இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0901



மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:901)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

மணக்குடவர் உரை: மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை.
இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.

பரிமேலழகர் உரை: மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம்.
(மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: இன்பம் காரணமாகத் தம் மனையாளை விரும்பி அவள் சொற்படி நடப்பவர் பெருமை மிகு பயனை அடையார்; ஒரு கருமத்தைச் செய்து முடிக்க விரும்புவோர், அதற்கு இடையூறு என்று இகழும் செயலும் ஆகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது.

பதவுரை: மனைவிழைவார்--மனைவியை மிகவிரும்பி ஒழுகுபவர்; மாண்-சிறந்த; பயன்-அறம்; எய்தார்-அடையமாட்டார்; வினைவிழைவார்-செயல் நாட்டம் கொள்வோர், பொருள்செய்தலில் முயல்வார்; வேண்டா பொருளும்-விரும்பாதவொன்றும், விரும்பாத பொருளும், இகழும்பொருளும்; அது-அது.


மனைவிழைவார் மாண்பயன் எய்தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்:
பரிப்பெருமாள்: மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்:
பரிதி: பெண் ஏவல் செய்வார் பெரியாராகார்,
காலிங்கர்: மனையாளைச் சால விரும்புவார் யாவர்; மற்று அவர் மாட்சிமை உடைய மறுமைப் பயனும் எய்துதல் இலர் ஆக ஏயும்; [ஏயும்-பொருந்தும்]
பரிமேலழகர்: இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்;
பரிமேலழகர் குறிப்புரை: மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர்.

'மனையாளைக் காதலித்தொழுகுவார்/மனையாளைச் சால விரும்புவார்/இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார் நற்பயனைப் பெறார்/பெரியாராகார்/மாட்சிமை உடைய மறுமைப் பயனும் எய்துதல் இலர்/இன்துணையாய அறத்தினை எய்தார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெண்வழி நடப்பவர் பெரும்பயன் அடையார்', 'மனைவியை விரும்பி அவள் சொல்லியபடியெல்லாம் நடப்பவர் சிறந்த இல்லறப் பயன்களை அடைய மாட்டார்', 'மனைவியின் காம இன்பத்துக்காக, அவளுடைய விருப்பத்தின்படி நடக்கிறவர்கள் வாழ்க்கையின் சிறந்த பயன்களை அடைய மாட்டார்கள்', 'மனைவியை விரும்பி அவள் தன்மையராய் ஒழுகுவார் சிறந்த அறப்பயனை அடையமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனைவியிடம் பெறும் காமஇன்பத்தையே நினைத்திருப்பவர் பெரும்பயன் அடையார் என்பது இப்பகுதியின் பொருள்.

வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. [விழையாமை என்னுஞ்சொல் விழைவதே என்றிருத்தல் கூடும்.]
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.
பரிப்பெருமாள்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமையே.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலித்து ஒழுகுவார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.
பரிதி: பெண் சொல் கேளாதவர் பெரியவர் என்றவாறு.
காலிங்கர்: தம் கருமம் விரும்பிச் செல்வார் யாவரும் வேண்டாப் பொருளும் அவ் விழுப்பம்* தானே என்றவாறு. [*'விருப்பம்' என்றிருக்கலாம்]
பரிமேலழகர்: இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். [இடையீடு - தடை]
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம். [விடற்பாற்று-விடப்படும் தன்மையது]

'ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவ்வின்பமே' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காரியம் விரும்புபவர் அங்ஙனம் நடவார்', 'யாதேனும் ஒரு தொழில் செய்து முடிக்க விரும்புவார் வேண்டாத பொருளும் அம்மனைவியை விரும்புதலேயாம்', 'காரியத்தை விரும்புகிறவர்கள் விரும்பத்தகாத நடத்தையும் அதுவேயாகும்', 'முயற்சி செய்வார் இடையூறாகக் கருதி விரும்பாத செய்தியும் அதுவேயாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செயல்விரும்புவோர் விரும்பாத ஒன்றும் அப்படி நடந்துகொள்வதே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனைவியிடம் பெறும் காமஇன்பத்தையே நினைத்திருப்பவர் பெரும்பயன் அடையார்; செயல்விரும்புவோர் விரும்பாத ஒன்றும் அது என்பது பாடலின் பொருள்.
'அது' என்ற சொல் குறிப்பது என்ன?

செயல்நாட்டம் கொண்டவர் காமத்தையே எந்தநேரமும் நினைத்துக்கொண்டிரார்.

