இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0818ஒல்லுங் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:818)

பொழிப்பு (மு வரதராசன்): முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

மணக்குடவர் உரை: தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக.
இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.

பரிமேலழகர் உரை: ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக.
(முடியாதாக்குதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒருகால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்': என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தம்மால் முடிக்கக்கூடிய காரியத்தைக் குழப்பிக் கெடுத்து வருத்துபவரது நட்பினை அவருடன் உரையாடாமல் நெகிழவிடுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒல்லுங் கருமம் உடற்றுபவர் கேண்மை சொல்லாடார் சோர விடல்.

பதவுரை: ஒல்லும்-முடியும், இயலும்; கருமம்-செயல்; உடற்றுபவர்-உழப்புபவர், கெடுப்பவர், வருத்துபவர், முடியாததாக நடிப்பவர்; கேண்மை-நட்பு, சுற்றமாய் நடந்து கொள்ளுந்தன்மை; சொல்லாடார்-ஏதும் சொல்லாதவராய், பேசாமல்; சோரவிடல்-ஓய விட்டொழிக, தளர விடுக, விட்டு விலகுக.


ஒல்லுங் கருமம் உடற்று பவர்கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை;
பரிப்பெருமாள்: தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை;
பரிதி: தனக்கு வேண்டின காரியத்தை முடியாமல் விக்கினம் பண்ணுவான் உறவை;
காலிங்கர்: தமக்கு இயலும் கருமத்தையும் இயற்றாது கெடுபவர் கேண்மையை.
காலிங்கர் குறிப்புரை: உடற்றுபவர் என்பது கெடுப்பவர் என்றது.
பரிமேலழகர்: தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: முடியாதாக்குதல்: முடியாதாக நடித்தல்.

'தமக்கு இயலும் கருமத்தையும் செய்யாது கெடுப்பவர் கேண்மையை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முடிக்கக் கூடிய காரியத்தைச் செய்யாதவரின் நட்பினை', 'முடியக்கூடிய எளிய காரியத்தையும் முடியாமற் செய்துவிடக்கூடிய திறமையற்றவர்களுடைய நட்பை', 'தம்மால் முடியுங் காரியத்தை முடியாமற் செய்வாருடைய நட்பை', 'தம்மால் முடியும் செயலை முடியாததாகக் காட்டி நடிப்பார் நட்பை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முடிக்கக் கூடிய செயலையும் கெடுப்பவரின் நட்பினை என்பது இப்பகுதியின் பொருள்.

சொல்லாடார் சோர விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.
பரிப்பெருமாள்: நட்பென்று சொல்லுமதும் செய்யாராய் வீழவிடுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.
பரிதி: நழுவ விடுக என்றவாறு.
காலிங்கர்: நாவினாலும் உரையாடாராய்க் கழிய விடுக என்றவாறு.
பரிமேலழகர்: அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக.
பரிமேலழகர் குறிப்புரை: சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒருகால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்': என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.

'அவரறியச் சொல்லாதே வீழவிடுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொல்லாதே நழுவவிடுக', 'பேசாமல் விட்டுவிட வேண்டும்', 'விட்டுவிடுவதாகச் சொல்லாமல் தளர விடுக', 'வெளிப்படையாகச் சொல்லாமலே நழுவ விட்டுவிடல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சொல்லாதே நழுவவிடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முடிக்கக் கூடிய செயலையும் உடற்றுபவர் நட்பினைச் சொல்லாதே நழுவவிடுக என்பது பாடலின் பொருள்.
'உடற்றுபவர்' யார்?

நட்டாருக்காக ஏற்றுக்கொண்ட செயலை முடிக்க இயலாதுபோல் ஆக்கியவர் நட்புறவில் இருந்து என்னத்துக்கு?

