இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0921உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:921)

பொழிப்பு (மு வரதராசன்): கள்ளின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவார்.

மணக்குடவர் உரை: பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார்.
இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.

பரிமேலழகர் உரை: கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர்.
(அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: கள்ளாசை கொண்டவர்கள் எக்காலத்திலும் பிறரால் மதிக்கப்படமாட்டார்கள்; உள்ள பெருமைகளையும் (சிறுகச் சிறுக) இழந்துவிடுவார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார் உட்கப் படாஅர்; ஒளியிழப்பர்.

பதவுரை: உட்கப்படாஅர்-மதிக்கப்படார், அஞ்சப்படார்; ஒளி-புகழ்; இழப்பர்-நீங்கப் பெறுவர்; எஞ்ஞான்றும்-எப்போதும், பொழுதெல்லாம்; கள்-கள்; காதல்-விருப்பம், வேட்கை; கொண்டு-கைக்கொண்டு; ஒழுகுவார்-நடந்து கொள்பவர்.


உட்கப் படாஅர் ஒளியிழப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர்;
மணக்குடவர் குறிப்புரை: இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.
பரிப்பெருமாள்: பிறரால் மதிக்கப் படார், தோற்றமும் இழப்பர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மதிக்கவும் படார்: புகழும் இலர் என்றது.
பரிதி: நல்லோரால் நினைக்கப்படான்; கீர்த்தியும் ஒழியும்;
காலிங்கர்: பிறரால் இவர் பெரியோர் என்று மதிக்கப்படார்; மற்று ஒளியினையும் இழப்பர்;
பரிமேலழகர்: எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். [ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதல் உடைமை]
பரிமேலழகர் குறிப்புரை: அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். [இகழற்பாட்டான் - இகழ்ச்சியால்]

மதிக்கப்படார்/அஞ்சப்படார்; தோற்றம்/ஒளி இழப்பர் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெட்கப்படார்; மதிப்புக்குறைவர்', 'பகைவர்க்கு அஞ்சப்படமாட்டார். முன் பெற்றிருந்த மதிப்பினையும் இழப்பர்', 'பகைவரால் அஞ்சப்படமாட்டார்; தமக்குள்ள மதிப்பையும் இழப்பர்', 'பகைவரால் அஞ்சப்படார்; புகழையும் இழப்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மதிக்கப்படார்; தோற்றம் இழப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார்.
பரிப்பெருமாள்: எல்லா நாளும் கள்ளினைக் காதல்செய்து ஒழுகுவார்.
பரிதி: கள்ளுண்பானாகில்.
காலிங்கர்: யார் எனின் எஞ்ஞான்றும் கள்ளின்மாட்டுக் காதல் கொண்டு ஒழுகும் கடுவினையாளர் என்றவாறு. [கடுவினையாளர் - கொலை முதலிய கொடுந்தொழில் புரிவார்]
பரிமேலழகர்: கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்;
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.

'எல்லா நாளும்/எஞ்ஞான்றும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் கள்ளாசை கொண்டு திரிபவர்', 'கள்ளின் மீது ஆசை கொண்டு விடாது குடிப்பவர் எக்காலத்தும்', 'எப்போதும் கள்ளிலே மிகுந்த விருப்பமுடையவராய் ஒழுகுபவர்', 'கள்ளின் மேல் விருப்பம் கொண்டு வாழ்பவர், எப்போதும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொழுதெல்லாம் கள்ளின்மீது பெருவிருப்பம் கொண்டு ஒழுகுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொழுதெல்லாம் கள்ளின்மீது பெருவிருப்பம் கொண்டு ஒழுகுபவர் உட்கப்படார்; தோற்றமும் இழப்பர் என்பது பாடலின் பொருள்.
'உட்கப்படார்' என்றால் என்ன?

நாள் முழுக்கக் கள் உண்பவர் தனது தோற்றத்தை இழந்து தோன்றுவார்.

