இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0921 குறள் திறன்-0922 குறள் திறன்-0923 குறள் திறன்-0924 குறள் திறன்-0925
குறள் திறன்-0926 குறள் திறன்-0927 குறள் திறன்-0928 குறள் திறன்-0929 குறள் திறன்-0930

அஃதாவது, நீராகவோ கட்டியாகவோ புகையாகவோ இருந்து வெறியினால் உணர்வை மறைக்கும் பொருட்களையுண்ணாமை.
- தேவநேயப் பாவாணர்

அறிவினை மயக்கும் கள்ளை உண்ணாமை பற்றிக் கூறுவது இவ்வதிகாரம். 'கள்' என்றதில் போதை தரும் எல்லாப் பொருள்களும் அடங்கும். மிகையாகக் கள் குடிப்பவர் தன் உணர்வு நீங்கி இழிநிலையில் காட்சியளிப்பர்; இதை ஏன் விலை கொடுத்து வாங்கவேண்டும் எனக் கேட்கிறது இவ்வதிகாரத்து ஒரு பாடல். கட்குடித்த தன் மகனைக் காணும் அவன் தாயும் முகம் சுளிப்பாள். அவன் நல்லோரால் மதிக்கப்படமாட்டான்; அவன் தன்தோற்றத்தையே இழந்துநிற்பான்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை என்பது மயக்கம் தந்து உணர்வை அழிக்கும் கள்ளைக் குடிக்காமலிருக்க வேண்டும் என்பதைச் சொல்வது. கள்ளுண்பதால் ஏற்படும் இழிவுகளை விளக்குகிறது கள்ளுண்ணாமை அதிகாரம். கள் என்பது போதைதரும் ஒரு குடிவகை. நீர்வடிவான அப்பொருள் இருவகையானதாகும். ஒன்று பனை தென்னை முதலிய மரங்களின்று இறக்கப்படுவது; மற்றொன்று அரிசி காய்கனி முதலியவற்றைப் புளிக்க வைத்தும் காய்ச்சியும் எடுப்பது. நெல்லரிசி, மூங்கிலரிசி, தினை, பனை, பலாச்சுளை முதலிய இயற்கை உணவுப் பொருள்களிலிருந்து நொதித்தல்/வடித்தல் மூலமாக கள்ளை உண்டுபண்ணுவர். இவ்வாறு இயற்கை, செயற்கை முறைகளில் உண்டாக்கப்படும் கள் வகைகளை அடுநறா, தோப்பி, தேறல், பிழி, அரிட்டம், வேரி, மைரேயம் ஆகிய பெயர்களால் குறிக்கின்றன பழம்நூல்கள். இன்று வழக்கில் கள் என்னும் சொல் பனைமரத்திலிருந்து இறக்கப்படும் இயற்கைக் குடிவகையை (Toddy) மட்டும் குறிப்பதாக உள்ளது. ஆனால் கள் என்ற சொல் அனைத்துக் கள்வகைகளையும் குறிக்கும்.
கள்‌ குடித்தல்‌ என்பது இயல்பாகக்‌ கூறப்படும் வழக்கமாகும்‌. 'கள்பருகாமை” என்னாமல் கள்‌ 'உண்ணாமை' என்று கூறப்படுகிறது‌. நீர், பால் முதலிய நீர்மப் பொருளைக் குடித்தல் என்றும் அரிசி தினை முதலிய திண்மப் பொருளை உண்/தின் என்றும் வழங்குவதே மரபு. தினை பிடி உண்ணும் (குறுந்தொகை 225.2) என்று திண்மப்பொருள் 'உண்'பதாக வந்துள்ளது. சங்கநூலிலேயே பாலும் பல என உண்ணாள் (குறுந்தொகை 356.7) எனப் 'பால் உண்' என்பது குடி என்ற பொருளிலும் வந்தது. 'உண்டு' என்பது உண்ணப்படும் எல்லாவற்றிற்கும் உரிய பொதுவினை என்பர் பழம் இலக்கண ஆசிரியர்கள். எனவே கள்'உண்ணாமை' என்பதைத் தொல்வழக்காகக் கருதவேண்டும்.

