இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:903)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத் தரும்.

மணக்குடவர் உரை: மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்

பரிமேலழகர் உரை: இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும்.
(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.)

தமிழண்ணல் உரை: காமம் காரணமாகத் தன் மனைவியிடம் தாழ்ந்து நடக்கின்ற, ஆண்இயல்பிற்கு முரண்பட்ட தன்மை, நல்லவர் நடுவில் செல்லும் போது, எக்காலத்திலும் அவனை வெட்கப்படும்படி செய்யும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்.

பதவுரை: இல்லாள்கண்-மனைவியிடத்தில்; தாழ்ந்த-பணிவுப்போக்கு; இயல்புஇன்மை-இயல்பற்ற தன்மை; எஞ்ஞான்றும்-எப்போதும்; நல்லாருள்-பெரியாரிடை; நாணு-வெட்கக்கேடு; தரும்-கொடுக்கும்.


இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு;
பரிப்பெருமாள்: மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பு கேடு;
பரிதி: மனையாளிடத்தில் விருப்பம்;
காலிங்கர்: மனையாள்மாட்டு உள் அழுந்திச் செல்கின்ற மரபுக் கேடானது;
பரிமேலழகர்: ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்;
பரிமேலழகர் குறிப்புரை: அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று.

'மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு/உள் அழுந்திச் செல்கின்ற மரபுக் கேடு/தாழ்தற்கு ஏதுவாய அச்சம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்குப் பணிந்து நடக்கும் போக்கு', 'மனைவியிடத்துப் பணிந்து நடக்கும் இயல்பற்ற தன்மை', 'மனைவிக்குக் கீழ்ப்படிகின்ற முறை கெட்ட தன்மை', 'வீட்டில் உள்ளாளிடம் காட்டும் இழிந்ததும் ஆண்மைக்குப் பொருந்தாதுமான குணம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனைவியிடம் பணிந்துபோகும் இயல்பற்ற தன்மை என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.
பரிப்பெருமாள்: எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மனையாளை அஞ்சித் தாழ்ந்து ஒழுகுவானாயின் அவளைக் கடியும் தன்மை இலனாவன்; அதனானே நல்லார் முன்பு நாணி நிற்கும்; ஆதலால் காமநுகர்ச்சியும் பெறான் என்றது. இவை நான்கினும் அஞ்சி ஒழுகுவார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.
பரிதி: எப்போதும் நல்லோரிடத்தில் நாணம் தரும்.
காலிங்கர்: மற்று எஞ்ஞான்றும் தனக்குப் பல சான்றோர் இருந்த இடத்து எல்லாம் பெரியதோர் கூச்சமான நாணத்தைத் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார். [நியமிப்பார் - கட்டுப்படுத்துபவர்]

'எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் அறிஞரிடை வெட்கம் தரும்', 'பெண்களுக்கு முன்னே எக்காலத்தும் நாணத்தைக் கொடுக்கும்', 'எப்போதும் நல்லவர்கள் மத்தியில் கூசச் செய்யும்', 'எப்பொழுதும் நல்லவரிடையே வெட்கத்தைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எப்பொழுதும் நல்லவரிடையே கூச்சத்தை உண்டுபண்ணும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனைவியிடம் தாழ்ந்த இயல்பின்மை எப்பொழுதும் நல்லவரிடையே கூச்சத்தை உண்டுபண்ணும் என்பது பாடலின் பொருள்.
'தாழ்ந்த இயல்பின்மை' என்ற தொடர் குறிப்பதென்ன?

மற்றவர்முன் மனைவியிடம் பணிவு காட்டுவது மரபல்ல.

