உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்
(அதிகாரம்:சூது
குறள் எண்:939)
பொழிப்பு (மு வரதராசன்): சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
|
மணக்குடவர் உரை:
உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின் சாராவாம்.
செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.
பரிமேலழகர் உரை:
ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று ஐந்தும் அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம்.
(ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
சூதாட்டத்தை ஒருவன் மேற்கொண்டால், உணவும் உடை, பொருள், புகழ், கல்வி யென்னும் ஐந்தும் அவனைச் சேராவாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆயம் கொளின் உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும் அடையாவாம்.
பதவுரை: உடை-உடுக்கப்படுவது; செல்வம்-பொருள் மிகுதி; ஊண்-உண்ணப்படுவது; ஒளி-புகழ்; கல்வி-கற்றல்; என்று-என; ஐந்தும்-ஐந்தும்; அடையாவாம்-சாரமாட்டாவாம்; ஆயம்-சூது, சூதாடும் கருவி; கொளின்-கொண்டால்.
|
உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும் அடையாவாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சாராவாம்; [சாராவாம்- அடையாவாம்]
மணக்குடவர் குறிப்புரை: செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.
பரிப்பெருமாள்: உணவும், ஆடையும், செல்வமும், புகழும், கல்வியும் என்று சொல்லப்பட்ட ஐந்துபொருளும் சேராவாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடியாரும் முதலாயின.
பரிதி: உடைமை செல்வம் அசனம் புகழ் கல்வி இந்த ஐந்து காரியமும் இல்லை; [அசனம்-உணவு]
காலிங்கர்: உடுப்பனவும், உடைய பல செல்வமும், உண்பனவும் ஊன்று தோற்றமும், கல்விகளும் என்று இவ்வைந்தும் இவனை அணுகாவாம்; [ஊன்று தோற்றமும்- நிலைபெறுதற்குரிய தோற்றமும் (பலரறியத்தோன்றும் தோற்றம்) ]
பரிமேலழகர்: அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். [ஒளி - மதிப்பு]
பரிமேலழகர் குறிப்புரை: இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம்.
'உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சாராவாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உடையும் செல்வமும் உணவும் மதிப்பும் கல்வியும் எல்லாம் அடையா', 'புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் நீங்கும்', 'நல்ல உடை, நிரம்பிய செல்வம், வயிறார உணவு, நற்குணப் பெருமை, கற்ற கல்வி என்ற ஐந்தும் சேர்ந்திருக்கமாட்டாதன ஆகிவிடும்', 'உடையும் செல்வமும், ஊணும், விளக்கமும், கல்வியும் என்று சொல்லப்பட்ட ஐந்தினையும் அடையமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உடை செல்வம் உணவு மதிப்பு கல்வி ஆகிய ஐந்தும் சேராமல் நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஆயம் கொளின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சூதினைக் கொள்ளின்.
பரிப்பெருமாள்: கவற்றைக் கையகத்துக் கொளின் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் சூதாடினார் இன்புற்று நிறைவு பெறார் என்றார்; அதற்குக் காரணம் என்னை என்றார்க்கு இன்பத்திற்குக் காரணம் ஆகிய இவை ஐந்தும் அடையார் என்று காரணம் கூறிற்று.
பரிதி: சூது விரும்புவார்க்கு என்றவாறு.
காலிங்கர்: சூதின் கருவி இருந்து நின்று ஆயம் கைவிடமாட்டாமல் கைக்கொண்டு ஒழுகப் பெறுவோர்க்கு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: ஆயம் கொளின் என்பது கவற்றினது ஆயம் என்றது.
பரிமேலழகர்: அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆயம்: ஆகுபெயர். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது. [ஆயம் என்பது ஆதாயத்தினைத் தரும் சூதினை உணர்த்துவது]
'சூதினைக் கொள்ளின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சூதாடியை', 'சூதாடும் இடத்தை ஒருவன் மேற்கொண்டால்', 'சூதாட்டத்தில் இறங்கினவனுடன்', 'சூதாடலைப் பொழுது போக்காகக் கொண்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஒருவன் சூதினை மேற்கொண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உடை செல்வம் உணவு மதிப்பு கல்வி ஆகிய ஐந்தும் சேராமல் நீங்கும், ஒருவன் ஆயம் கொளின் என்பது பாடலின் பொருள்.
'ஆயம் கொளின்' என்ற தொடரின் பொருள் என்ன?
|
பொழுதுபோக்குக்காகக் கூட சூதாடுகளம் செல்ல நினையாதே!
சூதாடலை ஒருவன் மேற்கொள்ளுவானானால் உடை, செல்வம், உணவு, மதிப்பு, கல்வி என்னும் ஐந்தும் அவனைச் சேரமாட்டா.
