இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:907)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

மணக்குடவர் உரை: பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம்.
இது பிறரால் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து.
('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)

இரா சாரங்கபாணி உரை: தன் மனைவி ஏவிய தொழில் கேட்டு நாணமின்றிப் பணிந்து நடக்கும் ஆண்தன்மையைக் காட்டிலும் நாணத்தை உடைய அவளது பெண்தன்மையே பெருமையுடையதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து.

பதவுரை: பெண்-பெண் (இங்கு மனையாள்); ஏவல்-ஏவிய தொழில்; செய்து-செய்து; ஒழுகும்-நடந்துகொள்கின்ற; ஆண்மையின்-ஆண்தன்மையைக் காட்டிலும்; நாணுடை-நாண் உடையை; பெண்ணே-பெண்தன்மையே; பெருமை-மேம்பாடு; உடைத்து-உடையது.


பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின்;
பரிப்பெருமாள்: பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின்;
பரிதி: பெண்ணுக்குப் பயப்படுகிற ஆண்மையினும்;
காலிங்கர்: மனையாள் ஏவல் கேட்டு அது செய்து ஒழுகும் ஆண்மை ஒருவர்க்குச் சிறுமைதரும் அதுவல்லது பெருமை உடைத்து அன்று;
பரிமேலழகர்: நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; [ஆண்தன்மை- ஆளுந்தன்மை]

'பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட', 'பெண்ணின் கட்டளைக்கு அடங்கிக் காரியம் செய்து வாழும் ஆண் பிள்ளையை விட', 'வெட்கமின்றிப் பெண்ணினது ஏவலுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஆண் தன்மையைப் பார்க்கிலும்', 'பெண்ணின் கட்டளைகளை ஏற்று அவளுக்கு அடிமை செய்து நடக்கும் ஆண்மையைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனைவியின் ஏவல்படி நடக்கும் ஆண்தன்மையைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

நாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறரால் மதிக்கப்படாரென்றது.
பரிப்பெருமாள்: நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரால் மதிக்கப்படாரென்றது.
பரிதி: பெண்ணே விசேஷம் என்றவாறு.
காலிங்கர்: அதனால் அவ்வாண்மை படைப்பதில் ஆண்மகற்கு உள் அஞ்சும் நாணத்தையுடைய நன்னெறிப் பெண்ணே அவர்க்கு மிக்க பெருமையைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. [பெண்மை - கண்ணுக்குப் புலனாகும் ஓர் அமைதித்தன்மை]
பரிமேலழகர் குறிப்புரை: 'நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.

'நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணமுடைய பெண்ணே மதிக்கத்தக்கவள்', 'அடக்கமுள்ள பெண் பிள்ளையே சிறப்புடையவள்', 'வெட்கமிகுந்த பெண்தன்மையே மேம்பாடுடையது', 'நாணினை உடைய பெண்மையே பெருமை யுடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாணமுடைய பெண்தன்மையே பெருமைக்குரியது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெண்ஏவல் செய்து ஒழுகும் ஆண்தன்மையைவிட நாணமுடைய பெண்தன்மையே பெருமைக்குரியது என்பது பாடலின் பொருள்.
பெண்ணேவல் செய்வது இழிவானதா?

வெட்கத்தை விட்ட ஆண்மையினும் நாண்கொண்ட பெண்மை மேல்.

