இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0811



பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலில் குன்றல் இனிது

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:811)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது.

மணக்குடவர் உரை: கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று.
இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.

பரிமேலழகர் உரை: பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று.
('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78)என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)

வ சுப மாணிக்கம் உரை: தீயவர் ஆர்வம் காட்டினாலும் அவர் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலில் குன்றல் இனிது.

பதவுரை: பருகுவார்-குடிப்பவர்; போலினும்-போன்றிருந்தாலும், ஒத்திருந்தாலும்; பண்பிலார்-குணம் இல்லாதவர்; கேண்மை-நட்பு; பெருகலில்-வளர்வதைவிட; குன்றல்-தேய்தல், குறைதல்; இனிது-நன்றானது.


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்பு;
பரிப்பெருமாள்: கண்ணினால் பருகுவாரைப் போலத் தனக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்பு;
பரிதி: புசிக்கிற அமிர்தம்போலே இதமானாலும் பண்பிலார் உறவு; [இதமானாலும் - இனிமையானாலும்]
காலிங்கர்: காணுந்தொறும் கண்ணினால் பருகிக்கொள்வார் போன்று இருப்பினும் நல்லொழுக்கம் இல்லாரது கேண்மை;
பரிமேலழகர்: காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; [பருகுவார் - குடிப்பார்]
பரிமேலழகர் குறிப்புரை: 'பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர்.78) என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. [.அருந்தாபத்தி - இங்ஙனமன்றாயின் இது கூடாது என்றுணர்வது]

'பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்பு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆர்வ மிகுதியால் பருகுவார்போல் பழகினார் ஆயினும் பண்பில்லாதவரின் நட்பு', 'குடியர்களுக்குக் கள்ளைப் போல, ஆர்வப்போதை தரக்கூடிய உறவாக இருந்தாலும், அவர்கள் நட்பிற்குரிய நற்குணமில்லாதவர்களென்பதை அறிந்தால்', 'நற்குணமில்லாதவர்கள் அன்புமிகுதி காட்டி அன்பினால் விழுங்குவார்போல இருந்தாலும், அவர் நட்பு', 'அன்பு மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் நற்குணம் இல்லாதார் நட்பு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பருகுவார்போல் ஆர்வம் மிகக் காட்டினாலும் குணக்கேடர் நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

பெருகலில் குன்றல் இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருகுமதனினும் குறைதல் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.
பரிப்பெருமாள்: பெருகுமதனினும் குறைதல் நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.
பரிதி: பெருகுதலின் குறைவது நன்று.
காலிங்கர்: பெருகி வருதலின் தம் கருமம் குறை படுதல் சால இனிது என்றவாறு. [கருமம் - செய்கை]
பரிமேலழகர்: வளர்தலின் தேய்தல் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)

'வளர்தலின் தேய்தல் நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைதல் இன்பம் பயக்கும்', 'அவர்களுடைய உறவு வளரவிடுவதைக் காட்டிலும் தளரவிடுவது நல்லது', 'வளர்வதைப் பார்க்கிலுங் குறைதல் நல்லது', 'வளர்தலின் குறைதல் நன்மை பயப்பதாகும். (பருகுவார்போலினும்-நீர் வேட்கையுற்றோர் நீரைக் குடிப்பதற்கு எவ்வளவு ஆர்வமுடையவனாக இருக்கின்றாரோ அவ்வளவு ஆர்வம் நண்பரிடம் பழகுவதில் காட்டுதல்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வளர்வதைவிடக் குறைதல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பருகுவார்போல் ஆர்வம் மிகக் காட்டினாலும் குணக்கேடர் நட்பு வளர்வதைவிடக் குறைதல் நல்லது என்பது பாடலின் பொருள்.
'பருகுவார்' யார்?

நட்பில் மிக நாட்டம் கொண்டவராயினும் குணமில்லாதவருடனான உறவைக் குறைத்துக் கொள்க.

