இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0820எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:820)

பொழிப்பு (மு வரதராசன்): தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.

மணக்குடவர் உரை: மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைச் சிறிதும் செறிதலைத் தவிர்க.
இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.

பரிமேலழகர் உரை: மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க.
(மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: (தனியே) வீட்டில் இருக்கும்போது நட்புக் கொண்டாடி பலரோடு கூட்டத்தில் இருக்கும்போது பழித்துக் கூறுபவர் நட்பினைச் சிறிதேனும் அடையாமல் தடுத்துக்கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு எனைத்தும் குறுகுதல் ஓம்பல்.

பதவுரை: எனைத்தும்-ஒருசிறு அளவும்; குறுகுதல்-நெருங்குதல், அடைதல்; ஓம்பல்-நீங்குக; மனைக்கெழீஇ-வீட்டில் நட்பாடி; மன்றில்-அவையில்; பழிப்பார்-பழித்துப் பேசுபவர்; தொடர்பு-நட்பு.


எனைத்தும் குறுகுதல் ஓம்பல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறிதும் செறிதலைத் தவிர்க; [செறிதலை - நெருங்கிப் பழகுதலை]
பரிப்பெருமாள்: சிறிதும் செறிதலைத் தவிர்க;
பரிதி: என்றென்றும் ஆகாது என்றவாறு.
காலிங்கர்: எவ்வாற்றானும் சென்று அடைதலைப் பரிகரிக்க; [பரிகரிக்க - நீக்குக]
பரிமேலழகர்: சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க. [நணுகுதல் -நெருங்குதல்]

'சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறிதும் வரவொட்டாதே', 'சிறிதளவும் தம்மை அணுகாதபடி காத்துக் கொள்க', 'கொஞ்சம்கூட நெருங்க விடக்கூடாது', 'எவ்வாறாயினும் நேரிடாதபடி தடுக்கவேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிறிதளவும் தம்மை அணுகாதபடி காத்துக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பை. [மன்றின்கண் - அவையின்கண்]
மணக்குடவர் குறிப்புரை: இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.
பரிப்பெருமாள்: மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பைத் தவிர்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குற்றம் கூறுவார் நட்புத் தீதென்றது.
பரிதி: அகத்திலே உவந்திருந்து இரண்டற்றிருந்து ஒருவர் குற்றம் செய்தால் அந்தக் குற்றத்தை மன்றிலே தூற்றுவான் உறவு. [உவந்திருந்து - கூடிக்குலவி; இரண்டற்றிருந்து - இரண்டு பேராயல்லாமல் ஒன்றாயிருந்து; தூற்றுவான் - பழிகளைப் பலரறியச் சொல்லுவான்]
காலிங்கர்: யாதினை எனின் மனையிடத்துக் கெழுமி வைத்து மன்றின்கண் சென்றே பழித்து உரைப்பாரது நட்பினை என்றவாறு. [கெழுமி வைத்து - நட்புக்கொண்டு]
பரிமேலழகர்: தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்து பழி கூறுவார் நட்பு;
பரிமேலழகர் குறிப்புரை: மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது. [குறிக்கொண்டு - ஒரு நோக்காகக் கருதி]

'மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றம் கூறுவாரது நட்பை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டில் புகழ்ந்து வெளியில் தூற்றுபவரின் தொடர்பினை', 'தனியே வீட்டிலிருக்கும்போது குழைந்து புகழ்ந்து பேசிப் பலர் கூடியிருக்கும் அவையில் இகழ்ந்து பழித்துரைக்கும் தீயாரது நட்பு', 'தனித்திருக்கும்போது ரகசியமாகக் குலவிப் பேசிவிட்டு, பலபேர் கூடிய இடத்தில் பழித்துப் பேசுகிறவர்களுடைய உறவு', 'வீட்டறையில் நட்பாய் அளவளாவியிருந்து அம்பலத்திலே தம்மைப் பழிக்கிறவர்களுடைய நட்பை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வீட்டுக்குள் குலவிப் பேசிவிட்டு பலர் கூடியிருக்கும் அவையில் இகழ்ந்து கூறுவாரது நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீட்டுக்குள் குலவிப் பேசிவிட்டு மன்றில் பழிப்பார் நட்பு சிறிதளவும் தம்மை அணுகாதபடி காத்துக் கொள்க என்பது பாடலின் பொருள்.
'மன்றில் பழிப்பார்' குறிப்பது என்ன?

