இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:902)

பொழிப்பு (மு வரதராசன்): கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.

பரிமேலழகர் உரை: பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.
(எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: தன்னைப் பேணிக் காக்காமல் பெண்ணாசை எனப்படும் காமத்தில் உழல்பவனது பெருஞ்செல்வம், 'இவன் காமுகன்' என உலகத்தார் பேசும் வெட்கம் கெட்டபெயர் உலகில் நிலைபெறுமாறு அவனுக்கு நாணத்தைத் தரும். அவனது செல்வம், பதவி, பெருமையாம் ஆக்கமனைத்தும், கேட்பவர் நாணும்படியான கெட்டபெயரைத் தரவே பயன்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.

பதவுரை: பேணாது-காவாது, விரும்பாமல்; பெண்- பெண் (இங்கு மனையாள்); விழைவான்-விரும்புபவன்; ஆக்கம்-செல்வம்; பெரியதோர்-பெரியதான ஒன்று; நாணாக-வெட்கமாக; நாணு-வெட்கம்; தரும்-கொடுக்கும்.


பேணாது பெண்விழைவான் ஆக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம்;
பரிப்பெருமாள்: அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம்;
பரிதி: தன்மத்தை வேண்டாம் என்று பெண் சொல் கேட்பான்;
காலிங்கர்: தான் ஒழுகும் தகுதியைப் பொருளாக விரும்பாது மனையாளைப் பொருளாக விரும்புவானது பொருள் முதலிய ஆக்கம்; [ஆக்கம்- செல்வம்]
பரிமேலழகர்: தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்;

'அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களான மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தன்மத்தை வேண்டாம் என்று பெண் சொல் கேட்பான்' என்றார். 'தான் ஒழுகும் தகுதியைப் பொருளாக விரும்பாது மனையாளைப் பொருளாக விரும்புவானது பொருள் முதலிய ஆக்கம்' என்பது காலிங்கரது உரை. பரிமேலழகர் 'தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காரியம் பேணாமல் மனைவிவழி நடப்பவனது மேன்மை', 'தன் ஆண்மையைக் காவாமல் மனைவியை விரும்புவானது வாழ்க்கை', 'ஆலோசிக்காமல் மனைவி சொன்னதையெல்லாம் செய்ய விரும்புகிறவனுடைய வாழ்வு', 'நெறி முறையை விரும்பாது பெண்மையை விரும்புவானது உயர்வு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் தகுதியினைப் பேணாது பெண்மையை விரும்புவானது செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

பெரியதோர் நாணாக நாணுத் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.
பரிப்பெருமாள்: பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவன் செல்வத்திற்குப் பயன் நாணமாய் முடியும்; என்னை? அச்செல்வம் அற்றால் பின்பு என்ன செய்வோம் என்று நாணுவன் ஆதலின். பெரியதோர் நாணுதலாவது இவன் காமத்தால் கெட்டான் என்று உலகத்தார் அறிய நிற்பது ஓர் நாணம் உண்டாதல். சச்சந்தன் திறம் காண்க.
பரிதி: பெரியோரால் நாணப்படுவான் என்றவாறு.
காலிங்கர்: ஒருவன் உள் அஞ்சி நாணத்தகும்; அவற்றுளெல்லாம் பெரியதோர் நாணமாம்; மற்று அங்ஙனம் தீதாகிய நாணுதலைத் தரும் என்றவாறு, [உள் அஞ்சி - மனமஞ்சி]
பரிமேலழகர்: இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.

'பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரைக்க, 'பெரியோரால் நாணப்படுவான்' என்று பரிதியும் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'ஒருவன் உள் அஞ்சி நாணத்தகும்; அவற்றுளெல்லாம் பெரியதோர் நாணமாம் தீதாகிய நாணுதலைத் தரும்' என்றார். பரிமேலழகர் 'இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்' எனப் பொருளுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரிய வெட்கத்துக்கு உரியதாகும்', 'பெரியதொரு மானக்கேடாகத் தலைகுனியச் செய்யும்', 'பெரிய அவமானமுள்ள காரியமாகி தலை குனியச் செய்யும்', 'எல்லோரும் வெறுக்கும் மிகுந்த வெட்கத்துக்குரியதாக வெட்கத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மிகுந்த வெட்கத்துக்குரியதாக தலைகுனிவை உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன் தகுதியினைப் பேணாது பெண்மையை விரும்புவானது ஆக்கம் மிகுந்த வெட்கத்துக்குரியதாக தலைகுனிவை உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
இங்கு 'ஆக்கம்' குறிப்பது என்ன?

மனைவியின் காமஇன்பத்தை மிகநாடிநிற்பானது வளநலம் நாணும்படிவற்றிவிடும்.

