இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0814அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:814)

பொழிப்பு (மு வரதராசன்): போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

மணக்குடவர் உரை: தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று.
இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மாஅன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல்வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து.
(கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்.)

வ சுப மாணிக்கம் உரை: போரில் கால்வாங்கும் குதிரை போன்றவரின் உறவைக் காட்டிலும் தனிமை நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மாஅன்னார் தமரின் தனிமை தலை.

பதவுரை: அமர்-போர்; அகத்து-இடையில்; ஆற்று அறுக்கும்-வலிமையைக் கெடுக்கும்; கல்லா-திருத்தம் பெறாத, பழகாத, அறிவில்லாத, பயிற்சி பெறாத; மா-குதிரை, விலங்கு; அன்னார்-ஒத்தவர்; தமரின்-தம்மவரைவிட, தம்மைச் சேர்ந்தாராந் தன்மையை விட, உறவைவிட, சுற்றந்தாராந் தன்மையைக் காட்டிலும்; தனிமை-தனித்திருத்தல், ஒன்றியான தன்மை; தலை-மேல், சிறப்பு.


அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும்;
பரிப்பெருமாள்: தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் ஏறினவன் வலியைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதின்;
பரிதி: சமர் பூமியிலே இராவுத்தன் சேவகத்தைக் கெடுக்கிற திருந்தாக் குதிரையை ஒத்தார் நட்பினும்; [சமர் பூமியிலே-போர்க்களத்திலே; இராவுத்தன் - வீரன்; திருந்தாக் குதிரை - பாகன்படி நடவாத குதிரை]
காலிங்கர்: போர் செய்யும் இடத்து இடதுசாரியும் வலதுசாரியும், குறுக்கு அறுத்தலும் நெடுகப் பாய்தலும், மற்றும் பலவும் கற்று அறியா மாவானது தன்னை நடத்துவான் ஆற்றலை அறுக்குமாப் போல அன்னர் ஆகிய தமரின்; [இடது சாரி - இடப்பக்கம் வளைந்து செல்லுதல்; வலது சாரி - வலப்பக்கம் வளைந்து செல்லுதல்; குறுக்கு அறுத்தல் - ஊடறுத்துச் செல்லுதல்; நெடுகப் பாய்தல் - நேராகப் பாய்ந்து செல்லுதல்; அறுக்குமாப்போல் - கெடுப்பதுபோல்; அன்னர்- அத்தகையர்]
பரிமேலழகர்: அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல்வாரது தமர்மையில்;
பரிமேலழகர் குறிப்புரை: கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். [தமர்மையில் - தம்மைச் சேர்ந்தாரது தன்மையில்; கதி ஐந்து - மல்ல கதி, மயூர கதி, வானர கதி, வல்லிய கதி, ரிஷப கதி; சாரி பதினெட்டு - 18 வகையான சுற்று வரவு. அதாவது வட்ட ஓட்டம்- வட்டமாக ஓடுதல்; பொருமுரணாற்றல் - போர் செய்யும் வலிமை; ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும், கந்து மறமும் கறங்குளைமா; விக்கிதம், வற்கிதம், உபகண்டம், ஜவம், மாஜவம் என்னும் இப்பஞ்சதாரையையும் பதினெட்டு வகைப்பட்ட சுற்றுவர வினையும் கழியப் பாய்தலையும் கறுவுதலையும் ஒலிக்கும் தலையாட்டத்தினையும் உடைய குதிரை]

'அமரின்கண் நெறிப்படாமல் நடந்து, அமரின்கண், ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன்னர்த்தாங்கி இருந்து போர்வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் பழகாத குதிரை போன்றோர் உறவை விட', 'யுத்த களத்தில், செலுத்திய திசையில் செல்லும் பயிற்சியில்லாத குதிரையைப் போல் நெருக்கடியான சமயத்தில் நினைக்கிற உதவிக்கு உதவாதவர்களுடைய நட்பு இருப்பதைவிட', 'போரிலே ஏறினவரைக் கீழே வீழ்த்திவிட்டுப் போகும் பயிற்சியில்லாத குதிரைபோல, இடரான போழ்திற் கைவிடுவாரது நட்பைப் பார்க்கிலும்', 'போரின்கண் வழியில் தள்ளிவிட்டுச் செல்லும், போர்ப்பயிற்சியினைக் கல்லாத குதிரையை ஒத்தவரின் நட்பினைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

போர்க்களத்தின் இடையில் கீழே தள்ளிவிட்டுச் செல்லும், திருத்தம் பெறாத குதிரையை ஒத்தவரின் உறவைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

தனிமை தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் தனியனாதல் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.
பரிப்பெருமாள்: தனியனாதல் நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: தனிமை தீது என்பது முன்பே அமைந்து கிடந்தது. இந்நட்பின் கொடுமையதுவும் நன்று ஆயிற்று. தீமைக்கு அளவு இன்மையின் இவ்வாறு கூறினார். இவ்வுரை மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். இது கயவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.
பரிதி: தனிமை நல்லது என்றவாறு.
காலிங்கர்: தனிமையே மிகவும் தலை என்றவாறு.
பரிமேலழகர்: தனிமை சிறப்பு உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்.