போர், விளையாட்டு, கூத்து, உண்டாட்டு என்றிருந்த சங்ககால வாழ்வின் இயல்பான பசிகளைத் தீர்த்துக் களிக்கப் பயன்பட்ட பொருள்களில் கள்ளும் இருந்தது. சங்க இலக்கிய காலத்தில் விழாக்கள் மற்றும் போர் வெற்றி உள்ளிட்டவைகளை கொண்டாட கள் பருகப்பட்டுள்ளது. ஆண், பெண் என்ற வேற்றுமையின்றி அரசன் முதல் குடிகள் வரை கள்ளை மதிப்புமிகுந்த ஒரு பொருளாகக் கருதி அதை மாந்திக் களித்தார்கள். வள்ளல்களும், செல்வர்களும் விருந்தினர்க்குப் கள் கொடுத்து மகிழ்ச்சியூட்டினர். கள் சிறந்த உணவுப் பொருளாகக் கருதப்பட்டது. மிகுந்த வரவேற்பு பெற்றிருந்ததாகவும் மக்கள் வாழ்வியலில் ஒன்றாகவும் இருந்ததால், அன்றைய இலக்கியங்களிலே கள்ளுண்ணல் விலக்கப்படவில்லை. அக்காலத்து மாந்தர் பெரும்பாலும் கள் அருந்தியவர்கள்; கபிலர், ஒளவையார் போன்ற புலவர் பெருமக்களும் கள் அருந்தினர். இவ்வாறாக கள்பருகுவது ஒரு நாகரிகமாக நிலவியது.
கள்ளுண்ணாமை என்ற ஒழுக்கம் சங்க நூல்களில் வலியுறுத்தப்படவில்லை. பின்வந்த நீதி நூல்கள் கள்ளுண்பதைப் பெரும்பாலும் தடை செய்வவாயின. குறளிலே அது ஒரு தனி அதிகாரமாக வலியுறுத்திக் கூறப்படுகின்றது. 'உண்ணற்க கள்ளை' என்று அதை வள்ளுவர் விலக்குகிறார், கள்ளுண்ணாமை என்ற அறத்தினை தமிழர்க்கு உணர்த்தியவர்களில் முதன்மையானவர் வள்ளுவர். மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் படைக்கப்பெற்ற குறளில் கள்ளுண்பது மறுக்கப்படுகிறது. சங்க காலத்தில் மரபாகப் பின்பற்றப்பட்ட கள்ளுண்ணலை வள்ளுவர் ஏற்கவில்லை.

கள் அதன் சுவைக்காக விரும்பி உண்ணப்படும் பொருள் அல்ல; அது மிகவும் புளிப்புடையது. அது மணத்திற்காக விரும்பிப் பருகக்கூடிய ஒரு பொருளும் அல்ல. அது வெறுப்புத்தரும் மணம் கொண்டது. உடல் நலத்துக் கேடு உண்டாக்கக் கூடியது கள் என்று இன்றைய மருத்துவ உலகமும் கூறுகிறது. பின்னும் ஏன் மக்கள் அதனை விரும்புகின்றனர்? 'குடிப்பது கடினமாக உழைக்கத் துணை செய்கிறது, உழைப்பின் களைப்பைப் போக்குகின்றது அல்லது குடித்து உழைத்தால் சோர்வைப் போக்கி உழைப்பதற்கு ஊக்கம் தருகிறது' எனக் காரணங் காட்டுவர் குடிப்பவர்கள். ஆனால் அவர்கள் அறியாதன: கள்ளுண்ணல் மக்களின் இயற்கையான வலிமையை மிகையாகத் துடிக்கச் செய்து வெகு விரைவில் பாழ்பண்ணும்; போதை குறைந்து விட்டால் உடனே வலிமை குறைந்து விடும்; மறுபடியும் வேலை செய்ய வேண்டுமானால் அதே பொருளைத் திரும்பவும் பயன்படுத்தியாகவேண்டும்; காலப் போக்கில் தான் பழகிய பொருளைப் பயன்படுத்தாமல் தன்னால் எதுவுஞ் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது; கள்ளுக்கு அவன் அடிமையாகிவிடுகிறான்.
தீச்செயல்களில் ஈடுபடாத ஒருவன் அறிவிழந்து குடிக்கப் பழகி விடுவானானால், காலப் போக்கில் எல்லாத்தீச் செயல்களைச் செய்யும் பழக்கமும் அவனுக்கு மிக எளிதாக வந்துவிடும். உலகில் நடைபெற்ற குற்றங்களில் பெரும்பான்மை குடிகாரர்களாலேயே நடைபெறுகின்றன என்று குற்றவியலார் கூறுவர். குடித்து ஊர்தி ஓட்டுவோரே பெரிதும் சாலை விபத்துகளுக்குக் காரணமாக இருக்கின்றனர்.

