இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0901 குறள் திறன்-0902 குறள் திறன்-0903 குறள் திறன்-0904 குறள் திறன்-0905
குறள் திறன்-0906 குறள் திறன்-0907 குறள் திறன்-0908 குறள் திறன்-0909 குறள் திறன்-0910

காமவின்பத்திற்கு அடிமைப்பட்டு மனைவி சொல்வனயாவும் நன்மையே என்று கருதி நடத்தலாகாது என்று வரையறுப்பதே இவ்வதிகார நோக்காகும்.
- ச தண்டபாணி தேசிகர்

மணவாழ்வில் கணவனும் மனைவியும் ஒத்த உரிமையுடையவராய் நடந்து கொள்ள வேண்டும். மனைவியின் மீதுள்ள மயக்கம், இணைவிழைச்சியில் மிகுதியான ஈடுபாடு ஆகியவற்றின் காரணமாகக் கணவன் தன் கடமையைச் செய்யாமல் இருப்பது பற்றியும், அவளது விருப்பங்களை, ஆராயாது, நிறைவுறச் செய்வதே தன் இல்லற வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்பதாகக் கொண்டு ஒழுகுதலால் நேரும் குற்றங்கள் பற்றியும் இவ்வதிகாரம் பேசுகிறது.

பெண்வழிச்சேறல்

காமம் கருதி மனைவியை அஞ்சி ஏவல் செய்து ஒழுகுவதை பெண்வழிச் சேறல் எனக் குறள் குறிப்பிடுகிறது. இவ்வதிகாரத்தில் குறிக்கப் பெற்றுள்ள பெண் என்ற பொதுச்சொல்லும், மனை, இல்லாள், மனையாள், அமையார் தோள், நன்னுதலாள் என்ற சொற்களும் தொடர்களும் ஐயத்திற்கிடமின்றி, வாழ்க்கைத் துணையையே அதாவது மனைவியையே குறித்து நிற்கின்றன. கணவன், மனைவி இருவருமே சரிஒப்பாகத் துணை என்றும், சரிஒப்பான உரிமை ஆட்சியுடையவர் என்றும் பொதுவாக அறியப்படுபவர்கள். குடும்பம் என்ற சிறு எல்லையில் இருவர் எப்படி சரிசம ஆட்சி செலுத்துவது? இருவரும் தலைவர் ஆகின்றனர்-அக ஆட்சி ஒருவரிடத்தும் புற ஆட்சி மற்றவரிடத்தும் அமைகிறது. ஒரு குடும்பத்தில் மனைவியானவள் நல்லமைச்சர் போன்று செயல்படுபவராகக் கருதப்படுவாள். கணவன் அறமும் பொருளும் கூறினால், மனைவி அதைக் கைப்பிடித்தல் தகும்; அவ்விதமே இல்லாள் அறம்பொருள் ஓதினால் ஆண் அவ்வுரையைக் கைப்பிடித்தொழுகுதலும் தகுவதே. கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் அடங்கி, இருவரும் தத்தம் உரிமையை இழக்காமல், அவரவர் இல்லறக் கடமையைச் செய்து வாழும் குடும்பத்தில் இனிமை பொங்கும்.
சில குடும்பங்களில் கணவனானவன் காமமிகுதியால் முழுவதுமாகப் பெண் வயப்பட்டுவிடுகிறான். இவனைப் பெண்விழைவான் அதாவது நாடிச்சென்று காமத்தில் மயங்குபவன் என்று வள்ளுவர் குறிக்கிறார். இங்கே மனைவியும் ஏறுமாறாக அமையும்போது, கணவன் அவளை அஞ்சி ஒழுகும்நிலை உண்டாகிறது அதாவது அவள் அன்பு கொள்ளவேண்டிய துணை என்பதை மறந்து, அஞ்சிப் பணியவேண்டிய மேலாளர் என்று எண்ணி அவள் பின்னிற்க வேண்டியிருக்கிறது. அடுத்து அவள் ஏவல் செய்து ஒழுகத் தொடங்குகிறான் அதாவது அவள் ஏவிவிடும் ஆணைகளை, அடிமை போலப் படிந்து நிறைவேற்றத் தலைப்படுகிறான். இத்தகைய ஆடவனை ஆங்கிலத்தில் Hen-pecked அதாவது பெண்வழி நடக்கின்றவன் என்பர். இவன் காதலால் கண்மூடிப் பெண்ணை விழைவானானதால், அவன் அறவழியும் போவதில்லை; பொருள் வழியும் காண்பதில்லை. மனைவி தனக்கு இன்பந்தர மறுப்பாளோ என அஞ்சி அஞ்சியே அவள் சொல்லியபடி எல்லாம் ஆடுகின்றான். 'விழைதல்' என்று குறள் கூறுவது காதலே சேராத இணைவிழைச்சினையேயாம். இணை விழைச்சு என்ற தொடரில் உள்ள விழைவு என்பது விலங்கின் கூட்டம் என்ற இழி பொருளையே குறிக்கும். காதல் வாழ்க்கையை விரும்பாது இணைவிழைச்சை நச்சித் திரிவாரை வள்ளுவர் இவ்வதிகாரத்தில் இகழ்ந்துரைக்கின்றார்.