ஒருவன் தன் இல்லாளிடத்தில் பணிந்து போகும் இயல்பற்ற தன்மை நல்லாரிடை அவனுக்கு எப்போதும் நாணத்தைக் கொடுப்பதாகவே இருக்கும்.
'இல்லாள்' என்னும் சொல் ஒருவனுக்கு உரிமையுடையவனின் மனைவி என்னும் பொருளது. இங்கு நல்லார்களிடை, தன் மனைவியிடம், ஒரு கணவன் பணிவோடு நடந்து கொள்கிறான். கணவன் மனைவியிடம் தாழ்ந்து நடத்தல் வழக்கமானதல்லாதலால் அது பெரியவர்களுக்கு உவப்பானதாக இருக்காது; இதன் காரணமாக நல்லோர் முன்னிலையில் தன் மதிப்பு குன்றுவதாக அவனும் உணர்வதால், அவர்கள் முன்னிலையில் செல்லும்போது அவன் நாணிக்கோண வேண்டியிருக்கும்.
கணவன் மனைவியிடம் தாழ்ந்து நடந்து கொள்கின்றான் என்றால் அவன் அவளிடம் அஞ்சி ஒழுகுகின்றான் என்றாகிறது. அவன் ஏன் அஞ்ச வேண்டும்? அவன் அவளிடம் அளவிறந்த காமம் கொண்டு அலைபவனாயிருக்கிறான். இணை விழைச்சை நச்சி நிற்பவனாதலால், அவள் அதனை மறுப்பாளோ என்று எண்ணி அவளைக் கண்டு அஞ்சுகின்றான். அவர்களிடையான உறவு அன்பின் அடிப்படையில் இல்லை எனத் தெரிகிறது.. ....மடந்தையொடு எம்மிடை நட்பு (1122) என்றாற் போல் நட்போடு பழகும் கணவன் -மனைவி உறவில் ஒருவருக்கு ஒருவர் பணிய வேண்டியதில்லை.
இல்லாளிடம் பணிவு காட்டப்படுவதை பெரியோர்கள்-அவர்கள் பெண்களேயானாலும்- விரும்புவதில்லை.

ஒரு சில உறவுகளில் கணவன் மனைவியிடம் காம இன்பம் பெறுவதே மணவாழ்வின் நோக்கமாகக் கருதியிருப்பவனாக இருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு வாய்த்த மனையாளானவள் தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடுடையவளாய் இருந்தால் அந்த இல்லறவாழ்வு சிறக்காது. அவள் தன் பெருமையும் சிறப்புமே பொருளாகக் கருதி இருப்பாள். இவனுக்கு அவளிடம் பெறும் காமஇன்பம் முதன்மையானதாக இருக்கும். அவனது இந்த மெலிவை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். மன உறுதி குறைந்த ஆடவன் தனக்குக் காம இன்பம் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சி நற்குணமில்லா மனைவியிடம் பணிவான போக்கில் நடந்துகொள்கிறான். சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற கவலையும் அவனுக்குக் கிடையாது. இல்லாள் ஒருபுறம் நல்லார் மற்றொருபுறம் இவர்களிடை இவன் வெட்கத்துக்குரியவானாகிறான்.

வள்ளுவர் கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்த உரிமை நல்கும் சான்றோர் ஆவார். ஆணுக்குப் பெண் அடங்கும் பெண்ணடிமைத் தன்மையை அவர் எங்கும் சொல்லவில்லை. அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அடங்கி நடக்கும் ஆணடிமைத் தன்மையையும் அவர் விரும்பமாட்டார். யார் யாரிடம் பணிந்து போனாலும் அது அச்சத்தினால் விளைவதாகவே காண்போர்க்குத் தோன்றும். அன்பு நிலவ வேண்டிய இல்லறத்தில் ஒருவர் இன்னொருவர்க்கு அஞ்சி நடப்பது அழகல்ல. இங்கு ஆண் பெண்ணுக்கு அஞ்சி அடங்கி நடக்கும் இயல்பைக் கடிகின்றார். இங்கு கணவன் தான் கடியப்படுகிறான். மனைவி என்பவள் கட்டுக்குள் வைத்திருக்கப் பட வேண்டியவள் என்றோ அல்லது அவள் கணவன் சொற்படி கேட்டு நடக்க வேண்டியவள் என்றோ உரையாளர்கள்தாம் கூறுகின்றனர்.
காமம் ஒன்றை மட்டுமே மனத்திலிருத்தி அவள் விரும்பும் வழியில் எப்பொழுதுமே இணங்கிச் செல்லுதல் அவனுக்குக் குற்றமாகும் என்ற கருத்துப்பட அமைந்தது இப்பாடல்.