தம்மால் செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யாமல் கெடுப்பவரின் நட்பினை அவருக்குத் தெரிவிக்காமலேயே விட்டு விலகுதல் வேண்டும்.
ஒருவர் தம்மை அடைந்து சிறிதுகாலம் பழகிய நண்பரிடம் ஒரு செயலை ஒப்படைக்கிறார். நண்பருக்கு அச்செயலை முடிக்கும் ஆற்றல் உண்டு. ஆனாலும் அவர் மனம் வைத்து அதில் ஈடுபடவில்லை. அவர்க்கு அதைச் செய்வதற்கு நோக்கமில்லை. எனவே அதைச் செய்து முடிக்காமல் காலம் தாழ்த்துகிறார். செயலின் நிலையையே மாற்றுகிறார். தம்மால் முடியும் செயலை முடியாததாக வெளிக்குக் காட்ட எண்ணி உழப்புகிறார். அவரால் உருவாக்கப்பட்ட முட்டுக்கட்டைகளால் அச்செயலை யாராலும் முடிக்க முடியாதபடி ஆகிவிடுகிறது. அவர் மனதில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. ஏன் இப்படிச் செய்கிறார் எனவும் அறிய முடியவில்லை. இத்தகைய மனப்போக்குக் கொண்டவர் தீநட்பினர் என்று இக்குறள் கூறுகிறது.
செய்யக்கூடிய உதவியைச் செய்யாது கெடுத்தல் உதவி கேட்டவரின் உள்ளத்தை வாட்டுவது இயல்பு. இச்செயலில் உதவிட முடியும் எனத் தெரிந்திருந்தும், அறியாததுபோல் நடித்துக் காலம் கடத்தி செயலைக் கெடுப்பவர் நட்பிலிருந்து எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கழன்று கொள்க என அறிவுரை தருகிறது பாடல்.
ஏன் நேரடியாகப் பேசிப் பின்னர் நட்பைத் துண்டிக்கலாமே? பழகிய நட்பை உடனடியாக முறித்துக்கொள்ளுதல் இயல்பன்று; அதற்குப் பலநாள் பிடிக்கலாம். அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வெட்டிவிட முடியாது. அந்த நண்பர் நடிக்கத்தான் செய்கிறார் எனினும் அவரிடம் அத்தவறுகள் குறித்துப் பேசவேண்டா அவராகவே விலகிச் செல்லும்படி செய்க எனவும் சொல்லப்படுகிறது. சொல்லி விலகச் செய்தால், அந்த நோக்கத்தையும் கெடுத்துவிடுவார். அதனால்தான் சொல்லாடார் சோர விடல் எனக் கூறப்பட்டது. 'நட்புறவை விடுகின்றதைச் தோன்றாவண்ணம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளரவிடவேண்டும். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும் கூறினார் என்று 'சொல்லாடார் சோர விடல்' என்பதற்கு விளக்கம் கூறினார் பரிமேலழகர்.

'உடற்றுபவர்' யார்?

'உடற்றுபவர்' என்றதற்கு முடியாது வருத்துமவர், முடியாமல் விக்கினம் பண்ணுவான், இயற்றாது கெடுப்பவர், முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதார், முடியும் காரியத்தை முடியாதென்று சொல்லி ஆலஸ்யம் பண்ணுகிறவர், தம்மால் முடியுங் கருமத்தை முடியாதாகச் செய்வார், முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவர், தம்மால் இயலும் ஒரு காரியத்தையும் செய்யாமல் செய்ய இயலாதவர் போல நடித்து முடிக்காமல் போட்டுக்குழப்பி வாட்டுபவர், தம்மால் செய்து முடிக்கக்கூடிய கடமையினைச் செய்து முடித்தற்கு இயலாததாகச் சோர்ந்து பணியைக் கைவிட்டு உழல்வார், முடிக்கக் கூடிய காரியத்தைச் செய்யாதவர், தம்மால் முடிக்கக்கூடிய காரியத்தைக் குழப்பிக் கெடுத்து வருத்துபவர், முடியக்கூடிய எளிய காரியத்தையும் முடியாமற் செய்துவிடக்கூடிய திறமையற்றவர், தம்மால் செய்ய முடியும் செயலையும் செய்ய விடாமல் கெடுப்பவர், தம்மால் முடியுங் காரியத்தை முடியாமற் செய்வார், தம்மால் முடியும் செயலை முடியாததாகக் காட்டி நடிப்பார், தம்மால் முடிந்த உதவிகளைக் கூடச் செய்யத் தயங்கும் நண்பர், ஆகும் செயலையும் ஆகாததாக்கிக் கெடுப்பவர், எளிதாகச் செய்யக்கூடிய நன்மைகளைச் செய்யாது தடைப்படுத்திக்கொண்டிருப்பவர் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

உழப்புபவர் என்று வழக்கில் உள்ள சொல்லே உடற்றுபவர் எனக் குறளில் வந்தது. உழப்புதல் குழப்பிக் கெடுத்து வருத்துவதைக் குறிக்கும் சொல். எளிய செயலையும் கடுமையானதாக்குதல், எளிதில் முடியக்கூடிய ஒன்றை முடியக்கூடாத ஒரு பெரிய செயலாக ஆக்கிவிடுதல், சிக்கல் இல்லாததைத் தீர்க்கமுடியாததாக்குதல், 'இது என்றும் அது என்றும்' போட்டு குழப்பி மயக்கமடையச் செய்தல் இவை உழப்புதலுக்கான சில கூறுகளாம். இவற்றைச் செய்பவர் உடற்றுபவராவர்.
இச்சொல்லுக்கு முடியும் செயலை முடியாததாகக் காட்டி நடிப்பார் என்றும் பொருள் கூறினர்.
இங்கு 'உடற்றுபவர்' என்பது நிறைவேற்றக் கூடிய செயலை கெடுப்போர் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.

'உடற்றுபவர்' என்றது முடியும் செயலை முடியாதபடி கெடுப்பவர் குறித்தது.

முடிக்கக் கூடிய செயலையும் கெடுப்பவரின் நட்பினைச் சொல்லாதே நழுவவிடுக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

செயலை ஏற்றுக்கொண்டு செய்யாமல் ஏமாற்றி உழப்புவரது நட்பு தீ நட்பு.

பொழிப்பு

முடிக்கக் கூடிய செயலைக் குழப்பிக் கெடுத்து வருத்துபவரது கேண்மையைச் சொல்லாதே நழுவவிடுக.