இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0819கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:819)

பொழிப்பு (மு வரதராசன்): செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.

மணக்குடவர் உரை: செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.
இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.

பரிமேலழகர் உரை: வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.
(வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.)

சி இலக்குவனார் உரை: செயலும் சொல்லும் வெவ்வேறாய் இருப்பார் நட்பு நனவின் கண்ணே அல்லாமல் கனவின் கண்ணும் துன்பத்தைத் தருவதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு கனவினும் இன்னாது மன்னோ.

பதவுரை: கனவினும்-கனாவின் கண்ணும்; இன்னாது-தீது, துன்பத்தைத் தருவது, வெறுப்பானது; மன்னோ-(அசைநிலை) வினை-செய்கை; வேறு-பிறிது; சொல்-மொழி; வேறு-பிறிது; பட்டார்-ஆனவர்; தொடர்பு-நட்பு.


கனவினும் இன்னாது மன்னோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.
பரிப்பெருமாள்: பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாதாம்;
பரிதி: கனவினும் ஆகாது;
காலிங்கர்: நனவின்கணன்றியே கனவின் கண்ணும் இன்னாதது;
பரிமேலழகர்: நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.
பரிமேலழகர் குறிப்புரை: நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.

'நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவிலும் நன்மை தராது', 'நனவில் மட்டுமன்றிக் கனவிலும் துன்பம் தரும்', 'கனவிற்கூட துன்பமுண்டாக்கும்', 'கனவிலுந் துன்பத்தை விளைக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கனவிலும் துன்பம் தருமே என்பது இப்பகுதியின் பொருள்.

வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.
பரிப்பெருமாள்: செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு,.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.
பரிதி: நினைப்பதொன்று செய்வதொன்று ஆனார் நட்பு என்றவாறு.
காலிங்கர்: எது எனின் தொழில் ஒன்றாய்ச் சொல் ஒன்றாய் வேறுபட்டு இருப்பார் நட்பு என்றவாறு.
பரிமேலழகர்: வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு;
பரிமேலழகர் குறிப்புரை: வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல்.

'தொழில் ஒன்றாய்ச் சொல் ஒன்றாய் வேறுபட்டு இருப்பார் நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நினைப்பதொன்று செய்வதொன்று ஆனார் நட்பு' என்று உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செயல் வேறு சொல் வேறு என்பவரின் நட்பு', 'செயலில் பகைவராய்ச் சொல்லில் நண்பராய் வேறுபட்டு நடக்கும் தீயவர் நட்பு', 'செய்வது ஒன்று சொல்வது வேறு என்ற நடத்தையுள்ளவர்களுடைய சம்பந்தம்', 'செய்வது வேறு சொல்வது வேறாய் இருப்பவரது நட்பானது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செயல் வேறு சொல் வேறாய் இருப்பவரது நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயல் வேறு சொல் வேறாய் இருப்பவரது நட்பு கனவிலும் துன்பம் தருமே என்பது பாடலின் பொருள்.
'கனவினும் இன்னாது' என்ற தொடர் குறிப்பதென்ன?

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு வேண்டவே வேண்டாம்.

செய்யும் செயல் வேறாகவும் தம் பேச்சுக்கள் வேறாகவும் இருப்பாரது நட்புறவு ஒருவருக்குக் கனவிலும் துன்பமானதாகும்.
உள்ளத்தில் வேறுவகையான செயல்திட்டத்தை ஒளித்து வைத்துக்கொண்டு, வெளியில் அதற்கு நேர்மாறாகச் செயல்படப்போவதாகச் சொல்பவர்களைப் பற்றிய பாடல் இது. வாய்மைப் பற்றில்லாத அத்தகைய நண்பர்கள் வலையில் ஏமாந்துபோய் வீழ்ந்து விடவேண்டாம் என அறிவுறுத்துகிறது பாடல். இவர்கள் நம்பகத்தன்மை அற்றவர்; பெரும் இழப்பை உண்டாக்கிவிடுவர் ஆதலால் இவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கமுடியாது. இவ்வியல்புடையவர்களை எண்ணும்போது வெறுப்புத்தான் உண்டாகும். கனவில் இவர்கள் தோன்றினாலும் அதைத் தாங்க முடியாது உள்ளம் வேதனையுறும்.

சொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பவர்கள் நட்பு எவ்வேளையிலும் துன்பம் தருவது. பேச்சுத் திறன் மனித உறவை வளர்க்கக் கூடியது. அதுவே மனித உறவைச் சீரழிப்பதும் ஆகும். நம் எண்ணத்தை வெளிப்படுத்தப் பயன்படும் பேச்சு அதை மறைக்கவும் பயன்படும். உள்ளக் கருத்தினை மறைத்துக் காட்டும் பொய்த்திறமும் சொல்லிற்கு உண்டாதலால் சிலர் ஒன்றைச் சொல்லிவிட்டு அதற்கு மாறாக, நெஞ்சறிந்து, எந்தவிதக் கூச்சமுமின்றி வேறுவிதமாக நடந்துகொள்வர். தமக்கு அறவே தெரியாத செயலைப் பற்றி மிகவும் தெரிந்தவர் போலப் பொய்யாகவும் பேசி கேட்பவரை மகிழச்செய்வர். கேட்பவர் மனம் எது மெய், எது பொய் என்பதையும் எது உண்மை, எது போலி என்பதையும் உணர்ந்து கொள்ளமுடியாத வகையில் பேசுவர். இத்தகையர் பேச்சில் முடிவதாகவே பேசுவர்; செயலில் எதனையும் முடிக்க மாட்டாதவராயிருப்பர்.
சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள உறவை உணர்ந்தவர் சொல்லியபடியே செய்வர். சொல்லிய வண்ணம் செயல்படுவரால் துன்பம் இல்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை வளர்ப்பவர் மற்றவரை ஏமாற்றுவதற்காகவே எதையாவது சொல்லிவிடுவர். பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாமல் வாழ்பவரால் பிறர்க்குக் கேடு உண்டாகும். நமக்கு நன்மை தருமாறு பேசும் அவர்களது செயல் முற்றிலும் மாறுபட்டு இருப்பது நம் நம்பிக்கையைக் குலைக்கும். சொன்னபடி, செய்யாமல் வஞ்சனை புரிதலால் அவர்மீது வெறுப்புத் தோன்றும். சொல்லும் செயலும் திட்டமிட்டு வேறுபடுத்துபவர் தொடர்பு கனவிலும் துன்பம் தரும். அந்த நட்புறவைத் தொடர வேண்டாம் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

இக் குறளில் 'மன்' அசை நிலை அழுத்தம் தந்து ஒலிப்பது நோக்கத்தக்கது.

'கனவினும் இன்னாது' என்ற தொடர் குறிப்பதென்ன?

கனவு என்பது உறக்கநிலையைக் குறிப்பது. அறிவும் மனச்சான்றும் சேராத தூக்கநிலை அது. கனவிலும் இன்னாது என்பது கனவின்கண்ணும் துன்பந்தரும் எனப்பொருள்படும். இழிவும் உயர்வும் கனவுகளுக்கு இல்லை.
முன்னே ஒன்று சொல்லி, செயலில் நேர் மாறாக நடப்பவர் பொய் சொல்கிறார் என்பது பெறப்படும். பொய் கூறுவார் நட்புத் தீது எனச் சொல்லவரும் பாடல் அவருடனான உறவைக் கனவில் நினைத்தாலுங்கூடக் கொடியதாக இருக்கும் என்கிறது. சொல்வேறு செயல்வேறுபட்டாரது ஏமாற்றுதலை ஆற்றமுடியாது என்பதை அவர் கனவில் தோன்றினாலும் துன்பம் தருபவராக இருப்பார் எனக் காட்டப்பட்டது. அந்த அளவு கொடுமையான வஞ்சனை என்பதால் அவ்வாறு கூறப்பட்டது. கனவில் கூட அவர் தோன்றுவதை நட்டார் விரும்பவில்லையாம். பொய் சொல்வது ஏமாற்றுவதற்காக. நம்மை நண்பரே ஏமாற்றிவிட்டாரே, நம்பிக்கை மோசம் செய்துவிட்டாரே என்பதை எண்ணியெண்ணி மனம் வெதும்பும். அவரை நினைத்தாலே வெறுப்பு உண்டாவதால் அது துன்பம் தரும்.
‘கனவினும்’ என்றமையான் தூக்கத்தையும் கெடுத்துவிடும் என்றது எனவும் கொள்வர்.

'கனவினும் இன்னாது' என்றதற்கு கனவின் கண்ணும் துன்பமானது என்பது பொருள்.

செயல் வேறு சொல் வேறாய் இருப்பவரது நட்பு கனவிலும் துன்பம் தருமே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சொல்லொன்று செயலொன்றாக உள்ளவரது நட்பு தீ நட்பு

பொழிப்பு

செயல் வேறு சொல் வேறு என்றிருப்பவரது நட்பு கனவிலும் துன்பம் தரும்.