நாணென்னும் நல்லாள் புறம்கொடுக்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின்பு காட்டிப்போம்;
மணக்குடவர் குறிப்புரை: இது நாணம் போமென்றது.
பரிப்பெருமாள்: நாணமென்று சொல்லப்படுகின்ற நன்மடந்தை பின் காட்டிப்போம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாணம் போமென்றது.
பரிதி: இன்னான் என்றும் பேர் சொல்லமாட்டான்;
காலிங்கர்: நாண் என்னும் நன்னெறியாட்டி இவனின் நீங்கிப் புறத்து ஏகும்;
பரிமேலழகர்: நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள். [எதிர்முகம் ஆகாள் -எதிர்ப்படாள்]
'நாண் என்னும் நன்னெறியாட்டி இவனின் நீங்கிப் புறத்து ஏகும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நாண் என்னும் நங்கை விட்டுப் போவாள்', 'நாண் என்று சொல்லப்படும் சிறப்புடை நங்கை எதிரே நிற்காமல் ஓடிவிடுவாள்', ''நாணம்' என்னும் நல்ல பெண் (முகமெடுத்தும் பாராமல்) முதுகைக் காட்டுவாள்', 'நாண் என்று சொல்லப்படுகின்ற உயரந்தவள் வாராள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நாண் என்று சொல்லப்படும் நல்ல பெண் எதிரே நிற்காமல் திரும்பிப் போய்விடுவாள் என்பது இப்பகுதியின் பொருள்.
கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு.
பரிப்பெருமாள்: கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு.
பரிதி: கள் என்னும் பேய் பிணித்தாற்கு2 என்றவாறு.
காலிங்கர்: இவ்வாறு புறம் மாறிப் போவது யார்க்கு எனின், கள் என்று எடுத்துரைக்கப்படும் சிறிது உணர்வுடையோர் யாவராலும் விரும்பப்படாதாகிய இந்தப் பெரிய குற்றத்தை உடையோர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: கள் என்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை;
பரிமேலழகர் குறிப்புரை: காணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவராகலின் 'பேணா' என்றும்,பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையின், 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும் கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. இவை மூன்று பாட்டானும் ஒளியிழத்தற் காரணம் கூறப்பட்டது. [பேணா - விரும்பாத; கழுவப்படாமையின் - பிராயச்சித்தத்தால் போக்கப்படாமையின்; ஒளி - பிறரால் மதிக்கப்படுதல்]
'கள்ளுண்டலாகிய பிறரால் விரும்பப்படாத பெரிய குற்றத்தினையுடையார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கள் குடிக்கும் தகாத பெருங்குற்றம் உடையவரை', 'கள்ளென்று சொல்லப்படும் யாவரும் இகழும் பெருங்குற்றம் உடையவர்க்கு', 'கள்ளைக் குடிப்பது என்ற மிகவும் விரும்பத்தகாத குற்றத்தைச் செய்கிறவர்களுக்கு', 'கள்குடி என்று சொல்லப்படுகின்ற பெரியோர் விரும்பாத பெருங்குற்றத்தினையுடையார்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கள்குடித்தல் என்று சொல்லப்படுகின்ற விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.
|