உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஒய்ப் புறமே படும்
(அதிகாரம்:சூது
குறள் எண்:933)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
|
மணக்குடவர் உரை:
புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
பரிமேலழகர் உரை:
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும்.
(கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)
மயிலை சிவமுத்து உரை:
உருளுந் தன்மை வாய்ந்த சூதாடு கருவியை வைத்துக்கொண்டு ஒருவன் இடைவிடாது (பகடை பன்னிரண்டு, தாயம் என்பன போன்றவற்றைக்) கூறிச் சூதாடினால் பொருள் வருவாய் அவனை விட்டுத் தொலைந்து போய்ப் பிறனொருவனிடம் தங்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம் போஒய்ப் புறமே படும்.
பதவுரை: உருள்ஆயம்-உருளும் கவறு; ஓவாது-இடைவிடாமல்; கூறின்-சொல்லிக்கொண்டிருந்தால்; பொருள்ஆயம்-பொருள் வருவாய்; போஒய்-விட்டு நீங்கி; புறமேபடும்-வெளியிலே தங்கும், கெட்டுவிடும்.
|
உருள்ஆயம் ஓவாது கூறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின்; [புரளும் கவற்றை- உருண்டு விழுகின்ற சூதாட்டக்கருவி]
பரிப்பெருமாள்: புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின்;
பரிதி: கவறு விழுந்த இலக்கம் எப்போதும் பேசுவார்க்கு;
காலிங்கர்: வாய்மையும் வழக்கும் கல்வியும் முதலிய தன் நாவினால் கூறும் நயம் இன்றி, என்றும் கவறு புரட்சியில் தோன்றும் தாயப் பெயர்களையே ஒழியாது கூறின்; [தாயப் பெயர்கள்-சூதாடு கருவியின் விழுகின்ற தாயம், இரண்டு முதலிய பெயர்கள்]
காலிங்கர் குறிப்புரை: உருளுதல் என்பது புரளுதல்; ஆயம் என்பது கவறு புரட்சியின் தாயம் என்றது;
பரிமேலழகர்: உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; [ஆயம் - வெல்லும் பொருள்]
பரிமேலழகர் குறிப்புரை: கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். [சூதாடு கருவியின் உருளுதலை அக்கவற்றினது உருட்சியினாலாகிய ஆயத்தின் மேல் ஏற்றி உருளாயம் என்று கூறப்பட்டது]
'உருளும் கவற்றை இடைவிடாது கூறுவானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காயை ஓயாது சொல்லி உருட்டினால்', 'உருளும் சூதாடும் காயை இடைவிடாது கூறிச் சூதாடினால்', 'சூதாட்டம் ஓயவிடாது', 'உருளும் கவற்றின்கண் பொருந்திய ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உருளும் சூதாட்டக்காயொடு பொருந்திய ஆயத்தை இடைவிடாது கூறினால் என்பது இப்பகுதியின் பொருள்.
பொருள்ஆயம் போஒய்ப் புறமே படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
பரிப்பெருமாள்: பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கூறிய ஐந்தும் அடையாமைக்குக் காரணம் என்னை என்றார்க்கு, முயற்சி இன்மையான் இவற்றை உண்டாக்கற்குக் காரணமாகிய வருவாய் இல்லையாம் என்று அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ['ஐந்து' -குறள் 939-ல் கூறப்பட்டுள்ள உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்பன]
பரிதி: பொருளாயமும் புறத்திற்படும் என்றவாறு.
காலிங்கர்: திரட்டிய பொருள் தொகை அனைத்தும் தம் இடத்தினின்றும் போய்க் கெட்டுவிடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பொருளாயம் என்பது பொருள் கூட்டம் என்றது; படும் என்பது கெடும் என்றது.
பரிமேலழகர்: அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.
'பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் வருவாய் ஓடிப்போய் விடும்', 'அவனது பொருள் வருவாய் அவனைவிட்டுப் போய்ப் பகைவரிடத்தே தங்கும்', 'சொல்லப்போனால் பண வருவாய்க்கு வழியே இல்லாமல் (உள்ளதெல்லாம்) தொலைந்து போய் அதன் பிறகே ஓயும்', 'பொருளால் வரும் ஊதியம் அவனைவிட்டு நீங்கிப் பிறரிடம் தங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொருள் வருவாய் அவனைவிட்டு அகன்று வெளியே போய்விடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உருளும் சூதாட்டக்காயொடு பொருந்திய ஆயத்தை இடைவிடாது கூறினால் பொருளாயம் அவனைவிட்டு அகன்று வெளியே போய்விடும் என்பது பாடலின் பொருள்.
'பொருளாயம்' என்றால் என்ன?
|
சூதாடுகளத்தில் சொல்லிச்சொல்லிக் கூவிக்கொண்டிருப்பவனது செல்வமெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விடும்.
உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பணயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடினால், பொருள் வருவாய் எல்லாம் அவனை விட்டு நீங்கிச் சென்றுவிடும்.
