உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்
(அதிகாரம்:கள்ளுண்ணாமை
குறள் எண்:927)
பொழிப்பு (மு வரதராசன்): கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படுவர்.
|
மணக்குடவர் உரை:
தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.
பரிமேலழகர் உரை:
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர்.
(உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.)
வ சுப மாணிக்கம் உரை:
கள்ளை மூடிக்குடித்துக் கண் தடுமாறுபவரின் உள்ளத்தை அறிந்துகொண்டு ஊர்சிரிக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய்பவர் உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்.
பதவுரை: உள்ளொற்றி- உள்ளநடத்தை அறிந்து, உள்ளத்தை அறிந்துகொண்டு, உள்ளே நிகழும் செயல்கள் உணரப்பட்டு; உள்ஊர்--ஊருள், ஊரில் வாழும் மக்களால்; நகப்படுவர்-எள்ளப்படுவர்; எஞ்ஞான்றும்-எப்போதும்; கள்-கள்; ஒற்றி-மறைத்து; கண்சாய்பவர்- கண்செருகப்படுவர், கண்சுழல்பவர், அறிவு தளர்பவர்.
|
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்;
பரிப்பெருமாள்: தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்து உள்ளூராலே இகழப்படுவர்;
பரிதி: அவனிருந்த ஊர் சிரிக்கும்.
காலிங்கர்: தனித்தனி நெஞ்சினால் அயிர்த்து ஆராய்ந்து தாம் வாழும் ஊரின் மக்களானே எஞ்ஞான்றும் சிரிக்கப்படுவார்; [அயிர்த்து - ஐயப்பட்டு]
காலிங்கர் குறிப்புரை: உள் ஒற்றி என்பது நெஞ்சினால் அயிர்த்து ஆராய்ந்து என்றது.
பரிமேலழகர்: உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். [ஊருள் என்பது உள்ளூர் என்று வந்தது இலக்கணப்போலி]
பரிமேலழகர் குறிப்புரை: உள்ளூர் - ஆகுபெயர், உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.
'தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்து உள்ளூராலே இகழப்படுவர்/நெஞ்சினால் அயிர்த்து தாம் வாழும் ஊரின் மக்களானே சிரிக்கப்படுவார்/உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து நகுதல் செய்யப்படுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஊருக்குள்ளே வாழ்பவரால் உள்ள செய்திகள் அறியப்பெற்று எல்லா நாளும் சிரிக்கப்படுவர்', 'தினந்தினம் இரகசியமாக வீட்டுக்குள் குடித்துவிட்டு வீதியில் மானங் கெடுவார்கள்', 'உள்ளூராரால் உண்மை அறியப்பட்டு எக்காலத்துஞ் சிரித்து இகழப்படுவர்', 'உள்ளூரில் உள்ளவரால் உள் நிகழ்கின்றதை அறிந்து எப்பொழுதும் நகுதல் செய்யப்படுவர் ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உள்ளநடத்தை அறிந்து உள்ளூராரால் சிரிக்கப்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.
பரிப்பெருமாள்: எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே வாழுமவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உண்ணுமது அறிவார் இல்லை என்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: கள்ளுண்பானது ஆசார ஈனப் புத்தியறிந்து [ஆசார ஈனப்புத்தி - ஒழுக்கங் கெட்ட அறிவு]
காலிங்கர்: யார் எனின், கள் உள்ள வழி ஒற்றிச் சென்று மற்று ஆங்கே தம் கண்ணோடித் திரிபவர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: கள் ஒற்றி என்பது கள் உளவழி ஆராய்ந்து என்றது. கண் சாய்பவர் என்பது கண்ணோடித் திரிபவர் என்றது.
பரிமேலழகர்: கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; [உண்டு என்பதைக் கண்சாய்பவர் என்பது அவாவி நிற்றலால் அது வருவிக்கப்பட்டது; தளர்ச்சியால் - சோர்வால்]
பரிமேலழகர் குறிப்புரை: 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது.
'எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார், வாழ்மவர்/கள் உள்ள வழி ஒற்றிச் சென்று மற்று ஆங்கே தம் கண்ணோடித் திரிபவர்/கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கள்ளை மறைத்துக் குடித்து நிலைமாறிக் கண் சுழல்பவர்', 'கள்ளைக் குடித்து நிதானமிழந்து கண் சுழலுகின்ற (இயல்புடைய) குடியர்கள்', 'கள்ளை மறைந்துண்டு அறிவு சோர்பவர்', 'கள்ளை மறைந்து உண்டு களிப்பால் மயங்கி வீழ்பவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நாளும் கள்ளை நாடிக் குடித்து கண் சுழல்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நாளும் கள்ஒற்றிக் கண்சாய்பவர் உள்ளநடத்தை அறிந்து உள்ளூராரால் சிரிக்கப்படுவர் என்பது பாடலின் பொருள்.