நம்மை அள்ளிப் பருகுவார்போன்று ஆர்வம் காட்டினாலும், நல்ல பண்பில்லாதவரது நட்பானது வளர்வதை விடத் தேய்ந்து குறைவதே இனிமை பயக்கும்.
ஒருவர் நம்மிடம் மிகவும் நெருங்கிப் பழகுகிறார். ஒட்டி உறவாட விழைகிறார். ஆனால் அவர் பண்புநலன்களில் குறைபாடுடையவராக இருக்கிறார். குணக்கேடருடனான நட்பு மிகுந்த இடர்ப்பாடுகளையே உண்டாக்கும். அதனால் அந்த நட்பு மெல்ல மெல்லக் குறையுமானால் அது நல்லது; அது வளருமானால் இன்னும் பொல்லாத பல துன்பங்களைத் தந்து தீ நட்பாய் மாற வாய்ப்புகள் மிகையேயாம். அவர் எந்த நேரம் தீங்கு செய்வாரோ என்று தெரியாது. இன்று சிலபல நன்மைக்குரியவராக இருந்தாலும் நீண்டகாலத் தொடர்பில் அவர்கள் விலக்கத்தக்கவர்களே. குணமில்லாதவர் நட்பு தொடக்கத்தில் ஆர்வமான நிலையைக் காட்டும். ஆனால் நாட்செல்லச் செல்லக் கேடு பெரிதாகும். கள்ளுண்ணுதல் போன்ற கெட்ட பழக்கம் உடையவராக இருந்தால் நம்மையும் அதில் கொண்டு சென்று அடிமையாக்கிவிடுவர். அந்நட்பை வளரவிட்டால் குடிப்பழக்கத்தோடு தொடர்பான வேறுபல தீய பழக்கங்களும் தொற்றிக் கொள்ளும். அத்தகைய நட்பு குறையுமானால் நட்டவர் பிற குற்றங்களிலும் வீழாமல் தம்மைக் காத்துக் கொள்வர். எனவே தான் பண்பில்லாதவரது நெருக்கத்தை குறைத்துக் கொள்க என அறிவுரை பகர்கிறது பாடல்.

'பருகுவார்' யார்?

'பருகுவார்' என்றதற்குக் கண்ணினால் பருகுவார், புசிக்கிற அமிர்தம்போலே இதமானவர், காணுந்தொறும் கண்ணினால் பருகிக்கொள்வார், காதல் மிகுதியால் பருகுவார், வெகுவான சிநேகம் இருப்பவர், கண்ணால் காணும்போதே காதல் மிகுதியால் அப்படியே பருகி விடுபவர், ஆர்வம் காட்டுபவர், ஆர்வ மிகுதியால் பருகுவார், குடியர்களுக்குக் கள், (நீர் வேட்கையுள்ள போதில்) பருகுவார் போன்ற நட்பார்வம் உடையவர், அன்புமிகுதி காட்டி அன்பினால் விழுங்குவார், அன்பு மிகுதியால் பருகுவார், தமக்கு விருப்பமான ஒன்றை உண்ண விரும்புவோர் எவ்வளவு ஆவலோடு அதை அணுகுவாரோ அவ்வளவு அன்புடையவர், காதல் மிகுதியால் விழுங்கி விடுவார், தோற்றத்தாலும் பேச்சாலும் தன்னை மயக்கக் கூடியவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பொதுவாகக் காதலர்கள் ஒருவர் மற்றொருவருடான காதல் மிகுதியால் பருகுவது போல் பார்ப்பர். 'பார்வையாலே அப்படியே பருகி விடுவான்போல்' என அன்பு மேலிடப் பார்ப்பதும் இதுவே. இது அளவு கடந்த அன்புடன் ஆர்வமிகுதியாய் இருப்பதைச் சொல்வது. நாடி வந்த தொடர்பில் நட்புச்செய்ய விரும்பும் ஒருவர் மற்றவரிடம் மிகுந்த ஆர்வம் காட்டுவர். நீர்வேட்கை மிகையாகக் கொண்டவன் எவ்வளவு ஆவலுடன் நீரைப் பருகுவானோ அவ்வளவு விரைவாக நம்மிடம் அன்பைப் பெய்து நெருக்கம் வைத்துப் பழகுவார்கள்; சுற்றிச் சுற்றி வந்து, ஈர்க்கும் வகையில் பேசிக் கட்டித் தழுவி, நம்மை அள்ளிக் குடித்துவிடுவதுபோல அன்பு செய்வர்; நல்ல நட்புமுறை தோன்றப் பழகி இனிமையாக இருப்பர். இவர்களே இச்செயுள்ளில் 'பருகுவார்' எனச் சொல்லப்படுகின்றனர்.

பருகுவது போலும் என்ற பொருளிலுள்ள சங்கப்பாடல் வரியொன்றை பரிமேலழகர் இக்குறளுக்கான தனதுரையில் சுட்டியுள்ளார். அது ...பருகு அன்ன அருகா நோக்கமோடு... - (பத்துப்பாட்டு பெருநராற்றுப்படை 77 பொருள்: தன்னைக் கண்ணாற் பருகுந் தன்மையை ஒத்த கெடாத பார்வையாலே) என்பது.

'பருகுவார்' என்ற சொல் 'காதல் மிகுதியால் பருகுவார்' என்ற பொருள் தரும்.

பருகுவார்போல் ஆர்வம் மிகக் காட்டினாலும் குணக்கேடர் நட்பு வளர்வதைவிடக் குறைதல் நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பண்பற்றவர் தொடர்பு தீநட்பு ஆக வளருமுன் காத்தல் நல்லது.

பொழிப்பு

பருகுவார்போல் ஆர்வம் காட்டிப் பழகினாலும் தீயவர் நட்பு வளர்வதைவிடத் தேய்தல் இனிதாம்.