பெண் ஆணை அடிமைப்படுத்துவதினால் என்ன தீங்கு நேரும்? அவன் பெரும்பயன் அடையமுடியாது; அவனால் கடமையை முறையாகச் செய்யஇயலாது. அவன் எப்படிச் செல்வம் ஈட்டினானோ என ஊரோர் எள்ளுவர். அவன் பெரியோர் முன் செல்ல நாணுவான். அவனுடைய செயல்திறம் கொண்டாடப்படமாட்டாது. மனைவி என்ன சொல்வாளோ என்று அஞ்சி நல்லார்க்கு (பெற்றோர்கள் உள்ளிட்டோர்க்கும்) நல்லன எதுவும் செய்யமாட்டான்; நண்பர்களுக்கு உதவ முன்வரமாட்டான். செல்வம் கொண்டு எல்லா இன்பநலன்களையும் பெற்றிருந்தாலும் அவனுக்கு எந்தப் பெருமையும் சேராது. அவனிடம் அறம், பொருள் இல்லை; மற்ற இன்பம்தரும் நுண்கலை போன்றவற்றிலும் நாட்டமும் உண்டாகாது.
மனைவி ஏவும் செயல்கள் நன்மை தருவனவா அல்லது தீமையானவையா எனக் கணவன் ஆராய்ந்தறிந்து செய்யவேண்டும் எனவும், மனைவியைக் காமத்திற்குரிய நுகர்பொருள் என்று கருதி அம்மயக்கத்திலேயே அழுந்திக் கிடக்காமல் மன உறுதியுடன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும் எனவும் பெண்சேரும் பேதைமையைத் தவிர்ப்பதற்கு வழிமுறைகளும் கூறப்படுகிறது இவ்வதிகாரத்தில்.

