சென்ற அதிகாரமான பழைமையில், எவ்வளவு தவறுகள் செய்தாலும் விடமுடியாத நட்புப்பற்றிச் சொல்லப்பட்டது. இங்கு அதற்குமாறாக தீமை உண்டாக்கக்கூடிய நட்புத் தொடர்புகளை விலக்கிக் கொள்க என அறிவுறுத்தப்படுகிறது. அதாவது 'நட்பாடுபவர் பொறுக்கக் கூடிய பிழைசெய்தால் பழைமை பற்றிப் பொறுக்க; இல்லையேல் விடுக' என்ற கருத்தை வழங்குகிறது இவ்வதிகாரம்.
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு (நட்பாராய்தல் 793 பொருள்: குணம், குடிப்பிறப்பு, குற்றம், குறையில்லாத கூட்டாளி ஆகியவற்றை அறிந்து நட்புச் செய்க) எனக் குற்றமுடையாரை ஆராய்ந்து விடுக்க என நட்பாராய்தலில் சுருங்கச் சொல்லப்பட்டது. அதை விரித்து விளக்கவேண்டும் என்ற நோக்கில், குற்றமுடையாரைத் தீ நட்பினர், கூடா நட்பினர் எனப் பிரித்து இந்த அதிகாரத்திலும் அடுத்த அதிகாரத்திலும் முறையே விளக்கிக் கூறப்படுகின்றன.
நட்பு, கேண்மை, தொடர்பு என்னும் சொற்களோடு தீமையைக் குறிக்கும் வெவ்வேறு அடைமொழிகளைச் சேர்த்து, தீ நட்பு அதிகாரப் பெயர்ப் பொருளை வள்ளுவர் தெளிவிக்கின்றார். பண்பிலார் கேண்மை, ஒப்பிலார் கேண்மை, கல்லாமா அன்னார், சிறியவர் புன்கேண்மை, பேதை நட்பு, நகைவகையராகிய நட்பு, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு, மன்றிற் பழிப்பார் தொடர்பு என்பன போன்ற தொடர்கள் மூலம் தீ நட்பு விளக்கப்படுகிறது.
கெழுமிக் குற்றம்புரிவாரது தீங்கை உணர்த்துவது தீநட்பு பாடல் தொகுதி. உரிமை பற்றிய அன்பு இல்லாமல், அறிந்தே தீங்கு செய்பவர்களின் நட்பை விட்டொழிக்கலாம் எனச் அறிவுறுத்தப்படுகிறது.
எவ்வளவுதான் ஆராய்ந்து நட்புகொண்டாலும், சிலரின் உண்மையான குணநலன்கள் காலம் செல்லச்செல்ல வெளிப்பட்டேவிடும். தமது உள்நோக்கங்களைத் திறமையாக மறைத்து நம்பிக்கைக்குரிய நண்பரைப்போல காட்டிக்கொள்பவர் போன்றோரின் உறவு தீ நட்பு என வகைப்படுத்தப்படுகிறது. நட்பதில் விழிப்புடன் தடுக்க வேண்டியதொடர்புகளாக இவ்வதிகாரம் கூறுவன:
அளவு கடந்த அன்பைக் காட்டுவது போல் இருந்தாலும் நல்ல பண்புகளைப் பெறாதவர்களின் நட்பு.
தங்களுக்குப் பயனளிக்கும் சில செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நட்புகளை உருவாக்கித் தன்னலம் ஒன்றையே கருதி நட்புகொள்வோர்.
பொருள் கவர்வதிலேயே குறியாய் இருக்கும் இழிதகை நட்பினர்.
போர்க்களத்தில் முதுகில் இருந்த வீரனைத் தள்ளிவிட்டுத் தப்பிஓடும் குதிரையைப்போன்றோரது நம்பகத்தன்மையற்ற உறவு,
உதவி செய்யும் மனப்பான்மையே இல்லாதவருடனான உறவு.
அறிவு திரிந்தவருடனான கெழுமுதல்.
களிப்பும் பொழுதுபோக்கிற்காகவே கூடுபவரது நட்பு.
கூடவே இருந்து குழிபறிப்பவருடனான நெருக்கம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரது கசப்பான கெழுமுதல்,
வீட்டிற்குள் நயமாகப் பேசிவிட்டு, பொது இடங்களில் பழிச்சொல் கூறுவோரது கேண்மை.
இத்தகையோருடனான நட்பை வளரவிடக்கூடாது, அது இருந்தால் என்ன அதை இழந்தால் என்ன. கள்வர்க்கு இணையான நட்பு தேவையா?, நட்பின்றித் தனியாகவே இருக்கலாம், நட்பை அடைவது விட அடையாதிருப்பது நல்லது, இவர்களின் நட்பைவிட, பகைவரால் வரும் துன்பம் பெரிதல்ல, சொல்லாமல் கொள்ளாமல் தளரவிடுக,
இதுபோன்ற தீநட்பைக் கனவில்கூட கருதிப்பார்க்கக் கூடாது, பக்கத்திலே நெருங்க விடாதீர் என்பன இவ்வதிகாரம் வழங்கும் அறிவுரைகள்.