இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0925கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:925)

பொழிப்பு (மு வரதராசன்): விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

மணக்குடவர் உரை: பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல்.
இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.

பரிமேலழகர் உரை: பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து - அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து.
(தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவன் விலைப் பொருளைக் கொடுத்துக் கள்ளினால் தனக்கு மெய்ம் மறப்பினைக் கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமையுடையதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல் கையறி யாமை உடைத்தே.

பதவுரை: கைஅறியாமை-செய்வகை அறியமாட்டாமை, ஒழுக்கமறியாமை; உடைத்தே-உடையதே; பொருள்-பணம்; கொடுத்து-தந்து; மெய்அறியாமை-மெய்யுணர்வின்மை, மெய் மறப்பு, தன்னை மறத்தல்; கொளல்-பெறுதல்.


கையறியாமை உடைத்தே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயன் அறியாமை யுடைத்து:
பரிப்பெருமாள்: பயன் அறியாமை யுடைத்து;
பரிதி: என்ன மாயம்.
காலிங்கர்: இதன் பயன் அது ஆகலான் பெரிதும் தான் ஓர் ஒழுக்கம் அறியாமை என்னும் குற்றத்தை உடைத்து;
காலிங்கர் குறிப்புரை: ஈண்டு கை என்பது ஒழுக்கம்.
பரிமேலழகர்: அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. [பழவினை - முற்பிறப்பிற் செய்தவினை]

'பயன் அறியாமை/ஒழுக்கம் அறியாமை/செய்வதறியாமை உடைத்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழத் தெரியாமையாகும்', 'செய்யத்தக்கது எது (தகாதது எது) என்பதை அறியும் தன்மை இல்லாமையே ஆகும்', '(பழவினையான் வந்த) முறை அறியாமையாகும்', 'அறியாமையையுடையது ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்வதறியாமை காரணமாக உடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

பொருள்கொடுத்து மெய்யறியாமை கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.
பரிப்பெருமாள்: பொருள் கொடுத்துத் தம்மை அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மெய் என்பது தாம் என்பதும், ஒன்று என்பதும் அறத்துப்பாலில் கூறப்பட்டது; அன்றியும் பொருளில் உண்மை அறியாமை என்றும் ஆம். இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், இதனை அறிவுடையார் செய்யார் என்பது கருத்து.
பரிதி: கையில் பொருள் கொடுத்து மெய்யறியாக் கள்ளுண்டல் என்றவாறு.
காலிங்கர்: அஃது யாது எனின் ஒருவன் பித்து ஏறல் இன்றி வேண்டும் விலை கொடுத்தும் தான் மெய்ம்மறந்து ஒழுகுவது ஓர் மெய் அறியாமையைக் கோடல் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்;
பரிமேலழகர் குறிப்புரை: தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம். [அப்பொருட்டாதல்- செய்வது என்னும் பொருளினது ஆதல்]

பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மெய்யறியாமை என்றதற்கு அறியாமை என்று பரிப்பெருமாளும் மெய்ம்மறப்பினை என்று பரிமேலழகரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விலை கொடுத்தும் மெய்ம்மறதியை வாங்குதல்', 'பணத்தைக் கொடுத்து மெய்ம்மறதியை வாங்கிக் கொள்வது', 'அருமையான பொருளைக் கொடுத்து உடலை மறந்துவிடுதலாகிய அறியாமையைப் பெற்றுக் கொள்ளுதல்', 'பொருளினைக் கொடுத்துத் தன் மெய் மறப்பினைக் கொள்ளுதல் (குடித்து மயங்குதல்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விலை கொடுத்து மெய்ம்மறதியை வாங்கிக் கொள்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விலை கொடுத்து மெய்யறியாமை வாங்கிக் கொள்தல் கையறியாமை உடைத்து என்பது பாடலின் பொருள்.
'கையறியாமை' என்பதன் பொருள் என்ன?

