இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0904மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:904)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

மணக்குடவர் உரை: மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை.
இது பொருள் செய்ய மாட்டானென்றது.

பரிமேலழகர் உரை: மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது.
('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)

இரா இளங்குமரனார் உரை: மனைவிக்கு அஞ்சி நடத்தலால் மேல்வரும் புகழை இழப்பவன், தான் கொண்ட செயலாற்றலில் சிறப்படைதல் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனையாளை அஞ்சும் மறுமைஇலாளன் வினையாண்மை வீறு எய்தல் இன்று.

பதவுரை: மனையாளை-இல்லாளை, மனைவியை; அஞ்சும்-அஞ்சும்; மறுமைஇலாளன்-மறுபிறவிஇல்லாதான், துறக்கவின்பம் இல்லாதான், இறப்பிற்குப் பின் புகழ் இல்லாதான்; வினை-செயல்; ஆண்மை-ஆளும் தன்மை; வீறு-சிறப்பு; எய்தல்இன்று-பெறுதல் இல்லை.


மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன்;
பரிப்பெருமாள்: மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன்;
பரிதி: பெண்சாதிக்குப் பயப்படுவானாகில் அவனுக்கு மறுமையும் இல்லை;
காலிங்கர்: தன் மனையாளைத் தான் அஞ்சி ஒழுகுகின்ற அம்மறுமைப் பயன் இழந்தோனது;
பரிமேலழகர்: தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு;

'தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்கு அஞ்சுபவன் மறுமை இழந்தவன்', 'தன் மனைவியை அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவன்', 'மனைவிக்கு அஞ்சி அடங்குகின்ற மறுமைப் பயனும் இல்லாதவன்', 'மனையாளை அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாதான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனையாளை அஞ்சி நடக்கின்ற புகழ் இல்லாதான் என்பது இப்பகுதியின் பொருள்.

வினையாண்மை வீறெய்தல் இன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருள் செய்ய மாட்டானென்றது.
பரிப்பெருமாள்: ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருள் செய்ய மாட்டானென்றது.
பரிதி: இம்மைக்குப் புகழும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: வினையாட்சி ஒரு நன்மை பெறுதல் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது.
பரிமேலழகர் குறிப்புரை: 'உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார். [வீறு எய்தல் -பெருமை அடைதல்]

'வினையாட்சி ஒரு நன்மை பெறுதல் இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன் காரியத்திறம் சிறப்பு அடையாது', 'ஒரு காரியத்தைத் திறம்படச் செய்து பெருமை பெறுதல் முடியாது', 'கையாளும் எந்த வேலையும் வெற்றி பெறாது', 'வினையை ஆளும் தன்மைக்கண் சிறப்பு எய்தல் இலன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செயல்திறம் சிறப்பு அடையாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனையாளை அஞ்சி நடக்கின்ற மறுமையி லாளன் செயல்திறம் சிறப்பு அடையாது என்பது பாடலின் பொருள்.
'மறுமையிலாளன்' குறிப்பது என்ன?

வீட்டுஎலியாக இருப்பவன் செயற்புலி ஆகமுடியாது.

மனைவிக்கு அஞ்சி நடப்பவன் வினை ஆளுமையில் குறைவுபடுவான்.
மனையாள் என்றதால் அவள் அவனுக்கு உரிமையுடைய மனைவிதான். ஆனாலும் இங்கு சொல்லப்படும் கணவன் அவள் காமஇன்பம் மறுப்பாளோ என்று அஞ்சியே வாழ்ந்துவருகிறான். அவள் சொல்வதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் கேட்டு நடக்கிறான், இவன் செய்யும் வினைகளிலும் அவள் குறுக்கிடுவளாதலின் இவனிடத்து ஆளும் தன்மையிருப்பினும் அது வீறு எய்தாது அதாவது தனிச்சிறப்பு அடையாது. அவனது செயல் திறமை குறைவுபட்டு, அதன் விளைவாக அவனது வினை முயற்சியெல்லாம் வெற்றி பெறாமல் போய்விடுவதால் பொருள் செய்ய முடியாது போகிறது. பொருள் இன்மையால் அவனால் நன்மை எதுவும் யாருக்கும் செய்ய இயலாது. இவ்வாறாக அவனுக்கு இல்லத்தையும் ஆளத்தெரியாமல் வினைசெய்திற ஆளுமையும் சிறப்பாக அமையாமல் போய்விடுகிறது.
உலகவாழ்க்கையில் பெண்வழிச்செல்பவன் என்ற இழிவை அடைந்தவன் அவனது வாழ்வு முடிந்த பின்னரும் பெருமையில்லாத வனாகவே பேசப்படுவான். மனைவியிடம் இணங்கிச் செல்பவனது அஞ்சிய மனப்பான்மையாலும், யாருக்கும் எந்த நன்மையும் செய்யாததாலும், அவன் இறந்தபின்னும் அவனைப்பற்றி நல்லவிதமாக எவரும் பேசமாட்டார்கள். எனவே அவன் மறுமையிலாளன்.

