இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0923



ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:923)

பொழிப்பு (மு வரதராசன்): பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும்; குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?

மணக்குடவர் உரை: தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்?
எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.

பரிமேலழகர் உரை: ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்? - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்?
(மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கள்ளுண்ட மயக்கம் மக்கள் செய்வனவற்றை எல்லாம் உவப்போடு காணுந் தாய்க்குந் துன்பந் தருவதாகும். அங்ஙனமாயின், குற்றம் சிறிதும் பொறுக்காத குணவான்கள் முன் கள்ளுண்டு மகிழ்தல் எத்துணை வெறுப்பை விளைக்கக்கூடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.

பதவுரை: ஈன்றாள்-பெற்றவள்; முகத்தேயும்-முகத்திலும். முன்பாயினும்; இன்னாதால்-தீயதால், துன்பம் தருவதால்; என்-என்ன?; மற்று-பின், ஆனால்; சான்றோர்-சான்றோரது; முகத்து-எதிர், முன்பு; களி-கள்ளுண்டு களிப்பது, கள்ளுண்டு மகிழ்தல்.


ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்:
பரிப்பெருமாள்: தன்னைப்பயந்தாள் முன்னும் களித்தல் இன்னாது:
பரிதி: பெற்ற மாதாவிற்கும் இவன்குணம் பொருந்தாதாகில்;
காலிங்கர்: பெற்ற தாய்க்குப் புதல்வர் செய்யும் பிழையும் கூட இனிது அன்றே; மற்று அவள் முன்னரும் இன்னாதால்;
பரிமேலழகர்: யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்;

'பெற்ற தாய்க்கு முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கள்ளாட்டம் தாய்க்கும் அருவருப்பைத் தரும்', 'குற்றத்தை எல்லாம் பொறுத்து மகிழும் தாய் முன்னர் ஆனாலும் கள் உண்டு களித்தல் வெறுப்பினைத் தரும்', 'குடித்து வெறித்தவனை, அவனைப் பெற்றெடுத்த தாய் பார்த்தாலும் வெறுப்பாள் என்றால்', 'தாய் முன்பும் கள்ளுண்டு களித்தல் நல்லதன்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெற்ற தாய் முன்பாயினும் வெறுப்பைத் தருவதாம் என்பது இப்பகுதியின் பொருள்.

என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அங்ஙனமாகச் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்?
மணக்குடவர் குறிப்புரை: எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று.
பரிப்பெருமாள்: ஆதலால் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்?
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று. 'கள் உண்டல் இனிமை தரும் அன்றே; இதனால் வரும் குற்றம் என்னை' என்றார்க்கு அதனால் வரும் குற்றம் கூறுவார் முற்பட இன்னாமை பயக்கும் என்று கூறப்பட்டது.
பரிதி: சான்றோர்க்கு ஏதாகும் என்றவாறு.
காலிங்கர்: இனி என்ன வேறு சான்றோர் முன்னர்க் களி என்றவாறு.
பரிமேலழகர்: ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்?
பரிமேலழகர் குறிப்புரை: மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம். [ஈன்றாட்கும் - தாய்க்கும்; இருமையும் - இப்பிறப்பின் பயனையும் வருபிறப்பின் பயனையும்]

'சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்?' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவர்க்கு என்ன ஆகும்?', 'அவ்வாறு இருக்க, தீமை கண்டு விலக்கும் பண்பு நிறைந்த பெரியோர்முன் கள்ளுண்டு களித்தல் என்ன ஆகும்?', '(ஒழுக்கத்தையே விரும்பும்) நல்லவர்கள் பார்த்தால் எப்படியிருக்கும்?', 'அங்ஙனமிருக்கவும் சான்றோர் முன்பு கள்ளுண்டு மகிழ்தல் என் கருதி?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவ்வாறு இருக்க, பெரியோர் எதிரில் கள்ளுண்டு மகிழ்தல் எப்படியிருக்கும்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெற்ற தாய் முன்பாயினும் வெறுப்பைத் தருவதாம்; அவ்வாறு இருக்க, பெரியோர் முகத்துக் களி எப்படியிருக்கும்? என்பது பாடலின் பொருள்.
'முகத்துக் களி' என்ற தொடர் குறிப்பதென்ன?

மகன் கள்களித்து இளிப்பது பெற்ற தாயையும் முகம் சுளிக்கச் செய்யும்.

பெற்றெடுத்த தாயின் முன்பு மகன் கள்ளுண்ட மகிழ்வில் தோன்றுதல் அவளுக்கும் வெறுப்பையே தரும்; அப்படியிருக்கும்போது அவன் சான்றோர் முன் எப்படிக் களித்து நிற்பான்?
இன்னாதாம் என்ற சொல்லுக்குத் துன்பம் செய்வதாம் என்றும் வெறுப்பாகும் என்றும் பொருள் கூறுவர். இவற்றுள் இங்கு வெறுப்புத் தரும் என்றது பொருத்தம்.
உள்ளத்தில் உண்டாகும் அருவருப்பையோ வெறுப்பையோ அறிவிப்பது முகம் ஆதலால் முகத்தேயும் எனச் சொல்லப்பட்டது. தன் மகன் என்ன குற்றம் செய்தாலும் பொறுத்துக்கொள்ளக்கூடிய தாயும் அவன் கள்ளுண்டு மகிழும் நிலையைக் காணச் சகிக்க மாட்டாள்; குற்றம் எதையும் பொறுக்காத சான்றோர் அவனை எப்படி நோக்குவார் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