'தனியனாதல் நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனிமை சிறப்புடையது', 'இல்லாதிருப்பது மேல்', 'தனித்திருத்தல் சிறந்தது', 'தனிமையாக இருத்தல் சிறப்புடைத்தாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தனியாக இருத்தல் மேல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
போர்க்களத்தின் இடையில் கீழே தள்ளிவிட்டுச் செல்லும் கல்லாமா அன்னாரின் உறவைவிடத் தனியாக இருத்தல் மேல் என்பது பாடலின் பொருள்.
'கல்லாமா அன்னார்' யார்?

நெருக்கடியான நேரத்தில் பேரச்சம் கொண்டு ஓடுபவரை நம்புவதைவிட நாமே தனியாளாகக் கையாளலாம்.

போர்க்களத்தின் இடையில் தன்மீது அமர்ந்திருக்கும் தன் தலைவனைக் கீழே தள்ளிவிட்டு எதிர்த் திசையில் ஓடிப்போய்விடும் திருத்தம் பெறாத குதிரை போன்றவரின் நட்பைப் பெற்றிருத்தலைவிடத் தனிமையே மேல்.
ஒருவர் தனது பணிச் சுமையைக் கொஞ்சம் குறைக்கலாம் என்ற எண்ணத்தில், நட்பு நாடி வந்தவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். அப்பணியை ஏற்றுக்கொண்ட நண்பர் செயலில் இருக்கும்போது சில இடர்ப்பாடுகள் நேர்கின்றன. அவற்றை எதிர்கொள்ளத் திட்பம் இல்லாமல் பயம் கொள்கிறார். தொடங்கிய பணியை முடிக்க முடியாமலும் ஒன்றுமே சொல்லாமலும் பாதியிலேயே ஒதுங்குகிறார். அப்பொழுது நட்டவர் நினைக்கிறார்- நம்பத்தகாதவரிடம் கொடுத்துத் தோல்வியையும் இழிவையும் ஏற்பதினும் தானே தனியாக அப்பணியை நிறைவேற்றி இருக்கலாமே என்று.
போரில் இக்கட்டான நிலையில் அச்சம் கொண்டு, தன்னைச் செலுத்தும் வீரனை விட்டுவிட்டு ஓடிப்போகும் பயிற்சியற்ற குதிரையை உவமையாக வைத்து இக்கருத்து விளக்கப்பட்டது.
இடுக்கணுற்ற பொழுது நண்பருக்குப் பயன்படாது அவரை விட்டு நீங்கும் நட்பு நன்றாகாது என்கிறது பாடல். இடையிலே விட்டோடும் நண்பர் தீக்குணம் கொண்டவர் என்பது கருத்து.

'ஆற்றறுக்கும்' என்ற தொடர்க்கு வலிமையைக் கெடுக்கும், ஆற்றலையறுக்கும், களத்திடை வீழ்த்தும், கீழேதள்ளும், தள்ளிவிட்டு ஓடும், கால்வாங்கும் என்றபடி உரை கூறினர். ......கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு (நட்பாராய்தல் 798 பொருள்: தமக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம்) என்ற பாடலில் ஆற்றறுத்தல் என்ற தொடர் 'வழியில் கைவிடுதல்' என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. இக்குறள் கூறவரும் கருத்தும் 'வழிக்குத் துணையாக வந்தவன் நடுவழியிலே கழுத்தறுத்தது போல' என்பதாதலால் ஆற்றறுக்கும் என்பது 'வழியிலே தள்ளும்' என்ற பொருள் தகும்.
தனியே இருத்தலோ செயல் ஆற்றுதலோ எப்பொழுதும் நல்லதல்ல. ஆனால் கூட்டாளி நட்டாற்றில் தவிக்க விடுவானானால் 'தமரின் தனிமை தலை’ அதாவது ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே நல்லது என எண்ணத் தோன்றுகிறது என்கிறது பாடல்.
ஒன்று மற்றொன்றைவிட மேலானது என்பதைச் சுட்ட, 'தலை' என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவார். இக்குறளிலும் தலை என்ற சொல் அப்பொருளிலேயே ஆளப்பட்டது.