பணம் கொடுத்து மயக்கத்தை வாங்குவதை எந்தவகை அறியாமையில் சேர்ப்பது?

தாம் என்ன செய்கிறோம் என்பதை உணரமாட்டாரே பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன்னை மறந்து திரிவர்.
அறிவின்மேல் வைத்துப் பழித்துக் கூறப்படுகின்ற செயல்களைச் சொல்லும் குறள்களில் இது ஒன்று. இங்கு அறிவின்மையால் கள்ளுண்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. விலை கொடுத்து வாங்கிக் கள்குடித்து அதனால் தன் உடம்பைத் தான் அறியாத நிலையைப் பெறுகின்றனர் அவர்கள். இது ஒருவிதப் பொழுதுபோக்குக்காக என்றாலும் தாம் செய்வதறியாத எத்தகைய பேதைமை என வள்ளுவர் அவர்களுக்காக இரங்குகிறார்.
இப்பாடலிலுள்ள மெய்யறியாமை என்ற தொடர்க்கு கள்ளின் உண்மைத்தன்மையை அறியாமை என்றும் உரைத்தனர் அதனினும் உடலுணர்விழந்து அறிவு மயங்கி என்ற பொருள் தகும். இவ்விதம் தன் கைப்பொருளைக் கொடுத்து மெய்ம்மறப்பினைக் கொண்டு கள்ளுண்பது பெருமடமையாகும்.

விலை கொடுப்பவர்கள் நல்ல பொருள்களைத் தேர்ந்தெடுத்துத்தான் வாங்குவார்கள். கட்குடியனோ பொருள் கொடுத்து மெய்மறக்கும் தீமையை வாங்குகிறான். தன்ன மறந்து சொரணை கெட்டு மயங்கிக் கிடப்பதற்காக ஒருவன் பொருள் கொடுத்து கள் வாங்கி உண்பது போன்ற அறியாமை வேறு ஒன்றுமில்லை. கையில் உள்ள பணத்தைக் குடிப்பதற்குச் செலவழித்து, தன்னுடைய உடல் நலத்தையும் மனநலத்தையும் அழித்துக் கொள்கிறான். எனவே அவனது அறியாமை இகழப்பட்டது.

'கையறியாமை' என்பதன் பொருள் என்ன?

