துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
(அதிகாரம்:கள்ளுண்ணாமை
குறள் எண்:926)
பொழிப்பு (மு வரதராசன்): உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
|
மணக்குடவர் உரை:
உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்; அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான்.
இஃது அறிவிழப்பரென்றது.
பரிமேலழகர் உரை:
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர்.
(உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
அறிவிழத்தலால் உறங்கினவர் இறந்தவரோடு ஒப்பர். அது போல, மயங்குதலால் எல்லா நாளும் கள்ளுண்பவர் நஞ்சுண்பவரோடு ஒப்பர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்; கள்ளுண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார்.
பதவுரை: துஞ்சினார்-உறங்கினவர்கள்; செத்தாரின்-இறந்தவரைக் காட்டிலும்; வேறு-பிறர்; அல்லர்-ஆகமாட்டார்; எஞ்ஞான்றும்-எப்போதும், எக்காலத்தும்; நஞ்சு-நஞ்சு, விஷம்; உண்பார்-பருகுபவர்; கள்-கள்; உண்பவர்-குடிப்பவர்.
|
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்;
பரிப்பெருமாள்: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்;
பரிதி: நித்திரையும் மரணமும் வேறல்ல;
காலிங்கர்: உலகத்து ஓவாது துஞ்சினார் என்றும் செத்தார் என்றும் வருவதன் பொருள் கருதின், இறந்து பட்டார் என்பதே தரவல்லது; துஞ்சினார் என்றது வேறு ஒன்றும் அல்ல; [ஓவாது-இடைவிடாது]
பரிமேலழகர்: உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்;
'உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துஞ்சினவர் என்பவர் செத்தவரே', 'மெய்ம்மறதி உற்றவர்கள் யாரானாலும் அவர்கள் உயிரற்ற பிணத்துக்கே சமானம்', 'தூங்கினவர் செத்தாரின் வேறாகத் தோன்றார்', 'உறங்கினார் செத்தாரைவிட வேறு அல்லர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உறங்கினார் செத்தாரைவிட வேறாகத் தோன்றார் என்பது இப்பகுதியின் பொருள்.
எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவிழப்பரென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரை ஒப்பர், மயங்குதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறிவிழப்பரென்றது.
பரிதி: நஞ்சு தின்பானும் கள்ளுண்பானும் சரி என்றவாறு.
காலிங்கர்: கள் உண்பவரும் நஞ்சு உண்பாரின் வேறு அல்லர் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர்.
பரிமேலழகர் குறிப்புரை: உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது. [உயிர்ப்பு நிற்றல்- மூச்சு நின்று விடுதல்]
'எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கள்ளுண்பவர் என்பவர் நஞ்சுண்பவரே', '(ஆகையினால்) கள்ளுண்டு மெய்ம்மறதி அடைகின்றவர்கள் (கள்ளை உண்ணுந்தோறும் உயிரைப் போக்கிப் பிணமாக்கிவிடுகிற) விடத்தைச் சாப்பிடுகிறவர்களே ஆகிறார்கள்', 'அவ்வாறே கள்ளுண்பவர் எக்காலத்தும் உயிர்க்கு அறிகுறியாகிய அறிவை இழத்தலால் நஞ்சுண்டவரே ஆவர்', 'அவ்வாறே எப்பொழுதும் நஞ்சு உண்பவரினின்றும் வேறுபட்டவர் அல்லர் கள் உண்பவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கள் குடிப்பவர் எப்பொழுதும் நஞ்சுண்பவரே என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உறங்கினார் செத்தாரைவிட வேறாகத் தோன்றார்; எஞ்ஞான்றும் கள்ளுண்பவர் நஞ்சுண்பார் என்பது பாடலின் பொருள்.
'எஞ்ஞான்றும் கள்ளுண்பவர் நஞ்சுண்பார்' என்ற பகுதி குறிப்பது என்ன?
|
கள் ஓர் மெல்லக் கொல்லும் நச்சுணவு.
உறங்கினவர் தூங்கும்காலத்துச் செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே எப்பொழுதும் கள்ளுண்டு களிப்பவர், நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்; விரைவில் சாவர்.
தம் மெய்மறந்து உறங்கும் வேளை ஒருவர் செத்தவர் போன்றிருப்பர்; அவ்வாறே கள்ளுண்பவர்கள் நஞ்சுண்பவர் போன்றோரே.