இக்குறட்கருத்தை ஒட்டிய பழமொழிப் பாடல் ஒன்று ...மச்சு ஏற்றி, ஏணி களைவு (பழமொழி400, 291 பொருள்: (நமக்கு இடையூறு நேர்ந்த பொழுது ஒருவகையிலும் உதவாமல் அச்சம் கொண்டு மறுத்துக் கைவிடும் செயலானது) மாடியில் உள்ள அறைக்கு ஏற்றிவிட்ட பின்னர் இறங்க வழியின்றி ஏணியை அகற்றி விடுவதற்கு ஒப்பானது.) எனக் கூறுகிறது.

'கல்லாமா அன்னார்' யார்?

'கல்லாமா அன்னார்' என்றதற்கு அறிவில்லாத குதிரையைப் போல்வார், சேவகத்தைக் கெடுக்கிற திருந்தாக் குதிரையை ஒத்தார், இடதுசாரியும் வலதுசாரியும் குறுக்கு அறுத்தலும் நெடுகப் பாய்தலும் மற்றும் பலவும் கற்று அறியா மா போன்றவர், கல்வி இல்லாத புரவி போல்வார், அறிவில்லாத குதிரை போன்றவர், பயிற்சி போதாத குதிரை போல்வோர், கால்வாங்கும் குதிரை போன்றவர், பழகாத குதிரை போன்றோர், பயிற்சியில்லாத குதிரையைப் போல்வார், நல்லதைக் கல்லாத விலங்கு போன்றவர், போர்ப்பயிற்சியினைக் கல்லாத குதிரையை ஒத்தவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கல்லா என்ற சொல்லுக்குக் கற்காத என்பது பொருள். இங்கு போர்ப்பயிற்சி பெறாத எனப் பொருள் கொள்வர். மா என்ற சொல்லுக்குக் குதிரை என்றும் விலங்கு என்றும் பொருள். இங்கு போர்க்களம் குறிப்பிடப்படுவதால் குதிரை என்ற பொருள் பொருந்தும். அன்னார் என்ற சொல் போல்வர் என்ற பொருள் தரும். 'கல்லாமா அன்னார்' என்றது போர்ப்பயிற்சி பெறாத குதிரையைப் போல்வார் எனப் பொருள்படும்.
போருக்கு ஆயத்தம் ஆகுமாறு குதிரைகளைப் பயிற்றுவிப்பர். காலிங்கர் இடது சாரி - இடப்பக்கம் வளைந்து செல்லுதல், வலது சாரி - வலப்பக்கம் வளைந்து செல்லுதல், குறுக்கு அறுத்தல் - ஊடறுத்துச் செல்லுதல். நெடுகப் பாய்தல் - நேராகப் பாய்ந்து செல்லுதல் என்ற குதிரைப் பயிற்சிமுறைகளைக் குறித்துள்ளார். கதி ஐந்தும் சாரி பதினெட்டும் எனக் குதிரைப் பயிற்சிகளைப் பரிமேலழகர் தனதுரையில் கூறுகிறார். சாரி 18 என்பது 18 வகையான சுற்று வரவு. அதாவது வட்டமாக ஓடுதலைக் குறிக்கும். போர்க்களத்துக்கென்று ஒரு போக்கு/ஆறு இருக்கும். பலவகையான படைகள் செல்லும் நெறிக் கேற்ப ஒன்றுக் கொன்று விலகியும் சூழ்ந்தும் முன்னேறிச் செல்ல வேண்டும். இவ்வாற்றை அறுக்கும் வகையில் ஏதாவது நேர்ந்தால் பயிற்சிபெறாத-கல்லாத குதிரை, போர்க்களத்தில் மிரண்டு அதைச் செலுத்தும் வீரனைப் போர் முடியும்வரையில் தாங்கிச்செல்லாது தள்ளிவிட்டு ஓடிவிடும். அதாவது கல்லாமா என்பது போரில் செலுத்துபவனை வீழ்த்தலையன்றி கதி, சாரி முதலியவற்றைக் கல்லாதமா என்ற பொருள் தருவதாகிறது. 'கல்லாமா அன்னார்' என்பது நெருக்கடி நேரம் தப்பும் பண்பில்லாத நண்பரைக் குறித்தது.

'கல்லாமா அன்னார் என்ற தொடர் செயற்பாடுகளில் பேரச்சம் கொண்டு நட்டாரைக் கைவிடுபவரைக் குறிப்பது.

போர்க்களத்தின் இடையில் கீழே தள்ளிவிட்டுச் செல்லும், திருத்தம் பெறாத குதிரையை ஒத்தவரின் உறவைவிடத் தனியாக இருத்தல் மேல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நம்ப வைத்து நட்டாற்றில் தவிக்கவிட்டுவிடுபவரின் தீ நட்பு வேண்டாம்.

பொழிப்பு

போர்க்களத்தில் தள்ளிவிட்டு ஓடும் மடக் குதிரை போன்றோர் உறவைக் காட்டிலும் தனிமை மேல்.