தன் மனைவி ஏவிய வேலைகளைச் செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும் நாணம் மிகுந்த பெண்மையே பெருமையுடையது.
எந்தவகை நாணமும் இல்லாமல் தன் மனைவியின் கட்டளைகட்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஓர் ஆண்மகனைவிட நாணம் மிகுந்த பெண்ணே பெருமையுடையவள். ஆண்மை என்பது வழக்கில் மறம் அல்லது வீரம் என்ற பொருளில் அறிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு ஆளுந்தன்மை எனவும் பொருள் உண்டு. இங்கு அது ஆளுந்தன்மை என்ற பொருளிலேயே ஆளப்படுகிறது. பெண்மை என்பதற்கு அமைதித் தன்மை என்று பொருள் கூறுவர். ஆண்மையும் பெண்மையும் எல்லா ஆண்களிடமும் பெண்களிடமும் வெளிப்படையாகத் தெரியும் தன்மைகள். அத்தன்மைகளை அவர்கள் இயல்பாகக் கொண்டுள்ளனர்.
உலகத்து ஆண்கள் இல்லறத்தில் மனைவி சொல் கேட்டு நடப்பவர்களே. இல்லாள் சொல் கேட்டு நடப்பது என்பது வேறு, பெண்ணேவல் செய்தொழுகுவது என்பது வேறு. மனைவியும் கணவனது விருப்போடு ஏவல் செய்ய ஆளுவதே அவனது ஆண்மைக்கு இயல்பு. ஆனால் இக்குறளில் சொல்லப்பட்டுள்ளது மனைவி எது சொன்னாலும் மறு சொல் கூறாமல் கீழ்ப்படியும் தன்மையை. அதாவது மனைவியின் ஆணையை அப்படியே ஏற்றுச் செய்வது. இது ஆண்மையாகாது என்கிறார் வள்ளுவர். இங்கு அதைப் பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மை என்று இகழ்ச்சியாகக் குறிக்கிறார் அவர். மனைவியின் ஏவலை ஏற்றுச் செய்வது குற்றமல்ல; அது நல்லதா அல்லது தீயதா, அறமானதா அல்லவா என்று ஆராயாமல் செய்வது ஆளுந்தன்மை அல்ல; அது ஆண்மையாகாது என்பது குறட்குறிப்பு.
கணவன் ஏன் பெண்ணேவல் செய்து ஒழுகவேண்டும்? அவள் தன் பெண்மையை அவனுக்குத் தர மறுப்பாளோ என்ற அச்ச உணர்வே காரணம்.

நாணம் என்னும் குணம் பெண்மைக்கு அழகு சேர்ப்பது. ஆண்மைக்கு உள்அஞ்சுவதாகத் தோற்றம்தரும் நன்னெறிப் பெண்ணின் அமைதித்தன்மை இன்னும் பேரழகு. இங்கு நாணுடைப் பெண் பெருமைக்குரியவள் எனப்படுகின்றாள். ஏன்?
தெ பொ மீனாட்சிசுந்தரம் 'மனைவியானவள் அறமல்லனவற்றைத் தானே செய்ய முந்த மாட்டாள்; அவளது நாணம் அவளைத் தடுக்கும். அதனால் தன் கணவனைக் கொண்டு முடித்துக்கொள்கிறாள். அவள் தன் நாணை மறவாதிருக்க இவன் நாணை மறந்து அவள் ஏவல்வழி ஒழுகுகிறான், அதனால் நாணமுடைய இவளினும் நாணமிலாத அவன் சிறுமையுடையவன்' என விளக்குகிறார். பரிமேலழகரது 'ஏவல் செய்வித்துக் கோடற் சிறப்புத் தோன்றப் பெண்ணைப் பிரித்துக் கூறுகின்றார்' என்ற சிறப்புரைக் குறிப்பும் இதையே காட்டுகின்றது எனவும் தெ பொ மீ சொல்கிறார். அவன் சிறுமையடைவது இவள் பெருமை பெறுவதற்கு ஏதுவாகிறது.
நாணம் என்பது பெண்களுக்கு இயல்பானது. அதே நேரத்தில் மாந்தர் யாவரும் தீயன செய்வதற்கும் நாணவேண்டும் என்பது அறம். காமமிகுதியால் எப்போதும் மனைவியையே தொடர்ந்து சென்று, அவள் ஏவலுக்குப் பணிந்து அறமல்லாதவற்றைச் செய்யும் ஆண்மை நாணத்தக்கதாகும். எனவே மனைவியின் பெண்மைக்கு அடிமையாகி, அவளது கட்டளைப்படி நடக்கும் ஆண்மையைவிட, நாணத்தை உடைய ஒரு பெண்ணே பெருமைக்குரியவளாகிறாள்.
எல்லாப் பெண்களும் நாணுடையவர்கள்; நாணுடைப் பெண் என வேண்டாது கூறப்பட்டது. வேண்டாத ஒன்றைக் கூறுதல், வேண்டிய ஒன்றைப் பெற வைத்தற்கு ஆகுமாதலால் அவள் ஏவல் செய்வானது நாணின்மையை வருவிப்பதற்காக நாணுடைப் பெண் எனக் கூறப்பட்டது.

