இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்

(அதிகாரம்:பெண்வழிச்சேறல் குறள் எண்:909)

பொழிப்பு (மு வரதராசன்): அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.மணக்குடவர் உரை: அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும் பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம்.
இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.

பரிமேலழகர் உரை: அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா.
(புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அறச்செயலும், சிறந்தமைந்த பொருளும், இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும் பெண்ணிற்கு அடிமைத் தொழில் செய்வாரிடம் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண் ஏவல் செய்வார்கண் இல்.

பதவுரை: அறவினையும்-அறச்செயலும்; ஆன்ற-அமைந்த; பொருளும்-உடைமையும்; பிற-பிறவாகிய; வினையும்-செயலும்; பெண்-பெண் (இங்கு மனையாள்); ஏவல்-ஏவிய தொழில்; செய்வார்கண்-செய்வார்மாட்டு; இல்-உளவாகா.


அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும்; [அமைந்த பொருள் - நல்லாற்றான் ஈட்டிய இன்பமே நுகர்தற்கு உரிய அமைதியான பொருள்]
பரிப்பெருமாள்: அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும்;
பரிதி: அறமும் பொருளும் இன்பமும்;
காலிங்கர்: அறமும் பொருளும் இன்பமும்;
காலிங்கர் குறிப்புரை: பிறவினை என்பது இன்பம் என்றது.
பரிமேலழகர்: அறச்செயலும் அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும் இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; [இவ்விரண்டின் - அறச்செயல், பொருட்செயல் என்னும் இரண்டிற்கும்]
பரிமேலழகர் குறிப்புரை: புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார்.

'அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பிற' என்பதற்கு 'ஒழிந்த காமம் நுகர்தல்' எனப் பொருள் காண்பர் மணக்குடவரும் பரிப்பெருமாளும். பரிதியும் காலிங்கரும் 'இன்பம்' என்று அதற்கு உரை கூறினர். 'அவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்' என்னும் பரிமேலழகர் உரை வேறுள ஐம்புல இன்பங்களையும் குறித்தது. மேலும் பரிமேலழகர் 'கணவன் மனைவியின் ஏவல் வழி நிற்பது அவளால் பெறத்தக்க புலன் இன்பம் ஒன்றையே கருதியானாலும் அந்த இணவிழைச்சின்பத்தையும் பெறான்' என்றும் உரைப்பார். அறத்தையும் பொருளையும் நேரடியாகச் சுட்டிய இக்குறள் உறுதிப் பொருள்களின் மூன்றாவதான காமமே 'பிறவினை' என்று சொல்லப்பட்டிருப்பதாக எல்லாத் தொல்ஆசிரியர்களும் பொருள் கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமும் பொருளும் இன்பமும் இரா', 'அறச்செயலும் அதற்கு வேண்டும் பொருட்செயலும் அவற்றின் வேறாய இன்பச் செயலும் தோன்றா', 'அறச் செயல்களும் அவற்றுக்கு வேண்டிய பொருள் சம்பாதிக்கும் முயற்சியும் இவற்றை ஒட்டிவரும் மற்ற நன்மைகளும்', 'அறச்செயலும், சிறந்தமைந்த பொருளும், இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறம் செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் இவ்விரண்டின் வேறாய செயல்களும் என்பது இப்பகுதியின் பொருள்.

பெண்ஏவல் செய்வார்கண் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.
பரிப்பெருமாள்: பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அச்சமிலராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது. என்னை? தலைமை அவள் கண்ணாதலான் இவை முன்றினானும் ஏவல் செய்தார்க்கு உளதாகும் குற்றம் கூறப்பட்டது.
பரிதி: பெண் ஏவல் செய்வார்க்கு இல்லை என்றவாறு.
காலிங்கர்: பெண் ஏவல் செய்து ஒழுகுவார்க்கு இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது. [அவள் ஏவல் - மனைவியின் ஏவல்]

'பெண் ஏவல் செய்து ஒழுகுவார்க்கு இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவி ஏவக் காரியம் செய்வாரிடத்து', 'மனைவிக்குப் பணிந்து ஏவல் செய்யும் தாழ்ந்தவரிடத்து', 'பெண்ணேவல் செய்கிறவர்களிடம் இருக்கமாட்டா', 'பெண்ணிற்கு அடிமைத் தொழில் செய்வாரிடம் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன் மனைவியின் ஏவல் மொழியைக் கேட்டுச் செயல்படுவோரிடம் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன் மனைவியின் ஏவல் மொழியைக் கேட்டுச் செயல்படுவோரிடம் அறம் செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் பிறவினைகளும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'பிறவினை' குறிப்பது என்ன?