கள் குடித்தால் புகழ் மங்கும்; பகைவர்க்குப் பயம் நீங்கும்; சான்றோர் துணை அகலும். பெற்றதாயே முகம்சுளிப்பாள். நாணம் நீங்கும். மயக்கமே மிஞ்சும். கள் மெதுவாகக் கொல்லும் நஞ்சு. கள்ளுண்பாரின் இழிநிலையைப் பார்த்து ஊரே சிரிக்கும். நெஞ்சத்து மறைகள் வெளிப்படும் எனக் கள்ளால் வரும் கேடுகளை எடுத்துக் காட்டிபொருள் கொடுத்து ஏன் உணர்வின்மையை வாங்கிக்கொள்ள வேண்டும்? என வினவுகிறார் வள்ளுவர். களித்தானுக்கு அறிவுபுகட்டுதல் என்பது தீவட்டி கொண்டு நீருக்கடியில் மூழ்கியவனைத் தேடுதல் போன்று கடினமானது எனக் குடிப்பழக்கம் எளிதில் கைவிடமுடியாததாக இருக்கின்ற கெட்டபழக்கங்களில் ஒன்று எனச் சொல்கின்றார். தெருவில் வீழ்ந்துகிடக்கும் மற்ற குடிகாரனைப் பார்த்தாவது அவன் திருந்தமாட்டானா என இரங்கிக் கூறுகிறார் அவர். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

தன்னை மறந்து களிப்படையவே கள் குடிக்கின்றனர். இதைப் ....பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (நினைந்தவர்புலம்பல் 1201) என்னும் குறள் சொல்கிறது. இதனால் கவலையை மறந்து களிப்பதற்கே கள் உண்ணப்பட்டமை தெளிவு. ஒரு முறை கள்ளை உண்டு மகிழ்ந்தவன் மேலும் மேலும் உண்ண விரும்புவான் என்பதைக் ....களித்தார்க்குக் கள்ளற்று....(புணர்ச்சிவிதும்பல் 1288) என்ற உவமை விளக்கும். களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால்.....(அலர் அறிவுறுத்தல் 1145) என்று காமத்தின் அருமை கூறப்படும் நேரத்திலும் கள்தரும் களிப்பு பேசப்படுகிறது. மேலும்.... அடுநறா காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (தகைஅணங்குஉறுத்தல் 1090) எனக் கள்ளின் களிப்பு ஒப்புமை செய்யப்படுகிறது. ....கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு (புணர்ச்சிவிதும்பல் 1281) என்ற மற்றொரு பாடலிலும் கள்ளின் களிப்பு குறிக்கப்பெறுகிறது. இங்ஙனம் 'கள்ளுண்பவர் நஞ்சுண்பவர்', 'உண்ணற்க கள்ளை' என்றெல்லாம் இங்கு கள்ளைக் கடியும் வள்ளுவர் கள்ளின் இனிமையையும், இன்பத்தையும் பலமுறை காமத்துப்பாலில் கூறுகிறார்.
மேலும் கள் குடிப்பது பாவம் என்றோ, அறத்திற்கு மாறானது என்றோ, நரகத்திற்குக் காரணம் என்று வள்ளுவர் இவ்வதிகாரத்தில் எங்கும் கூறவில்லை. கள்ளுண்பவன் பிறரிடம் மதிப்பு இழக்க நேரும் என்றும், சான்றோரின் தொடர்பு போய்விடும் என்றும், அறிவு மயங்கும் என்றும் அவர் கூறுகின்றாரே அல்லாமல், வேறு வகையால் கடிந்து அறிவுறுத்தவில்லை.
அளவுக்கு மீறி -மெய்யறியாமை கொள்ளும் வரையில்- கள்ளுண்போரையும், கள்ளையுண்டு போதையில் இளித்துக்கொண்டு அலைவோரையும், ஊரார் நகைக்கும்படி நாகரிகமற்று நடந்து கொள்வோரையும், உளறித்திரிவோரையும் அவர் வெறுக்கிறார்.
போர்வீரம் முதலிய நோக்கி தேவைக்காகக் கள்ளுண்ணுவதும் தோழமைக்கூட்டத்தில் கள்குடிப்பதும் (Social Drinking) வள்ளுவர்க்கு ஏற்புடையதாகலாம். அளவோடு கள்ளுண்ணலாம், அதிலே வெறிபிடித்து அலைதல் கூடாது என்பது அவர் கருத்தாகலாம்.

