இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்

(அதிகாரம்:சூது குறள் எண்:940)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.

மணக்குடவர் உரை: பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர்.
இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.

பரிமேலழகர் உரை: இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் - சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர்.
(சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: பொருளை இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கும் சூதாட்டம் போல, உடல் துன்பத்தால் வருந்த வருந்த உயிர் அதன் மேல் காதலுடையதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.

பதவுரை: இழத்தொறூஉம்-இழக்கும் போதெல்லாம்; காதலிக்கும்-மிக விரும்பும், வெறியுண்டாகும்; சூதேபோல்-சூதாடுபவன் போல; துன்பம்-துயரம்; உழத்தொறூஉம்-அனுபவிக்கும் போதெல்லாம்; காதற்று-காதலையுடையது; உயிர்-உயிர், உயிர்வாழ்க்கை.


இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோல;
பரிப்பெருமாள்: பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோல;
பரிதி: தோற்கத் தோற்கச் சூதிலே ஆசைப்படுமாப் போலே;
காலிங்கர்: கற்றல் கேட்டல் கடன் அறிந்தொழுகுதல் என்னுமிவை காதலியரது சூதினால் தன் கைப்பொருளிழத்தல் கண்டு வைத்தும் அங்ஙனம் இழத்தொறும் இயற்றல் காதலிக்கும் சூதே போலும்;
பரிமேலழகர்: சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; [இருமைப்பயன் - இப்பிறப்பிலும் வருபிறப்பிலும் உண்டாகும் இன்பநலங்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: சூது - ஆகுபெயர்.

'பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தோற்கத் தோற்கச் சூதில் ஆசைவளரும்', 'தோற்கத் தோற்க சூதாடுகிறவனுக்கு சூதின் மேல் ஆசை அதிகரிக்கும்; அதைப் போலவே', 'பொருளை இழக்குந்தோறும் மேலும்மேலும் சூதாட விரும்புதல்', 'பொருளை இழக்கும்தோறும் விரும்பப்படும் சூதாட்டத்தைப்போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருளை இழக்க இழக்க மேன்மேலும் விரும்பப்படும் சூதாட்டத்தைப்போல என்பது இப்பகுதியின் பொருள்.

துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர்.
மணக்குடவர் குறிப்புரை: இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.
பரிப்பெருமாள்: துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை இரண்டினுக்கும் அஃதியல்பு. ஈண்டு உயிர்க்கு அஃது ஆதல் கூறியது எற்றுக்கு எனின், இவை இரண்டையும் ஒன்றை ஒன்றாகக் கூறின் அல்லது பிறிது உவமிக்கப்படும் பொருளில்லை என்றற்கு எனக் கொள்க. மேல் ஒன்றெய்தி நூறிழக்கும் என்றார்; அஃது என்னை; ஒருகால் தோற்றவன் பின்பு தவிரானோ என்றற்கு இது கூறப்பட்டது. [மேல்- 932 குறளில்]
பரிதி: பொருள் தோற்கத் தோற்கத் துன்பம் மிகுத்துத் தோன்றும் என்றவாறு,
காலிங்கர்: பெரிதும் துன்பம் உழத்தொறும் உழத்தொறும் காதலுடைத்தாவது இச்சூதாடும் உணர்விலி; என்னை பாவம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: காதற்று என்பது காதலை உடைத்து என்றது. உயிர் என்பது இவனை ஒரு மகன் என்று கூறுதற்கு நாணி உயிர் என்றது.
பரிமேலழகர்: உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். [மூவகைத்துன்பம்- தன்னைப் பற்றியும் பிற உயிர்கள் பற்றியும் தெய்வத்தைப் பற்றியும் வரும் பிறவித் துன்பங்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன. [யாப்பறுத்தற் பொருட்டு - உறுதி செய்தற் பொருட்டு]