உருளாயம் ஓவாது கூறின்:
‘உருளாயம்’ என்பதற்கு உருளும் கவறு என்பது பொருள். சூது என்பது கவறு என்றும் அறியப்படும். கவறாடுவதற்குத் தாயக் கட்டைகளை (பகடைக்காய்களை)க் கருவியாகப் பயன்படுத்துவர். ஆடுபவன் தனக்கு வேண்டிய எண்ணையும் பணயப் பொருளையும் கூறுவான். பின் கவறாடுங் காய்கள் உருட்டிவிடப்படும். விழுந்த எண்கள் வெற்றி தோல்வியை முடிவு செய்யும். அவன் சொன்ன எண் விழுந்துவிட்டால் அவன் வென்றவனாவன். வெற்றியில் வருவது ஆதாயம். சூதாடும்போது காய் உருண்டுவிழுவதால் வரும் வருவாய் 'உருளாயம்' எனப்பட்டது. சூதாடு கருவியின் உருளுதலை அக்கவற்றினது உருட்சியினாலாகிய ஆயத்தின் மேல் ஏற்றி உருளாயம் என்று கூறப்பட்டது.
காய்கள் வீசப்படும்போது, சூதர்கள் வெற்றிக்கு வேண்டிய எண்களை 'தாயம் (ஒன்று), பகடை பன்னிரண்டு, சோணாலு வாணாலு என இடைவிடாது கூறுவர். காலிங்கர் இதைக் 'கவறு புரட்சியில் தோன்றும் தாயப் பெயர்கள்' என்கிறார். இதுவே உருளாயம் கூறுவது எனச் சொல்லப்படுவது. அதை உள்ளக் கிளர்ச்சியுண்டாக உரக்கக் கூறுவர். 'உருளாயம் ஓவாது கூறின்' என்றது இடைவிடாது தொடர்ந்து உருளாயம் கூறிக்கொண்டே ஆடிக் கொண்டிருப்பதைக் குறிக்கும்.
எந்த ஆட்டத்திலும் வெற்றியும் கிடைக்கும்; தோல்வியும் உண்டு. பணத்தைப் பணயமாக வைத்து ஆடப்படும் சூதின் தன்மையால் பலர் பொருள் இழக்கவே செய்வர். இதனால் சூதாடும் பழக்கத்திற்கு அடிமையானவனது செல்வங்கள் படிப்படியாகப் பறிபோய்க் கெட்டுவிடும். இதைப் பொருள்ஆயம் போஒய்ப் புறமே படும் என்ற குறளின் பிற்பகுதி கூறுகிறது.
|
'பொருளாயம்' என்றால் என்ன?
'பொருளாயம்' என்ற தொடர்க்குப் பொருள்வரவு, திரட்டிய பொருள் தொகை அனைத்தும், அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும், பொருள் வருகிற வழி, அரசன் தேடிய பொருட்கூட்டம் எல்லாம், பொருள் வருவாய், கைவசமிருந்த பொருட்செல்வக் கூட்டமனைத்தும், தேடிய பொருளும் அதன் வருவாயும், பொருளால் வரும் ஊதியம், தேடிய செல்வமும் பொருள்வருவாயும், முன்னுள்ள பொருளும் வருவாயும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
கவறாடலின்கண் காய் உருண்டுவிழுவதால் வரும் வருவாய் 'உருளாயம்' என்பது. வேறு வகையான் வரும் வருவாய் 'பொருளாயம்' ஆகும்.
சூதனுக்குப் பணயம் வைத்து ஆடுவதற்குப் பணம் வேண்டும். அது எங்கிருந்து அவனுக்குக் கிடைக்கும்? வேறு தொழில் செய்பவனாக இருந்தால் அதில் கிடைக்கும் வருவாயாயிருக்கும். அவன் ஏற்கனவே தேடி வைத்துள்ள செல்வத்தையும் அதன் மீதான வருவாயையும் சூதாடப் பயன்படுத்துவான். அவனதுமுன்னோர் விட்டுச் சென்ற செல்வமும் இதில் அடங்கும்.
சூதில் தோற்கத் தோற்க, இழந்ததை மீட்கவேண்டும் என்ற வெறியுடன் தன்னிடமுள்ள அனைத்து மதிப்பான பொருள்களையும் பணயமாக வைத்து அனைத்தையும் இழப்பான் என்கிறது பாடல்.
'பொருளாயம்' என்பது பொருள் வருவாய் எனப்பொருள்படும்.
|
உருளும் சூதாட்டக்காயொடு பொருந்திய ஆயத்தை இடைவிடாது கூறினால் பொருள் வருவாய் அவனைவிட்டு அகன்று வெளியே போய்விடும் என்பது இக்குறட்கருத்து.
சூது
கவற்றின் மீதான ஆயத்தை இடைவிடாது கூறி உருட்டினால் ஒருவனது பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் போய் விடும்.
|