இணைவிழைச்சை நச்சித்திரிவார்க்கு அறம், பொருள், இன்பம் எதுவும் கிட்டாமல் போய்விடும்.

அறச்செயலும் அதுமுடித்தற்கு ஏதுவான பொருள் முயற்சியும், பிற இன்பச் செயலும் தம் மனைவியின் ஏவலைச் செய்வாரிடத்தில் இல்லை,
பெண் என்று இங்கு சொன்னது மனைவியை. அன்பு வாழ்க்கையை விரும்பாது இணைவிழைச்சையே ஏங்கித் திரிவார் 'பெண்ஏவல் செய்வார்' என்று இழித்துக் கூறப்படுகின்றார். மனைவியாள் மீது மிகையான காமம் கொண்டிருக்கிறான் அவன். அவள் தனக்கு இன்பந்தர மறுப்பாளோ என அஞ்சிக் கண்மூடி அவளது ஏவல் செய்கிறான். இதுபோன்ற கணவனிடம் அறச்செயல் ஆற்றும் நோக்கம் தோன்றாது; பொருள் சேர்க்கும் ஊக்கமும் இராது; காமத்தால் முடங்கியவனால் வேறு இன்பச் செயல்களிலும் நாட்டம் இல்லாதவனாகி விடுவான்; அவன் விழையும் அந்தக் காமமும்கூட அவளிடமிருந்து முழுமையாகக் கைகூடாது போகும்.

கணவனும் மனைவியும் ஒத்த நிலையில் அன்பு வாழ்க்கை ஒழுக வேண்டும் என்று வலியுறுத்துபவர் வள்ளுவர். ஒருவர் மற்றொருவருக்கு அஞ்சி வாழ்வதை ஏற்றுக் கொள்ளாதவர். மனைவி கணவனுக்கும் ஆடவன் மனைவிக்கும் அஞ்சி வாழக்கூடாது எனக் கருத்துக் கொண்டவர். எனவே காமஇன்பங் காரணமாக மனையாள் வழியொழுகுதலைப் பழிக்கிறார். இல்லறக் கடமையைச் செய்வதற்கும், அறத்தைச் செய்வதற்கும் மனைவியின் ஏவல் தடையாக அமைந்துவிடக் கூடாது என்ற பொருளில் அமைந்தது இப்பாடல்.

'பிறவினை' குறிப்பது என்ன?

'பிறவினை' என்றதற்கு ஒழிந்த காமம் நுகர்தல், இன்பம், வேறாய இன்பச் செயல்கள், இன்பம் செய்கிறது, தமக்கின்பமாகிய செயல்கள், மற்றக் கடமைகள், பிற இன்பச்செயல்கள், தாம் உவக்கும் செயல்கள், மற்ற நன்மைகள், வேறு நயமான செய்கைகள், இன்ப நுகர்வு, பிற வீரச்செயல்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

குறளின் முதற்பகுதியில் அறத்தையும் பொருளையும் வெளிப்படையாகக் கூறிவிட்டதனால், 'பிறவினை' என்றது அவற்றின் இனமாகிய இன்பவினை என்ற இயல்பான பொருள் கொள்வது தகும். இன்பச் செயல்கள் பலவகை. அதில் காமமும் ஒன்று. காமம் பெறவேண்டியே, இங்கு சொல்லப்பட்ட கணவன், எல்லாவற்றையும் புறக்கணித்து, மனைவியைச் சுற்றி வருகிறான். எனவே காமம் தவிர்த்த பிற இன்பச் செயல் அவனுக்குக் கிடைக்காது எனச் சொல்லப்படுகிறது. பிறவான இன்பச் செயல்களாவன: நுண்கலைகளினால் பெறக்கூடிய மகிழ்ச்சி, பயணம், இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பது போன்றன.

'பிறவினை' என்றது காமம் தவிர்த்த இன்பச் செயல் குறித்தது.

தன் மனைவியின் ஏவல் மொழியைக் கேட்டுச் செயல்படுவோரிடம் அறம் செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் இவ்விரண்டின் வேறாய செயல்களும் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெண்வழிச்சேறல் இல்வாழ்க்கை வீணாவதில் முடியும்.

பொழிப்பு

பெண் விழைவு கொண்டு அவளது ஏவல் செய்வார், அறம் செய்ய இயலாதார்; நிறைந்த பொருட்செல்வமும் இல்லார்; மற்றும் வேறு நற்செயல்கள் புரியார்.