இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0817நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:817)

பொழிப்பு (மு வரதராசன்): (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.

மணக்குடவர் உரை: நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும்.
நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.

பரிமேலழகர் உரை: நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையராகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல.
(நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.)

தமிழண்ணல் உரை: எந்த நேரமும் சிரித்து நல்லவர்போல் நடிக்கும் இயல்புடையவர்களுடன் கொண்ட நட்பினைவிட, நேரே பகைக்கும் பகைவரால் பத்துக்கோடி மடங்கு நன்மை உண்டாகும். தீய நட்பாலேற்படும் தீங்குகளுடன் ஒப்பிடும்போது, பகைவரால் ஏற்படும் தீங்கு, பலகோடி மடங்கு நல்லதாகிவிடுகிறது. பகையென வெளிப்படத் தெரிவதால் காத்துக் கொள்ளல் எளிது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.

பதவுரை: நகை-சிரித்து விளையாடுதல்; வகையர்-கூறுபாட்டையுடையர்; ஆகிய-ஆன; நட்பின்-நட்பைக் காட்டிலும், நட்பால் வருவனவற்றைக் காட்டிலும்; பகைவரால்-எதிரிகளால்; பத்து-பத்து; அடுத்த-மடங்கான; கோடி-கோடி; உறும்-வரும், கிடைக்கும்.


நகைவகையர் ஆகிய நட்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நகையின் பகுதியார் செய்த நட்பினும்; [நகையின் பகுதியார் - எப்போதும் நகைத்தலையே தொழிலாகக் கொண்டவர்]
மணக்குடவர் குறிப்புரை: நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.
பரிப்பெருமாள்: நகையின் பகுதியார் செய்த நட்பினும்;
பரிப்பெருமாள் மாற்றுரை: நகைவகையார் நட்பாகிய அதனினும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: நகைவகையர்- காமுகரும், வேழம்பரும் முதலாயினார். இவர்கள் நட்புத் தீதென்றது. பின் கூடாநட்புக் கூறுவாராதலின் இவர்களும் அதற்கு உரியர் என்பதற்கு ஈண்டு உரைத்தது என்க.
பரிதி: தம்மில் குற்றத்தைத் தமக்கு வேண்டாதாரிடத்திலே தூற்றுபவர் உறவின்; [தூற்றுபவர் - புறங்கூறுவார்]
காலிங்கர்: இவர் நகையர் ஆகி நட்டு ஒழுகலின் இவர் மாட்டு ஓர் அயிர்ப்பு இல்லை; [அயிர்ப்பு - ஐயம்]
பரிமேலழகர்: தாம் அறிதல் வகையராகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்;
பரிமேலழகர் குறிப்புரை: நட்பு: ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. [விடமர் - காமுகர்; தூர்த்தர் - வஞ்சகர்; வேழம்பர் - களைக்கூத்தாடிகள்; நகுவித்து - சிரிக்கச் செய்து]

'நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகத்தளவில் மலரும் நட்பைக் காட்டிலும்', 'வறுமொழியாளர், வம்பப்பரத்தர், குறுமொழி கூறுநர் முதலிய நகைவகையராகிய நட்பினரால் வருவதினும்', 'நிந்தனைக்குரிய வகையிற் சேர்ந்தவர்களுடைய நட்பைவிட', 'சிரித்து விளையாடுதன் மாத்திரஞ் செய்பவருடைய நட்பைப் பார்க்கிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேளிக்கைகளில் மட்டும் ஈடுபாடு கொண்டவரது நட்பைக் காட்டிலும் என்பது இப்பகுதியின் பொருள்.

பகைவரால் பத்தடுத்த கோடி உறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும்.
பரிப்பெருமாள்: பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும்.
பரிப்பெருமாள் மாற்றுரை: பகைவராதல் நன்மை பயக்கும் என்று பொருளுரைக்கினும் அமையும்.
பரிதி: பத்துக்கோடி பகை அழகு என்றவாறு.
காலிங்கர்: அதனால் பலகோடி படைவரினும் அவை புறத்தினின்று வருவன ஆகலான் அதனிடை ஓர் உபாயம் சிந்தித்து உய்யவும் கூடும்; மற்று இவர்கூட நின்றே குடி முழுதும் கெடுப்பர் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல.
பரிமேலழகர் குறிப்புரை: 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார். [பத்தாகத் தொகுத்த கோடி - பத்துக் கோடி; இறப்ப நல்ல - மிக நல்ல].

'பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகை பத்துக்கோடி நல்லது', 'பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும்', 'பகைவர்களால் பத்து கோடி மடங்கு நன்மை உண்டு', 'பகைவரால் வருந்துன்பங்கள் பத்துக்கோடி மடங்கு நல்லனவாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை கிடைக்கலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நகைவகையர் ஆகிய நட்பைக் காட்டிலும் பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை கிடைக்கலாம் என்பது பாடலின் பொருள்.
'நகைவகையர்' யார்?

நகையாட மட்டும் உள்ள நட்பு கொடியது.

எப்பொழுதும் சிரித்துக் கும்மாளமிடும் குணமுடையவர்தம் நட்பினும் பகைவரால் பத்துக்கோடி நன்மை உண்டாகலாம்.
நகையாடுவதற்கு மட்டும் கூடுபவர்களின் நட்பை விடப் பகைவரால் பத்து மடங்கு நன்மை பெறலாம். காமம் சார்ந்த இடக்கரான சிரிப்புச் செய்திகள் கூறி மகிழ்தல், சூதாட்ட விடுதி, பொது சூதுஆடல்அரங்கம் சென்று ஆடுதல், கள்ளுண்ணல், விலைமகளிர் தொடர்பு போன்ற கேளிக்கை கொண்டாட்டங்களில் மிக விருப்பமுடையவருடன் நட்புக் கொள்பவர் வெகு விரைவில் தீய வழியில், சூழ்ச்சியாலோ அல்லது தன் போக்கிலோ, வீழ்ந்து தம் வாழ்க்கையையே அழித்துக் கொள்வர். இதனால்தான் பொழுதுபோக்கிற்கும் களிப்பிற்குமாக நகைத்துக் குடிகெடுக்கும் கேண்மையை விடப் பகைவரால் பத்து மடங்கு நன்மை உண்டாகும் எனச் சொல்லப்பட்டது.
பகைவர்கள்-நகைவகையாகிய நண்பர்கள் ஆகிய இரு திறத்தாரையும் முன்னே நிறுத்தி வைத்துக் கொண்டு, நண்பர்கள் வேண்டா-பகைவர்களே மேலானவர்கள் என்கிறது பாடல். நகைநட்பு இன்பம் தருவதுபோலத் துன்பம் பயப்பது ஆதலின், அது துன்பமே பயக்கும் பகைவரைக் காட்டிலும் பன்மடங்கு தீயது; களிப்பிற்காக மட்டும் செய்யப்படும் நட்பால் விளையும் தீமையினும் பகைவரால் விளையும் தீமைபெரிதன்று என்பது இதன் பொருள். பகைவர் புறத்தே இருந்து வருவதாலும் பகையென வெளிப்படத் தெரிவதாலும் அவரால் உண்டாகும் தீமைகளுக்கு வழிகண்டு நம்மைக் காத்துக் கொள்ள இயலும். ஆனால் நமக்குச் சிரிப்பை விளைவித்து, மகிழ்ச்சி மூட்டுகிற நண்பர் மேல் ஐயம் உண்டாவதில்லையாதலால், இவர் எப்போதும் நெருங்கிப் பழகிக் கூட இருந்தே நம் வாழ்வில் பெருங்கேடு உண்டாக்கி விடுவார். எனவே நகைவகை நண்பரால் நமக்கு உண்டாகின்ற தீமையினைவிட அளவுகடந்த பகைவர் கூட்டத்தினால்கூட நமக்கு அவ்வளவு கெடுதி ஏற்பட்டுவிடாது என முடிநிலை எய்துகிறது பாடல்.

