இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0928களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:928)

பொழிப்பு (மு வரதராசன்): கள்ளுண்பவன் `யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்' என்று சொல்லுவதை விடவேண்டும்: நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

மணக்குடவர் உரை: கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு.
உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான்.
('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)

குழந்தை உரை: நான் கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதை விட்டு விடுக; உண்ணாதபோது நெஞ்சத்து மறைத்து வைத்த அக்களிப்பும் கள்ளை உண்ட அப்போதே வெளியில் வந்து விடும்.,


பொருள்கோள் வரிஅமைப்பு:
களித்தறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பதவுரை: களித்து-(கள்ளுண்டு) மகிழ்ந்து, மயங்கி; அறியேன்-அறியமாட்டேன்; என்பது-என்றல், என்று சொல்லுவது; கைவிடுக-விட்டுவிடுக, ஒழிக; நெஞ்சத்து-உள்ளத்தில்; ஒளித்ததூஉம்-மறைத்ததும்; ஆங்கே-அப்போதே; மிகும்-மேற்படும்.


களித்தறியேன் என்பது கைவிடுக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக:
பரிப்பெருமாள்: கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக:
பரிதி: களித்தறியேன் கள்ளுண்டபோது என்று சொல்லுகின்ற ஆங்காரத்தை விடுக;
காலிங்கர்: ஒருவன் கள்ளின் களித்தும் மற்று அதனால் யான் அறியேன் என்பதனைக் கைவிடுவான் ஆக;
பரிமேலழகர்: மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக;
பரிமேலழகர் குறிப்புரை: 'களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார்.

'கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'கள்ளின் களித்தும் அதனால் யான் அறியேன் என்பதனைக் கைவிடுவான் ஆக' என உரைத்தார். பரிமேலழகர் 'மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடியை மறைக்கலாம் என்பதை விட்டொழி', 'மறைத்துக் கள்ளுண்டவன் 'யான் கள்ளுண்டறியேன்' என்று பொய் கூறுதலைத் தவிர்க', ''மறைந்து கள்ளுண்டு நான் கள்ளுண்டறியேன் என்று பொய்ம்மொழிதலை விட்டு விடுக', 'மறைவாகக் கள்ளை உண்டுவிட்டு 'யான் கட் குடித்து அறியேன்' என்று கூறுதலை விட்டு விடுக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதைக் கைவிடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு.
மணக்குடவர் குறிப்புரை: உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, மயங்கேம் என்பார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: நெஞ்சத்தில் ஒளித்திருந்த இரகசியத்தையும் சொல்லப்பண்ணும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அக்களவினையும் கள்ளினால் களித்தகாலத்துப் பித்தரைப் போலப் பிறர் அறிய விட்டுப் பேசும் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.

'மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்/நெஞ்சத்தில் ஒளித்திருந்த இரகசியத்தையும் சொல்லப்பண்ணும்/அக்களவினையும் பிறர் அறிய விட்டுப் பேசும்/அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறைத்ததைக் குடி உடனே வெளியாக்கும்', 'மனத்தில் மறைத்து வைத்ததும் அப்பொழுதே வெளிப்பட்டுவிடும்', 'கள்ளுண்ட காலத்து உள்ளத்தில் மறைத்துவைத்த உண்மை வெளியாய்விடும்', 'கள்ளுண்ட காலத்தில் நெஞ்சில் மறைந்துள்ளனவும் வெளிப்படும். ஆகவே கள்ளுண்டிருத்தலை யாவரும் அறிவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மனத்துள் நிறுத்தியிருந்த மறைகளும் முற்பட்டு வெளிப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதைக் கைவிடுக; மனத்துள் நிறுத்தியிருந்த மறைகளும் முற்பட்டு வெளிப்படும் என்பது பாடலின் பொருள்.
'ஒளித்ததூஉம்' என்பதன் பொருள் என்ன?

எவ்வளவு குடித்தாலும் மயங்கமாட்டேன் என்று சொல்லுபவனே எல்லாவற்றையும் உளறிவைப்பான்.

