் செய்யவள், செய்யாள், தாமரையினாள் எனக் குறள் குறிப்பிடும். திருமகள் (சீதேவி) முயற்சி மற்றும் செல்வத்தின் உருவகங்களாகவும் தவ்வையான மூதேவி சோம்பலையும் சூதையும் குறிப்பதற்காகக் குறளில் பயிலப்பட்டுள்ளன. சீதேவி மூதேவி ஆகியோர் பற்றித் தொன்மங்களில் கூறப்பட்டுள்ளன.
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள் (ஆள்வினையுடைமை 617 பொருள்: சோம்பலின் கண்ணே மூதேவி இருப்பாள்; சோம்பலில்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் தங்கியிருப்பாள் எனச் சொல்வர்.) என்னும் குறள் இவர்களது தன்மைகளை உணர்த்தியது.
செல்வங்கெடுத்து வறுமையைத் தருதல் சூதுக்கும் முகடிக்கும் தொழில் என்பதைச் சுட்டி மூதேவி என்று அவள் பெயரைச் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் எனச் சொல்லப்பட்டது என்பார் பரிமேலழகர்.
பொருளீட்டும் முயற்சி கெட்டு, வறுமையால் சூழப்படுவதை, முகடியின் பிடியில் ஆட்படுவதாகச் சொல்கிறார் வள்ளுவர். அழிவு வழியைக் காட்டும் சூதென்னும் முகடி மூண்டவன் வறுமையுற்றுத் துன்புறுவான் எனச் சொல்லப்படுகிறது.
சூதாடுமிடத்திற்கு நாளும் சென்று தன் உடைமைகளை இழந்து வறுமையுள் செல்லஇருக்கும் ஒருவனது நிலையைச் சொல்வதாக உள்ளது பாடல்.
அந்நிலையில் அவனுக்கு உணவு செல்லாது. வயிறார உண்ணமாட்டான். மானம் இழப்பது, கடன் தொல்லைகளிருந்து மீளமுடியாமல் போவது காரணமாக, பொய் வஞ்சனை களவு போன்றவை பழகுதல் போன்ற துன்பங்கள் உண்டாகும். இக்காரணங்களால் அல்லலுழப்பர் என்று கூறப்பட்டது.
|
'அகடாரார்' என்பதன் பொருள் என்ன?
'அகடுஆரார்' என்றதற்குத் தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார், பசியிலே அசனம் பண்ணார், தம் வயிறார உண்டு சேறலும் இலர், வயிறாரப் பெறார், வயிறு நிறையச் சாப்பிடாமல், வயிற்றிற்குச் சோறு முண்ணார், வயிறு நிறைய உணவும் உண்ணாதவர், வயிறார உணவுண்ணப் பெறாமல், வயிறு நிறைய உண்ணாது, வயிறு நிறைய உண்ணமாட்டார், வயிறார உண்ணமாட்டார்கள், தம் வயிற்றுக்கு வேண்டும் அளவு உணவுதானும் உண்ணப் பெறார், வயிறு நிறைய உண்ணமாட்டார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
சூதுக்கு அடிமையானபின் வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சூதில் மூழ்கியிருப்பார்க்கு பசி தோன்றாது; வாய் சுவையறியமாட்டாமல் உணவும் செல்லாது. எனவே அவர் வயிறார உண்ணமாட்டார். வயிறு நிறையவில்லை என்றபோது மற்றப் புலன்கள் நுகரப் பெறாமைபற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. இன்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்தவர் ஆகிறார்.
'அகடாரார்' என்ற தொடர்க்கு வயிறு நிறைய உண்ணமாட்டார் என்பது பொருள்.
|
சூதென்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர் வயிறார உண்ணமாட்டார்; பல துன்பங்களால் வருந்துவர் என்பது இக்குறட்கருத்து.
சூது பசியைக் கொல்லும்.
சூதென்னும் மூதேவியால் ஆட்பட்டவர் வயிறார உண்ணமாட்டார். துன்பங்களால் வருந்துவார்.
|