எப்பொழுதும் கள்ளின்மீது வேட்கை கொண்டு நடப்பவரை அஞ்சுவார் யாருமில்லை; அவர் தனது தோற்றத்தையும் இழப்பார்.
ஒருவர் பொழுதெல்லாம் கள் அருந்திக் கொண்டேயிருக்கிறார். அதன் காரணமாக அறிவுமயக்கத்தில் தன்நிலை மறந்திருக்கிறார்; தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியமாட்டார். கட்குடியன் என்னும் பழிச்சொல் எய்துகிறார். அவரை யாரும் அஞ்சமாட்டார் ஆதலால் நன்கு மதிக்கப்படவுமாட்டார் அச்சம் கலந்த இடத்தில்தான் மதிப்பு தோன்றும் என்பதால்.
அதோடன்றி அவர் முன் பெற்றுள்ள ஒளியையும் இழப்பார். 'ஒளி' என்ற சொல்லுக்குத் தோற்றம் என்றும் புகழ் அல்லது மதிப்பு என்றும் பொருள் கூறினர். தெளிவான அறிவுடன் செயல்படுவர் முகத்தில் ஒரு ஒளி இருக்கும். நாளும் குடிப்பவர்க்கு அறிவு மங்கிவிடுவதால் முகத்தில் உள்ள அந்த ஒளி இழந்து காணப்படுவார். அவர் களை இழந்த தோற்றத்துடன் காட்சியளிப்பதை ஒளியிழப்பர் எனச் சொல்லப்பட்டது.
இவ்வாறாக இடைவிடாது கள் உண்பதால் அச்சமும் மதிப்பும் இல்லாத இகழ்ச்சியான நிலை உண்டாவதால் கள்ளுண்டல் தவிரவேண்டும் எனச் சொல்கிறது இக்குறள்.

காதல் என்னும் சொல் விருப்பம் என்ற பொருளிலும் குறளில் வழங்கியது. இப்பாடலில் காதல் என்பது விருப்பம் என்னும் பொதுப்பொருளில் ஆட்சி பெற்றது.

'உட்கப்படார்' என்றால் என்ன?

'உட்கப்படார்' என்றதற்கு மதிக்கப்படார், நினைக்கப்படார், அஞ்சப்படார், தமக்கு வருகிற நன்மை தீமைகளை அறியார், பகைவர் அஞ்சார், அஞ்சப்படாது எளியராவர், வெட்கப்படார், மனிதர் என்றே கருதப்படமாட்டார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'உட்கப்படார்' என்ற சொல்லுக்குச் சிலர் ‘உள்ளப்படாஅர்’ எனப் பாடங்கொண்டு நினைக்கப்படார் என உரை செய்தனர். பரிமேலழகர் அஞ்சப்படார் எனப் பொருள் கொண்டு உரை தந்தார். தண்டபாணி தேசிகரும் 'எத்துணைவன்மையுடையராயினும் காதலிக்கப்பட்ட கள்ளால் இவனை மயக்கலாம் என்ற உபாயமறிந்தமையின் இவன் பகைவர் இவனுக்கு அஞ்சார் என்பதாம்' என்று அச்சப் பொருளிலேயே உரைத்தார். ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (தகை அணங்கு உறுத்தல் 1088 பொருள்: போர்க் களத்தில் பகைவர்களும் அஞ்சி நடுங்கும் என் ஏற்றம், இவளது மிளிர்கின்ற அழகிற்கு அழிந்து விட்டதே!) என்றவிடத்தும் உட்கு என்பது அச்சப்பொருளிலே வந்தது. எனவே உட்கப்படார் என்பதற்கு அஞ்சப்படார் என்பது சிறந்த பொருளாகிறது.

'உட்கப்படார்' என்றது அஞ்சப்படார் எனப் பொருள்படும்.

பொழுதெல்லாம் கள்ளின்மீது பெருவிருப்பம் கொண்டு ஒழுகுபவர் அஞ்சப்படார்; தோற்றமும் இழப்பர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கள்ளுண்ணாமை தோற்றப் பொலிவை நிலைக்கச் செய்யும்.

பொழிப்பு

எப்பொழுதும் கள்ளாசை கொண்டு விடாது குடிப்பவர் அஞ்சப்படார்; தோற்றமும் இழப்பர்.