இல்லறத்தில் ஆளுதல்-அடிமையாதல் என்பது இல்லை. கணவன்‌ மனைவியை அடக்கி அடிமையாக வைக்க வேண்டும் என்றோ மனைவியிடம் கணவன் பணிந்து போகவேண்டும் என்றோ குறளில் எங்குமே சொல்லப்படவில்லை‌. கடலன்ன காமமுழந்தும் தனதாற்றாமையைத் தானெடுத்து மொழியாமை பெண்ணியல்பு. ஆனால் அவா நிலையிலும் அச்ச நிலையிலும் பேதைமை ஆண்களின் கண்களை மூடும். காமத்துக்கு அடிமையாகி அவர்களே பெண்வழிச் செல்வர். பெண்வழி ஆடவன் சேறலே பெண்வழிச்சேறல் ஆதலின் இது பெண்ணின் குற்றம் ஆகாது. எனவே இவ்வதிகாரம் ஆண்களுடைய தவற்றைக் கூறுதலே அன்றிப் பெண்கள்தாழ்ந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் கணவன் எல்லா நேரங்களிலும் காம இன்பம் கருதி மனைவியையே சுற்றிச் சுற்றி வந்து தன் இல்லறக்கடமைகளில் தவறுவதை இவ்வதிகாரம் கடிகிறது. அது பெண்விழைதல், மனையாளை அஞ்சுதல், பெண்ணேவல் செய்தல் போன்ற தொடர்களால் சுட்டப்பெறுகிறது. இவையே இங்கு பழிக்கப்படுகின்றன. எல்லை மீறிய காமத்தை இழிவுபடுத்துவதேயன்றி, பெண்னை இழிவு படுத்துவதன்று இது. மாறாக, பெண்ணுக்கு நாணுந்தன்மை இயல்பாக உள்ளது. அந்த இயற்கைப்படி நடந்து ஒழுகும் பெண் சிறப்புப் பெறுகிறாள் என்கிறது அதிகாரத்து ஒரு பாடல்.
இல்லாளிடம் அன்பாகஇருந்து கலந்து எண்ணுவது என்பது ஒன்று; அவளிடம் பணிந்து போதல் என்பது வேறு. இல்லாளிடம் தாழ்வதென்பது ஒரு ஆண்மகனுக்கு இயல்பில்லாதவொன்று எனச் சொல்லப்படுகிறது. காமம் கருதி, மனைவியின் ஏவலைக் கண்மூடிச் செய்யுமானால் அது ஆண்மையாகாது. ஆண்மைக்கு இயல்பு பெண்ணும் விருப்போடு ஏவல் செய்ய ஆளுவது.
பெண் ஆணை அடிமைப்படுத்துவதினால் வரும் தீங்குகளைக் காட்டி கணவனும் மனைவியும் ஒத்த உரிமையோடு வாழவேண்டும் என விதிப்பது இவ்வதிகார நோக்கம்.

பெண்வழிச்சேறல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 901ஆம் குறள் மனைவியிடம் பெறும் காமஇன்பத்தையே நினைத்திருப்பவர் பெரும்பயன் அடையார்; செயல்விரும்புவோர் விரும்பாத பொருளும் அப்படி நடந்துகொள்வதே என்கிறது.
  • 902ஆம் குறள் தன் தகுதியினைப் பேணாது பெண்மையை விரும்புவானது செல்வம் மிகுந்த வெட்கத்துக்குரியதாக தலைகுனிவை உண்டாக்கும் எனச் சொல்கிறது.
  • 903ஆம் குறள் மனைவியிடம் பணிந்துபோகும் இயல்பற்ற தன்மை எப்பொழுதும் நல்லவரிடையே கூச்சத்தை உண்டுபண்ணும் எனக் கூறுகிறது.
  • 904ஆம் குறள் மனையாளை அஞ்சி நடக்கின்ற புகழ் இல்லாதான் செயல்திறம் சிறப்பு அடையாது என்கிறது.
  • 905ஆம் குறள் மனைவியை அஞ்சுபவன் நல்லவர்களுக்கு நல்லன செய்தலை எப்போதும் அஞ்சும் எனச் சொல்கிறது.
  • 906ஆம் குறள் மனைவியின் மூங்கில் போலும் அழகிய தோளின் முயக்கின்பம் கருதி அவளுக்கு அஞ்சுபவர்கள் விண்ணவரைப்போல இன்புற்று வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவராவர் என்கிறது.
  • 907ஆம் குறள் மனைவியின் ஏவல்படி நடக்கும் ஆண்தன்மையைவிட நாணமுடைய பெண்தன்மையே பெருமைக்குரியது எனச் சொல்கிறது.
  • 908ஆம் குறள் நல்ல நெற்றியை உடைய மனைவி விரும்பியபடி நடப்பவர் தம்முடன் நட்புறவில் இருப்பவர்களின் துன்பம் தீர்க்கமாட்டார்; நல்லது செய்யவும் மாட்டார் என்கிறது.
  • 909ஆம் குறள் தன் மனைவியின் ஏவல் மொழியைக் கேட்டுச் செயல்படுவோரிடம் அறம் செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் இவ்விரண்டின் வேறாய செயல்களும் இல்லை என்கிறது.
  • 910ஆவது குறள் சிந்தனையறிவு கொண்ட மன உறுதி உள்ளவர்கட்கு எப்போதுமே பெண்கள் போக்கில் ஒழுகிவாழும் அறியாமை இல்லை என்கிறது.

