இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0815



செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:815)

பொழிப்பு (மு வரதராசன்): காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

மணக்குடவர் உரை: நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதினும் பெறாமை நன்று.
இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார்- சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார்.

பரிமேலழகர் உரை: செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று.
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்குமேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உதவி செய்தும் பயனில்லாச் சின்னவர் நட்பு இருப்பதினும் இல்லாமை நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.

பதவுரை: செய்து-செய்து(ம்); ஏமம்-அரண், காவல், பாதுகாப்பு; சாரா-சேராத; சிறியவர்-சிறுமைக்குணம் கொண்டோர், இழிந்தோர், கீழோர்; புன்கேண்மை-தீ நட்பு; எய்தலின்-உண்டாதலைவிட; எய்தாமை-இல்லையாதல்; நன்று-நல்லது.


செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பை; [புல்லியார் - இழிந்தோர், கீழோர்]
பரிப்பெருமாள்: நட்புச் செய்து தனக்குப் பாதுகாவல் ஆகாத புல்லியாரது புல்லிய நட்பை;
பரிதி: தமக்குத் துன்பமே செய்து நிலையற்ற குணத்தாரான பொல்லாதார் நட்பை;
காலிங்கர்: பல நாளும் தமக்கு ஒருவர் பேருதவி செய்தவர்க்கும் தாம் சிறிதும் உறுதி சாராத புல்லியர் ஆகிய நீசர் நட்பு; [உறுதி சாராத- கேடு வந்துழி உதவாத; நீசர் - கீழோர்]
பரிமேலழகர்: செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். [நின்று வற்றும் - இருந்தும் பயனின்றிப்போம்]

'செய்தேமம் சாரா' என்றதற்கு 'நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத'/'தமக்குத் துன்பமே செய்து நிலையற்ற குணத்தாரான'/பல நாளும் தமக்கு ஒருவர் பேருதவி செய்தவர்க்கும் தாம் சிறிதும் உறுதி சாராத/செய்து வைத்தாலும் அரணாகாத என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை நல்கினர். 'சிறியவர் புன்கேண்மை' என்ற தொடர்க்குக் 'கீழ் மக்களது தீ நட்பு' எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உதவி செய்தும் தமக்குக் காவலாக இல்லாத கிழ்மக்களது தீய நட்பை', 'பாதுகாப்புக்கு வருவதாக வாக்குறுதி செய்தும் வராமலிருந்துவிடுகிற இழி குணத்தாரின் அற்ப சகவாசத்தை', 'பாதுகாப்பாகக் கருதி நட்புச் செய்து வைத்தாலும், காவலாகப் பயன்படாத கீழ்மக்களது தீ நட்பு', 'உதவிகளைச் செய்து நன்மையினை அடைய முடியாத இழிந்தவர்களின் கெட்ட நட்பு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்புச் செய்தும் காவல் ஆகாத சிறுமைக்குணம் கொண்டோரின் கெட்ட நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

எய்தலின் எய்தாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெறுவதினும் பெறாமை நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார்- சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார்.
பரிப்பெருமாள்: பெறுவதினும் பெறாமை நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சிறியார் நட்புத் தீமை பயக்கும் என்றது. சிறியராவார்- சூதர், வேட்டைக்காரர், பெண்டிர் போல்வார்.
பரிதி: பெறின் என்ன, பெறாவிடில் என்ன என்றவாறு.
காலிங்கர்: பெறுதலின் பெறாமையே மிகவும் நன்று என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்குமேல் உரைத்தாங்கு உரைக்க. இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது. [தொலைவில் - அழிவு வந்தவிடத்து]

'பெறுவதினும் பெறாமை நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் பெறுவதைவிட, பெறாமலே இருத்தல் நன்மையைத் தரும்', 'அடைவதைவிட அடையாதிருப்பது நல்லது', 'ஒருவனுக்கு உண்டாவதைக் காட்டிலும் இல்லாதிருத்தல் நல்லது', 'அடைதலின் அடையாமல் இருத்தல் நல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெறுவதைவிட பெறாமலே இருத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்புச் செய்தும் காவல் ஆகாத சிறுமைக்குணம் கொண்டோரின் கெட்ட நட்பு பெறுவதைவிட பெறாமலே இருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
'செய்து' என்ற சொல் குறிப்பது என்ன?