'கள்ஒற்றிக் கண்சாய்பவர்' யார்?
|
கட்குடியனது நடத்தை சிரிப்பை வரவழைக்கும்.
நாளும் கள்ளைத் தேடி உண்டு கண் சோர்ந்திருப்பவரது ஒழுகுமுறை உள்ளூர்க்காரர்களால் அறியப்பட்டு அவர் எள்ளி நகையாடப் பெறுவார்.
ஒருவன், கள்கிடைக்கும் இடம் நாடி பொழுதும் கள்ளுண்டு மகிழ்கின்றான்; அந்தக் களிப்பு தலைக்கேறி அறிவு மயங்கி, ஏதேதோ பேசுகின்றான். நகைக்கத் தகும் செயல்கள் செய்கிறான். பின் நிலைதடுமாறி கீழே விழுந்துகிடக்கிறான். இச்செய்திகள் ஊரெங்கும் பரவி நகைக்கப்படுகின்றன. நகைப்புக்குரிய வகையிலான அவனது இழிவான நடத்தை ஊரார்க்குத் தெரிய வரும்போது அவர்களுக்குச் சிரிப்பு வருவது இயல்பே.
ஊர் மக்கள் அனைவருமே சிரிப்பார்கள் என்றதால் கள்ளுண்டவன் எவ்வளவு இழிவாக ஒழுகினான் என்பதை அறியலாம்.
எஞ்ஞான்றும் என்ற சொல் எப்பொழுதும், எக்காலத்தும் என்று பொருள்படும், இங்கு நாள்முழுதும் கள்ளுண்பவன் பற்றிப் பேசப்படுகிறது.
உள்ளொற்றி என்றதற்கு உள்ளதை ஆராய்ந்து அறிதல் என்பது பொருள். உள்ளான ஒழுக்கத்தை/செய்திகளை அறிந்து என்றும் உள்ளத்தை அறிந்துகொண்டு என்றும் பொருள் கொள்வர். உள்ளத்திலுள்ள மறைபொருள்கள் உய்த்துணரப்பட்டு என்றும் உரை செய்தனர்.
ஒருவன் கள்ளருந்தியபின் அவன் நடத்தை நகைக்கத்தக்கதாக ஆனதை அறிந்து கொள்வதைச் சொல்லும் தொடராக உள்ளொற்றி என்பது உள்ளது.
அவனது ஒழுக்கத்தை ஆழ்ந்து ஆராய்ந்து கண்டறிவது என்றும் ஒழுக்கக் கேடான செயலையறிந்து என்றும் ஐயப்பட்டு ஆராய்ந்து அறிந்து என்றும் உள்நிகழ்கின்றது உய்த்துணர்ந்து என்றும் தொல்லாசிரியர்கள் இத்தொடரை விளக்கினர். இன்றைய ஆசிரியர்கள் கள்ளுண்டவன் மறைபொருள்களைக் காப்பது இயலாது; குடியாத காலத்தில் தம் உள்ளத்தில் மறைத்துவைத்திருந்தனவும் தமக்கு எதிரானவும் தம்மைக் கீழ்மைப்படுத்துவனவுமான செய்திகளையும் வெளிவிடுவான். குடிநிலையில் மனதில் உள்ள எல்லாவற்றையும் வாயால் கொட்டிவிடுவான். அதுவே 'உள்ளொற்றி' எனப்படுவது என்ற பொருளில் உரை கூறுவர். மேலும் 'கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்' என்ற பழமொழிக்கேற்ப சிலர் கட்குடிப் பழக்கமுள்ளவர்களைக் குடிக்கவிட்டு தம் வாயாலேயே அவர்கள் உள்ளத்திலுள்ள மறைபொருள்களை வெளிக்கொணர்ந்து அதன்மூலமும் நகையாடுவர்.
குடித்து வருபவனது தள்ளாட்ட நடையும் கண்சுழற்சியும் குளறல் மொழியும் அறிவு மயக்கமும் சிரிப்புக்கிடமானவையே.
|
'கள்ஒற்றிக் கண்சாய் பவர்' யார்?