துன்பத்தை உழக்குந்தோறும் காதலுடைத்து உயிர் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் படப்பட வாழ்வில் பற்றுவளரும்', 'உடல் நோய் அதிகரிக்க அதிகரிக்க உயிருக்கு உடலின் மீதுள்ள ஆசையும் அதிகமாகும்', 'உயிர் உடம்பால் துன்பங்களை நுகரநுகர உடம்பில் பற்று மிகுதியாக வைத்தல் போலாம்', 'துன்பத்தின்கண் வருந்தும்தோறும் உயிர் விரும்பப்படும் தன்மையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துன்பத்தால் வருந்த வருந்த உயிர்வாழ விரும்பப்படும் தன்மையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருளை இழக்க இழக்க மேன்மேலும் விரும்பப்படும் சூதாட்டத்தைப்போல துன்பத்தால் வருந்த வருந்த உயிர்வாழ விரும்பப்படும் தன்மையது என்பது பாடலின் பொருள்.
இப்பாடலிலுள்ள உவமை கூறும் செய்தி என்ன?

தோற்கத் தோற்கச் சூதாட்ட வெறி மிகும்.

பொருள் வைத்துத் தோற்கத் தோற்க மேலும் மேலும் ஆடவேண்டும் என்று சூதாடி தூண்டப்படுவான்; அது போல் துன்பத்தால் வருந்த வருந்த, உயிர்வாழ்க்கை விரும்பப்படுவதாகிறது.
ஒருவன் சூதாட்டத்தில் ஒன்று எய்துகிறான்; நூறு இழக்கிறான். சூதுகளத்தில் பொருள் இழக்க இழக்க 'அடுத்தமுறை எப்படியும் வெல்வேன்' என்ற கொந்தளிப்பான உந்துதலால், மேலும் மேலும் சூதாடு கருவியை உருட்டுவான் சூதன். அந்த அளவு அவனுக்குச் சூதின் மீது காதல் உண்டாகிவிடுறது. இங்ஙனம் தொடர் தோல்விகள் சூதை விடாமல் ஆடச் செய்கிறது. எவ்வளவு பொருள் இழந்தாலும் சூதன் வீறுகொண்டு ஆடிக்கொண்டிருப்பான். விற்காததை விற்று - விற்க எதுவும் இல்லையானால் தன்னையும் தன் மனைவியையும் விற்றுச் சூதாடினர் நளனும் தருமனும். அப்படி ஓர் பிடிப்பை சூதுகளம் உண்டாக்கிவிடுகிறது. அந்த ஈர்ப்பாற்றலிலிருந்து அவன் வெளியே வந்தால்தான் சூதால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
சூதின்மேல் உண்டாகும் பற்றை உணர்த்த, சூதாட்டத்தில் தோற்கத் தோற்க, விட்ட பணத்தைப் பிடிக்க வேண்டும் என்று சூதாட்டத்தின் மேல் வெறி வருவது போல் துன்பப்பட துன்பப்பட வாழ்வில் வெற்றிபெற்று இன்பம் காணவேண்டும் என்ற உந்துகை உண்டாகும் என ஓர் உவமையும் கூறப்பட்டது.

'இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல்' என்பதில் காதலிக்கும் என்ற சொல் விரும்பும் என்னும் பொதுப்பொருளில் ஆட்சி பெற்றுளது.
'இழக்குந்தொறும் என்பதற்குப் பதிலாக இழத்தொறும் எனவும் உழக்குந்தொறும் என்பதற்குப் பதிலாக உழத்தொறும் எனவும் வந்தமையைச் சுட்டிக் காட்டி இழக்குந்தொறும் என்றதே முன்பு இழத்தொறும் என்ற வழக்காக இருந்தது என்பார் பொற்கோ.

இப்பாடலிலுள்ள உவமை கூறும் செய்தி என்ன?