சூதாடு கருவியைக் கையில் கொண்டுவிட்டால், உயர்ந்த கல்வி, வளம்தரும் செல்வம், சமூக மதிப்பு இவற்றைப் பெற்று நல்ல பண்பார்ந்த வாழ்க்கை கிடைக்காது என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை போன்றவையும் அடையமுடியாததாகிவிடும். இந்நலன்களையெல்லாம் இப்பொழுது பெற்றிருந்தாலும், சூதாடச்செல்லும்போது அவற்றையெல்லாம் இழந்துவிடுவர். சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குக் கல்வி கற்க நேரமின்மையாலும், ஏற்கனவே கற்றதும் "நூறுநாள் ஓதி ஆறு நாள் விடத்தீரும்", என்ற பழமொழிப்படி மறந்து போமாதலாலும், மறவாத ஒழுக்க நெறிமுறைகளும் கைக்கொள்ளப்படாவாதலாலும், அடையாப் பொருள்களுள் கல்வியும் ஒன்றாகக் கொள்ளப்பட்டது (தேவநேயப்பாவாணர்).
இப்பாடல் கழகத்துள் புதுவதாக நுழைந்து சூதாடத் தொடங்கலாமா என்று நினைப்பவர்க்கு ஓர் அறிவுரை சொல்வது போல் அமைந்துள்ளது. அங்கு செல்ல நினைப்போர் வெறும் வேடிக்கைக்காக ஆடச்செல்கிறோம் என்று அமைதி சொல்வர். பொழுதுபோக்குக்காகச் செல்பவரையும் வளைத்துபோட்டு சூதினின்றும் அவரை நீங்கவிடாமல் ஈர்த்துக்கொள்ளும். எனவே சூதாடுதலால் உண்டாகப்போகும் இழப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டி 'சூதாட்டம் தேவைதானா?' என அவ்விளையவர்களை வள்ளுவர் எண்ணச் செய்கிறார். சூதைச் சிந்தனையிலும் ஏறவிடாமல் அதை வாழ்வியலில் இருந்து விலக்க வேண்டுமென வலியுறுத்துகின்றார்.
|
'ஆயம் கொளின்' என்ற தொடரின் பொருள் என்ன?
'ஆயம் கொளின்' என்றதற்குச் சூதினைக் கொள்ளின், கவற்றைக் கையகத்துக் கொளின், சூது விரும்புவார்க்கு, சூதின் கருவி இருந்து நின்று ஆயம் கைவிடமாட்டாமல் கைக்கொண்டு ஒழுகப் பெறுவோர்க்கு, சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின், சூதை விநோதமான தொழில் என்று ஆடினானாகில், சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், சூதாடுகளத்தை ஒருவன் தனக்கு இன்பப்பொழுது போக்குக்குரிய இடம் எனக்கொள்வானானால், சூதினை மேற்கொள்ளின், சூதாடும் இடத்தை ஒருவன் மேற்கொண்டால், சூதாட்டத்தில் இறங்கினவனுடன், சூதாட்டத்தைக் கைக் கொண்டால், சூதாடலைப் பொழுது போக்காகக் கொண்டால், சூதாடு களத்தில் அகப்பட்டுக் கொண்டால், ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக்காகவோ பொருளீட்டும் வழியாகவோ மேற்கொள்ளின், சூதாடும் கூட்டத்தை அடைந்தால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஆயம் என்பது காரியவாகு பெயராக சூதைக் குறிக்கும். ஆயம், கழகம் என்பன முற்காலத்தில் சூது முதலியன ஆடி இன்பப்பொழுதுபோக்குமிடங்களாம் எனவும் பொருள் கூறுவர். சூது என்பதே பொருத்தம். கொளின் என்ற சொல் மேற்கொண்டால் என்ற பொருள் தருவது. ஆயம் கொளின் என்பது சூதை மேற்கொண்டால் எனப் பொருள்படும்.
ஆயம் என்பது ஆதாயத்தினைத் தரும் சூதினை உணர்த்துவது.
|
உடை செல்வம் உணவு மதிப்பு கல்வி ஆகிய ஐந்தும் சேராமல் நீங்கும், ஒருவன் சூதினை மேற்கொண்டால் என்பது இக்குறட்கருத்து.
சூது களம் சென்றால் நுகர்பொருள்களுக்குக் கூட வழியில்லாமல் போகும்.
சூதினை ஒருவன் மேற்கொண்டால், உடையும் செல்வமும் உணவும் மதிப்பும் கல்வியும் எல்லாம் அவனைச் சேராமல் நீங்கும்.
|