மனைவிதரும் காமஇன்பத்தையே நாளும் நினைத்துக்கொண்டிருப்பவர் நற்பேறு பெறார்; செயல்விரும்புவோர் விரும்பாத பொருளும் அவ்விதம் ஒழுகுதலேயாம்.
தன் மனையாள்மீது அளவுகடந்த காமம் கொண்டலைபவர், மாண் பயன்களைப் பெறமுடியாதவராய் இருப்பர். மாண்பயன் என்பதற்குச் சிறந்த பயன் அல்லது நற்பயன் என்பது பொருள். இப்பயன்களாவன விருந்தோம்பல், சுற்றம் பேணுதல், வறியார்க்கு ஈதல் போன்ற அறச் செயல்கள் புரிதல் போன்றன.
செயலில் ஈடுபாடு கொண்டவர் இகழ்ந்து ஒதுக்குவது மனைவிமீதான காமத்தில் விழுந்து கிடப்பதுவே.

கடமையுணர்வு உள்ள கணவன் காமத்தையும் கடமையையும் சரியான முறையில் ஆளத் தெரிந்தவனாக இருப்பான். அவன் நாள் முழுவதும் மனைவிமேல் காமவிருப்பம் கொண்டு இல்லத்திலேயே முடங்கிக் கிடக்கமாட்டான். காம இன்பம் துய்ப்பதற்கென்று நேரம் காலம் உண்டு; அப்பொழுதுதான் இல்லாள்மீதான காதலில் ஈடுபடுவான்.
மிகுந்த காம உணர்வு காரணமாக இன்பத்தை முதன்மைப்படுத்தி மற்றக் கடப்பாடுகளை அதன் உள்ளடக்கிச் செய்யும்பொழுது இல்லறத்தில் பெருமைக்குரிய நற்பயன்களைப் பெறமுடியாது.
இவ்விதம் ஒரு கணவனுக்கு நல்லறிவு கூறுவதாக அமைந்தது இப்பாடல். இக்குறளில் மனைவியானவள் பற்றி எதுவும் குறைவாகக் கூறப்படவில்லை என்பதும், அவள் பின்னால் செல்லும் ஆணையே கடிகின்றார் என்பதும், அவனது கடமைகளுக்கு இடையூறாகும் மனைவிழைதலே வேண்டாம் என்று சொல்லப்படுவதும் அறியத்தக்கன. மனைவிமீது மிக்க காமம் ஒரு புறம், கடமை ஆற்றுதல் மறுபுறம், இதனிடை கடமைக்கு இடையூறாக இருக்கும் தன்மை எடுத்துக்காட்டப்பட்டது.

'அது' என்ற சொல் குறிப்பது என்ன?

'அது' என்ற சொல் மனையாளை விழைதல், மனையாள் தன்மையராய் ஒழுகுதல், பெண் சொல் கேட்டல், மனையாளைச் சால விருப்பம் கொள்தல், பெண்சாதியை விரும்பிச் செல்லும் இன்பம், இல்லறஞ் செய்து பெறும் பயன், மனைவியை விரும்புதல், அக்காமமே, பெண்வழி நடத்தல், மனைவியை விரும்புதலே, மனைவியின் காம இன்பத்துக்காக, அவளுடைய விருப்பத்தின்படி நடத்தல், வரம்பற்ற காமத்தால் அடிமையாகித் தம் மனைவியை விரும்புதல், மனைவியை விரும்பி அவள் தன்மையராய் ஒழுகுதல், இன்பம் காரணமாகத் தம் மனையாளை விரும்பி அவள் சொற்படி நடத்தல், இன்பம் காரணமாக மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடக்க விரும்புதல், காதல் இன்பம் கருதி மனைவியிடம் கழி காமுறுதல், மனைவிக்கு அடிமையாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே, மனைவியை விரும்பி அவள் சொற்படி நடத்தல் இவற்றைக் குறிப்பதாக உரையாளர்கள் விளக்கினர்.

'வேண்டாப் பொருளுமது' என்பதிலுள்ள 'அது' என்பது மனைவிழைதலைச் சுட்டுவதாகக் கொள்ளல் நேரிது. கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் மனைவியிடம் கொள்ளும் காமத்தையே எண்ணிக்கொண்டிருப்பதை இகழ்வர் அதாவது அலட்சியப்படுத்துவர். இவ்விதம் அளவிறந்த காமவிருப்பத்தைப் புறக்கணித்துச் செயல்படாவிட்டால் இல்லறம் பயன்பெறுவது இயலாது. இதனாலே அதை வேண்டாப் பொருள் எனச் சொல்லப்பட்டது.

'அது' என்ற சொல், இங்கு, அறத்தினும் பொருளினும் காதலின்றி தன்மனைவியையே காதலித்து ஒழுகுதலைச் சொல்கிறது.

மனைவியிடம் பெறும் காமஇன்பத்தையே நினைத்திருப்பவர் பெரும்பயன் அடையார்; செயல்விரும்புவோர் விரும்பாத பொருளும் அப்படி நடந்துகொள்வதே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெண்வழிச்சேறல் வினையாற்றலுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.

பொழிப்பு

மனைவியிடம் பெறும் காமத்தை விரும்பி அவள்வழி நடப்பவர் நற்பயன்களை அடையார். செயல்வீறு கொண்டவர் இகழ்ந்து ஒதுக்குவதும் அக்காமத்தை விரும்புதலே.