இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0929களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:929)

பொழிப்பு (மு வரதராசன்): கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.

மணக்குடவர் உரை: கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும்.
இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.

பரிமேலழகர் உரை: களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும்.
('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.)

இரா இளங்குமரன் உரை: குடித்து மயங்கி இருப்பவனை அப்பொழுதில் அறிவுரை சொல்லித் தெளிவிக்க முயலுதல், ஆழ்ந்த நீருள் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போல்வதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களித்தானைக் காரணம் காட்டுதல் நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

பதவுரை: களித்தானை-கள்ளுண்டு மயங்கியவனை; காரணம்காட்டுதல்-காரணம் காட்டித் தெளிவித்தல், விளக்கிக் கூறல்; கீழ்நீர்-நீருள்; குளித்தானை-முழுகியவனை; தீ-தீ; துரீஇ-தேடுவது; அற்று-அத்தன்மைத்து.


களித்தானைக் காரணம் காட்டுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளிவித்தல்;
பரிப்பெருமாள்: கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளிவித்தல்;
பரிதி: கள்ளுண்டு களித்தவனுக்கு அறிவு சொல்லுதல்;
காலிங்கர்: கள்ளுண்டான் ஒருவனைக் குறித்துச் சான்றோர் பல நூல் வகையாலும் இது தகாது என்று எடுத்து உரைத்துக் காட்டுதலாவது எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: 'களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது.

'கள்ளுண்டு களித்தவனைக் காரணங் காட்டித் தெளிவித்தல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிகாரனைச் சொல்லித் திருத்துதல்', 'குடித்தவனை ஒருவன் காரணம் காட்டித் தெளிவுபடுத்துதல்', 'கள்ளுண்டு மயங்கியிருக்கும்போது அவனிடம் சீர்திருத்த நியாயங்களைச் சொல்லுவது', 'கட்குடியனுக்குக் கள்ளின் கெடுதியாகிய காரணத்தை விளக்குதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கள்ளுண்டு மயங்கியவனை அறிவு சொல்லித் திருத்துதல் என்பது இப்பகுதியின் பொருள்.

கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் சுட்டது போலும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறர்சொல்லவும் கேளாரென்றது.
பரிப்பெருமாள் ('நீர்க்கீழ்க்) பாடம்): நீர்க்கீழ் முழுகினானைத் தீயினாற் அறிகுற்றது போலும் என்றவாறு. [அறிகுற்றது- அறிந்தது]
பரிப்பெருமாள் குறிப்புரை: துருவுதல்-திசைச்சொல். இது பிறர்சொல்லவும் கேளாரென்றது. இத்துணையும் கள் உண்பாற்கு உளதாகும் குற்றம் கூறப்பட்டது.
பரிதி: நீரிலே முழுகிக் கிடக்கிறவனைக் கொள்ளிகொண்டு சுடுகிறதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர் ('கீணீர்க்' பாடம்): நீருள் மூழ்கி நின்றான் ஒருவனைத் தீயினால் சென்று துருவிப் பிடித்த அத்தன்மைத்து என்றவாறு. [துருவிப்பிடித்த - தேடிப்பிடித்த]
பரிமேலழகர்: நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.

'நீரின்கீழே முழுகினானைத் தீயினாற் நாடுதல் போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குளத்தில் விழுந்தவனை விளக்கால் தேடுதல் ஒக்கும்', 'நீருள் மூழ்கினவன் ஒருவனை வேறொருவன் தீ விளக்கினால் துருவித் துருவித் தேடினாற் போலும்', 'ஆழமான தண்ணீருக்குள் முழுகி மறைந்திருப்பவனைத் தீப்பந்தத்தைக் கொண்டு தேடுவதற்குச் சமானம்', 'தண்ணீர்க்குள் மூழ்கினவனை விளக்கினால் தேடுவதைப் போலும்!' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நீருள் மூழ்கினவனை தீவட்டியால் தேடுவது போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள்ளுண்டு மயங்கியவனை அறிவு சொல்லித் திருத்துதல் நீருள் மூழ்கினவனை தீத்துரீஇ போன்றது என்பது பாடலின் பொருள்.
'தீத்துரீஇ' என்றால் என்ன?