'கள்ஒற்றிக் கண்சாய்பவர்' என்ற தொடர்க்குக் கள்ளுள்ளவிடத்தை நாடி அதன்கண்ணே தாழ்வார், கள்ளுள்ளவிடத்தை நாடி அதன்கண்ணே வாழுமவர், கள் உள்ள வழி ஒற்றிச் சென்று மற்று ஆங்கே தம் கண்ணோடித் திரிபவர், கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார், கள்ளை மறைந்துண்டவர் கள் மயக்கத்தால் அறிவு தடுமாறுவார், கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், கள்ளை மறைவாக உண்டு அறிவு மயங்கிக்கண் சோர்பவர்கள், கள்ளை மூடிக்குடித்துக் கண் தடுமாறுபவர், கள்ளை மறைத்துக் குடித்து நிலைமாறிக் கண் சுழல்பவர், கள்ளைக் குடித்து நிதானமிழந்து கண் சுழலுகின்ற (இயல்புடைய) குடியர்கள், மயக்கும் குடியோடு கூடியிருந்து கண்ணுறங்குபவர், கள்ளை மறைந்துண்டு அறிவு சோர்பவர், கள்ளை மறைந்து உண்டு களிப்பால் மயங்கி வீழ்பவர், கள்ளை மறைவாகக் குடித்துக் கண்மயங்கிச் சாய்பவர், கள்ளை மறைந்துண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர், கள்ளை விரும்பி உண்டு கண் செருகி மயங்குகிறவர் என்றவாறு பொருள் கூறினர்.
கள்ளொற்றி என்றதற்குக் கள் கிடைக்குமிடம் அறிந்து என்பது பொருள். இத்தொடர்க்குக் கள் உள்ள இடத்தை நாடி என்றும் கள் உள்ள வழி ஒற்றிச் சென்று என்றும் தொல்லாசிரியர்கள் பொருள் கூறினர். 'கள்ளை மறைத்துண்டு' எனவும் பொருள் கூறினார்.
கள்ளொற்றி என்ற தொடர்க்குக் கள்ளை மறைந்துண்டு எனப் பலர் பொருள் உரைத்துள்ளனர். கள்ளை ஏன் மறைந்து உண்ணவேண்டும்? ஒரு பொருள் சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தால் அதை மறைந்திருந்து துய்ப்பர். அல்லது அப்பொருளை நுகர்வது இழிவான பழக்கமாகக் கருதப்பட்டால் மறைவு தேவை. ஆனால் வள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்னரும் கள்ளுண்பது ஒரு நாகரிகப் பழக்கமாகக் கருதப்பட்டதாகவே அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். அச்சமுதாயம் கள்ளருந்துவதை இழிவான செயலாகக் கருதவில்லை என்றே தெரிகின்றது. எனவே 'எஞ்ஞான்றும் கள்ளுண்ணல்' அதாவது பொழுதெல்லாம் கள்ளருந்துவது இழிவானதாகக் கருதப்பட்டிருக்கலாம் என எண்ண வேண்டியுள்ளது.
பரிப்பெருமாள் 'எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே வாழுமவர்' என்றார். மணக்குடவரும் இக்கருத்தினரே. இவை மிகையாகக்குடிப்பவன் என்பதைத் தெரிவிக்கின்றன. இதனால் கள்ளொற்றி என்பதற்கு மறைந்துண்டு என்பதினும் 'கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே வாழுமவர் அல்லது அங்கேயே சுற்றித் திரிபவர்' என்ற உரை சிறக்கும்.
கண் சாய்பவர் என்பதற்குக் கண் சுழல்பவர் என்பது பொருள். இத்தொடர்க்கு அதன் கண்ணே தாழ்பவர், அறிவு தளர்வார், கண் ஓடித்திரிபவர் எனப் பொருள் கூறுவர்.
'கள்ஒற்றிக் கண்சாய்பவர்' என்பது கள் உள்ள இடத்தை நாடி கள்ளுண்டு கண் சுழல்பவர் என்ற பொருள் தரும். இது மிகையாகக் குடித்ததினால் உண்டான சோர்வைக் குறிப்பது.
சோர்வினால் அறிவுதளர்ந்து கண் சொருகுவதைக் குறிக்கும்.
|
நாளும் கள்ளை நாடிக் குடித்து கண் சுழல்பவர் உள்ளநடத்தை அறிந்து உள்ளூராரால் சிரிக்கப்படுவர் என்பது இக்குறட்கருத்து.
கள்ளுண்ணாமை ஊராரால் மதிக்கப்படும் வாழ்வு கிடைக்கச் செய்யும்.
நாளும் கள்ளை நாடிக்குடித்துக் கண் சுழல்பவரின் உள்ளநடத்தை அறிந்து உள்ளூராரால் சிரிக்கப்படுவர்.
|