பொருளை இழக்கும் தோறும் மீண்டும் மீண்டும் சூதாடல் விரும்பப்படுவது போன்றது துன்பத்தில் உழலும் தோறும் ஒருவனுக்கு உயிர்வாழ்க்கை மீது காதல் உடைத்தாவது என்பது உவமை.
இக்குறளில் உவமை சற்று வேறுபாடாக அமைந்துள்ளது. அதிகாரம் சூதாயிருக்கவும், 'சூதேபோல்' எனச் சூதே உவமமாக்கப்பட்டுள்ளது. சூதின் மேல் பற்று வைப்பதும், உயிர்வாழ்க்கைமேல் காதல் வைப்பதும் என்ற இருபொருளில் உவமை சொல்லப்பட்டுள்ளது. இவை இரண்டினுக்கும் அஃதியல்பு என்பர் மணக்குடவரும் பரிப்பெருமாளும். 'ஈண்டு உயிர்க்கு அஃது ஆதல் கூறியது எற்றுக்கு எனின், இவை இரண்டையும் ஒன்றை ஒன்றாகக் கூறின் அல்லது பிறிது உவமிக்கப்படும் பொருளில்லை என்றற்கு எனக் கொள்க' என்பது பரிப்பெருமாளின் சிறப்புரை.
உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்து என்று உவமையைப் பரிமேலழகர் விளக்குவார். சூதனது அறியாமையை வலியுறுத்தற் பொருட்டுச் சூதினை உவமமாக்கிக் கூறினார் என்பர். உயிர் அறியாமை-சூதன் அறியாமை இவை இக்குறளில் ஒப்புநோக்கப்பட்டன என்னும் பரிமேலழகர் உரை அத்துணைச் சிறப்பாகத் தோன்றவில்லை.
இரண்டிற்கும் உள்ள இயைபு என்பது காதலிப்பது அதாவது வெறிகொண்ட விருப்பம் கொள்வது என்ற அளவில் மட்டும் உள்ளது.

இப்பாடலில் உபமானத்தை உபமேயமாக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிர்வினையை உவமமாகவும் சூதன் வினையைப் பொருளாகவுங் கூறுவதே அதிகார முறையாயினும், முன்னதன் முதன்மை பற்றி மாற்றிக் கூறினார் என்பார் தேவநேயப்பாவாணர்.
'இக்குறளில் உடன்பாட்டு முறையில் கூறியதற்கு எதிர்மறைப் பொருளும் தோன்றும் வண்ணம் நடைப்பாங்கு அமைந்திருப்பது கருதத்தக்கது' எனக்கூறுவார் இ சுந்தரமூர்த்தி. 'உபமான உபமேயங்களை மாற்றிச் சொல்லியதால் இது விபரீத உவமை. எதிர்நிலையணி எனவும் கூறுவர்' என்றும் உரைத்தனர்.
'பொருளையே (உவமேயத்தையே) உவமையாக்கிக் கூறினாலும் அது உவமம் போன்ற சிறப்புடையது. பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃது உவமமாகும் (உவமவியல், 9) என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு இக்குறள் தக்க சான்று' என்பார் வ சுப மாணிக்கம்.

வறுமை போன்ற துன்பத்தில் ஒருவன் உழந்தாலும், வாழ்ந்து வெற்றிகாண வேண்டும் என்னும் வெறியும் உண்டாகும். இதனால் நன்றாக இருந்த போதைக் காட்டிலும் நலியும்பொழுது உயிர்வாழ்க்கையின்மீது காதல் மிகையாகவே ஏற்படும். இது சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் பொழுது எல்லாம், அடுத்து வெற்றி பெற்றுவிடலாம், இழந்ததை திரும்பப் பெறலாம் என்ற விருப்பம் கொண்டு சூதாடும் இயல்புடன் ஒப்பிடப்பட்டது.

பொருளை இழக்க இழக்க மேன்மேலும் விரும்பப்படும் சூதாட்டத்தைப்போல துன்பத்தால் வருந்த வருந்த உயிர் விரும்பப்படும் தன்மையது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எத்துணை முறை தோற்றாலும் விட்டொழிய விடாதது சூது

பொழிப்பு

பொருள் இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கும் சூதாட்டம் போல, துன்பத்தால் வருந்த வருந்த உயிர் விரும்பப்படும் தன்மையது.