சொல்லியா திருந்தப் போகிறான் கள்வெறியன்?

மிகையான குடியனுக்குக் கள்ளுண்ணுவதால் விளையும் தீங்குகளை எடுத்தறிவித்து அக்குற்றத்தினின்று விலக்குதல் என்பது நீரில் மூழ்கியுள்ளவனை தீவட்டி கொண்டு தேடினாற் போன்றது ஆகும்.
நீந்தமுடியாத ஒருவன் நீரில் மூழ்கிவிட்டான். அவனைக் கண்டுபிடிப்பதற்குப் பலவழிகள் உண்டு. நீருக்குள் மூழ்கி கண்ணால் பார்த்துக் கையால் துழாவி தேடலாம். நீருக்குள்ளும் இயங்கும் மின்விளக்குகள் இருக்கின்றன. அவற்றின் வெளிச்சத்தால் தேடலாம். ஆழமான இடம் என்றால் ஒலிக்கருவிகள் மூலமும் தேடலாம். இரவு வேளையில் தீப்பந்ததின் ஒளியின் உதவியால் ஒரு பொருளைத் தேடுவது உலக இயல்பு. ஆனால், தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு நீரினுள் மூழ்கிவிட்ட ஒருவனை நீரின் அடியில் தேடலாம் என்று யாரும் வழி சொன்னால் அவர் நகைப்படுவார். ஏனெனில் தீப்பந்தம் நீர்ப்பாகத்தின் மேற்பரப்பைத் தொட்டவுடனேயே அணைந்துவிடும். பின் எப்படி நீரின் அடிப்பகுதிக்குச் சென்று தேடுவது? அது இயலாத செயல். எனவே தீவட்டியைக் கொண்டு நீரில் மூழ்கி இருப்பவனைத் தேடிக் கண்டறிவது என்பது நினைக்கவே முடியாதது. அதுபோலத்தான் கட்குடிக்கு அடிமையாகிவிட்டவனுக்குக் காரணங்கள் கூறி விலக்கித் திருத்தமுற்படுதல் என்பது. அது பயன் தராது.

பின் எப்படிக் குடிகாரனைத் தெருட்டுவது?
இக்குறளைப் படிக்கும்போது வள்ளுவர் களித்தானைத் திருத்தவே முடியாது என்று நம்பிக்கையிழந்த மொழியில் கூறுவதுபோல் தோன்றும். எந்த ஒரு போதைப் பழக்கத்தில் இருப்பவனையும் திருத்துவது எளிதல்ல என்பது உண்மையே. ஆனாலும் திருத்தவே முடியாது என்பதல்ல. நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தத்தைக் கையில் பிடித்துக்கொண்டு தேடமுடியாது; அது வீண் செயல் என்றுதான் சொல்கிறது குறள். நீரில் மூழ்கியவனை மீட்கவே முடியாது என்று சொல்லவில்லை. அவனை மீட்பதற்கான சரியான வழிவகைகளைக் கையாள வேண்டும் என்று பாடல் சொல்வதாகத்தான் கொள்ள வேண்டும்.
கள் குடித்து மயங்கிக் கிடப்பவனைப் பார்த்து ‘இவன் தண்ணீரில் மூழ்கியிருக்கிறான்' என்று சொல்வது உலகவழக்கு. அறிவுரை கூறியவரிடம் 'இனி நான் குடிக்கவே மாட்டேன்' என்று சொன்னாலும் கள்ளைக் காணும் ஒவ்வொருமுறையும் அவன் உள்ளத்தில் மேலும் ஆசைகள் உண்டாகி, அவனைக் கள்ளைக் குடிக்கத் தூண்டுமேயொழிய, நல்லுரையை நினைந்து கள்ளைக் குடிக்காதபடி தடுக்காது. “குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு” என்பது பழமொழி.
வேறு என்ன செய்யலாம்? கள்ளுண்பவனை அப்போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கு அவன் குடிக்காமல் தெளிந்த நிலையில் இருக்கும்போது யார் சொன்னால் அவன் கேட்பான் என அறிந்து அவர்மூலம் அறிவுறுத்தவேண்டும். குடிகாரர்களை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்நாட்களில் Alcoholics Anonymous, Deaddiction and Rehabilitation Centre போன்ற, தொழில்முறை வல்லுநர்களைக் கொண்ட. பல நிறுவனங்கள் சிறந்த பணியாற்றுகின்றன. அவைகளைக் கலந்தெண்ணலாம். இவை பலரை நல்வழிக்குத் திருப்பியிருக்கின்றன. அரசியலாரும் மிகைக்குடியருக்கு பல கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். கள்ளின் பிடியில் இருந்து அறிவுரை கூறி மீட்பது கடினம்தான். ஆனாலும் அவர்களைத் திருத்த, நீருள் மூழ்கியவனை மின்விளக்கு வைத்துத் தேடுவது போல், பிறவழிகளிலும் முயலலாம்.

