இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0910எண்சேர்ந்த நெஞ்சத்து இடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:910)

பொழிப்பு (மு வரதராசன்): நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

மணக்குடவர் உரை: எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம்.
எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்

பரிமேலழகர் உரை: எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது.
('இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி: உரை: ஒரு செயலைப் பற்றி ஆராயும் எண்ணங் கொண்ட மன உறுதி உள்ளவர்கட்கு எக்காலத்தும் பெண்கள் போக்கில் அடங்கி வாழும் அறியாமை இல்லை.
நெஞ்சத்திடன் -மன உறுதி. நெஞ்சத்து இடம் உடையார்க்கு எனப் பிரித்து நெஞ்சத்தினையும் அதனின் ஆய செல்வத்தினையும் உடையவர்க்கு என்று சிலர் பொருள் காண்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு பெண்சேர்ந்தாம் பேதைமை எஞ்ஞான்றும் இல்.

பதவுரை: எண்சேர்ந்த-(ஆராயும்)எண்ணம் கொண்ட; நெஞ்சத்திடன்- மன உறுதி; உடையார்க்கு-உடையவர்க்கு; எஞ்ஞான்றும்-எப்போதும்; பெண்சேர்ந்தாம்-பெண் (மனையாள்) அடையும்; பேதைமை-அறிவு திரியாமை; இல்-இல்லை, உண்டாகாது.


எண்சேர்ந்த நெஞ்சத்திடனுடையார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு;
மணக்குடவர் குறிப்புரை: எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்
பரிப்பெருமாள்: எண்ணஞ் சேர்ந்த மனத்தின் விரிவு உடையார்க்கு;
பரிப்பெருமாள் குறிப்புரை: எண் சேர்தலாவது, இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல். இதனை உடையார் அறிவுடையார் என்றது.
பரிதி: மோட்சம் இச்சையான மனத்தார்;
காலிங்கர்: அறம், பொருள், இன்பம், வீடு என நான்கின் திறம் தெரிந்து எண்ணும் எண் சேர்ந்த நெஞ்சத்தின் இடம்பாடு உடையார் யாவர்; [எண் சேர்ந்த நெஞ்சத்தின் இடம்பாடு- எண்ணங்கள் உடைய மனத்தில் இடம் பிடித்தவர்]
பரிமேலழகர்: கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: 'இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. [குறள் 218, இதன் பொருள்: செல்வம் சுருங்கிய காலத்தும் என்பது; கலித்தொகை, பாலைக்கலி 1. இதன் பொருள்: (தம்முடைய இல்வாழ்க்கைக்கு வேண்டும்) பொருள் இல்லாது பிறரை இரந்து கேட்டவர்க்கு; அப்பொருட்டாதல் - செல்வம் என்னும் இப்பொருள் உடையதாதல்]

எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு/மோட்சம் இச்சையான மனத்தார்/அறம், பொருள், இன்பம், வீடு என நான்கின் திறம் தெரிந்து1 எண்ணும் எண் சேர்ந்த நெஞ்சத்தின் இடம்பாடு உடையார்/கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிந்தனை செறிந்த மனத்திட்பம் உடையார்பால்', 'சொந்த அறிவின் ஆலோசனையுடன் மனோதிடமும் உள்ள (இருக்க வேண்டிய) ஆண்மக்களுக்கு', 'ஆலோசனை செய்யும் உள்ளமும் அதனால் உளதாய செல்வமும் உடையாரிடத்தே', 'கருமம் முடித்தலின் கருத்தினைச் செலுத்தும் உள்ளம் உடையார்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிந்தனையறிவு கொண்ட மன உறுதி உள்ளவர்கட்கு என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம்.
பரிப்பெருமாள்: எல்லா நாளும் பெண்ணைச் சார்ந்து ஆகும் அறிவின்மை இல்லையாம்.
பரிதி: பெண் சொல் கேட்டலாகிய பேதைமைக்கு உட்படார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர்க்கு எஞ்ஞான்றும் பெண்வழிச் சென்று சேர்ந்து ஏவல் கேட்டு ஒழுகும் பேதைமை சிறிதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.

'எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவி சொற்படி நடக்கும் மடமை இராது', 'மனைவியின் பேச்சைக் கேட்டுத்தான் செய்வது என்ற மூடத்தனம் இருக்காது; (இருக்கக் கூடாது)', 'மனையாள் வயப்பட்டொழுகும் அறியாமை எக்காலத்தும் இல்லை', 'எப்பொழுதும் பெண்ணை அடைந்து உண்டாகும் அறியாமை இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எப்போதுமே பெண்கள் போக்கில் ஒழுகிவாழும் அறிவுத்திரிபு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எண்சேர்ந்த மன உறுதி உள்ளவர்கட்கு எப்போதுமே பெண்கள் போக்கில் ஒழுகிவாழும் அறிவுத்திரிபு இல்லை என்பது பாடலின் பொருள்.
'எண்சேர்ந்த' என்ற தொடரின் பொருள் என்ன?

எதையும் எண்ணிச் செயல்புரிவோர் இணைவிழைச்சுக்கு அடிமையாகார்.