சிரித்துப் பேசுவதற்கு மட்டும் நட்பு அல்ல என்பதை நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு (நட்பு 784 பொருள்: நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதன் பொருட்டு அல்ல; வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை நண்பனாகத் தானே முன்வந்து கடிந்து திருத்தற்பொருட்டு ) என்று முன்பு குறள் சொன்னது. அதன் தொடர்ச்சியாக இப்பாடலைக் கருதவேண்டும். ஒரு நல்ல நண்பன் என்றால் நாம் வரம்பு மீறிச் சென்றால் நம்மை இடித்துரைத்து நல்வழிப்படுத்துபவனாகப் பழகுதல் வேண்டும். அவ்வாறன்றி எப்பொழுதுமே சிரித்துக்கொண்டு கூட இருப்பவர்களை நகுவித்துக் கொண்டு தீயவழிகளில் இட்டுச் செல்லுமாறு பழகுகின்ற நண்பர்களை விலக்கி விடவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

இப்பாடலின் ஈற்றடி 'பகைவரான் பத்து அடுத்த கோடி உறும்' என்பது. குறள் என்ன 'உறும்' - நன்மையா, தீமையா, வேறுஎதுவோவா என்று சொல்லவில்லை. பெரும்பான்மையான உரையாசிரியர்கள் நன்மை உறும் எனக் கொள்கின்றனர்.

'நகைவகையர்' யார்?

'நகைவகையர்' என்றதற்குத் தாம் அறியத்தக்கவராகாது முகவிச்சையாய் நகைக்கிறவர்கள், நகைவகைக்கு ஏதுவானவர், (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவர், எந்த நேரமும் சிரித்து நல்லவர்போல் நடிக்கும் இயல்புடையவர்கள், நகைத்தலுக்குரிய துர்த்தர், முகத்தளவில் மலரும் நட்பு, வறுமொழியாளர் வம்பப்பரத்தர் குறுமொழி கூறுநர் முதலிய நகைவகையர், நிந்தனைக்குரிய வகையிற் சேர்ந்தவர்கள், சிரித்து மகிழ்வதையே நட்பாகக் கொண்டவர், சிரித்து விளையாடுதன் மாத்திரஞ் செய்பவர், சிரித்து மகிழுவதற்கு மட்டும் காரணராயிருக்கும் நட்பு, அன்பு சிறிதும் இல்லாமல் மேலுக்கு மட்டும் சிரித்து விளையாடும் குணமுடையவர், நடித்துச் சிரிக்கும் நண்பர்கள், நிலைத்திராத இன்பத்துறைகளில் இழுத்துச்செல்லும் நகைத்தற்குரிய நண்பர்கள், மேலுக்குச் சிறிது நட்புச் செய்வோர், வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வோர், மற்றவர்கள் எள்ளும்படியான செயல்களுடையவர், (உள்ளே நட்பு இல்லாமல் வெளிப்பாசாங்காக) நகைக்கும் வகையினர், சிரித்துச் சிரித்து பழகுபவர் என்று பலவாறாகப் பொருள் கூறினர் உரைகாரர்கள்.

நம்மை மகிழ வைப்பதே ஒரு வேலையாக வைத்துக்கொண்டு நெருங்கி இருந்து சிலர் பழகுவர். அவர்களுடனான தொடர்பை நகைவகையராகிய நட்பு என்கிறது பாடல். இவர்களில் தீய எண்ணங்களும் பழக்கங்களும் கொண்டவர்கள் நம்மை நகுவித்து நம்மைக் கேடான வழிக்கு இட்டுச் செல்வர். அப்படிப்பட்ட நண்பர்கள் தீ நட்பினரே. இத்தீயவர்கள் சிரித்துச் சிரித்துப் பேசி, நம்மைக் கவிழ்த்துவிடுவர். அத்தகையவரை நாம் ஒதுக்கிவிடுதல் வேண்டும்.

'நகைவகையர்' என்றதற்கு கேளிக்கைகளில் மிக விருப்பமுடையவர் என்பது பொருந்தும்.

கேளிக்கைகளில் மட்டும் ஈடுபாடு கொண்டவரது நட்பைக் காட்டிலும் பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை கிடைக்கலாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சிரித்து மகிழ்வதற்காக மட்டும் உளவாகும் நட்பு தீ நட்பே.

பொழிப்பு

எப்போதும் களித்தலையே தொழிலாகக் கொண்டவர் நட்பைவிட பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை கிடைக்கும்