ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு
(அதிகாரம்:சூது
குறள் எண்:932)
பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?
|
மணக்குடவர் உரை:
முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?
பரிமேலழகர் உரை:
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது.
(அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.)
குன்றக்குடி அடிகளார் உரை:
ஒன்றினைப் பெற்று நூற்றினை இழக்கும் சூதாட்டத்தை விரும்புபவர்களுக்கு நல்லன எய்தி வாழும் வழியும் உண்டோ? ஒன்றினைப் பெறுதலும் நூறினை இழத்தலும் ஒருசேர நிகழாமல் சுழற்சி முறையில் நிகழ்தலால், ஒன்றினை அடைந்தவுடன் மேலும் அடைவோம் என்ற நம்பிக்கையிலேயே சூதாடுபவர்கள் முனைவார்கள்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல்?
பதவுரை: ஒன்று-ஒன்று; எய்தி-பெற்று; நூறு-நூறு; இழக்கும்-இழக்கும்; சூதர்க்கும்-சூதாடுபவர்க்கும்; உண்டாங்கொல்-உளதாகுமா? நன்று-நன்மை; எய்தி-பெற்று; வாழ்வது-வாழ்தல்; ஓர்-ஒரு; ஆறு-நெறி.
|
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு;
பரிப்பெருமாள்: ஒரு பொருளின்கண் ஒரு பொருளினை எய்தி அவ்வாசையாலே மற்றொரு பொருளின்கண் நூறு பொருளை இழப்பிக்கும் சூதாடிகளுக்கு;
பரிதி ('சூதிற்கும்' பாடம்): ஒரு பணம் வென்று நூறு பணம் தோற்கும் சூதிலும்;
காலிங்கர்: சூதைப் பற்றி நின்று ஒரு பொருள் எய்திப் பல பொருள் இழக்கும் சூது ஆடுவார்க்கும்;
பரிமேலழகர்: அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; [இன்னும் பெறுதும் - மேலும் பெறுவோம்]
'முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒன்று பெற்று பல இழக்கும் சூதாடிக்கும்', 'முன்னர் ஒரு பொருள் பெற்றுப் பின்னும் பெறுவோம் என்ற எண்ணத்தில் அதேபோல் நூறு பொருளை இழந்து வறியவராகும் சூதாடிக்கு', 'ஒரு தரம் கெலித்து நூறு முறை தோற்றுப் போகிற சூதாட்டக்காரர்களுக்குக்கூட', 'ஒன்றினைப் பெற்று நூற்றினை இழக்குஞ் சூதாட்டக்காரர்க்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒரு பொருள் வென்று நூறு பொருள் தோற்கும் சூதாடிகளுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
உண்டாங்கொல் நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?
பரிப்பெருமாள்: நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தூண்டிலில் பொன் மீன் விழுங்கினாற்போலும் என்றார். அதற்குக் காரணம் ஆகவும் இரக்கம் இல்லை என்பதூஉம் கூறிற்று.
பரிதி: ஒரு பணம் வென்று நூறு பணம் தோற்கும் சூதிலும்
காலிங்கர்: உளதாமோ? ஆகாது; யாது எனின், ஒருவாற்றானும் தமக்கு ஓரிடத்தும் ஒரு நன்மை பெற்று வாழ்வதோர் நெறி என்றவாறு.
பரிமேலழகர்: பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம். [அவ்வாற்றால் - சூதாடும் வழியால்]
'நன்மை பெற்று வாழ்வதோர் நெறி உண்டாமோ?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நலமாக வாழும் முறை உண்டாகுமா?', 'நலம் பெற்று வாழும் நன்னெறி உண்டாகுமோ? (ஆகாது)', 'சுகமடைந்து வாழக்கூடிய மார்க்கமுண்டா என்ன? (இல்லவேயில்லை)', 'நலம் அடைந்து வாழும் வழியுண்டோ!' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நலம்பெற்று வாழும் வழியுண்டோ? என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதாடிகளுக்கும் நலம்பெற்று வாழும் வழியுண்டோ? என்பது பாடலின் பொருள்.
'ஒன்றுஎய்தி நூறுஇழக்கும்' என்ற தொடர் குறிப்பதென்ன?
|
எவ்வளவு இழந்தாலும் கழகத்திலிருந்து வெளியேற வழிதெரியாமல் இருக்கிறானே!
சூதாட்டத்தில் ஒரு பொருளை வென்றதாலே மேலும் மேலும் பொருள் பெறுவோம் என்னும் பேராசையால் ஆடி, நூறு மடங்குப் பொருளை இழந்து வருந்தும் சூதாட்டக்காரருக்கும் நலம் பெற்று வாழும் ஒரு வழி உண்டாமோ?
சூது பொருளைக் கொடுப்பதுபோல் கொடுத்து பின் கெடுக்கும். அது சிறுமையே செய்யும். வறுமையையே தரும். சூதாடுவோருக்கு நன்றாக வாழ்கிறோம் என்கின்ற
இனிய வாழ்க்கை அமைதல் என்றும் கிடையாது. ஏனென்றால் சூதாட்டத்தில் இறங்கிவிட்டவனுக்கு ஒருமுறை வெற்றி பெற்ற பின்னர் மேன்மேலும் வெல்லுவோம் என்கிற வேட்கை ஓயாது. அந்த எண்ணத்திலேயே விளையாடி உள்ள செல்வமெல்லாம் தொலைந்து போய் முடிவில் துயரமே அவனுக்கு மிஞ்சும்.