'தீத்துரீஇ' என்றால் என்ன?

'தீத்துரீஇ என்ற தொடர்க்குத் தீயினாற் சுட்டது, தீயினாற் அறிகுற்றது, கொள்ளிகொண்டு சுடுகிறது, தீயினால் சென்று துருவிப் பிடித்தல், விளக்கினால் நாடுதல், விளக்கைப் பிடித்துக்கொண்டு தேடுகிறது, விளக்குப் பிடித்துத் தேடுதல், தீவிளக்குக் கொண்டு தேடுவது, தீவட்டியை எடுத்துக் கொண்டுபோய்த் தேடுவது, தீப்பந்தம் கொண்டு தேடுவது, விளக்கால் தேடுதல், தீ விளக்கினால் துருவித் துருவித் தேடியது, விளக்கின் உதவி கொண்டு தேடுதல், விளக்கொளியால் தேடிப்பார்த்தல், நெருப்புப் பந்தத்தைக்கொண்டு தேடுவது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தீ என்ற சொல் நெருப்பு என்று பொருள்படுவது. துரீஇ என்றது ஒரீஇ, மரீஇ என்பன போலத் துருவி அல்லது துருவு என்பதன் திரிசொல். அது நாடுதல் அதாவது தேடுதல் என்னும் பொருளுடையது. தீத்துரீஇ என்பது தீயினால் தேடுதல் என்ற பொருள் தரும். தீயினால் தேடுதல் என்பது தீயின் வெளிச்சத்தின் உதவிகொண்டு தேடுதலைக் குறிக்கும். சில உரையாளர்கள் விளக்கைப் பிடித்துக்கொண்டு தேடுகிறது என்றனர். இவர்கள் விளக்கு என்று சொல்வது தீவிளக்கையே. தீப்பந்தம் அல்லது தீவட்டி கொண்டு தேடுதல் எனக் கொள்வது குறட்கருத்தைத் தெளிவாக்கும்.
''தீத்துரீஇயற்று' சங்கநூல்களிலும் காண இயலாத அரிய ஆட்சி இது. இந்நூலினும் இந்த ஓரிடத்தையன்றி வேறு ஆட்சி இல்லை' என்பார் தண்டபாணி தேசிகர்.

'தீத்துரீஇ' என்பதற்கு தீயின் வெளிச்சத்தில் தேடுவது என்பது பொருள்.

கள்ளுண்டு மயங்கியவனை அறிவு சொல்லித் திருத்துதல் நீருள் மூழ்கினவனைத் தீவட்டியால் தேடுவது போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கள்ளுண்ணாமை என்னும் நல்வழிக்குத் திரும்ப சமுதாயம் கைகொடுக்க வேண்டும்.

பொழிப்பு

கட்குடியனைச் சொல்லித் திருத்துதல் என்பது நீருள் மூழ்கினவனைத் தீவெளிச்சத்தால் துருவினாற் போலும்.