இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்
(அதிகாரம்:பெண்வழிச்சேறல்
குறள் எண்:906)
பொழிப்பு (மு வரதராசன்): மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
|
மணக்குடவர் உரை:
தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்.
இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.
பரிமேலழகர் உரை:
இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர்.
(அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
இல்லாளின் மூங்கில்போன்ற தோளின் அழகிலே மயங்கி, காமம்மிக்கு அவளுக்கு அஞ்சி நடப்பவர்கள், தேவர்கள் போல எல்லாச் செல்வமும் எய்தி இன்புற்று வாழ்ந்தாலும் பெருமையில்லாதவர்கள் ஆவார்கள்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் இமையாரின் வாழினும் பாடுஇலரே.
பதவுரை: இமையாரின்-கண்கொட்டாதவர் போல, கண்களை இமைக்காத வானத்து தேவர்களைப்போல், விண்ணவர் போல; வாழினும்-வாழ்ந்தாலும்; பாடு-பெருமை; இலரே-இல்லாதாரே; இல்லாள்-மனைவி; அமை-மூங்கில், மூங்கிலழகு; ஆர்-போல்கின்ற, நிறைந்த; தோள் அஞ்சுபவர்-தோளாளை (தோளினளாகிய மனையாளை) அஞ்சுபவர்.
|
இமையாரின் வாழினும் பாடிலரே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்;
பரிப்பெருமாள்: தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்;
பரிதி: தேவரைப் போல வாழ்ந்தாலும் பெருமையில்லை;
காலிங்கர்: நுகர்ச்சிக்கண் ஒருமறு இன்றி வாழ்வார் அமரர் அன்றே; மற்று அவர்போல வாழினும் பெருமை இலரே; [மறு - குற்றம்]
பரிமேலழகர்: வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர். [துறக்கம் - சொர்க்கம்]
பரிமேலழகர் குறிப்புரை: அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். [வேறாலால்- வெல்லுதலால்]
'தேவரைப்போல இன்புற்று வாழினும் பெருமை யிலராவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் வேறுபட 'வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர்' என்றார். இன்பத்தில் அழுந்தி வாழ்தல் அளவில் தேவர்கள் உவமிக்கப்பட்டனரேயன்றி அத்தேவர் எப்படி துறக்க உலகம் வந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக அல்ல என்பதால் பரிமேலழகர் உரை சிறப்பில்லை.
இன்றைய ஆசிரியர்கள் 'தேவர்போல வாழ்ந்தாலும் சிறப்பில்லை', 'தேவரைப் போல இன்புற்று வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவராவர்', 'தேவர்களைவிடச் சிறந்த போக வாழ்க்கை உடையவர்களானாலும் சிறப்பற்றவர்களே ஆவார்கள்', 'விண்ணவரைப்போல இன்பமுற வாழ்ந்தாலும் பெருமை யுடையவரல்லர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
விண்ணவரைப்போல இன்புற்று வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவராவர் என்பது இப்பகுதியின் பொருள்.
இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.
பரிப்பெருமாள்: மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செல்வமுடையராயினும் அவரால் பயனில்லாமையால் பிறரால் மதிக்கப்படார் என்றது.
பரிதி: மனையாளுக்குப் பயப்படுவானாகில் என்றவாறு.
காலிங்கர்: யாவர் எனின் அமைவளம் நிறைந்த தோளினளாகிய மனையாளை அஞ்சும் மக்கட் பண்பு இல்லார் என்றவாறு. [அமைவளம்- மூங்கிலின் அழகு]
பரிமேலழகர்: இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார். [வேய் - இளமூங்கில்]
பரிமேலழகர் குறிப்புரை: 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது. [எண்மை- எளிமை]
'மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மனைவியின் அழகிய தோளுக்கு அடங்கியவர்', 'மனைவியின் மூங்கில் போலும் அழகிய தோளின் முயக்கின்பம் கருதி அவளுக்கு அஞ்சி நடப்பவர்', 'மனைவியினுடைய அழகு பொருந்திய தோளில் (முயங்கும் காம இன்பத்தைக் கருதி) மயங்கி அவளுக்கு அஞ்சி நடக்கிறவர்கள்', 'மனைவியினது மூங்கில்போல் வளைந்த தோள்மீது உள்ள மயக்கத்தால் அவளுக்கு அஞ்சுபவர்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மனைவியின் மூங்கில் போலும் அழகிய தோளின் முயக்கின்பம் கருதி அவளுக்கு அஞ்சுபவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
மனைவியின் மூங்கில் போலும் அழகிய தோளின் முயக்கின்பம் கருதி அவளுக்கு அஞ்சுபவர்கள் விண்ணவரைப்போல இன்புற்று வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவராவர் என்பது பாடலின் பொருள்.
'இமையாரின் வாழினும்' என்ற தொடரின் பொருள் என்ன?
|
மனைவியின் அழகுக்கு அடிமை; பெருமை எல்லாம் தொலைவு.
தன் மனைவியின் மூங்கில் போன்ற அழகிய தோளின் மீது கொண்டுள்ள மயக்கத்தால் அவளுக்கு அஞ்சி நடக்கும் ஒருவன், துறக்கஉலகம் போன்ற இன்பத்தில் திளைத்து வாழ்ந்தாலும் அவன் பெருமை இல்லாதவனே.