'தாழ்ந்த இயல்பின்மை' என்ற தொடர் குறிப்பதென்ன?

'தாழ்ந்த இயல்பின்மை' என்றதற்குத் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு, தாழ்ந்தொழுகும் இயல்பு கேடு, உள் அழுந்திச் செல்கின்ற மரபுக் கேடு, தாழ்தற்கு ஏதுவாய அச்சம், தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, தாழ்ந்து நடக்கின்ற ஆண்இயல்பிற்கு முரண்பட்ட தன்மை, பணிந்து நடக்கும் போக்கு, பணிந்து நடக்கும் இயல்பற்ற தன்மை, கீழ்ப்படிகின்ற முறை கெட்ட தன்மை, தாழ்ந்து நிற்கும் (இழிதன்மையாம்) பண்பிலாத் தன்மை, தாழ்ந்து அவள் சொல்வழி நிற்றற்கு ஏதுவான அச்சம், காட்டும் இழிந்ததும் ஆண்மைக்குப் பொருந்தாதுமான குணம், தாழ்ந்து நடக்கும் தகுதியற்ற தன்மை, ஆண்மையின் இயல்புக்கு மாறாக மனைவியின் மையலில் தாழ்ந்து கிடப்பவனின் பண்பு, பணியும் ஆண்மையின்மை, அவள் சொற்படி அடங்கி நடக்கும்படியான தாழ்வான முரண்பட்ட செயல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'தாழ்ந்த இயல்பின்மை' என்றதிலுள்ள தாழ்ந்த என்பதற்கு பணிந்த என்பது பொருள். அடுத்த தொடரான இயல்பின்மை என்பதை விளக்குவதில் உரையாளர்கள் இடர்ப்படுகின்றனர். இயல்பு+இன்மை எனப் பிரித்து சிலர் (மனைவிக்குப் பயந்த) ஆணியல்பு இல்லாமை என்றனர். வேறு சிலர் (தாழ்வதற்கு ஏதுவாய) அச்சம், கேடு எனப் பொருளுரைத்தனர். பரிமேலழகர் 'அவள்தான், அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின் அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று' என விரிவுரையில் கூறினார். மேலும் அவர் 'கணவன், மனைவிக்கு பயந்து நடந்தால், அவளை யாராலும் கட்டுப் படுத்த முடியாது. ஒரு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பெண்ணினால் எல்லாவிதமான குற்றங்களும், எப்போதும் விளையும்' எனவும் உரைக்கிறார். இது மனையாளை அஞ்சுதல் கணவனுக்கு இயல்பல்ல என்ற பொருளைக் கொணர்கிறது. அவன் அச்சத்தின் அடிப்படையில் ஒழுகுகின்றான் என்பதாகிறது. பரிப்பெருமாள் உரை 'இல்லாள் தாழ்ந்த இயல்பினளாக இல்லாமையால் கணவன் அவளைக் கடியமாட்டாமல் அவளுக்கு அடங்கி நடக்க வேண்டியதிருக்கிறது. அதனைக் கண்டு நல்லவர்கள் நாணுகிறார்கள்' என்ற கருத்தைத் தருவதாக உள்ளது. 'பலர் முன்னிலையினும் மனைவியிடம் கணவனிடம் அடங்கி நடக்கும் இயற்கை யில்லாமையானது நல்லவர்கள் இவர்கள் வீட்டுக்கு வரவே நாணினைத் தருவதாம்' என்றபடியும் உரை கூறலாம் என்பர்.

'தாழ்ந்த இயல்பின்மை' என்றது தாழ்ந்தொழுகும் மரபுக்கேடு என்ற பொருள் தரும்.

மனைவியிடம் பணிந்துபோகும் இயல்பற்ற தன்மை எப்பொழுதும் நல்லவரிடையே கூச்சத்தை உண்டுபண்ணும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெண்வழிச்சேறல்பெரியோர்களுக்கு இனிதாவதில்லை.

பொழிப்பு

மனைவியிடம் பணிந்துபோகும் இயல்பற்ற தன்மை நல்லார் முன்னே எக்காலத்தும் கூச்சத்தை உண்டுபண்ணும்.