'அவன் எனக்கு அஞ்சினான்' என்பதற்குப் பதில் 'அவன் என்னை அஞ்சினான்' என்று அக்காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்பதால் மனைவிக்கு அஞ்சும் என்று வரவேண்டிய இடத்தில் மனையாளை அஞ்சி என வந்தது என்று பொற்கோ குறிப்பிடுகிறார்.

'மறுமையிலாளன்' குறிப்பது என்ன?

'மறுமையிலாளன்' என்றதற்கு மறுமைப் பயனெய்தாதவன், மறுமை, மறுமைப் பயன் இழந்தோன், மறுமைப்பயன் இல்லாதான், மறுமைப் பயன் இல்லாத ஒருவன், மறுபிறவியிலும் நன்மையிலாதான், மறுமையின்பம், மறுமை இழந்தவன், மறுமைப் பயனும் இல்லாதவன், மேல்வரும் புகழை இழப்பவன், மறுமைப் பயனை அடைய முயலாத ஒருவன், மறுவாழ்வு இல்லாதவன், மறுமைப்பயன் அனுபவிக்க முடியாத அறிவில்லாதவன் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஓருயிர் மீண்டும் பிறந்துவரும் என்ற நம்பிக்கையை மறுமை என்று சமயக்கணக்கர் சொல்லிவருகின்றனர். ஒருபிறப்பின் நன்மை தீமைகளே பின் பிறவிக்குக் காரணம் எனவும் இவர்கள் கூறுவர். இது மறுபிறவி என்றும் அறியப்படும். மனைவிக்கு அஞ்சுபவன் அறச்செயல்கள் செய்யமாட்டான் என்பதால் அவனுக்கு மறுமைப்பயன் இல்லை என்ற பொருளில் அவன் இங்கு மறுமையிலாளன் என்படுகிறான் என விளக்குவர்.
மறுமை என்றதற்கு இன்றைய உரையாசிரியர்களில் சிலர் 'ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல்' என்றும் 'மறைந்த பின்னர் உண்டாகும் புகழ்' என்றும் என்றும் பொருள் கூறினர். மறுபிறவி என்பதினும் இப்பொருள் சிறந்ததாக உள்ளது. இல்லறத்திலும் தான் மேற்கொள்ளும் வினைகளிலும் ஆளுமை இல்லாமல் மறைந்ததால் அவனைப்பற்றி யாரும் பெருமையாகப் பேசமாட்டர்கள். எனவே மனைவிக்கு அஞ்சி ஒழுகுபவனுக்கு இறந்த பிறகும் புகழ் இல்லை.

'மறுமையிலாளன்' என்ற தொடர் மறுமைப்புகழ் இல்லாதவன் என்ற பொருள் தருவது.

மனையாளை அஞ்சி நடக்கின்ற புகழ் இல்லாதான் செயல்திறம் சிறப்பு அடையாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெண்வழிச்சேறல் ஒருவனது பெயர்நிலைக்காமல் மங்கச் செய்யும்.

பொழிப்பு

மனைவிக்கு அஞ்சி ஒழுகும் புகழ் இழந்தவன் செயல்திறத்திலும் சிறக்க மாட்டான்.