தன்னை மறந்து தூங்குவதால் செத்தவனைப் போல காணப்படுவதால் செத்தவனுக்கும் உறங்குபவனுக்கும் வேறுபாடு இல்லை. தூக்கத்திற்குச் சிறுசாவு என்ற பெயருமுண்டு.
உறங்குபவர் மூச்சு விடாது இருந்தால் செத்தவர் போலவே இருப்பார். அது தவிர்த்து வேறு வேறுபாடு உறங்குபவர்க்கும் இறந்தவருக்கும் இல்லை.
உறங்கு வதுபோலும் சாக்காடு..... (நிலையாமை 339 பொருள்: தூங்குவது போன்றது இறப்பு....) என்று மற்றொரு இடத்திலும் உறக்கத்தையும் சாவையும் இணைத்துப் பேசப்பட்டுள்ளது. உறங்கினவருக்கும் இறந்தவருக்கும் எவ்விதம் பெரிய வேறுபாடில்லையோ அவ்விதம்தான் கள்ளுண்பவனுக்கும் நஞ்சுண்பவனுக்கும் வேறுபாடு பெரிதாக இல்லை.
கள் குடிக்கிறான் என்பதினும் நஞ்சு அருந்துகிறான் என்று சொல்வது பொருத்தம்.
தூங்கினவனும், செத்தவனும் உணர்வால் ஒரு நிலையர்தான். இது துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் என்பதை விளக்கும்.
இக்குறளில் துஞ்சினார் செத்தார் நஞ்சுண்பார் கள்ளுண்பவர் ஆகிய நால்வர் சுட்டப்படுகின்றனர். இவர்களுக்குள் உள்ள இயைபு என்ன?
மணக்குடவர் உறங்கினார் செத்தாரோடு வேறல்லர் அறிவிழத்தலால், கள்ளுண்பார் நஞ்சுண்டாரோடும் வேறல்லர் மயங்குதலால் என அறிவிழத்தல், மயங்குதல் என்ற இருவேறுவகையான பொதுத்தன்மைகளை இயைத்துக் காட்டினார்.
காலிங்கர் 'உலகத்து ஓவாது துஞ்சினார் என்றும் செத்தார் என்றும் வருவதன் பொருள் கருதின், இறந்து பட்டார் என்பதே தரவல்லது அதாவது துஞ்சினார், செத்தார் என்பன இறந்தார் என்னும் பொருள் தருவன என்றார். துஞ்சுதல், சாதல் என்ற இரண்டும் சொல்லால் வேறுபாடே தவிரப் பொருளில் வேறுபாடில்லை. அதுபோல நஞ்சுண்பாரை மங்கல வழக்குப் போலக் கள்ளுண்பார் என்று சொல்கிறோம். கள்ளும் நஞ்சும் தம்முள் வேறல்ல' என்றவாறு உரைப்பொருள் தந்தார்.
பரிமேலழகர் உரை 'ஒருவர் தூங்கும்போது மட்டும் அறிவின்மையால் முற்றும் உணர்விழந்த செத்தார் நிலையை ஒப்பர். அதுபோலவே நஞ்சு உண்டவுடனே உணர்வை நிலையாக உயிரிலிருந்து பிரிக்கும்; கள்உண்ட காலம் தொடங்கி உணர்வைச் செயல்படாமல் தடுக்கும்; நாள்முழுக்க கள் உண்பாராயின் அது நஞ்சு போல நிலையாக உணர்விழக்கச் செய்து விரைந்து சாக வைக்கும்' என்ற கருத்தில் அமைந்தது. இவர் துஞ்சினார் செத்தார்க்கும் பொதுத்தன்மை அறிவின்மை என்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்க்கும் பொதுத்தன்மை அறிவின்மை என்றும் இரு இடங்களிலும் அறிவின்மை ஒன்றையே குறிப்பார். இது சிறப்பான விளக்கமாக உள்ளது.
