புதுமை என்பதின் எதிர்ச்சொல்லாகிய பழமை என்பது தொன்மை அதாவது தொன்று தொட்டுவருவது என்பதனைக் காட்டும்.
தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழமை எனப்படும்.
பழமை என்ற சொல்லுக்கு மூத்தது, முதியது, பண்டையது என்னும் பொருட்கள் உள. பழஞ்சோறு, பழம்பெருமை, பழங்கோவில், பழங்கதை போன்ற பழையதாகிப்போன எதனையும் பழமை என்ற சொல்லிலிருந்தே பெறுகிறோம்.
பரிப்பெருமாள், காலிங்கர் உரைகளில் பழைமை என்றதற்கு பழமை என்ற சொல்லே இடம்பெற்றிருக்கின்றது.
பழைமை காலப் பழமையைக் காட்டுவது.
பழைமை என்னும் சொல்லை, நெடுங்காலமாகப் பழகிவந்த பழமையான நட்பு என்ற பொருளில் வள்ளுவர் ஆள்கிறார்.
பழைமையால் விளைவது உரிமை.
நட்பின் பழக்கத்தினால், உரிமை பாராட்டலையே 'பழைமை' என்னும் சொல் சுட்டுகிறது.
பழமை எனப்படுவது உரிமையை ஒருசிறிதும் சிதையாமல் அதற்கு உடம்படு நட்பாம் என பழைமைக்கு வள்ளுவரே அதிகாரத்துக் குறளில் வரையறை செய்துள்ளார். அந்நட்பு காரணமாக வரும் உரிமையைக் 'கெழுதகைமை' என்ற சொல்லாலும் குறிக்கிறார்.
ஒன்றாகப் பழகியது பற்றி ஒருவர் மீது ஒருவர் உரிமை கொண்டாடுவார்கள். அவ்வுரிமையால் சிலவேளைகளில் மிகையாக நடந்துகொள்வார்கள். நீண்ட காலமாக இருவரது நட்பும் தொடர்ந்து நிலைபெற்றிருப்பதால் பழைய நண்பர்களில் யாராவது ஒருவர் தவறு செய்தால் அதை மற்றவர் பொறுத்து நட்பு நிலைக்கச் செய்துள்ளனர் என அறியலாம். ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது பழமொழி.
பழைய நட்பில் இனிமையுண்டு. உரிமையால் தொடரும் நட்பு நெடுங்காலம் நீடித்து நிற்கும். பழகிய நட்பு, தொல்லைக் கண் நின்றார் தொடர்பு, வழிவந்த கேண்மையவர், பழையார் என்றவாறு நட்பாளரின் பழமைத் தொடர்பு காட்டப்படுகிறது.
இருவர் மாட்டும் உரிமைபற்றிய தவறுகள் நேரலாம். நண்பருடைய தொடர்பின் 'பழைமை' கருதி ஒருவரை ஒருவர் பழைமை பாராட்டிப் பொறுக்க வேண்டும் என்பதே இவ்வதிகார நோக்கு.
பழைமையாளன் செய்பணிகளைத் தன் நட்பினன் மனப்போக்கை ஒட்டித் தானே வகுத்துக் கொள்வான்.
உரிமையை மிகப்படுத்தித் தவறு செய்து விட்டாலும் அவர்களைத் தள்ளிவிடக் கூடாதென்று இந்த அதிகாரம் சொல்கிறது.
நட்பு மேன்மேலும் வளர்ந்து நிலைக்க வேண்டுமானால், உரிமையுணர்வு வேண்டும். நட்பிற்கு உறுப்பாக இருப்பது நண்பர் உரிமையோடு நடக்கும் தன்மையே ஆகும்; நட்பிற்கு அடையாளம் உரிமைச் செயல்களாம். அந்த உரிமைச் செயல்களுக்கு இனிமையாக உடன்படல் சான்றோர் கடமையாகும்.
நண்பர் வருந்தத் தக்கவற்றைச் செய்வாரானால், அதற்குக் காரணம் அறியாமை மட்டும் அன்று; மிக்க உரிமையும் காரணம் என்று உணர வேண்டும். அன்பின் வழியில் வளர்ந்த நட்பை உடையவர், தம் நண்பர் கேளாது நடந்தாலும், மனம் வருந்தத்தக்க செயல்கள் செய்தாலும், அழிவு வேலையே செய்வாரானாலும், இழப்பு ஏற்படுத்தினாலும், 'அறியாமையால் செய்தான், வேண்டுமென்று நமது நண்பன் இப்படிச் செய்யமாட்டான். அல்லது நம்மிடம் அதிக உரிமை கொண்டு செய்தான்' என்றே எண்ணுவர்.
அவரிடத்தில் கொண்ட பழைய அன்பு நீங்காமல் வாழ்வார்:
நண்பர்கள் உரிமை காரணமாகச் செய்வனவற்றிற்கு உடன்படாவிடின், அந்நட்பு பொருளற்றதாம்.
உரிமை கெடாமல் தொடர்ந்து பழகி வரும் நண்பர்களின் உறவைக் கைவிடாதவரை, உலகம் விரும்பிப் போற்றும். பண்பறாது பழகும் உள்ளன்பு கொண்டோரைப் பகைவரும் விரும்புவர்.
இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.
பழைமை பற்றிச் செய்யப்படும் உரிமைச் செயல்கள் எவை?
வீட்டிற்குள் வந்து உரிமையுடன் பழகுதல், முறை பாராட்டி எள்ளலுடன் இழித்து உரையாடுதல், நம்மைக் கேட்காமலே செயல்களைச் செய்தல். நம்மிடம் பணிவோ, பயமோ இல்லாமை, நாம் செய்யச் சொன்ன செயல் கெடும்படியாகச் செய்தல், நம்மைக் கேட்காமலே அவர்கள் விரும்பிய பொருளை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை உரையாளர்கள் காட்டுவர்.