பெண்வழிச்சேறல் அதிகாரம் பற்றிய புரிதல்கள்:

இவ்வதிகாரக் கருத்துக்கள் பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. குறட்பாக்களை மேலோட்டமாக வாசித்துவிட்டு 'ஆணாதிக்கக் கருத்தியல் மிகையாக இவ்வதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது; வள்ளுவர் பெண் சொல்லைக் கணவன் கேட்கக்கூடாது' என்று வள்ளுவர் சொல்கின்றார்; அவர் ஆணாதிக்கவாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார்; பெண்ணடிமைத்தனம் கொட்டமடிக்கின்றது' என்கின்றனர் இவர்கள். பெண் ஆணுக்கு அறிவு சொல்லக்கூடாதா? ஆலோசனை சொல்லக்கூடிய திறனும் உரிமையும் பெண்களுக்கு இல்லையா? போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர். குறளிலிருந்து இந்த அதிகாரத்தையே நீக்கிவிட வேண்டும் என்று சில முன்னணி எழுத்தாளர்கள்கூடக் கருத்துரைத்துள்ளனர்.
தன்னுடைய ஆண்மைத் திறனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலிருப்பது, மனைவியின் பெண்மைக்குத் தன்னால் ஈடுகொடுக்க முடியவில்லையோ என்ற ஐயப்பாடு அவன் மனத்தில் ஓரொரு கால் எழுவதன் காரணமாக ஒருவன் ஒரு தாழ்வு மனப்பான்மை கொள்வது, இவை போன்ற காரணங்களால் அவன் தன் மனைவியின் பெண்மையில் மிகையான ஈடுபாடு கொள்கிறான்.
வெறும் காம இன்பத்தைக் கருதி ஆண் பெண்ணுக்கு அடிமையாகித் தன் கடமையைத் தவறவிடக்கூடாது என்பது மட்டும்தான் இதில் சொல்லப்படுகிறது. இதில் பெண்ணுரிமை மறுக்கப்படுகிறது எனக் கூறுவதற்கு இடமே இல்லை. பெண்வழிச் சேறல் போலவே ஆண்வழிச் சேறலும் இல்வாழ்க்கைக்கு சிறிதும் ஏற்றவையல்ல. முறையற்ற இவ்வொழுகலாறுகளை விலக்க எழுந்ததே இவ்வதிகாரம். இதைப் புரிந்து கொள்ள இயலாதவர்கள்தாம் வள்ளுவர் பெண்ணடிமையை விரும்புகிறார் எனக் கூறுவர்.

மனைவிக்குப் பணிவிடை செய்யும் கணவனை இகழவந்த இந்த அதிகாரத்தில் மனைவியின் ஆணவம் பற்றி எங்குமே சொல்லப்படவில்லை. மாறாக பெண்மையைப் புகழ்வதாக பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து (907) என்ற பாடல் அமைந்துள்ளது. நாணினை உடைய பெண்மையே பெருமையுடையது என்கிறது இது.




குறள் திறன்-0901 குறள் திறன்-0902 குறள் திறன்-0903 குறள் திறன்-0904 குறள் திறன்-0905
குறள் திறன்-0906 குறள் திறன்-0907 குறள் திறன்-0908 குறள் திறன்-0909 குறள் திறன்-0910