இக்குறளைத் துஞ்சினார் நஞ்சுண்பார், செத்தார் கள்ளுண்பவர் என்று முறை நிரல் நிறைப் பொருள் கோளாகிச் சொற்கள் மாற்றப்படுதலால், உறங்கினவரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலால், செத்தாரும் கள்ளுண்பாரும் ஒப்பர் என்றவாறும் உரைகூறினர் எனப் பரிமேலழகர் தனது உரையில் சுட்டியுள்ளார். அவர் அவ்வுரையை 'கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தின் பொருள் நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்று பின்னதாய் இருக்க, எந்த தொடர்பும் இல்லாத நஞ்சுண்பார்க்கு, துஞ்சினார் என்பவரை உவமையாக்கி இங்குக் கூறுதல் பயனின்று ஆதலாலும் சொற்கிடக்கை நிரல் நிறையாகக் கொள்ளப் பொருந்தாது இருத்தலாலும் அவ்வுரை உரையாகாது' என மறுத்து முள்ளார்.
தண்டபாணி தேசிகர் 'வள்ளுவர் 'எஞ்ஞான்றும் துஞ்சுவார் செத்தாரின் வேறல்லர்; அதுபோல எஞ்ஞான்றும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரே யாவர்' எனக் கூறி யிருப்பாரோ என்று எண்ணவும் செய்கிறது குறட்பாவின் அமைப்பு' எனக் கூறுகிறார்.
|
''எஞ்ஞான்றும் கள்ளுண்பவர் நஞ்சுண்பார்' என்ற பகுதி குறிப்பது என்ன?
நஞ்சு என்பது எட்டிவிதை, பாம்பு, தேள் இவற்றின் விடம் போன்று உயிர்கொல்லும் தன்மையுள்ள பொருளைக் குறிக்கும் சொல்.
கள் ஒருவகை நஞ்சாகும் என்று சொல்ல வருகிறது இப்பாடல். நஞ்சு என்ற சொல் பொதுவாக உண்டவுடன் உயிரை மாய்ப்பதைக் குறிப்பது. சிலவகை நச்சுப்பொருள் உடலினுள் சென்று மெதுவாக வேலைசெய்து உயிரைப் பறிக்கும். இதை ஆங்கிலத்தில் 'Slow Poison' என்று சொல்வார்கள். கள் குடிப்பவர் இந்த மெல்லக் கொல்லும் நஞ்சை உண்கிறார் என்று சொல்கிறார் வள்ளுவர். கள்ளைத் தொடர்ந்து குடிப்பதானது சிறிது சிறிதாக நஞ்சினை உண்பதற்கு ஒப்பாகும். அவன் விரைவில் செத்தழியும் வழியில் செல்கிறான் ஆவான்.
கண்ணுமண்ணு தெரியாமல் நாளும் கள் குடிப்பவரை எஞ்ஞான்றும் கள்ளுண்பார் என்கிறார் வள்ளுவர்.
கள்ளுண்போர் நஞ்சை அருந்துகிறோம் என்பதை நினைவிற்கொண்டால் நலம். நஞ்சைக் குடிப்பதும் கள்ளுண்பதும் ஒன்றுதான் என்று சொல்கிறது இக்குறள்.
தண்டபாணி தேசிகர் 'கடவுள் வாழ்த்தின் முதற்கண் அதிகாரத்திற்கு இயைபில்லாத உவம வாசகம் முதலிடம் பெறுகிறது. அதிகாரப் பொருள் அதனை உவமாகக் கொண்டு பின்னர் உரைக்கப்படுகிறது. அது போல ஈண்டும் கூறினார் எனல் இழுக்குப் பயப்பதாகாது. ஆகவே 'எஞ்ஞான்றும் கள்ளுண்பார் (ஆகிய) துஞ்சினார் நஞ்சுண்பாராய்ச் செத்தாரின் வேறல்லர்' எனக் கூட்டிப் பொருள் காணல் தகும். இது கொண்டு கூட்டேயன்றி நிரனிறையன்று. இதனால் கள் நஞ்சாய்க் கொல்வது என்ற அதிகாரப் பொருண்மையும் விஞ்சி நிற்றல் காணலாம்' என விளக்குவார்.
|
உறங்கினார் செத்தாரைவிட வேறாகத் தோன்றார்; எப்பொழுதும் கள் குடிப்பவர் நஞ்சுண்பவரே என்பது இக்குறட்கருத்து.
கள்ளுண்ணாமை நீடு வாழச்செய்யும்.
உறங்கினவர் இறந்தாரைவிட வேறல்லர்; எப்பொழுதும் கள்ளுண்பவர் நஞ்சுண்பவரே.
|