சிந்தனைத் திறனும் மன உறுதியும் உள்ளவர்கட்கு எக்காலத்தும் மனையாள் வயப்பட்டு ஒழுகும் அறியாமை இல்லை.
சிந்தித்துச் செயல்படுவோராகவும் மன உறுதி உள்ளவராகவும் இருப்பவர்க்கு எப்பொழுதும் காமஇன்பம் விழைந்து மனைவிக்கு அஞ்சி அவள் ஏவல்படி ஒழுகும் அறிவுத்திரிபு உண்டாவது இல்லை.
அறிவும் கடமையுணர்வும் உள்ள ஒருவன் தன் மனைவியின் அறமற்ற விருப்பங்களுக்கு அடிபணிய மாட்டாது அவளைத் திருத்த முயல்வான். பண்பட்ட மனைவியாயின் அவன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து திருந்துவாள்; இல்லையாயின் அவனைக் கீழ்ப்படிய வைக்க வேறு சூழ்ச்சிகளைப் பயன்படுத்துவாள். கணவன் மன உறுதியுள்ளவனானால், அவளைப் பொருட்படுத்தாமல் தன் இல்லறக் கடமையை ஆற்றிக்கொண்டிருப்பான். இல்லையென்றால் அவளிடமிருந்து பெறும் பெண்மைஇன்பம் தடைப்படுமோ என அஞ்சி அவள் விரும்பிய வழியில் அவன் நடக்கத் தொடங்குவான். அவள் சொல்வன நல்லவா அல்லவா என்று சிந்திக்காமல் ஆணைபோல் ஏற்று செயலாற்றுவான். அவாவை அடக்கமுடியாத அச்சநிலையில் அறிவு திரிவுபட்டு அவள் சொற்படி ஒழுகத் தொடங்குவான்.

பெண்இன்பம் சேர்ந்த பேதமை ஒருபுறம், எண்ணிச் செய்யாமல் உறுதி குலைந்த நெஞ்சம் மற்றொரு புறம்; இதுபோன்ற நிலையில் உள்ள ஆடவனைச் சிந்தித்து செயல்படும்படியும் காமஎண்ணங்களை மன உறுதியோடு ஆளவேண்டும் எனவும் அவனுக்கு அறிவுரை கூறப்படுகிறது. சிந்தித்துச் செயல்படுவது என்பது அவள் ஏவுவன இல்லறத்திற்கு நல்லதா தீயதா என்று ஆராய்வதைச் சொல்வது; மன உறுதி வேண்டுவது என்பது மனைவியானவள் காமஇன்பம் தர மறுப்பாளோ என்ற அச்சம் இல்லாமல் உறுதியுடன் இருப்பதைக் கூறுவது.
இருவர் இணைந்த மணவாழ்வில் காதல் உண்டு, ஊடல் உண்டு, கூடல் உண்டு. கழிகாமத்திற்கு இடமில்லை. கழிகாமம் உடையவன் மனைவியிடம் பெறும் உடலின்பத்துக்காக மட்டுமே அவளை நாடுவான். அவள் மாண்பில்லாதவளாக அமைந்துவிட்டால் தன்னலம், பெருமை கருதியே இருப்பாள்; இதனால் கணவன் அவளுக்கு அஞ்சிவாழவேண்டிய நிலை ஏற்படும்; அவள் ஏவல் கேட்டு ஒழுகவேண்டியிருக்கும்; தன் அறிவைப் பயன்படுத்தித் தெளிவுபெறாமல் அவள் விருப்பப்படியே நடப்பான், நெஞ்சத்திடம் இன்றி இல்லறம் மேற்கொள்வான். மனைவிக்கு அடிமையாகி வாழும் பேதைமை உடையவன் ஆவான். இவ்வித இழிநிலை உண்டாகாமல் காக்கக் கணவனுக்கு சிறந்த சிந்தனையும், நெஞ்சில் உறுதியும் வேண்டும் என வழிகாட்டப்படுகிறது. கணவன்-மனைவி உறவில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பது வள்ளுவம்.

'எண்சேர்ந்த' என்ற தொடரின் பொருள் என்ன?

'எண்சேர்ந்த' என்றதற்குப் பெண்வழிச்சேறலான் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல், அறம், பொருள், இன்பம், வீடு என நான்கின் திறம் தெரிந்து எண்ணும் எண் சேர்ந்த, கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற, காரியத்தை நன்றாய் விசாரித்துச் செய்கிற ஆலோசனை, நன்றாக எண்ணுதல் பொருந்திய, காரியமாற்றும் சிந்தனை நிறைந்த, பயனுடைய பணிகளை எண்ணிச் செய்யும், சிந்தனை செறிந்த, ஒரு செயலைப் பற்றி ஆராயும் எண்ணங் கொண்ட, சொந்த அறிவின் ஆலோசனை, ஆலோசனை செய்யும், கருமம் முடித்தலின் கருத்தினைச் செலுத்தும், சிந்தித்துப்பார்க்கும், எண்ணும் நுட்பம், வினைச் சூழ்ச்சித் திறன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் சிந்தனை செறிந்த என்ற பொருள் சிறந்தது. எந்தச் செயல் ஆற்றினாலும் அதைப்பற்றி ஆராயும் எண்ணம் கொண்டவனாக இருப்பது என்பதைக் குறிப்பது. கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற என்றும் பொருள் கூறுவர்.

'எண்சேர்ந்த' என்றது நன்றாக எண்ணுதல் பொருந்திய அதாவது சிந்தனை சிறந்த என்ற பொருள் தரும்.

சிந்தனையறிவு கொண்ட மன உறுதி உள்ளவர்கட்கு எப்போதுமே பெண்கள் போக்கில் ஒழுகிவாழும் அறியாமை இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆராய்ந்தறிவார் பெண்வழிச்சேறல் இல்லை.

பொழிப்பு

சிந்தனைத் திறனும் மன உறுதியும் உள்ளவர்கட்கு எப்பொழுதுமே மனைவி போக்கில் ஒழுகும் அறியாமை இல்லை.