'கையறியாமை' என்ற தொடர்க்குப் பயன் அறியாமை, ஒழுக்கம் அறியாமை, செய்வதறியாமை, செய்வது இன்னதென்று அறியாத அறியாமை, உலகில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்ற அறிவு இல்லாமை, உண்மை அறியாமை, வாழத் தெரியாமை, செய்யத்தக்கது எது (தகாதது எது) என்பதை அறியும் தன்மை இல்லாமை, ஒழுக்க இயல் அறியாமை, முறை அறியாமை, அறியாமை, சிறுமை மிகுந்த அறியாமை, செய்யும் முறைமையறியாமை, வாழ வேண்டிய ஒழுக்க நெறியினை அறியாத தன்மை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கை என்பதற்குப் பயன், ஒழுக்கம், சிறுமை, செயல் எனப் பலபொருள் கூறுவர். இதற்குச் செயல் என்று பொருள்கொண்டு கையறியாமை என்றதற்கு செய்வது அறியாமை எனப் பொருள் கூறுவார் பரிமேலழகர். 'கை' என்ற கருவியின் பெயர், அதன் காரியமாகிய செயலுக்கு ஆயிற்று; கருவியாகு பெயர் என்பார் இவர். மேலும் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநானூறு 209 பொருள்: பழங்களை யுடைய பெரியமரம் பழுத்து மாறியது என்று செய்வ தொழிந்து) என்ற சங்கப்பாடலில் கை என்பது செய்தல் என்ற பொருளில் வந்தததை மேற்கோள் காட்டுவார் பரிமேலழகர்.
தண்டபாணி தேசிகர் 'மேற்சொன்னவைகள் இச்சொல்லின் நேர் பொருளாகாமையை நுண்ணறிவுடையார் எவரும் உணர்வர். மேலும் கைவேல், கைக்குட்டை முதலிய தொடர்களில் இருபத்திரண்டிற்கும் மேற்பட்ட பொருளில் வழங்குகிறது. கைக்கிளை, கைக்குழந்தை என்பன போலச் சிறுமை என்னும் பொருளிலும் வரக் காண்கிறோம். ஆகவே கை என்பது உறுப்பின் பெயராயும், அதனால் விளைந்த ஒரு சாரிடம், ஒருபக்கம், ஒரு வழி என்னும் பொருளதாதயும், மேலும் பல பொருளதாயும் தமிழ் உலகில் விளங்குவதைக் காணலாம். இதனை எண்ணும் போது கை இடுகுறியளவாய் உறுப்பு முதலிய பொருளதாய், ஆகுபெயர் முதலான இலக்கண வகையான் பக்கம், செயல், இடம் முதலியவற்றிற்குப் பெயராயும் வருதல் சார்ந்து வரும் சொல்லின் தன்மையால் பல்வேறு பொருளைத் தருகின்றது எனலாம். கையறுநிலை, கையற்றார் என்புழிக் கை என்பதனை மட்டும் பிரித்து கை என்பதை மட்டும் குறிப்பின் அது செயல் என்னும் பொருளைத் தராது. 'கையறியாமை' என்பதனை ஒரு தொடராகக்கொண்டே 'செய்வதறியாதார்' என்பர் பரிமேலழகர். இங்ஙனம் வருவனவற்றுள் 'கை' (ஓருபசர்க்கமாக) ஓரிடைச்சொல்லாகக் கொண்டு இங்ஙனம் இணைந்த சொல்லாற்றலான் பலபொருள் கொணருவாராவர். ஆகையால் 'கை' என்பதுமட்டும் தனித்துப்பொருளறிவிக்காது என்பதும் எண்ணுக' என விளக்குவார்.
இவ்வாறு பரிமேலழகர் 'கையறியாமை' என்பதை ஒரு தொடராகக் கொண்டு 'செய்வதறியாமை' என்றார்.
'செய்' என்பதற்கு இனச்சொல் கை என்பதே எனக்கூறி, கை என்பது தொல்வழக்கு எனவும் குறித்துள்ளார் இ சுந்தரமூர்த்தி.
... கையறியாப் பேதை வினைமேற் கொளின்... (பேதைமை 836 பொருள்: ...செய்யும்முறை அறியாப் பேதையானவன் செயல் மேற்கொள்வானாயின்....) என்று பிறிதோரிடத்திலும் கையறியா என்பது செய்வது அறியாத என்ற பொருளில் குறளில் ஆளப்பட்டது.

கள்ளுண்ணலுக்கு அடிமைப்பட்டுவிட்ட ஒருவர் கள்ளைக் குடித்து அதனால் பெறப்படும் களிப்பு இல்லாமல் அவரால் வாழமுடியாது என்ற நிலையை அடைவார். அவர் தம் கைப்பொருள் இழப்பதோடு உடல், உள பாதிப்புக்களுக்கு ஆளாகிநிற்பார். இவற்றையெல்லாம் அறியாமலே மயக்கம் தரும் கள்ளுண்பதைத் தொடர்கிறார். இதுவே கள்ளுண்ணல் என்னும் செயல் அறியாமை அதாவது கையறியாமை.

விலை கொடுத்து மெய்ம்மறதியை வாங்கிக் கொள்தல் செய்வதறியாமை காரணமாக உடைத்து என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கள்ளுண்ணாமை அறிவுத் தெளிவு தரும்.

பொழிப்பு

விலை கொடுத்துக் கள்ளினால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல் செய்வதறியாமை காரணமாக உடையதாகும்.