தன் தகுதியைப் பேணாது மனையாளிடம் பெறும் காமஇன்பத்தை நச்சி வாழ்வு நடத்துபவனது செல்வம் இழக்கப்பெற்றுப் பெரியதோர் நாணமாக உலகோர்முன் வெட்கத்தைத் தரும்.
ஒருவன் வேறு எதுபற்றியும் கவலைகொள்ளாமல் அவனது மனையாளால் பெறும் காமத்தைநாடி இல்லத்துள்ளே அடைந்து கிடந்து வாழ்வு நடாத்துகிறான். உள்ள செல்வத்தைப் பேணவில்லை. தன் தகுதி பேணவில்லை; எனவே வருவாய் இல்லை. அவனிடமுள்ள செல்வமெல்லாம் உலகோர் இகழுமளவு வறண்டு போகும்; அதுகண்டு தானும் என்செய்வேம் என்னும் நாணத்தை அவனுக்கு உண்டாக்கும்.
பேணாது: இச்சொல்லுக்குப் பாதுகாவாது என்றும் விரும்பாது என்றும் பொருள் உள. இச்சொல்லுக்குக் கூறப்பட்ட அறம் பொருள் இவற்றைப் பேணாது, தன்மத்தை வேண்டாது, தன் தகுதியைப் பொருளாகக் கொள்ளாது, தன் ஆண்மையை விட்டு எனச் சொல்லப்பட்ட உரைகளில் தன் தகுதியைப் பேணாது என்ற உரை சிறந்தது. பெண்ணின் காமஇன்பத்தை விரும்பி தன் ஆற்றலைப் பயன்படுத்தாமலும் மேம்படுத்திக்கொள்ளாமலும் இருத்தல் என்ற பொருள் தருவது இது.
பெண் விழைவான்: இதிலுள்ள பெண் என்ற சொல்லுக்கு அதிகாரம் நோக்கி மனையாள் என்று பொருள் கொள்வர். பெண்விழைவான் என்ற தொடர் மனையாளைக் காதலிப்பவன் எனப் பொருள்பட்டு அவளால் பெறப்படும் காமத்தை நச்சித் திரிபவன் என்பதைக் குறிப்பதாயிற்று,
பெரியதோர் நாணாக நாணுத் தரும்: இப்பகுதிக்கு மணக்குடவர் 'பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்' என்று பொருளுரைத்தார். இதை விரித்துப் பரிப்பெருமாள் 'அவன் செல்வத்திற்குப் பயன் நாணமாய் முடியும்; என்னை? அச்செல்வம் அற்றால் பின்பு என்ன செய்வோம் என்று நாணுவன் ஆதலின் பெரியதோர் நாணுதலாவது இவன் காமத்தால் கெட்டான் என்று உலகத்தார் அறிய நிற்பது ஓர் நாணம் உண்டாதல்' என்றார். இவ்விளக்கம் இக்குறட்கருத்தைத் தெளிவு செய்கிறது.

மனைவியிடம் காதலின்பம் மிகக் கொண்டவன் அவளது விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றும் முகத்தான் அல்லது தன்மீது அவளுக்குள்ள மதிப்பை உயர்த்தும் நோக்கில் அவளுக்காகச் செல்வத்தை வாரியிறைத்துச் செலவு செய்வான். அளவுக்கு மீறி செலவு செய்வதால் பொருள் சேமிப்பு குறையும். அவளிடம் நல்ல பெயர் பெற வேண்டும் என்பதற்காக அவன் முன்னோர் ஈட்டி வைத்த செல்வத்தையும் கரைத்து விடுவான். உள்ள செல்வத்தைத் தொலைத்து விட்டதாலும், தன் தகுதி பேணாததாலும், மேலும் பொருளீட்ட இயலாதநிலையில் இருப்பான். அதுபொழுது 'மனைவிமீது கொண்ட காமத்தால் கெட்டான்' என உலகோர் முன் நாணும் நிலை அவனுக்கு உண்டாகும். 'எல்லாம் இழந்துவிட்டேனே. இனி என் செய்வேன்' என்று இரங்கி நிற்கும் தலைகுனிவையும் அது தரும்.
தன்னிடமுள்ள செல்வத்தைப் பேணாதிருந்து மேலும்செல்வம் பெருக்கும் வழியினைத் தேடாமல், பெண்காமம் கொள்வதிலேயே குறியாக இருப்பவன் செல்வம் முழுவதுமாகத் தொலைந்து போய்விடும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

இங்கு 'ஆக்கம்' குறிப்பது என்ன?

'ஆக்கம்' என்ற சொல்லுக்குச் செல்வம், பொருள் முதலிய ஆக்கம், ஆக்கம், மேன்மை, வாழ்க்கை, வாழ்வு, உயர்வு, நலன்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

செல்வம் என்று பொருள் கூறியவர்கள் 'தன் முயற்சியாலன்றி முன்னரே எய்தி நின்ற செல்வம்' என்றும் வழிவழி வந்த செல்வம் என்றும் மனைவிவழிச் செல்வமும் (சீர்வரிசையாக வந்தது) ஆம் என்றும் விளக்கினர்.
பரிமேலழகர் 'பெண்வழிவந்த செல்வத்தால் பெறும் பயனாகிய ஈதலும் துய்த்தலும் அவளுடையனவாகலின், ஆக்கம் நாணுத் தருவதாயிற்று' என விளக்கம் தருவார். நாமக்கல் இராமலிங்கம் ஆக்கம் என்பதற்கு வாழ்வு எனப் பொருள் கொண்டு 'ஆலோசிக்காமல் மனைவி சொன்னதையெல்லாம் செய்ய விரும்புகிறவனுடைய வாழ்வு பெரிய அவமானமுள்ள காரியமாகி தலை குனியச் செய்யும்' என்றார்.

'ஆக்கம்' என்றது இங்கு செல்வத்தை குறித்தது.

தன் தகுதியினைப் பேணாது பெண்மையை விரும்புவானது செல்வம் மிகுந்த வெட்கத்துக்குரியதாக தலைகுனிவை உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெண்வழிச்சேறல் பெரும்பொருள் இழப்பில் கொண்டு சேர்க்கும்.

பொழிப்பு

தன் தகுதியினைப் பேணாது பெண்ணிடம் பெறும் காமஇன்பத்தையே நினைத்திருப்பவனது ஆக்கம் பெரியதொரு வெட்கத்துக்குரியதாகித் தலைகுனியச் செய்யும்.