அவன் மிகுந்த செல்வம் படைத்தவன். அதனால் அவனுக்கு எல்லா இன்பநலன்களும் உண்டு. விண்ணுலகத் தேவர்கள் போல் கவலை ஏதுமின்றி எப்பொழுதும் சீரோங்கி மகிழ்ச்சியாக இருக்கலாம். அவனுக்கு வாய்த்த மனைவி அழகானவள். அவளது அழகுக்கு அடிமையாகிவிட்டான். அவள் காமஇன்பம் மறுத்துவிடுவாளோ என அஞ்சியே அவளுக்குப் பணிந்து நடக்கத் தொடங்கினான். அவனது பெருமைகள் அவனைவிட்டு நீங்கின. பெருகிய செல்வத்துடன் எவ்வளவு சிறப்புற வாழ்ந்தாலும் பெருமை அவனை அடையாது. அவனை முன்போல் யாரும் கண்டுகொள்வதில்லை. சீரோங்கி வாழ்ந்தாலும் மனைவிக்குப் பயந்து ஒழுகுபவனை மதிப்பார் இல்லை. தேவர்களைபோல இந்த உலகத்திலே எல்லா இன்பநலன்களுடன் வாழ்ந்தாலும் மனைவியின் அரவணைப்புக்கு ஏங்கி வாழ்பவனுக்கு பெருமிதமே கிடையாது. தன் மனைவி அழகி என்ற பெருமை மட்டுமே அவனுக்கு மிஞ்சும்.
இப்பாடலிலுள்ள பாடு என்ற சொல் பெருமை என்ற பொருள் தரும்.
அமையார்தோள்: இத்தொடர் அமை+ஆர்+தோள் என விரியும். அமை என்ற சொல் வேய் அல்லது இளமூங்கில் எனும் பொருள்படுவது. இதற்கு அழகு என்ற பொருளும் உண்டு. வேய் என்றது முள்மூங்கிலையும் அமை என்ற சொல் முள்ளில்லா மூங்கிலையும் குறிக்கும் என்பர். ஆர் என்ற சொல் நிறைவு என்ற பொருள் தருவது. அமையார்தோள் என்ற தொடர் அவளது தோள் வடிவு, பசுமைநிறம் என்பவற்றால் வேய் போன்றது என்பதையும் அது தீண்டினார்க்கு மென்மையும் தண்மையும் பயக்கும் என்பதையும் குறிப்பதாக உள்ளது. குறளில் தோள் என்ற சொல் பெண்ணின் உடலழகையும் நுதல் என்ற சொல் அவளது முக அழகையும் குறிப்பதாகவே பெரிதும் வருகின்றன. அமையார்தோள் என்பதற்கு மூங்கிலின் அழகு நிறைந்த தோளினளாகிய மனையாள் எனப் பொருள் கொள்ளலாம்.
அழகிய தோள் அன்போடு அணைதற்குரியது. அந்த முயக்கத்தில் அவளுக்கு அடிமையாகிவிடுகிறான். அவள் மீது கண்மூடித்தனமான காமம் கொண்டுவிடுகிறான். அதன்பின்னர் அவள் காமஇன்பம் மறுத்தால் என் செய்வது என்று அவளுக்கு அஞ்சியே எப்பொழுதும் வாழ்கிறான். தோளில் முயங்கும் காம இன்பங்கருதி அஞ்சுததால்தான் அமையார்தோள் அஞ்சுபவர் என்ற தொடர்.
|
'இமையாரின் வாழினும்' என்ற தொடரின் பொருள் என்ன?
இமையார் என்ற சொல் வானில் உறையும் தேவர்களைக் குறிப்பது என்று தொன்மங்கள் கூறுகின்றன. இவர்கள் கண் இமைப்பதில்லை என்பதால் இமைத்தல் இல்லாதவர் அதாவது இமையார் என்று அறியப்படுகின்றனர். இவர்கள் இருக்குமிடம் துறக்க உலகம் அல்லது சொர்க்கலோகம் எனப்படும். இங்கு வாழ்பவர்களுக்கு நுகர்ச்சிக்கண் ஒருகுறையும் இல்லை. எல்லாவகையான இன்பங்களையும் அளவின்றித் துய்ப்பர். அவர்களுக்குத் துன்பம் என்பதே தெரியாது.
'இமையாரின் வாழினும்' என்ற தொடர் இவ்வானவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து இன்ப நலங்களிலும் மேலான வளங்களைப் பெற்று வாழ்ந்தாலும் என்பதைச் சொல்வது.
'இமையாரின் வாழினும்' என்ற தொடர்க்குத் தேவர்களைவிட இன்பநலங்கள் பெற்று வாழ்ந்தாலும் என்பது பொருள்.
|
மனைவியின் மூங்கில் போலும் அழகிய தோளின் முயக்கின்பம் கருதி அவளுக்கு அஞ்சுபவர்கள் விண்ணவரைப்போல இன்புற்று வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவராவர் என்பது இக்குறட்கருத்து.
பெண்வழிச்சேறல் செல்வமுடையாரையும் மதிப்பிழக்கச் செய்யும்.
மனைவியின் மூங்கில் போலும் அழகிய தோளின் முயக்கின்பம் கருதி அவளுக்கு அஞ்சி நடப்பவர் தேவர்போல வாழ்ந்தாலும் சிறப்பில்லை.
|