பெண்ணேவல் செய்வது இழிவானதா?

ஏவல் என்பது ஏவுதலாற் செய்யும் தொழில் குறித்தது. மனைவி ஏவின தொழிலைச் செய்தொழுகுவது பெண்ணேவல் என்ற சொல்லால் இங்கு குறிக்கப்பெறுகிறது. மனைவிக்கு ஏவல் செய்யும் ஆண்மையைக் காட்டிலும் வெட்கமுடைய பெண்மையே மேல் என இப்பாடல் பொருள் தருவதால் இது பெண்மையை இழித்துக் கூறுவது என்பர் சிலர். பெண்ணேவல் செய்தொழுகும் கணவன், மனைவியை ஆளும் பெருமையின்றி இழிவடைந்தமையால். அவனது ஆண்மையைவிடப் பெண்மையே பெருமையுடையது என்னும்போது ஆண்பிறவியே உயர்ந்தது; பெண்பிறவி தாழ்ந்தது என்பதுதானே செய்தி? என இவர்கள் வினவுவர். மேலும் பணியிடங்களில் எல்லாம் பணி ஏவும்நிலையில் பெண்கள் உள்ளார்களே எனவும் வினா எழுப்புவர் இவர்கள்.
ஆனால் ஆண்மை-பெண்மை இரண்டுக்கும் இடையே எந்த ஏற்றத் தாழ்வுக்கும் வள்ளுவத்தில் இடமில்லை. இணைவிழைச்சு ஒன்றினையே விழைந்து மனைவியிடம் பெறும் உடலின்பத்திற்காக அவளிடம் செல்லுதல் என்பது 'பெண்வழிச்சேறல்' அதிகாரப்பாடல்கள் கூறுவது. இப்பாடலிலும் அதுவே சொல்லப்படுகிறது. இங்கே ஆளுதலும் அடிமையாதலும் இல்லை. அவள் ஏவலால் அவன் ஆராயாது அறமல்லாதனவற்றையும் செய்கிறான். அது இழிவாகின்றது.
இப்பாடல், பெண்ணேவல் செய்தொழுகும் பேதைக் கணவன் குறித்தும், அவனிடம் வேலை வாங்கும் மனைவியை பற்றியும், பேசுகின்றதே தவிர, உலகத்து ஆண்களையோ பெண்ணுலகம் முழுக்கத் தழுவியோ பேசுவது அல்ல. பணியிடங்களிலோ அரசியலிலோ ஆண்களுக்கு ஆணையிடம் நிலையில் உள்ள பெண்களை இங்கு கொண்டுவரத் தேவையேயில்லை.
இக்குறள் பொதுவாக எல்லாப் பெண்களையும் குறிப்பதான ஒன்றல்ல, காமம் கருதி மனைவியின் ஆணையை தலைமேற்கொண்டு ஏவல் செய்யும் இழிவான நிலையை அடைந்த கணவன் பற்றியது மட்டுமே.

பெண்ணேவல் செய்வது இழிவானது என்பதைச் சொல்லவந்தது அல்ல இக்குறள்.

மனைவியின் ஏவல்படி நடக்கும் ஆண்தன்மையைவிட நாணமுடைய பெண்தன்மையே பெருமைக்குரியது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெண்வழிச்சேறல் ஆண்மைப் பெருமையை இழக்கச் செய்யும்.

பொழிப்பு

மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆண்தன்மையைவிட நாணத்தை உடைய அவளது பெண்தன்மையே பெருமைக்குரியது.