பலர் முன்னிலையில் பழிக்கும் நண்பரைப் பக்கத்திலே அண்டவிடாதீர்.

வீட்டில் உள்ளபோது நட்பாடி பலர் கூடியுள்ள மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் தொடர்பு, ஒருசிறிதும் நம்மை அடையாதபடி காத்துக் கொள்க.
சிலர் நாம் தனியே வீட்டிலிருக்கும்போது நட்புக்கொண்டு கூடிக் குலவுவர்; அவரே பலர் கூடிய அவையில் நம்மைப்பற்றித் தவறாக இழித்துப் பேசுவர். இன்று பொதுவெளியில் பழிப்பவர்கள் நாளை வீட்டிற்கு வந்து மறுபடியும் நெருங்கிப் பழகுதற்காகப் பலவாற்றான் முயன்று பல்லிளித்து நிற்பர். இவர்கள் தீங்கானவர்கள். இத்தகையவர்களின் நட்பைச் சிறிதும் நெருங்கவிடாமல் நீக்கிவிட வேண்டும்.
மனையில் தனி இடத்தில் இடித்துக் கூறினாலும் பொதுவெளியில் தம் நண்பரைப் உயர்த்திப் பேசுவதே நல்ல பண்புள்ளவர் செயலாகும். மாறாக, மனையில் புகழ்ந்து, மன்றில் அனைவரது முன்னாலும் தூற்றிப் பேசுவோர் கொடியர். இவர் எந்த நேரமும் நம் பகைவரோடு உறவாடி நம்மை அழிக்க முயலலாம். எனவே விழிப்புடன் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக 'எனைத்துங் குறுகுதல் ஓம்பல்' அதாவது நம்மிடம் ஒரு சிறிதளவும் வரவொட்டாமல் காக்க எனச்சொல்லப்பட்டது.

'மன்றில் பழிப்பார்' குறிப்பது என்ன?

'மன்றில் பழிப்பார்' என்ற தொடர் அவையில் தூற்றிப் பேசுபவர் என்ற பொருள் தரும். நம்மோடு தொடர்புடையாரில் சிலர் இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பர். நெருங்கிப் பழகுபவர் ஆதலால் நம் வீட்டிற்கு உரிமையுடன் வந்து இனிமையாகப் பேசுவர். அவர்களே மன்றத்தில் இருக்கும்போது ஒருசாராரை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களிடம் ஆதாயம் பெறுவதற்காகவோ, நம்மீது வேறு ஏதாவது மனக்குறை கண்டு அதற்காகப் பழிதீர்ப்பதற்காகவோ, நம்மைச் சிறுமைப் படுத்தி, ஏளனம்செய்து, காட்டமாய்ப் பழித்துப் பேசி, நகைப்புக்குரியவர்களாக ஆக்கிவிடுவர். இவர்களே 'மன்றில் பழிப்பார்' ஆவர்.

'மன்றில் பழிப்பார்' என்றது அவையில் இகழ்ந்து குற்றம் கூறுவார் என்ற பொருளது.

வீட்டுக்குள் குலவிப் பேசிவிட்டு பலர் கூடியிருக்கும் அவையில் இகழ்ந்து கூறுவாரது நட்பு சிறிதளவும் தம்மை அணுகாதபடி காத்துக் கொள்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வீட்டில் புகழ்ச்சி வெளியில் இகழ்ச்சி தீ நட்பினர் பண்பு.

பொழிப்பு

வீட்டிலிருக்கும்போது குலவிப் பேசி, பலர் கூடியிருக்கும் அவையில் தூற்றுபவரின் தொடர்பினைச் சிறிதளவும் தம்மை அணுகாதபடி காத்துக் கொள்க.