தனக்குக் கிடைக்கும் வருவாய் எல்லாவற்றையும் சூதாட்டிலேயே தொடர்ந்து செலவழிப்பதாலும், காலப்போக்கில் பொருள் குன்றி வறுமையடைவதாலும், சூதாடிக்கு நன்றெய்தி வாழும் வழியில்லை என்று சொல்லப்பட்டது.
சூதாட்டக்காரனுக்கு நல்வாழ்வு தொலையும் என்பதை விளக்கும் நளவெண்பாப் பாடல் ஒன்று உளது:
உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கும் மானம் சிதைக்கும் - மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்லா சூது
பொருவரோ தக்கோர் புரிந்து. (கலிதொடர் காண்டம், 219 பொருள் (சூதாடலானது, ஒருவனுக்கு அழகைக் குறைக்கும்; உண்மை பேசுதலை ஒழிக்கும்; செல்வத்தை அழிக்கும்; ஒருவர்க்கொருவர் கொண்ட அன்பை அழிக்கும்; ஒன்றல்ல; இன்னும் பலப்பல கேடுகளைத் தரும். ஆதலால், நல்லோர் சூதாடலை விரும்புவரோ விரும்பார்)
இவ்வாறாக, சூதின் வயப்பட்டோர், சூது ஒன்றிலேயே கருத்தூன்றிப் பிறகடமைகளையெல்லாம் இகழ்வதால் பொருளையும் இழந்து, அறத்தையும் இன்பத்தையும் துறந்து, நல்வாழ்க்கை நெறிகளையும் மறக்கின்றனர் என்று கூறுகிறார் வள்ளுவர்.
'நூறு என்றால் பணம் மட்டும் அல்ல; மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,தானம், தவம், முயற்சி, தாளாண்மை, இன்பம், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர், நாட்டார், ஆடு, மாடு, வண்டி-வாகனம் நீர் நிலம், பொன், பொருள், போகம், ஆடை-அணி அத்தனையும் இழந்துவிடுவானாம் சூதாடி. "சூதாடிப் பயல்" என்ற ஒன்றை மட்டுமே பெறுவானாம்' என்று உரைப்பார் கி ஆ பெ விசுவநாதன்.
|
'ஒன்றுஎய்தி நூறுஇழக்கும்' என்ற தொடர் குறிப்பதென்ன?
புதிதாக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடும் சிலர்க்கு எதிர்பாராத பெரும்ஆதாயம் கிடைப்பதுண்டு. இதைத் தொடக்க அதிர்ஷ்டம் (beginners luck) என்பர். சூதாட்டத்தில் நல்லூழ் தொடக்கத்தில் ஆட்சி செய்து செல்வம் கிடைக்கச் செய்யும். அதில் பெருமகிழ்வு கொண்டு தொடர்ந்து ஆடுவர். ஆனால் எப்போதுமே பொருள் வெல்ல முடியும் என்பது நடப்பதில்லை. தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வரும். ஒருபொழுதில் தனக்குப் பொருளிழப்பே மிகுதி என்பதை உணரத் தொடங்குவான். பண இழப்பைத் தாங்கமுடியாமல் இன்னும் வென்றுவிடலாம்; இழந்ததை மீட்டுவிடலாம் என்று அதிலேயே மூழ்க வைத்து நூறினை இழக்கவைக்கும் சூது. மறுபடியும் மறுபடியும் பலமுறை பல காலம் ஆடி பலமடங்கு பொருள் இழப்பான். இதைத்தான் இப்பாடல் ‘ஒன்றெய்தி நூறிழக்கும்’ என்கிறது. இது ஒரே நேரத்தில் நடப்பதில்லை.
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் என்பதற்கு ஒரு முறை வென்று நூறுமுறை தோற்பர் எனவும் பொருள் கூறுவர்.
தேவநேயப்பாவாணர் ''ஒன்று', 'நூறு' என்பன பொருள் குறியாது அளவு குறித்தன' என்பார் ''நூறு' என்பது இங்குப் பேரெண்ணைக் குறித்தது' எனவும் சொல்வார்.
ஒன்றெய்துதல் பின்னர் நூறு இழந்ததற்குக் காரணமாகும் என்பதுதான் இக்குறள் கூறவரும் செய்தி. முதலில் பெற்றதுபோல் நூறு மடங்கு இழப்பர் என்பது பொருள்.
|
ஒரு பொருள் வென்று நூறு பொருள் தோற்கும் சூதாடிகளுக்கும் நலம்பெற்று வாழும் வழியுண்டோ? என்பது இக்குறட்கருத்து.
ஒன்றுக்கு நூறாக இழக்க வைக்கும் சூது வேண்டாம்.
ஒரு பொருளைப் பெறச் செய்து பலபொருளை இழக்கவைக்கும் சூதாட்டக்காரர்க்கு நலமாக வாழும் முறை உண்டாகுமா?
|