செய்ந்நன்றி அறியா நட்புத் தேவையா?

நட்புச் செய்தும் இடுக்கண் வந்துற்றபோது துணைநில்லாத கீழ்மக்களின் தீநட்பு இருப்பதைவிட இல்லாமல் இருத்தலே நல்லது.
ஒருவர் நட்டாரிடம் நன்கு பழகுகிறார். இடையிடையே சில உதவிகளை எதிர்பார்க்கிறார். நட்டாரும் அவர்கேட்ட நன்மைகளைத் தவறாது செய்கிறர். ஆனால் எப்பொழுதெல்லாம் நட்டார்க்கு உதவி தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர் மறைந்து விடுகிறார். ஒருவரது நற்பண்புகள் அவர்க்கு அரணாக இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போகச் செய்பவரது உறவு தீய நட்புத்தான் என்கிறார் வள்ளுவர். நல்நட்பைச் செய்தும், தேவையிருக்கும்போது அவர்க்கு உதவ முன்வரும் நல்ல மனமில்லாத இழிந்த தன்மையுடையோர் தொடர்பைக்காட்டிலும் நட்பே இல்லாதிருப்பது நல்லது.

'செய்து' என்ற சொல் குறிப்பது என்ன?

'செய்து' என்ற சொல்லுக்கு நட்புச் செய்தாலும், நட்புச் செய்து, தமக்குத் துன்பமே செய்து, பல நாளும் தமக்கு ஒருவர் பேருதவி செய்தவர்க்கும், செய்து வைத்தாலும், சிநேகிதரான துர்ச்சனருக்கு [தீயர்க்கு) உபசாரங்களைச் செய்திருந்தும், நட்புச் செய்து வைத்தாலும், காவல் செய்து வைத்தாலும், நட்புச் செய்து வைத்தும், உதவி செய்தும், பாதுகாப்புக்கு வருவதாக வாக்குறுதி செய்தும், நட்புச் செய்தும், பாதுகாப்பாகக் கருதி நட்புச் செய்து வைத்தாலும், உதவிகளைச் செய்து, பாதுகாப்புத் தருமென்று கருதிச் செய்துவைத்தாலும், எல்லாச் சிறப்புகளையும், பெருமைகளையும் செய்தாலும் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் உரையில் குறித்துள்ளபடி, செய்து என்றதைச் 'செய்தும்' எனக்கொண்டால் குறட்பொருள் விளக்கமுறும். இவரது உரை ''சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது இருந்தும் பயனின்றிப்போம் அதாவது 'ஏமஞ்சாராச்சிறியவர்' எனக் கொண்டால் 'செய்த' என்பது பொருளற்றதாகிவிடும் என்கிறது. 'செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை' என்னும் பகுதியைச் 'செய்தும் ஏமஞ்சாராக் கேண்மை சிறியவர் புன்கேண்மை' எனத் தனித்தனி கூட்டிப் பொருள் காணவேண்டும் (தண்டபாணி தேசிகர்).

'செய்து' என்பது நட்புச் செய்து வைத்தும் என்ற பொருள் தரும்.

நட்புச் செய்தும் காவல் ஆகாத சிறுமைக்குணம் கொண்டோரின் கெட்ட நட்பு பெறுவதைவிட பெறாமலே இருத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறருக்கு உதவ மனமில்லாத தன்மையுடையோர் தீ நட்பினரே.

பொழிப்பு

நட்புச் செய்தும் துணை நில்லாத கீழ்மக்களது தீய நட்பை ஒருவன் பெறுவதைவிட, பெறாமலே இருத்தல் நல்லது.