தன்மகன், என்ன குறும்பு செய்தாலும் அதனை விட்டுக் கொடுக்காமல் பெற்றவள் மனம் பொறுத்து அவனைத் தாங்குவாள்; ஆனால் அத்தகைய அன்புடைய தாயும் தன் மகன் கள்ளுண்ட களிப்போடு தன் எதிரே வந்து நின்றால் மிகவும் வெறுப்படைவாள். தன் மகன் சான்றோன் என ஊராரால் புகழப்படுவதை அல்லவா அவள் விரும்பினாள். ஆனால் அவன் இப்படிச் சான்றோர் பழிக்கும் கள்குடித்துக் கொண்டிருக்கிறானே என மனம் வெதும்பத்தானே செய்வாள். பெற்ற தாய்க்கே தன்மகனது செய்கையை பிடிக்காதபோது குற்றம் பொறுக்கமாட்டாத சான்றோர் எங்ஙனம் அதைத் சகித்துக்கொள்ள முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறார் வள்ளுவர். அது பெரியோர்க்கு அளவிறந்த அருவருப்பையும் வெறுப்பையும் விளைக்கும்.
கள்ளுண்டல் யாவர் முகத்தும் இன்னாமையே பயக்கும்; தாயின் முகமும் சான்றோரின் முகமும் கள்ளுண்டவனைக் கண்டால் எப்படி மாறும் என்பதைச் சொல்லி கள்ளுண்டல் வெறுக்கத்தக்கது எனக் கூறப்படுகிறது.

'முகத்துக் களி' என்ற தொடர் குறிப்பதென்ன?

'முகத்துக் களி' என்றதற்கு முன்பு களித்தல், முன்னர்க் களி, முன்னே கள்ளுண்டு களிக்கிறது, கள்ளுண்டு மயங்கிக் குளறுதல், முகத்தில் கள்ளுண்டு மயங்குதல், முன்பாகக் கள்ளைக் குடித்துச் செல்லுதல், முன் கள்ளுண்டு களித்தல், குடித்து வெறித்தவனை பார்த்தால், முன் கள்ளுண்டு மகிழ்தல், முன்பு கள்ளுண்டு மகிழ்தல், முன்னால் கள்ளுண்ட களிப்போடு நிற்றல், முன் குடித்துத் திரிவது, முன் கள்ளுண்டு வெறித்தல் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

களிப்பு என்ற சொல்லுக்கு மிகுந்த உவகை மகிழ்ச்சி என்பது நேர்பொருள். களிப்பு என்பதே இங்கு களி என வந்தது. சிலர் கள் உண்டு பெறும் இன்பத்தைப் பெரிதாக எண்ணுவர். அவர்களுக்கு கள்ளுண்பதால் களிப்பு உண்டாகிறது. காமத்துப்பாலில் களிப்பு என்ற சொல் கள்ளுண்ட களிப்பைக் குறிக்க ஆளப்படுகிறது. இப்பாடலில் களிப்பு என்பது கள்ளுண்டு களித்துப் பெறும் மயக்கநிலையைச் சொல்வது. முகத்துக்களி என்பது ஒருவர் முகத்துக்கு முன்பாக களிப்பு நிலையில் தோன்றுவது எனப் பொருள்படும்.
தேவநேயப்பாவாணர் களியான் நிகழும் நிகழ்ச்சிகளை இவ்விதம் விளக்குவார்: 'ஐம்புலனு மடங்கி அடியோடு உணர்விழத்தலும், வாய்காவாது மறைவெளிப்படுத்தலும் பித்தர்போற் பிதற்றலும், ஆடை விலகலும், அற்றம் மறையாமையும், தீநாற்றம் வீசுதலும், வாய் நுரைதள்ளுதலும், வழியிற் கிடத்தலும், வழிப்போக்கர் பழித்தலும், ஈமொய்த்தலும், இளஞ்சிறார் சிரித்தலும்.' சான்றோர் முகத்துக்கெதிரே இவ்விதம் அவனது கள்ளாட்டத்தைக் காணும் அவர்களுக்கு என்ன ஆகும்? எனக் கேட்கிறார் வள்ளுவர். அவன் மீதிருந்த நல்லெண்ணம் மறைந்து வெறுப்பு மட்டுமே மிஞ்சும் என்று சொல்லவும் வேண்டுமா?

'முகத்துக் களி' என்ற தொடர் எதிரில் கள்ளுண்டு மகிழ்தல் என்ற பொருளது.

பெற்ற தாய் முன்பாயினும் இன்னாதாம்; அவ்வாறு இருக்க, பெரியோர் எதிரில் கள்ளுண்டு மகிழ்தல் எப்படியிருக்கும்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கள்ளுண்ணாமையே எவர் முகத்தும் இனிமை பயக்கும்.

பொழிப்பு

பெற்ற தாய்க்கும் தன்மகன் குடிப்பது துன்பந்தரும்; பின், சான்றோர் எதிரில் குடித்துத் தோன்றினால் என்ன ஆகும்?