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் களித்தறியேன் என்று சொல்லுதலை விட்டுவிடுக; ஏனெனில் உள்ளத்தில் நிறுத்தியிருந்த மறைகளும் கள்ளுண்ட அப்போதே அவன் வாயிலிருந்து வெளிப்பட்டுவிடும்.
களிப்பு என்பதற்கு அளவிறந்த மகிழ்ச்சி என்பது பொருள். களிப்பு என்பது இங்கு கள் உண்பதால் உண்டாகும் இன்பத்தைக் குறிக்கிறது. இதற்கு வெறி, மயக்கம் என்றும் பொருள் கூறுவர். கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய வள்ளுவரே கள்தரும் களிப்பு பற்றிப் பலவிடங்களில் குறளில் பேசியுள்ளார். இப்பாடலில், மிகையாகக் கள்ளுண்ணும் ஒருவன் தான் கள்ளுண்பவன்தான்; ஆனால் ஓர் எல்லையோடு நிறுத்திக்கொள்பவன். ஆதலால் தன்னால் நிலைநிற்க முடியும்; தடுமாறுவதில்லை' என்கிறான். ஆனால் வள்ளுவர் அவன் போன்றவர்கள் சொல்வதை நம்பவில்லை. 'யார் கள் குடித்தாலும் களித்து ஆடுபவராகவே இருப்பர்; கள்ளுண்பவரில் உள்ளங் கெடாதவர் என்று எவருமில்லை' என்கிறார். மேலும் 'கட்குடியர் தானே முன்வந்து மனத்திலுள்ளதை வெளிப்படுத்துவர்' என்றும் கூறுகிறார்.
கள்ளிற்கு இயல்பானது அதை அருந்துபவர் வாய்சேர்ந்து அதுவரை மறைத்து மனத்துள் உறைந்திருந்த குற்றங்களையும் வெளிப்படுத்திவிட வைப்பது. இவ்வாறு அவன் நெஞ்சில் மறைத்து வைத்திருந்தை வெளியில் சொல்வது கள்ளுண்ட களிப்பால்தான்; ஆதலால் களித்தறியேன் எனச் சொல்லற்க எனக் கள்குடிப்போரை வேண்டுகிறது இப்பாடல்.

கட்குடியன் ஒருவன் தீங்குகளைச் செய்து பின் நான் 'களித்ததால் அறியேன் அதாவது கள்ளுண்ட மயக்கத்தில் அறியாமல் செய்துவிட்டேன்' என்று சொல்லச் செய்கின்ற கட்குடியை விட்டுவிடுக என்பது இக்குறட்கருத்து என்பதாகவும் உரை உள்ளது. இன்றைய சட்டப்பிரிவுகளின்படி, சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு கள்ளுண்ட போதையில் இழைக்கப்பட்ட குற்றத்திற்குத் தண்டனைக் குறைப்பு உண்டு என்பதனை நினைத்து எழுதப்பட்ட உரையாக இது இருக்கலாம். எனினும் இவ்வுரை இப்பாடலுக்கான இயல்பான உரையல்ல.

'ஒளித்ததூஉம்' என்பதன் பொருள் என்ன?

'ஒளித்ததூஉம்' என்றதற்கு மனத்தின்கண்ணே கரந்ததூஉம், நெஞ்சத்தில் ஒளித்திருந்த இரகசியத்தையும், அக்களவினையும், முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும், முன் ஒளித்துச் சொன்னதும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும், மனத்தினுள் ஒளித்த அக்குற்றமும், கள் குடித்தமையை நெஞ்சத்தில் ஒளித்தமையை, மறைத்ததை, மனத்தில் மறைத்து வைத்ததும், மனதில் மறைத்து வைத்திருக்கிற இரகசியங்களும், மனத்தில் ஒளித்து வைத்திருந்தவை அனைத்தும், உள்ளத்தில் மறைத்துவைத்த உண்மை, நெஞ்சில் மறைந்துள்ளனவும், நெஞ்சில் மறைத்து வைத்திருந்த அந்தக் குற்றமும், நெஞ்சறியச் சொன்ன பொய்யை, நெஞ்சத்து மறைத்து வைத்த அக்களிப்பும், பிறரறியின் இழிவென்று முன்பு தன் மனத்தில் மறைத்து வைத்திருந்த குற்றமும், கள்ளுண்டதனை என்றவாறு பொருள் கூறினர்.

'ஒளித்ததூஉம்' என்பதற்கு முன்னரே வெளிப்படுத்தலாகாது என ஒருவன் நெஞ்சத்து மறைத்து வைத்திருப்பது என்பது நேரிய பொருள்.
மாந்தர் தம் மனத்தின்கண்ணே பல செய்திகளை மறைத்து வைப்பர். அவற்றுள் சில தனக்குமட்டும் உரியனவாக இருக்கலாம்; மற்றவை பொதுவாழ்வில் நிகழ்ந்தனவாக இருக்கலாம். எந்தவகையாக மறைகளாக இருந்தாலும் கள்ளுண்பவன் எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக் கட்டுப்படுத்த வல்லவன் என்று சொன்னாலும் கள்ளுண்டபோது அவற்றை வெளியில் சொல்லிவிடுவான். கள்ளின் இந்த இயல்பைச் சொல்லவே இப்பாடல் எழுந்தது. எனவே ஒருவனது மறை காப்பாற்றப்படவேண்டுமானால் வெறி உண்டாகிக் களிக்கும் அளவில் கள்ளருந்தக்கூடாது என்பது செய்தி.

'ஒளித்ததூஉம்' என்ற தொடர் மனத்தில் ஒளித்து வைத்திருந்தவை அனைத்தும் என்ற பொருள் தரும்.

கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதைக் கைவிடுக; மனத்துள் நிறுத்தியிருந்த மறைகளும் முற்பட்டு வெளிப்படும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கள்ளுண்ணாமை தன்னிலை மறக்காதிருக்கச் செய்யும்.

பொழிப்பு

கள்ளுண்டாலும் களித்து அறியேன் என்று சொல்வதைக் கைவிடுக; மனத்துள் நிறுத்தியிருந்த மறைகளும் முற்பட்டு வெளிப்படும்.