கள்ளுண்ணாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 921ஆம் குறள் பொழுதெல்லாம் கள்ளின்மீது பெருவிருப்பம் கொண்டு ஒழுகுபவர் அஞ்சப்படார்; தோற்றமும் இழப்பர் என்கிறது.
  • 922ஆம் குறள் கள் உண்ண வேண்டாம்; உணில் நல்லோரால் மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனை உண்க எனச் சொல்கிறது.
  • 923ஆம் குறள் பெற்ற தாய் முன்பாயினும் இன்னாதாம்; அவ்வாறு இருக்க, பெரியோர் எதிரில் கள்ளுண்டு மகிழ்தல் எப்படியிருக்கும்? எனக் கேட்கிறது.
  • 924ஆம் குறள் கள்குடித்தல் என்று சொல்லப்படுகின்ற விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு நாண் என்று சொல்லப்படும் நல்ல பெண் எதிரே நிற்காமல் திரும்பிப் போய்விடுவாள் என்கிறது.
  • 925ஆம் குறள் விலை கொடுத்து மெய்ம்மறதியை வாங்கிக் கொள்தல் செய்வதறியாமை காரணமாக உடைத்து எனச் சொல்கிறது.
  • 926ஆம் குறள் உறங்கினார் செத்தாரைவிட வேறாகத் தோன்றார்; எப்பொழுதும் கள் குடிப்பவர் நஞ்சுண்பவரே என்கிறது.
  • 927ஆம் குறள் நாளும் கள்ளை நாடிக் குடித்து கண் சுழல்பவர் உள்ளநடத்தை அறிந்து உள்ளூராரால் சிரிக்கப்படுவர் எனச் சொல்கிறது.
  • 928ஆம் குறள் கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதைக் கைவிடுக; மனத்துள் நிறுத்தியிருந்த மறைகளும் முற்பட்டு வெளிப்படும் என்கிறது.
  • 929ஆம் குறள் கள்ளுண்டு மயங்கியவனை அறிவு சொல்லித் திருத்துதல் நீருள் மூழ்கினவனைத் தீவட்டியால் தேடுவது போன்றது என்கிறது.
  • 930ஆவது தான் கள்ளுண்ணாமல் தெளிந்திருக்கிற வேளையில் குடித்துக்கூத்தாடுபவனைக் காணும் பொழுது அவனது சோர்வு நிலையை நினைத்துப் பார்க்க மாட்டான் போலும் என்கிறது.

கள்ளுண்ணாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

தன் மகன் சான்றோன் என்பதையே ஊரார் சொல்லக் கேட்க விரும்புவாள் ஒரு தாய். ஆனால் அவன் கள்ளருந்தி தளர்வு நடையில் தன் முன்வந்து நின்றால் அவளது மனநிலை எப்படி இருக்கும்? அதை அவள் வெறுக்கவே செய்வாள். இதை ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி (923) என்னும் பாடல் நன்கு விளக்குகிறது.

ஒருவன் தன் தோற்றம் உருக்குலைந்து இழிநிலை அடையச் செய்யும் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குவானா? தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவன்தான் அப்படிச் செய்வான். கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல் (925) என்கிறது குறள். இப்பாடலிலுள்ள மெய்யறியாமை என்ற தொடர் உடல்நலக் கேட்டையும் குறிப்பதாகும்.

கள்ளானது மெதுவாக உயிரைக் கொல்லும் நஞ்சு என்கிறார் வள்ளுவர். துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் (926) என்ற குறள் கள்ளை நஞ்சு எனக் கூறுகிறது. எனவேதான் கள்ளுண்பவர் நஞ்சுண்பவர் எனச் சொல்லப்பட்டது.

கள் குடித்தலுக்கு அடிமைப்பட்டுவிட்டவனைத் திருத்துதல் கடினம் என்று களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று (929) என்ற பாடலும் அவன் கள் குடியாதகாலை கள்குடித்து மயங்கிக் கிடப்பவனைப் பார்த்தாவது திருந்தமாட்டானா என ஏக்கத்துடன் கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (930) என்ற பாடலிலும் கூறுகிறார் வள்ளுவர். கள்ளிலே காதல்மிகக் கொண்டு வெறிநிலைக்குச் செல்லக் கூடாது என்பதைத் தெரிவிப்பன இவை.




குறள் திறன்-0921 குறள் திறன்-0922 குறள் திறன்-0923 குறள் திறன்-0924 குறள் திறன்-0925
குறள் திறன்-0926 குறள் திறன்-0927 குறள் திறன்-0928 குறள் திறன்-0929 குறள் திறன்-0930